top of page

Interview with Rajalakshmi Srinivasan: Translating Ponniyin Selvan into Sanskrit

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் எழுதிய கவிதைகளை சிந்தனை களஞ்சியம் எனும் தலைப்பில் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து இலக்கிய உலகில் கவனத்தை ஈர்த்தவர் மொழிபெயர்ப்பாளர் ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன்.

சென்னை பல்கலைகழகத்தில் தமிழ் - சமஸ்கிருத ஒப்பீட்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பெங்களூரு பூர்ண பிரஜ்ன சம்சோ தன் மந்திரம் என்ற சமஸ்கிருத ஆராய்ச்சி மைய தலைவராக பணியாற்றியுள்ளார். தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, குஜராத்தி, ஆங்கில மொழிகளை அறிந்த அவர் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர புதினத்தை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவரது மகள் தான் ஆரோவில் செயலர் ஜெயந்தி ரவி.


ஆரோவில்லில் இனிமையான சூழலில் அவருடன் ஒரு சந்திப்பு.


உங்களுக்கு சமஸ்கிருத மொழிபெயர்ப்பு மீது ஆர்வம் வந்தது எப்படி?


தமிழ் தான் எனக்கு தாய்மொழி. அதே நேரத்தில் சிறுவயதில் இருந்தே சமஸ்கிருதத்தின் மீதும் ஆர்வம் இருந்தது.கதைகள் படிக்கும்போது அந்த கதைகளை சமஸ்கிருதத்திலும் எழுதி பார்ப்பேன்.சிறுவயதிலேயே எனக்கு ராமாயண ஹரிகதா நிகழ்த்த வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கம்பன், துளசிதாஸ், ஆழ்வார்களின் பாசுரங்கள் என பல வடிவங்களில் ராமாயணத்தை அறிந்தேன். இதுவே பின்னாளில் தமிழ் - சமஸ்கிருதம் இடையில் மொழிபெயர்ப்பு பணியை செய்ய ஆர்வத்தை துாண்டியது.


பொன்னியின் செல்வனை மொழிபெயர்ப்பதில் ஆர்வம் வந்தது எப்படி?



கல்கியின் நுாற்றாண்டின்போது அவரது நுால்களை மீண்டும் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் பொன்னியின் செல்வன் நாவல் முழுமையாக கவர்ந்தது. அதை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க நினைத்தாலும் அது என்னால் முடியுமா என என்னுள் சந்தேகம் எழுந்தது.


பொன்னியின் செல்வன் மொழிபெயர்ப்புக்கு மூத்த புலவர் புலமைபரிசில் வழங்க என்னை தேர்வு செய்ததும் எனக்குஉந்துதலாக அமைந்தது. மத்திய அரசு அளித்த நிதியுதவியோடு அந்தப் பணியை செவ்வனே செய்து முடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனது பொன்னியின் செல்வன் சமஸ்கிருத மொழி பெயர்ப்பு நுால் ஐந்து பாகங்களாக ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தானம் வெளியிட்டது. அப்போதைய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிதி ராணி கலந்து கொண்டு வாழ்த்தினார்.


பொன்னியின் செல்வன் மொழிபெயர்ப்பில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான சவால் பற்றி...


சிறந்த எழுத்தாளரான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மொழிபெயர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. அது அற்புதமான படைப்பு. அவருடைய எழுத்துகளில் இடம் பெரும் விவரிப்புகள், அழகிய வர்ணனைகளை சமஸ்கிருதத்தில் கடத்தி செல்வது என்பது நேரம் எடுத்து கொள்ளும் வேலை.



Source: Dinamalar Aug 24 2026.

Comments


bottom of page