top of page

Anugraha Bhashanam in Dharmapuri by Sri Periyava

தர்மபுரி அனுக்ரஹ பாஷணம்

24.07.2026

இந்த தர்மபுரி நகரத்திற்கு பல வருஷங்களுக்கு முன்பாக ஒரு பள்ளிக்கூடத்தின் நிகழ்ச்சிக்காக இங்கு வந்திருக்கிறோம். அன்று அந்த சமயத்திலே இந்த அருணாசல ஐயர் சத்திரத்தை காண்பித்தார்கள். பிறகு பல வருஷங்கள் கழித்து இந்த இடத்திற்கு மறுபடியும் வந்து இந்த அருணாசல ஐயர் சத்திரத்தை புதுப்பித்து, பல்வேறு அறப்பணிகளை செய்வதற்கு உகந்ததாக கட்டடங்களை அமைப்பதற்காக இங்குள்ள பக்தர்கள் எல்லாம் ஒன்று கூடி காமகோடி மடத்தை அணுகி, அதன்மூலம் இங்கு பல தர்மகாரியங்கள் ஶ்ரீ மடத்தினுடைய ஆசிகளுடன் நடைபெற இருக்கிறது. அந்த இடத்தை பார்வையிட்டு, மேலும் இவர்களை-பக்தர்களை- அன்பர்களை ஊக்குவித்து, இன்னும் பல அன்பர்கள் இந்த நல்ல பணிகளிலே ஈடுபட்டு, இங்கு பல புராதானமான  கோவில்கள் இருக்கின்றன, தர்மபுரியிலே சிற்பக்கலையில் சிறந்த பல கோவில்கள் இருக்கின்றன. இங்கே ஒரு பழைய கோவிலைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது, கோவில் தூணின் அடியில் ஒரு துணியைப் போட்டால் அது அடிவழியாக வெளியில் வரும். இப்படி அதிசயங்கள் நிறைந்த கட்டடங்கள் இந்தியாவிலே இருக்கின்றன. அதுபோன்று அதிசய மண்டபம் உடைய ஊராக இந்த தர்மபுரி விளங்கி வருகிறது.


ஆகவே இந்த பழமையான தர்மபுரி - தர்மம் என்பதுதான் இந்த தேசத்துக்கு முக்கியமானது. தர்மர் என்பவர் முக்கியம். அந்த தர்மம்தான் உலகத்திலே நமக்கு ஆபத்துகள் விளைவிக்காமல் நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கு காரணமாக அமைகிறது. நாம் அமைதியாக இருப்பதற்கு தர்மம்தான் காரணம். நாம் சுபிக்ஷமாக இருப்பதற்கு, சந்தோஷமாக இருப்பதற்கு, திருப்தியுடன் வாழ்வதற்கு, இணக்கமாக வாழ்வதற்கு, அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக வாழ்வதற்கு, ஒரு குடும்பம் என்று வாழ்க்கையை நடத்தும் பொழுது விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு, செல்வந்தர்கள் வறுமையிலே வாழ்பவர்களுடைய கஷ்டங்களைப் போக்குவதற்காக தானதர்மங்கள் செய்வதற்கு, அனைத்து மக்களும் இன்முகமாக 'அரிதரிது மானிடராய் பிறத்தலரிது’ என்கிற இந்த மனிதப் பிறவியினுடைய சிறப்பினை புரிந்து கொண்டு, இறைவன் நமக்கு அளித்திருக்கக்கூடிய நிலம், நீர், நிழல், பல்வேறு கனிமங்கள், கனிகள், காய்கள், செடிகள், கொடிகள் இவைகளை எல்லாம் சரியாக நிர்வாகம் செய்து, பகிர்ந்தளித்து - அன்பையும் பகிர்ந்து கொண்டு, அன்னத்தையும் பகிர்ந்து கொண்டு, பொறுப்பினையும் பகிர்ந்து கொண்டு, அறவழியிலே வாழ்வதற்கு நமக்கு தர்மசிந்தனை என்பதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகவே பல்வேறு தர்மங்களை பல தலைமுறைகளாக செய்து வரக்கூடிய நாடு-தேசம் இந்த பாரத தேசம்.


கோடைக்காலத்திலே தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும்சரி, வெய்யில் தாகத்தை தணிப்பதற்காக தண்ணீர் பந்தல், நீர்மோர், விசிறி இது போன்ற பல தர்மங்களை செய்வதற்கும்சரி, இமயமலையிலே அங்கு பத்ரிநாத், கேதார்நாத் செல்லும் மக்கள் குளிரினால் பாதிப்பு அடையாமல் பாதுகாப்பாக தரிசனம் செய்து வருவதற்காக ‘காளி கம்பல்வாலா’ என்பதாக கம்பளியை கொடுக்கக்கூடிய தர்மம், ஶ்ரீ மாதா வைஷ்ணவி தேவி என்று காஷ்மீரத்திலே துர்கா லக்ஷ்மி ஸரஸ்வதி கோவில் அமைந்திருக்கிறது. குதிரையின் மீது சென்று தரிசனம் செய்கிறார்கள், பல்லக்கிலே சென்று தரிசனம் செய்கிறார்கள், நடந்தே செல்ல வேண்டும் என்று சங்கல்பத்துடன் தரிசனம் செய்கிறார்கள். அந்த கோவிலிலே மலையேறி செல்பவர்களுக்கு அங்கு கடைத்தெருவில் உள்ள ஒவ்வொரு கடையின் வாசலிலேயும்  கம்பு வைத்திருக்கிறார்கள். அந்த மலையேறி செல்பவர்கள் கைத்தாங்கலாக, அந்த ஊன்றுகோலாக அந்த கைத்தடியை வைத்துக் கொண்டு சுலபமாக மலையேறி அம்மனை தரிசித்து வருவதற்காக வைத்திருக்கிறார்கள். எந்த கடை வாசலிலேயும் அந்த கம்பை வாங்கிக்கலாம். எந்த கடை வாசலிலேயும் அந்த கம்பை திருப்பி கொடுக்கலாம். பொது தர்மம் - ஆயாசம் இல்லாமல் அவர்கள் சுலபமாக மலையேறிச் சென்று அம்மனை தரிசித்து வருவதற்கு அந்த வியாபாரிகள் மூலமாக, அங்கு கடை வைத்திருப்பவர்கள் மூலமாக பொதுவாக செய்யக்கூடிய தர்மமாக அந்த தர்மம் விளங்குகிறது. பிறருக்கு உதவ வேண்டும், பிறருடைய கஷ்டத்தைப் போக்க வேண்டும் - அது பசி என்கிற கஷ்டமாக இருக்கட்டும், தாகம் என்கிற கஷ்டமாக இருக்கட்டும் அல்லது ஏழ்மை என்கிற கஷ்டமாக இருக்கட்டும், மனஸ்தாபம் என்கிற ஒரு கஷ்டமாக இருக்கட்டும், சொல்ல முடியாத கஷ்டங்கள், வெளியிலே சொல்வதற்கு தயங்கக்கூடிய கஷ்டங்கள் இப்படி பல்வேறு கஷ்டங்கள். உடம்பிலே சில கஷ்டங்கள், வெளியிலே மனதிலே சில கஷ்டங்கள். உடம்பிலே இருக்கக்கூடிய  கஷ்டங்களுக்கு வியாதி என்று பெயர். தலைவலி, ஜ்வரம், பித்தம், கபம்,  ஸ்ரேஷ்மம், வாதம் போன்ற வியாதிகள் நோய்கள். இவைகள் தீர்வதற்கு மருந்துகள் இருக்கின்றன, வைத்தியர்கள் இருக்கிறார்கள், நல்ல பத்தியமான உணவுகள் இவைகள் எல்லாம் நமக்கு பரிகாரமாக இருக்கின்றன. மனதிலே பல கஷ்டங்கள் இருக்கின்றன. பார்க்க முடியவில்லை என்கிற கஷ்டம், நான்தான் பார்க்க வேண்டும் என்கிற ஏக்கம், படம், சந்தேகம், கவலை, அவசரம், ஆத்திரம் இது போன்று மனதினை சம்பந்தப்பட்ட கஷ்டங்கள் இருக்கின்றன. அவைகளுக்கு எல்லாம் ‘ஆதி’ என்று பெயர். மனதிலே இருக்கக்கூடிய கஷ்டங்களுக்கு ஆதி என்று பெயர், சரீரத்திலே  உடம்பிலே இருக்கக்கூடிய இன்னல்களுக்கு ‘வ்யாதி’ என்று பெயர். ஆதிவ்யாதிரவ ஹனுமார் என்று ஆஞ்சநேயருக்கு பெயர் இருக்கிறது. இப்படி கஷ்டங்களை தீர்ப்பதற்காக, கஷ்டங்களை குறைப்பதற்காக, எதனால் கஷ்டங்கள் வருகின்றன என்பதை பற்றி புரிந்து கொண்டு பரிகாரங்களை தேடுவதற்காக இருப்பதுதான் தர்மம். அப்படிப்பட்ட இந்த தர்மத்தை ஏழைகளும் செய்து வருகிறார்கள், பணக்காரர்களும், செல்வந்தர்களும் செய்து வருகிறார்கள். அவரவர்களுடைய சக்திக்கு தகுந்த விதத்திலே பல்வேறு தர்மங்களை - வார்த்தையினால் தர்மம் ஸ்வாமிகள் எங்கே வந்திருக்கார், கோவிலுக்கு போகிற வழி எது, கும்பாபிஷேகம் எத்தனை மணிக்கு நடக்கும் என்று இது போன்று என்ன பிறருக்கு தகவல் தேவைப்படுகிறதோ, நல்ல தகவல்களை கொடுப்பதும் ஒரு தர்மம்.  நல்ல இடத்தை காண்பிப்பதும் ஒரு தர்மம். குடும்பத்திலே கல்யாணங்கள் நல்ல இடத்திலே அமைவதற்கு ஏற்பாடு செய்வதும், ஒரு தர்மம். பிறருடைய வாழ்க்கையிலே இன்பம், நல்லொழுக்கம், நல்லிணக்கம் ஏற்படுவதற்கு நாமும் ஒரு கருவியாக செயல்படுவது - வார்த்தைகளால் இருக்கலாம், பொருளுதவி செய்திருக்கலாம் அல்லது வயதானவர்களைக் கைத்தாங்கலாக பிடித்து அழைத்து கொண்டு வருவதாக இருக்கலாம். இப்படி பரோபகாரமாக எதை நாம் செய்தாலும் நல்ல சங்கல்பத்துடன், தீய சிந்தனை இல்லாமல் நாம் செய்யக்கூடிய உதவிகள், உபகாரங்கள் தர்மமாக கருதப்படுகின்றன.

முப்பத்திரண்டு தர்மங்களை காஞ்சியிலே இருக்கக்கூடிய காமாக்ஷி அம்மன் செய்து வருவதாக ஐதீகம். ‘தர்மஸம்வர்த்தினி’  ‘அறம் வளர்த்த நாயகி’ என்று அந்த காமாக்ஷி அம்மனுக்கு பெயர். அப்படி நம்முடைய நாட்டிலே ‘அஸனா, பிபாஸா’ அஸனா என்றால் பசி. பிபாஸா என்றால் தாகம் - இவைகளை எல்லாம் தீர்க்க வேண்டும் என்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து காசி வரையிலே நடந்து செல்லக்கூடிய காசி யாத்திரையை அந்த காலத்திலே செய்து வந்தார்கள். ஒத்தையடிப் பாதை, வசதிகள் இவ்வளவு கிடையாது. வசதிகளை எதிர்பார்ப்பதும் இந்த அளவுக்கு கிடையாது. அப்படிப்பட்ட அந்த காலத்திலே கடினமாக உழைத்து, அன்பாகப் பழகி, பொறுப்பாக நடந்துகொண்டு, காசியிலிருந்து ராமேஸ்வரம் ராமேஸ்வரத்திலிருந்து காசி.  வடநாட்டில் இருப்பவர்கள் ராமனாதன் என்று பெயர் வைத்து கொள்கிறார்கள், தென்னாட்டிலே இருப்பவர்கள் விஸ்வநாதன் என்று பெயர் வைத்து கொள்கிறார்கள். காசிக்குச் சென்று குழந்தை பிறப்பது. ஸந்தான பாக்கியம் என்று அதற்கு பெயர், ஸத்ஸந்தானம் என்று பெயர். அப்படி தர்மத்துடன், பக்தியுடன் கூடிய வாழ்க்கை குழந்தை பருவத்திலிருந்தே துவங்குகிறது. அறுவது வயதில் மணிவிழா முடிகிறது; எழுவது வயதில் பீமரதசாந்தி நடைபெற்றது, எண்பது வயதில் ஸதாபிஷேகம் ஆயிரம் பிறை கண்டவர்கள். அதற்கு பிறகு தான் காசி என்றால் என்ன ராமேஸ்வரம் என்றால் என்ன என்று ‘இளமையில் கல்’, ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ ‘அறம் செய்ய விரும்பு’ என்று நமது வாழ்க்கை முறையானது அந்த தர்மத்துடன் சேர்ந்தே வருகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த எண்ணம், உயர்ந்த நோக்கம் கொண்ட பெயருடன் விளங்குவது இந்த தர்மபுரி. ஆகவே இந்த தர்மத்தை ஒவ்வொரு வீட்டிலேயும் கடைப்பிடிப்பதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். கோலம் போடுவதாக இருக்கட்டும், விளக்கு ஏற்றுவதாக இருக்கட்டும், பூத்தொடுத்தலாக இருக்கட்டும் என்னென்ன முடியுமோ, ஒரு வில்வ மரம் வைப்பதாக இருக்கட்டும், ஒரு துளசி செடி வைப்பதாக இருக்கட்டும், ஒரு அரசமரம் வைப்பதாக இருக்கட்டும் தர்மம் எந்தெந்த விதத்திலே வளருமோ அந்தந்த விதத்திலே நம்முடைய பங்கு - நமக்கென்ன பங்கு கொடுக்கிறீர்கள் என்பது வேறு. நாம் தர்மம் வளர்வதற்கு நம்முடைய பங்கு என்ன, நாம் நடந்து கொள்ளக்கூடிய விதம் - பாங்கு என்ன என்பதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.


இந்த கிருஷ்ணகிரி தர்மபுரி பகுதியிலே நல்லவொரு சங்கர மடம் அமைய வேண்டும் என்கிற ஒரு நல்ல எண்ணத்தோடு இங்கு அன்பர்கள் அந்த  முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறார்கள். இதன்மூலம் நம்முடைய தர்மமானது இப்பொழுது ஆரம்பித்ததல்ல. சில ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டதல்ல. எப்பொழுது மனிதன் படைக்கப்பட்டானோ - ஆண், பெண், செடி, கொடி கால்நடைகள் என்று இந்த ஸ்ருஷ்டி creation படைப்பு என்பது எப்பொழுது ஆரம்பக்கப்பட்டதோ அந்த சமயத்திலேயே மனிதர்கள் நனறாக வாழ வேண்டும், சுபிக்ஷமாக வாழ வேண்டும், அந்த மனிதர்கள் மூலமாக அனைத்து உயிரினங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற சங்கல்பத்துடன் இந்த தர்மமானது இயற்கையை ஒட்டிய தர்மம். மலைகள், நதிகள், செடிகள், கொடிகள் என்று அனைத்தையும் நேசிக்கக்கூடிய தர்மம் நம்முடைய தர்மம். அப்படிப்பட்ட இந்த தர்மமானது மக்களுக்கு நல்ல குணங்களை, நல்ல ஸ்வபாவத்தை, நல்ல பழக்கவழக்கத்தை, நல்ல உணவு, நல்ல உடை, நல்ல உணர்வு இப்படிப்பட்ட ஒரு நல்ல சிந்தனையை உருவாக்குகிறது. நல்ல சிந்தனையை வலுப்படுத்துகிறது. பெற்றோர்கள் மூலமாக, பெரியோர்கள் முலமாக, முனிவர்கள் மூலமாக, நல்ல மன்னர்கள் மூலமாக, நல்ல நீதிநெறிகள் மூலமாக, திருக்குறள் மூலமாக, பகவத்கீதையின் மூலமாக, திருப்புகழ் மூலமாக, அபிராமி அந்தாதியின் மூலமாக, த்ரிகடகம் என்ற நூலின் மூலமாக, திருமந்திரத்தின் மூலமாக இப்படி பல்வேறு நல்ல நூல்கள், ராமாயணத்தின் மூலமாக, பாகவதத்தின் மூலமாக, மகாபாரதத்தின மூலமாக இப்படி அந்த காலத்திலே வருஷாவருஷம் விவசாயம் பிரதான தொழிலாக இருந்த காலத்திலே அது நஞ்சையாக இருக்கலாம், புஞ்சையாக இருக்கலாம் நல்ல செயல்கள் முக்கியம். நஞ்சை - நல்லதை செய், புஞ்சை - புண்ணியத்தை செய். இந்த நஞ்சை புஞ்சை தானியங்களாக இருக்கட்டும், நெல் பயிராக இருக்கட்டும், தோட்டமாக இருக்கட்டும், அந்த விவசாயத் தொழிலிலே அந்த இடைவெளி அவர்களுக்கு ஓய்வு கிடைத்த நேரத்திலே நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும் என்பதற்காக ஒரு பயிரிலிருந்து அடுத்த பயிருக்கு இடைப்பட்ட காலத்திலே மகாபாரத சொற்பொழிவை திரௌபதி அம்மன் கோவிலிலே வைத்து, இங்கு நிகழ்ச்சிகளாக நடத்தி, அதிலே பல்வேறு கதைகளை நமக்கெலாம் எடுத்துச் சொல்லி ராமர், கிருஷ்ணர், சகுனி, துரியோதனன், கர்ணன் இப்படி நல்லவர்களை பற்றியும் சொல்கிறார்கள், அதிலே நடந்த விஷயங்களையும் சொல்லி நமக்கு ஒரே விதமா இருந்தா மனுஷர்களுக்கு சுவாரசியமா தெரியாது. அதற்கு ஒரு இசை வேணும், கோபம் வேணும், தாபம் வேணும், ஏக்கம் வேணும், ஏற்றம் வேண்டும். இது விவசாயமா இருந்தா அந்த காலத்தில் ஏற்றம் என்று ஒன்று உண்டு. இதெல்லாம் இருக்கும்பொழுது மனிதர்களுடைய மனதிலே நல்ல பண்புகளை வளர்ப்பதற்காக மகாபாரத சொற்பொழிவுகளை ஏடுபடித்தல் என்று பெயர். அந்த ஓலைச்சுவடிகளை வைத்துக்கொண்டு ஒருத்தர் படித்து, ஒருத்தர் கதை சொல்ல துரியோதனன் படுகளம் என்றொரு நிகழ்வு அக்னிவசந்த நிகழ்ச்சி, இப்படி கூழ்வார்த்தல் என்கிற ஒரு நிகழ்ச்சி. இவைகளெல்லாம் மனிதர்களுடைய மனது கருணையுடன் இருக்க வேண்டும், அன்புடன் இருக்க வேண்டும். அது கணவன் மனைவியாக இருக்கட்டும், தாய் தந்தையரிடத்திலே மகனோ, பெண்ணோ பழகுவதாக இருக்கட்டும், முதியோர்களை கவனித்துக் கொள்வதாக இருக்கட்டும் ‘யாம் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் ‘ என்று சிந்திக்கக்கூடிய ஒரு தர்மமாக நம்முடைய தர்மம் விளங்கி வருகிறது. யான் பெற்ற இன்பம் மாத்திரமல்ல சில சமயத்திலே நமக்கு இல்லாவிட்டாலும் பிறருக்கு கொடுத்து நீ போயிட்டு வாப்பா திருப்பதி கோவிலுக்கு ஶ்ரீ சைலம் போயிட்டு வா ஐயப்பஸ்வாமி கோவிலுக்கு போயிட்டு வா என்றெல்லாம் சொல்லி அந்த சிறிது சிறிதாக சேமித்து வைத்த பணத்தை தர்ம காரியத்துக்காக ஒரு மஞ்சள் வேஷ்டியிலே துண்டிலே அந்த திருப்பதி உண்டிக்காக சேர்த்த பணத்தை தர்ம காரியங்களுக்காக கொடுத்து இப்படி அன்பே சிவம் என்கிற ஒரு தத்துவத்தை பேசுவது மட்டுமல்லாமல், மனிதர்கள் என்ற ஒரு பிறவியிலே ஆசை என்பது இயற்கையாகவே இருக்கும். ஆசைப்படுவது தவறல்ல. ஆனால் அது முறைப்படியானதாக இருக்க வேண்டும். பொறுமையுடன் கூடியதாக இருக்க வேண்டும், பொறுப்புடன் கூடியதாக இருக்க வேண்டும், பிறரையும் இம்சிக்காமல் பிறருக்கும் பகிர்ந்து அளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தர்மத்தைத்தான் ராமபிரான் வைகுண்டத்திலே இருந்த பெருமான்-திருமால் இங்கு மனிதராக அவதாரம் செய்து, மனிதர்கள் மத்தியிலே மனிதராக வாழ்ந்து, நல்லவர்களுக்காக அவர் சங்கல்பம் ஏற்று, யாகங்களையும், வேள்விகளையும், பசுக்களையும் காப்பாற்றி, இந்த உலகத்திலே தர்மம் நிலைக்க வேண்டும் என்பதற்காக ‘தெய்வம் மானுஷ ரூபேண’ என்று செயல்பட்டார்.


அறுவத்து மூன்று நாயன்மார்கள் - அறுவத்து மூவர் உற்சவம் என்று திருவண்ணாமலையிலே, காஞ்சிபுரத்திலே, மயிலாப்பூரிலே இன்னும் பல பெரிய கோவில்களிலே நடைபெறுகிறது. போன வாரம் ஈரோடு பக்கத்திலே ஒரு ஊரிலே சுந்தரமூர்த்தி சுவாமிகள் பூஜையன்று அறுவத்தி மூன்று நாயன்மார்களுக்கும் மாலைகள் எல்லாம் சார்த்தி விசேஷமாக செய்திருந்தார்கள். குடுதுறை என்கிற ஒரு இடத்திலே சங்கமேஸ்வரம் என்கிற ஒரு ஊரிலே. கேரள மாநிலம் பாலக்காடுக்கு சென்றுவிட்டு, சேலம், தர்மபூரி எல்லாம் வந்து ரொம்ப நாள் ஆச்சு என்று சொல்லி இந்த பக்கமாக வந்து திருவண்ணாமலை சென்று கொண்டிருக்கிறோம். காஞ்சிபுரத்திலே இரண்டு மாதங்கள் ஒரே இடத்திலே இருந்து, கிராமங்களிலே காப்பு கட்டுவது என்று ஒரு பழக்கம் உண்டு. அதாவது அந்த திருவிழா நடக்கக்கூடிய நாட்களிலே கிராமத்தை சார்ந்தவர்கள் அங்கேயே இருக்க வேண்டும், வேற எங்கேயாவது வெளியிலே செல்ல நேரிட்டால் அந்த திருவிழா முடிவதற்குள் திரும்பி வர வேண்டும் என்று ஊர்க்கட்டுப்பாடு மரபிலே இருந்து வருகிறது. அது போன்று சாதுர்மாஸ்ய விழா சமயத்திலே இரண்டு மாதங்கள் ஒரே இடத்திலே தங்கி மழை காலத்திலே வெளியூருக்கு எல்லாம் செல்லாமல் வ்ரதம் என்பதை ‘சாதுர்மாஸ்ய வ்ரதம்’ என்று அதற்கு பெயர். 29ந்தேதியிலிருந்து அது ஆரம்பிக்கிறது. நாளை அந்த ஏகாதசியிலிருந்து-சயன ஏகாதசி என்று பெயர். பெருமாள் படுத்துக்கறார் என்று அர்த்தம். இரண்டு மாதம் கழித்து பரிவர்த்தன ஏகாதசி. அதாவது படுத்துக்கொண்டு இருக்கக்கூடிய பெருமாள் கொஞ்சம் இப்படி அப்படி திரும்பறார். அதற்கு பிறகு இரண்டு மாதம் கழித்து உத்தான ஏகாதசி. அவர் எழுந்திருக்கறார். எழுந்திருந்த அடுத்த நாள் துளசி விவாஹம். அந்த துளசி செடிக்கும், நெல்லி மரத்துக்கும் விவாஹம்-கல்யாணம் என்பது துளசி விவாஹம். அன்றைய தினம் பாயசம் அதாவது பரமான்னம் என்பதை தானமாக அளிப்பார்கள். இப்படி அந்த துளசி விவாஹத்துடன் அந்த சாதுர்மாஸ்யம் என்பது நிறைவடைகிறது. இப்படி நம்முடைய ஆன்மீகத்திலே சித்திரை மாதம் தொடங்கி யுகாதி தொடங்கி பங்குனி உத்திரம் வரையிலே சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆவணி மூலம், புரட்டாசி சனிக்கிழமை, ஐப்பசியிலே அன்னாபிஷேகம்- சிவபெருமானுக்கு அலங்காரமாக அன்னத்தினால் அபிஷேகம் செய்து, வறுமை, வறட்சி இருக்கக்கூடாது, சுபிக்ஷம் இருக்க வேண்டும். அனைவருடைய வயறும் நிரம்ப இருக்க வேண்டும்;மனதும் நிறைவாக இருக்க வேண்டும். ஐப்பசி அன்னாபிஷேகம் - கங்கை கொண்ட சோழபுரத்திலே நம்முடைய சங்கராசார்ய சுவாமிகள் அந்த காலத்திலேயே சொல்லி, தற்பொழுதும் அம்பது அறுவது மூட்டைகள் அரிசியிலே அன்னம் வடித்து அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று அன்றைய தினம் இரவிலே ஒரு பகுதியை அந்த குளத்திலே இருக்கக்கூடிய மீன்களுக்கு எல்லாம் கொடுத்து, ஒரு பகுதியை கிராம மக்களுக்கு எல்லாம் அன்னப் பிரசாதமாக தற்பொழுதும் வழங்கப்பட்டு வருகிறது.


ஒரு சமயம் ஒரு முப்பது வருஷத்துக்கு முன்பாக காஞ்சி பெரியவர்கள் நூறு வயசு இருந்தார்கள். அந்த சமயத்திலே தாமிரத்திலே can எல்லாம் லாரியிலே எடுத்து அலகாபாத்துக்கு சென்று, அங்கேதான் தீர்த்தம் எடுக்கலாம், காசியிலிருந்து எடுத்துண்டு வரக்கூடாது, போகலாம், ஸ்நானம் பண்ணலாம், வரலாம் அவ்வளவுதான். காசியிலே கொடுத்துட்டு வரணும், எதையும் எடுத்துண்டு வரக்கூடாது. ஆசிர்வாதம் தான் எடுத்துண்டு வரணும். அந்த ப்ரயாகையிலிருந்துதான் கங்கையை நாம் எடுத்துக் கொள்ளலாம். அந்த சங்கமம் சேர்வதற்கு முன்பாக கங்கையை பெரியவர் ஸ்நானம் பண்ணுவதற்காக கொண்டு வந்தார்கள். முதலில் கங்கை கொண்ட சோழபுரம் சிவபெருமானுக்கு அபிஷேகம் பண்ணச் சொல்லி பெரியவர்கள் அனுப்பி வைத்தார். அப்பொழுது அவருக்கு தொண்ணுத்தெட்டு வயசு. அப்படி இந்த கங்கை என்பது காவேரி என்பது எல்லாம் ஆன்மீக ரீதியாக காவேரி நதியை அவர்கள் மதிக்கலாம் கங்கையை நாம் மதிக்கணும். இப்படி ஆன்மீகம் என்பது, தர்மம் என்பது மொழிகளைக் கடந்து, பிரதேசங்களைக் கடந்து, ஏழை-பணக்காரர்கள், படித்தவர்கள்-படிக்காதவர்கள், இவை அனைத்தையும் கடந்து, நம்மை இணைத்து வருகிறது, ஒன்று சேர்த்து வருகிறது. அப்படிப்பட்ட இந்த தர்மத்தை ஒவ்வொரு மாதத்திலேயும் ஒவ்வொரு திருவிழாவாக கொண்டாடி வருகிறோம். ஐப்பசி அன்னாபிஷேகம், காரத்திகை தீபம் - தீபம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் ஞானத்தை மோக்ஷத்தை அளிக்கக்கூடியது. ‘தீப மங்கள ஜோதி நமோநம’ ; என்று அந்த தீபமானது


கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:ஜலே ஸ்தலே யே விசரந்தி ஜீவா: |

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜன: பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா: ||

உத்ஸவே தவ தீபஸ்ய தீப்யமானே விபாவஸௌ |

குக்குளம் ப்ரக்ஷிபாம்யத்ர ப்ரீதோ பவ மஹாபலே ||


என்பதாக இந்த தீப உற்சவமானது புழு பூச்சி மரங்கள் அனைத்திற்கும் ஒரு நற்கதியை விளைவிக்கக் கூடியது. ஆகவே தீபத்தை நாம் ஏற்றி வழிபடுவதன் மூலமாக நமக்கும் நன்மை கிடைக்கிறது, அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை கிடைக்கிறது. அப்படி அந்த காரத்திகை மாதத்திலே கந்த சஷ்டியை நாம் கொண்டாடி வருகிறோம். அதே நாளிலே பீஹார் மாநிலத்திலே கங்கைக் கரையிலே ஒரு முறத்திலே பூஜை பொருட்களை எல்லாம் வைத்து அவர்கள் சூரியனுக்கு வழிபாடு செய்து பீஹார் மக்கள் சட்பூஜா என்று செய்து வருகிறார்கள். அப்படி அந்த கந்த சஷ்டி விழாவானது தேசிய விழாவாக நடைபெற்று வருகிறது. கங்கையினுடைய புத்திரராக இருக்கக்கூடிய முருகப் பெருமானுடைய உற்சவத்தை சூரிய வழிபாடாக அங்கு நடத்தி வருகிறார்கள். இப்படி இந்த கார்த்திகை மாதத்திலே பண்டிகைகள். புரட்டாசி மாசத்திலே சனிக்கிழமையும் விசேஷமாக ஒரு பொழுது இருந்து அந்த சமயத்திலே திருமண்ணெல்லாம் இட்டுக்கொண்டு பஜனைகளை செய்கிறோம்.


மார்கழி மாதத்திலே - பஜனை. அதிகாலையிலே எழுந்து அனைத்து கோவில்களிலேயும் சக்தி பிரவாகத்துடன் பஜனை முதியவர்கள், சிறு குழந்தைகள் அனைவரும் அந்த தீபத்தை வைத்துக் கொண்டு அதிலே பத்து பைசாவோ இருவது பைசாவோ இன்னிக்கு என்ன நாணயங்களோ அவைகளை வைத்து, அந்த மத்தளங்கள் எல்லாம் வாசித்துக் கொண்டு, ஹார்மோனியம் வாசித்துக் கொண்டு நம்முடைய நடுப்பெரியவர்கள் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அந்த பஜனை கோஷ்டிகள் எல்லாம் எங்கு இருக்கின்றனவோ அவர்களுக்கு எல்லாம் தாளம் வாங்கி கொடுத்து, ஹார்மோனியம் வாங்கிக் கொடுத்து, மத்தளம் வாங்கிக் கொடுத்து அந்த பஜனை செய்யக்கூடிய ராமரை கிருஷ்ணரை முருகப் பெருமானை நாம் பஜனை செய்யக்கூடிய அந்த முறையை நாம் மறக்காமல் துரக்காமல் செய்ய வேண்டும் என்பதற்காக பஜனை கோஷ்டிகளை ஊக்குவித்தார்கள். இன்றைக்கும் பல கிராமத்திலே செங்கம் பக்கத்திலே, திருவண்ணாமலை பக்கத்திலே பர்வத மலை என்று இருக்கிறது. அந்த மலையிலே நம்முடைய காஞ்சி பெரியவர் அவருடைய ஐம்பதாவது வயதிலே 1944ம் வருஷம் மார்கழி மாதம் ஒண்ணாந்தேதி வெள்ளிக்கிழமை அவருடைய பொன்விழா ஆண்டை ஒட்டி கிரிப்ரதக்ஷிணம் பர்வத மலையிலே செய்தார்கள்.

அப்படி அந்த சிறப்பு வாய்ந்தது. இன்றைக்கும் அந்த மார்கழி ஒண்ணாந்தேதி அன்று திருவிழா விசேஷமாக கிரிவலம் அந்த சுவாமி கரைகள்ளீஸ்வரர் கோவில் உற்சவம் நடைபெறுகிறது. அந்த காலத்திலே பெரியவர் உபயோகப்படுத்தக்கூடிய தண்டம் இவைகள் எல்லாம் அந்த பகுதியில் இருந்து வரும் என்று சொல்வார்கள். அப்படி இந்த திருவண்ணாமலை செங்கம் பகுதி இந்த வட ஆற்காடு பகுதி. அது விசேஷமானது. ஆறு முனிவர்கள் சென்று காஞ்சிபுரத்திற்கு வந்து தவம் செய்தார்கள். சிவலிங்க பூஜை செய்வார்கள். அதனால்தான் ஆற்காடு என்று பெயர் விளங்கி வருகிறது. ஆறு முனிவர்கள் வழிபட்ட இடம், புண்ணியஸ்தலம் இந்த ஆற்காடு என்பது. க்ஷடாரண்ய க்ஷேத்திரம் என்று பெயர்.


அந்த மார்கழி மாதத்திலே திருப்பாவை திருவெம்பாவை எல்லாம் நாம் படித்து ‘மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்’  எல்லாம் படித்து பக்தி மார்க்கத்திலே இருக்க வேண்டும், பஜனைகளை செய்ய வேண்டும், கோவில்களிலே பொதுவாக பொங்கல், சுண்டல் போன்ற  பிரசாதங்கள் எல்லாம் அளித்து வருகிறார்கள். அது போன்ற மரபு தினசரியும் ஒரு பிரசாதத்தை அளிக்கக்கூடிய பழக்கத்தையும் நாம் ஊக்குவிக்க வேண்டும். மார்கழி மாதம் நன்றாக செய்கிறார்கள். அது போன்று அன்னதானம் என்று விரிவாக செய்ய முடிகிறதோ, முடியலையோ கோவிலுக்கு வந்தால் ஒரு பொங்கலோ சுண்டலோ கொடுப்பதற்கு மேன்மேலும் பக்தர்கள் முயற்சிக்க வேண்டும். அந்த மார்கழி மாதத்திலே சிவபெருமானுக்குரிய திருவாதிரை உற்சவம் திருவாதிரை நக்ஷத்ரம் பற்றி குழந்தைகளுக்கு எல்லாம் நாம் சொல்லித்தர வேண்டும். அஸ்வினி பரணி கிருத்திகை என்று 27 நக்ஷத்ரங்களையும், பிரபவ விபவ என்று 60 தமிழ் வருஷங்கள் இவைகளை பற்றி எல்லாம் நாம் சொல்லித்தர வேண்டும். பள்ளிக்கூடத்திலே வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ கோவில்கள் மூலமாக, மடங்கள் மூலமாக நம்முடைய ஆன்மீக கல்வியை நாம் சொல்லித்தர வேண்டும். அன்றாட கல்வி வேலை வாய்ப்பிற்கும், வியாபாரத்திற்கும் எந்த அளவு முக்கியமோ அது போன்று வாழ்க்கையிலே நாம் சிறந்து விளங்குவதற்கு ஆன்மீக கல்வி ஔவையாருடைய பாடல்கள், திருக்குறள் போன்ற பாடல்கள், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ். இது போன்று பல்வேறு பஜனை பாடல்கள் எல்லாம் இருக்கின்றன. ஸ்தோத்ரங்கள் இருக்கின்றன, தேவாரங்கள் இருக்கின்றன, நாலாயிர திவ்யப்ரபந்தம் இருக்கிறது. இவைகளை எல்லாம் முடிந்த விதத்திலே சொல்லித்தர வேண்டும். இதற்காக பக்தியின் மாதமாக இந்த மார்கழி மாதம் விளங்கி வருகிறது. அன்றைக்கு வைகுண்ட ஏகாதசியும், திருவாதிரையும் பெருமாளுக்கும், சிவபெருமானுக்கும் விசேஷமான திருவிழாக்கள் தமிழ்நாடு முழுவதும் பல இடத்திலே நடைபெற்று வருகிறது. கருட சேவை நடைபெற்று வருகிறது. ‘அபிஷேகப்ரிய சிவ:’ நடராஜ பெருமானுக்கு விடியற் காலையிலே திருவாலங்காடு போன்ற இன்னும் பல கோவில்களிலே சிதம்பரத்திலே அபிஷேகம் நடைபெற்று வருகிறது.


அதற்கு அடுத்தது தை மாசம் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த சூரிய வழிபாடு, கால்நடைகள் காமதேனுவாக விளங்கக்கூடிய இந்த பசுமாடுகளை பூஜை செய்வது, காணும் பொங்கல் - நம்மை உருவாக்கிய, நமக்கு வழிகாட்டிய பல நல்லோர்களை, பெற்றோர்களை வணங்கக்கூடிய காணும் பொங்கல். தெய்வத்தை தரிசிக்க கோவிலுக்குப் போவது, பெற்றோர்களை வணங்கி ஆசி பெறுவது, நம்முடைய ஆசிரியர்களை பார்த்து அவர்களுடைய மார்கதர்சனம் அதாவது நல்வழிக்காட்டுதலை கேட்டு பெறுவது, அவர்களுக்கு மரியாதை செலுத்துவது, இதுபோன்று காணும் பொங்கல், மாட்டுப் பொங்கல், உத்தராயண சுட்டலாம் இதெல்லாம் மேற்கு வங்காளத்தில் கங்கை நதியும், கடலும் சேரக்கூடிய இடத்திலே கபில முனிவருடைய ஆச்ரமத்திலே விசேஷமாக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அந்த சங்கமத்திலே ஸ்நானம் செய்து மகர சங்கராந்தியாக கொண்டாடி வருகிறார்கள். அந்த ஸ்நானத்தை நம்முடைய ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் செய்திருக்கிறார்கள். இப்படி இந்தியா முழுவதும் அந்த சங்கராந்தி பொங்கல், சைனாவுக்குப் பக்கத்திலே நம்முடைய எல்லை மாகாணமான அருணாசல பிரதேசத்திலே லோஹிதா என்றொரு நதிக்கரையிலே ஆற்றுவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். தைப்பூசம் என்பதும் விசேஷம் முருகப் பெருமானுக்காக விரதங்கள் இருந்து அலகு குத்தி, காவடி எடுத்து நம்முடைய தமிழாநாட்டிலே தைப்பூசம் சிறப்பாக நடைபெறுகிறது. காவடி எடுத்து பூஜை செய்வது என்பது வடநாட்டிலேயும் இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்திலே வைத்யநாத் தேவ்கர் என்று ஒரு சிவனுடைய கோவில் இருக்கிறது. அந்த கோவிலுக்கு 1930களிலே 1934 - 1935 வருஷத்திலே காஞ்சி பெரியவர் சென்றிருந்தார். 1973ம் வருஷம் நம்முடைய நடுப்பெரியவர்கள் சென்றிருந்தார்கள். அந்த கோவிலிலே ஒரு நாப்பது அம்பது மைலுக்கு குறைவில்லாமல் அவ்வளவு தூரத்தில் இருந்து கங்கை நீரை காவடியாக எடுத்து வந்து அந்த சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். சிவபெருமானைப் பொறுத்த வரையில் அபிஷேகம் முக்கியம். பெருமாளைப் பொறுத்த வரையில் அலங்காரம், அர்ச்சனை, பிரசாதம் என்பது முக்கியம்.


மாசி மாதத்திலே மாசி மகம் என்கிற விழா காமாக்ஷி அம்மன் கோவிலிலேயும் திருவிழா நடைபெறுகிறது. மகம் என்றால் வேள்வி என்று பொருள். அப்படி அந்த வாழ்க்கையே வேள்வியாக இருப்பது நம்முடைய தர்மம். அது கேள்வியாக மாறக் கூடாது. தர்மத்தை நாம் பின்பற்ற வேண்டும். அப்படி அந்த மாசி மகம் விசேஷமானது.


பங்குனி மாதத்திலே உத்திர நக்ஷத்ரத்தன்று பங்குனி உத்திர திருவிழா ஏகாம்ரநாதர் கோவிலிலே காஞ்சிபுரத்திலே திருக்கல்யாண உற்சவம். அது பார்வதிக்கும், பரமேஸ்வரனுக்கும் - உமாதேவியாருக்கும், மஹேஸ்வரனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அந்த கல்யாணத்தினுடைய சிறப்பை புராணங்கள், காவியங்கள், இலக்கியங்கள் எல்லாம் அழகாக வர்ணித்திருக்கின்றன. ஒரு அருமையான மனதிலே நல்ல சங்கல்பங்கள், நல்ல பக்தி வளரக்கூடிய விதத்திலே அந்த திருக்கல்யாண உற்சவம் இன்றைக்கும் அம்மன் தவம் செய்யக்கூடிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. அம்மன் தவமிருந்து பின்னர் சிவபெருமானை கல்யாணம் செய்து கொண்ட அந்த திருக்காட்சி.



அத்துடன் இந்த ஒவ்வொரு மாதமும் சித்திரா பௌர்ணமியில் தொடங்கி திருக்கல்யாணத்துடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான நோன்புகள், விரதங்கள் - அந்த நோன்பு என்பது நம்முடையதில் இருக்கு. அதை உபயோகப்படுத்தவில்லை என்றால் அது வேறு ஏதோ என்று நினைத்துக் கொள்ள கூடாது. நாம் நம்முடைய வார்த்தைகளை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஆகவே விரதம் என்பதாக இருக்கட்டும், உபவாசம் என்பதாக இருக்கட்டும், ஜபம் என்பதாக இருக்கட்டும் எல்லாம் நம்முடைய வார்த்தைகளே. ஆகவே நம்முடைய சித்திரையிலிருந்து தொடங்கி பங்குனி வரைக்கும் ஒவ்வொரு வருஷமும் சிறப்பான நிகழ்ச்சிகள் நம்முடைய பக்தர்கள் நடத்திக் கொண்டு வருகிறார்கள். இவைகளைப் பற்றி எல்லாம் அதற்கான அறிவை, ஆர்வத்தை, அக்கறையை குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும். ஜனவரி பிப்ரவரி எல்லாம் நாம் சொல்லிக் கொடுத்தாலும் காலண்டருக்காக நாம் சொல்லிக் கொடுத்தாலும் இந்த சித்திரை வைகாசியையும் சொல்லிக் கொடுத்து நம்முடைய பஞ்சாங்கத்தை நாம் சொல்லித்தர வேண்டும். நம்முடைய மாலை கட்டுவதை சொல்லித் தர வேண்டும். கோலம் போடுவதை சொல்லித்தர வேண்டும். பிரதட்சிணம் செய்வதை, வலம் வருவதை கிரிவலமாக இருக்கட்டும், கோவிலை வலம் வருவதாக இருக்கட்டும் சொல்லித்தர வேண்டும். பத்மாசனம் போன்ற நம்முடைய யோகாசனத்தை நாம் சொல்லித்தர வேண்டும். இந்த யோகாசனத்தை வெளிநாட்டை சார்ந்தவர்கள் தற்பொழுது கொண்டாடி வருகிறார்கள். எதிலே லாபம் இருக்கிறதோ, எதிலே நன்மை இருக்கிறதோ, எதனால் அவர்கள் பயனடைகிறார்களோ அவற்றை அவர்கள் உபயோகப்படுத்தி கொள்கிறார்கள். நாம் யோகாசனம், ப்ராணாயாமம் என்பதை மேலும் பிரசாரம் செய்ய வேண்டும். ஆகவே வெளிநாட்டு விளையாட்டு பலது இருந்தாலும், உடற் பயிற்சிகள் பல இருந்தாலும், நம்முடைய முனிவர்கள் கண்டுபிடித்த இந்த அருமையான கலைகளை - சங்கீதம், பாட்டு, பண் என்று பெயர் தமிழிலே, ராகங்கள், சந்தஸ்ஸு வ்ருத்தங்கள் மீட்டர் குறில் நெடில் இது போன்று எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும், இது போன்ற நம்முடைய அருமையான கலைகள் பல இருக்கின்றன. பெண்களுக்கு எல்லாம் சங்கீதத்தை வகுப்புகள் நடத்தி நன்றாக பயிற்றுவிக்க வேண்டும். இன்றைய தினம் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் மூலமாக நூறு பள்ளிக்கூடத்திலே நேற்றைய தினமும் இன்றைய தினமும் ‘நந்தி வித்யா நடேஸ்வரி’  என்று கிராமத்திலே படிக்கக்கூடிய பள்ளிக்கூட மாணவ மாணவிகளின் நன்மைக்காக இந்த வருஷம் நூறு பள்ளிக்கூடங்களில் சங்கீத நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.  எப்படி ரேஷன் மூலமாக, பல ஏற்பாட்டுகளின் மூலமாக அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் எல்லாம் கொடுக்கிறார்களோ அது போன்று நல்ல எண்ணங்களை கொடுப்பதற்கு மனிதர்களுடைய தார்மீக தர்மம் சம்பந்தப்பட்ட எதிர்பார்ப்புகள் எங்க ஊரிலே ஜோசியர் இருக்கிறாரா, எங்க ஊரிலே ஆயுர்வேத வைத்தியர் இருக்கிறாரா, எங்க ஊரிலே கச்சேரி செய்வதற்கு சங்கீதம் படித்தவர் இருக்கிறாரா, மங்கள வாத்தியம் இசைப்பதற்கு நாதஸ்வரக்காரர் இருக்கிறாரா. அந்த நாதஸ்வர பள்ளிக்கூடத்திற்காக சங்கர மடத்தின் மூலமாக இருநூறு மாணவ மாணவியர் பயின்று வருகிறார்கள். அகல் விளக்கு தயார் செய்வதற்காக கிராமப்புற பொருளாதாரம் - இந்து சமயத்தினுடைய கலை, கலாசாரத்தை பின்பற்றுவதற்காக அகல் விளக்கு செய்பவர்களுக்காக பிரம்மாவினுடைய பெயரிலே ஒரு பாடசாலை வைக்கப்பட்டு, அவர்களும் பயின்று வருகிறார்கள். நம்முடைய நாட்டிலே தேர்கள் இருக்கின்றன. அந்த தேர்களிலே எத்தனை அங்குலத்திலே சிற்பங்கள் இருக்க வேண்டும், எந்த சுவாமியை எந்த பக்கத்தில் வைக்க வேண்டும், ஒரு வீடாக இருந்தாலும் நெருப்பு எந்த பக்கத்தில் இருக்க வேண்டும் தண்ணீர் எந்த பக்கத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் வாஸ்து சாஸ்திரம் இருக்கிறது. அந்த மரத்தேரை செய்பவர், கவிதையிலே ரதபந்தம் என்று பெயர். கவிதையிலே எழுத்துக்களை வரிசைப் படுத்தி தேர் போன்று எழுதுவார்கள் - அதற்கு ரதபந்தம் என்று பெயர், அந்த தேரை உருவாக்கக்கூடிய சிற்பிகளை நாம் பயிற்றுவிக்க வேண்டும் என்று அதற்காக ஒரு பாடசாலை நடைபெறுகிறது. கல் சிற்பங்கள் செய்பவர்களுக்காக ஒரு பாடசாலை நடைபெறுகிறது. மஹாபிரசாதம் சமையல் - வீட்டிலேயே நாம பெருமுயற்சி செய்யும்படியாக இருக்கிறது. இந்த காலத்திலே எல்லாம் வந்த அப்பறம் வீட்டு வாசலிலே யார் வரா போரா என்று தெரிய மாட்டேங்கறது எப்போ பார்த்தாலும் கையடக்கம், அவையடக்கம என்பது அந்த காலத்திலே இருந்தது. தற்பொழுது கையடக்கம் என்று இது இருக்கிறது. ஆனால் மனிதர்களுக்கு தேவை அடக்கம், ஆணவம் அல்ல. நமக்கு தேவை ஆவணங்கள், ஆணவம் அல்ல. இப்படி இந்த கலைகளிலே பிரசாத பாடசாலை என்று அதற்காகவும் ஏற்பாடு நடைபெற்று வருகிறது. புளியோதரை சர்க்கரை பொங்கல் இவைகள் எல்லாம் சுவாமிக்கு நிவேதனம் செய்வதற்காக. கோவில்களை நம்முடைய மன்னர்களும், முனிவர்களும், முன்னோர்களும் கட்டி இருக்கிறார்கள். சொத்துக்களையும் கொடுத்து இருக்கிறார்கள். நாம் பராமரிக்க வேண்டும்,‌ பாதுகாக்க வேண்டும், வளர்க்க வேண்டும். இருக்கக்கூடிய கோவில்களை நன்றாக வைத்துக் கொண்டு, சுத்தமாக வைத்துக் கொண்டு, அங்கு பூஜை செய்வதற்கான வில்வம், துளசி, முல்லை, மல்லிகை, வாசனை திரவ்யங்கள் - மரு, மருக்கொழுந்து வெட்டிவேர், இப்படி வாசனையுடன் கூடிய அந்த புஷ்பங்கள் கிடைப்பதற்கு நந்தவனங்களை அமைத்து, கோவில் பக்கத்திலே இடம் இருந்தாலும் சரி, தனியாக இருந்தாலும் சரி இந்த பூக்களைக் கொண்டு ‘அன்று பூத்த மலரால் உன்னை அர்ச்சித்தேன்’ என்று அந்த பூஜைகளை செய்து விசேஷமாக ‘ஏகபில்வம் சிவார்ப்பணம்’ குழந்தைகளுக்கு ஒன்றிரண்டு மரங்களை நட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து தண்ணீர் விட்டுக் கொண்டே இருந்தால் அந்த அமைதியின் மூலமாக, ஆத்ம சக்தி என்பது பெருகும். பலம் என்பது பெருகும், நேர்த்தி நேர்மை என்பது வளரும். ஆகவே அந்த மரம் செடி கொடிகளை பராமரிக்கக்கூடிய பணியை அந்த இளைஞர்களுக்கு நாம் அளிக்க வேண்டும். அந்த புஷ்பம் சுவாமிக்கு வந்து சேர வேண்டும். ‘ஏகபில்வம் சிவார்ப்பணம்’


அந்த துளசி என்பது விசேஷமானது. ஒரு சமயத்திலே புராணத்திலே தங்கம், வெள்ளி, வஜ்ரம், வைடூரியம் எல்லாம் ஒரு பக்கம் வைத்தார்கள். இன்னொரு பக்கம் துளசியை வைத்தார்கள். துளசியை வைத்த பக்கம் இறங்கியது. அதாவது இதுதான் வலுவானது என்று பகவான் விரும்புவது துளசி. எதை நாம் செய்தாலும், எந்த நன்கொடைகளை அளித்தாலும் அந்த நன்கொடைகளை பவ்யமாகவும், பக்தியுடனும் அளிக்க வேண்டும். அப்படி மனிதனுடைய மனது அழகாக இருப்பதற்கு, நல்ல விசாலமாக இருப்பதற்காக முயற்சிப்பதுதான் தர்மத்தினுடைய நோக்கம். அது ஒரே நாளிலே வராது. இயற்கையாக மனிதர்களுக்கு ஆசை என்பது ஆண்டு. ஆசையை முறைப்படுத்தி நியாயம் தர்மத்தின் படி அதை சரிப்படுத்தி அமைப்பதுதான் தர்மத்தினுடைய லட்சியம். அப்படி பேராசையும் இல்லாமல், பேருக்காக ரொம்பவும் ஆசைப்படாமல், நிராசை frustration என்பது இல்லாமல் நல்ல ஒரு வாழ்க்கை அமைவதற்கு நாம் தினசரி முயற்சிக்க வேண்டும். அதை அன்பாக சொல்ல வேண்டும், அடிக்கடி சொல்ல வேண்டும், வெறும் உபதேசமாக இல்லாமல் உதவி செய்து சொல்ல வேண்டும். உபதேசத்தை மாத்திரம் கேட்டுக் கொண்ட ஒரு சக்தி, பொறுமை அந்த காலத்திலே இருந்தது. நீங்கள் எல்லாம் ரொம்பவும் பொறுமையாக சாயங்காலத்திலே இருந்து வருகிறீர்கள். நாங்கள் மேட்டூர் போய் சேலம் போய் விட்டு வரோம். ஆனாலும் தர்மபுரி வந்துவிட்டுதான் போகணும் என்று வந்தோம், நீங்களும் பார்த்துவிட்டு தான் போகணும் என்று மணிக்கணக்காக இங்கே இருக்கிறீர்கள். இப்படி பொறுமையுடன் இருப்பதால் தான் பெருமையுடன் இருக்கிறது நம்முடைய தர்மம்.  அப்படிப்பட்ட இந்த தர்மத்தை மேன்மேலும் வளர்ப்பதற்கு அனைவரும் சிறு தளி பெருவெள்ளம். அமிர்த பிந்து ஆனந்த சிந்து என்பதாக என்னால எவ்வளவு செய்ய முடியும், நான் செய்து தான் நடக்கப் போறதா என்றெல்லாம் இல்லாமல் அணில்கள் எப்படி அனுகூலமாக ராமபிரானுக்கு விளங்கியதோ அது போன்று நம்முடைய சமயத்திலே நல்ல புஸ்தகங்களை படிக்க வேண்டும். இலக்கியத்தை வாசிப்போம்;இயற்கை காற்றை சுவாசிப்போம்;இறைவனை பூஜிப்போம். இது போன்று நல்ல சங்கல்பத்துடன் இருந்து நல்ல தர்மங்களை எல்லாம் செய்வதற்கு அனைவரும் இணைந்து, சக்தி என்பது இறைவனுடைய படைப்பிலே பலருக்கும் அளித்திருக்கிறார். சில பேருக்கு நடப்பதற்கு சக்தியை கொடுத்திருக்கிறார், சில பேருக்கு நன்கொடை அளிப்பதற்கு சக்தியை அளித்திருக்கிறார், சில பேருக்கு சிந்திப்பதற்கு சக்தியை வைத்திருக்கிறார், சில பேருக்கு ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு அதாவது இணக்கமாக செயல்படுவதற்கான பக்குவத்தை அளித்திருக்கிறார், சில பேருக்கு பேசக்கூடிய சக்தியை அளித்திருக்கிறார். ஆகவே சக்திகள் பல இருக்கின்றன. அந்த சாமுண்டேஸ்வரி-மஹிஷாசுரமர்த்தினியுடைய ஸ்வரூபத்தைப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு தேவர்களுடைய சக்தியும் இணைந்து பராசக்தியாக மஹிஷாசுரமர்த்தினியாக வருகிறது என்று புராணங்களிலே பார்க்கிறோம். அது போன்று மனிதர்களுக்கு இருக்கக்கூடிய சக்திகளை நல்ல விதமாக பயன்படுத்திக் கொண்டு நம்முடைய நாடு என்ன பல வெளிநாட்டு சூழ்நிலைகள்  இருந்தாலும் சாதிக்கக்கூடிய சக்தி படைத்த நாடு. இப்படிப்பட்ட இந்த நாட்டிலே தெய்வ பக்தியும், தேச பக்தியும் ஒரு சேர வளர்ந்து, குடும்பங்கள் என்பது நம்முடைய நாட்டிலே முக்கியம். கிராமங்கள் என்பது நம்முடைய நாட்டிலே முக்கியம். நகரங்களிலே இருக்கக்கூடிய வசதிகளைக் கொண்டு கிராமபுரத்தை நாம் முன்னேற்றம் செய்து நல்ல விதமாக வளர்க்க வேண்டும். கிராமங்கள், கோவில்கள், குடும்பங்கள் அந்த மூன்றையும் சிறப்பாக நடத்துவதன் மூலமாக பலம் பொருந்திய தேசமாக, அமைதி நிறைந்த தேசமாக, ஆக்கப்பூர்வமாக சிந்திக்கக்கூடிய தேசமாக மேலும் மேலும் வளர்க்க முடியும். இந்த தர்மபுரி நகரத்திலே பல முன்னேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. சாலைகள், பல கல்விச் சாலைகள், பக்கத்திலே ஓசூர் போன்ற நகரங்கள் எல்லாம் இருக்கின்றன. பல முன்னேற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. லௌகீகமான முன்னேற்றத்துடன் சேர்ந்து தார்மீகமான முன்னேற்றத்தையும் நாம் செய்து, இந்த தர்மபுரி என்கிற பெயரிலே தெலுங்கானாவிலேயும் மந்தளி தர்மபுரி என்று ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊருக்கும் போயிருந்தோம். அந்த ஊரிலே நரசிம்மர் கோவில் எல்லாம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தர்மமிகு சென்னை என்று சொல்வார்கள். ஆனால் தர்மம் என்ற பெயரிலேயே அமைந்த ஊராக இது அமைந்திருக்கிறது. இந்த ஊரில் நீங்கள் எடுத்துக்காட்டாக விளங்கி ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷித: என்று திருமலா திருப்பதி தேவஸ்தானத்திலே எழுதி இருக்கிறார்கள். தர்மத்தை நாம் செய்தால் அந்த தர்மம் நம்மைக் காக்கும், நம்முடைய தலைமுறையையும் காக்கும். இப்படிப்பட்ட அருமையான நம்முடைய கல்வி, நம்முடைய கலைகள், நம்முடைய கடவுள், நம்முடைய கோவில்கள், நம்முடைய குடும்பங்கள் எல்லாவற்றையும் சிறப்பாக நடத்தி அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே என்கிற காமாக்ஷி அம்மனுடைய அருளால் மேலும் உங்களுடைய வாழ்க்கை சிறக்க வேண்டும் என்று பிராரத்திக்கிறோம்.


தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

ரமாரமண கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!!

வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா!!

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!!

Comments


bottom of page