top of page

ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தெய்வத் தமிழ் ஆய்விருக்கை

அன்புடையீர்,

வணக்கம்.

நேற்று, 11-8-25 அன்று காஞ்சி ஶ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “ ஶ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தெய்வத் தமிழ் ஆய்விருக்கை” ரூ.1 கோடி மதிப்பில் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்நிலை ஆராயச்சிகளை மேற் கொள்ளும் மாணவ மாணவியருக்கு மொழி ஆராய்ச்சிகளுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடனும் நிதியம் ஒன்றினை நிறுவிடும் விழாவில், ஶ்ரீ பெரியவாளின் அற்புதமான ஆற்றொழுக்கு நடையில் அமைந்திட்ட அனுக்ரஹபாஷணம் அதன் ஆழமான மையக் கருத்துக்களை அவற்றின் பரிணாம வளர்ச்சி போன்று வரிசை, வரிசையாக இடைவெளி இன்றி , அவர்கள் அடுக்கி அருளிய விதம் ஆகியவை அவையோர் அனைவரையும் ஶ்ரீபெரியவர்கள் பால் ஈர்த்தும் , ஒரு ஈடுபாட்டுடன் அமைதியாகவும் மிகவும் நம்பிக்கையுடனும் உன்னிப்பாகவும் கேட்க வைத்தது, என்பது நான் என் கண்களால் கண்ட நிஜம். ( ஶ்ரீ பெரியவர்களது முழு அனுக்ரஹ பாஷண உரை முழுதும் தனியே தரப்படும்)

அதுபோலவே கம்பவாரிதி இலங்கை ஶ்ரீ ஜயராஜ் ஐயா அவர்கள் திருப்பதி முகாமில் இன்று காலையில் ஶ்ரீபெரியவாளை தரிசித்தபோது, அவர்கள், அவருக்கு அருளிய “ அரசியல் கலக்காத, சமய உணர்வோடும் சைவ உணர்வோடும், கூடிய தெய்வத் தமிழ் மொழியினை இன்றைய சூழலில், பண்புமிக்க நமது பாரம்பரிய கலாச்சாரம் சற்றும் சிதையாது எவ்வாறு முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற உபதேசம் போன்ற கருத்துக்களின் பின்புலத்திலும் ஶ்ரீபெரியவாள் தம்மீது வார்ஷித்த அனுக்ரஹ பாஷணத்தைக் கண்டும் கேட்டும், மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த ஶ்ரீ கம்பவாரிதி அவர்கள் தமது உரையை, “இன்று எனக்கோர் மறக்க முடியாத நாள்“ என்றும், ஶ்ரீமடத்தின் மரபுகளுக்கு தான் புதியவன் என்றும் கூறி தமது உரையை, “வரிசை” என்ற சொல்லுடனே ஆரம்பித்து “அ” எனும் ஓர் எழுத்தின் மகிமையையும் அகரவரிசையின் காரண காரியங்களையும் தமது உரையில் சொன்னார் போலும். மரபுகள் மிகுந்த “வரிசை” என்பது மறைந்து கொண்டு வருகிறது, என்றும் ‘வரிசைக்கு ஏங்கும் பரிசில் வாழ்க்கை’ என்ற சங்கத் தமிழ்ப் புலவரின் வார்த்தைகளை மிகுந்த ஆதங்கத்தோடு கூறியது கூட்டத்தினரை நெகிழச் செய்ததும் நிஜமே. தமிழ் எழுத்துக்களின் வல்லின மெல்லின இடையினம் என்ற வகைகளைக் கூறி, மனிதனின் உடற்கூறு வலிமையுடன், ஒப்பிட்டு “ உயிர் எழுத்துக்கள் ஆண் எழுத்துக்கள், என்றும், ஆண் எழுத்துக்கள் குறில்,நெடில் இருவகைப்படும் என்றும் மெய் எழுத்துக்களை வல்லினம்,மெல்லினம், இடையினம் என்று மூன்றாகப் பிரித்து அதை பெண்ணோடு ஒப்பிட்டு பிரித்தது மிகவும் பொருள் பொதிந்த ஒன்று என்றும் அகர வரிசையில், மூலாதாரத்திலிருந்து எழும் முதல் ஓசை நாபிக் கமலம், குரல் பகுதி, முதலான இடங்களைக் கடந்து வாய்திறந்து வெளிவரும் போது “அ “ எனும் எழுத்து ஒலி வடிவம் பெறுகிறது. அனைத்து எழுத்துக்களிலும் இந்த அகர எழுத்து கலந்துள்ளது. இயல்பாகவே பெண்கள் மென்மையானவர்களாதலால் வல்லினம்,மெல்லினம், மற்றும் இடையினம் சார்ந்த எழுத்துக்களை பெண்எழுத்துக்கள் என்றும் அவை மூன்றுவகையாகவும் உள்ளதென்றார். தமிழ் இலக்கியங்கள். பெண்களை மூன்று வகையாகப் பிரித்து காண்கின்றன. வால்மீகியும் விஸ்வாமித்திரர் மூலமாக, யஞ்ஞ ரக்ஷணத்திற்குச் செல்லும் ஶ்ரீ இராமனுக்கு மூன்று வகைப் பெண்களை அறிமுகப் படுத்துகிறார். முதலில் அரக்க குணமுள்ள தாடகை, அடுத்து, சமய சந்தர்ப்பங்களால் தன்னை இழந்த அகலிகை அடுத்து, எந்த சூழலிலும் தன்னை இழக்காத முழுதும் தெய்வத்தன்மை கொண்ட அன்னை சீதம்மாள் என்று, மூன்று பெண்களை மூவகைப் பெண்களாக அறிமுக்ப்படுத்தியது பற்றி அவர் கூறியது,மிகச் சிறந்த உதாரணம். இவ்வாறாக தமிழின் “தெய்வத்தன்மையை, தைவீகத்தை” தனக்கே உரிய பாணியில் தக்கதொரு ப்ரமாணப் ப்ரமேயங்களுடன் ஶ்ரீ கம்பவாரிதி அவர்கள் கூறியது, கேட்டோர் அனைவரையும் சிந்திக்கச் செய்தது. மேலும், “தமிழைப் போன்றே நமது மதமும் தொன்மை மிக்கது, என்றும் சைவத்தின் 24 பிரிவுகள் உள்ளன அவை அகம் என்றும் புறம் என்றும் தொடர்ந்து அகம்-புறம், புறம்-புறம், புறம் என்றும் ஆறு ஆறாக நான்கு வகையைச் சொல்லி கடைசியாக நிரீஸ்வரவாதம் என்று வைத்துள்ளதை விவரித்து, கடவுள் மறுப்பாளர்களுக்கும் நம் மதத்தில் இடம் உண்டு, என்றும் இச்சிறப்பு வேறு எந்த மதத்திலும் இல்லை எனவும் ஆணித்தரமாக உரைத்தார்கள். அப்படிப்பட்ட நம் மதம் தமிழ்மொழியோடு இசைந்தது, இணைந்தது, மென்மையான தமிழால் மேன்மை பெற்றது, என்றார். தமிழில் கற்றுத் தெளிய எத்தனையோ பல்லாயிரம் அற்புதமான இலக்கியங்கள் இருப்பினும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழி தந்த திருக்குறளை மட்டும் ஒவ்வொரும் கற்றுத் தெளிந்து அதன்படி ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வாழ்ந்து வந்தாலே ‘மானுடம்’ உயர்ந்து நம் வாழ்க்கை செம்மையுறும், என்றார். இத்திருக்குறனினை திருவள்ளுவர் அறத்துப் பால், பொருட்பால் இன்பத்துப் பால் என்றும், ஒவ்வொரு வகைக்கும் இத்தனை அதிகாரங்கள் என்றும் ஊழ் எனும் ஒற்றை அதிகாரத்தையும் வகைப் படுத்தி கட்டமைத்துள்ளது, உற்று நோக்கத் தக்கது, கருத்தாழம் கொண்டது, என்றும் கூறினார். திருக்குறளின் பாயிரத்துள்ளேயே முதலில், அகர முதல என்று தொடங்கி ஆதிபகவனால் படைக்கப்ப பட்டது இவ்வுலகு என கடவுளின் இருப்பு பற்றியும் இயற்கை நம்மீது எத்துணை கருணை கொண்டுள்ளது என்பதை வான்சிறப்பு கூறுவது பற்றியும், துறவரம் பற்றியும் நீத்தார் கடன் பற்றியும் கூறி அறம் பொருள் இன்பம் வீடு என்று என எடுத்துக் கூறியது தெய்வீகத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம்தான் எத்தனை பாக்கியவான்கள் என நம்மை உணர வைத்தது. திருக்குறளுக்கு எத்தனையோ உரைகள் பல்வேறு அறிஞர் பெருமக்களால் தரப்பட்டுள்ள போதிலும் முதல் உரையாக வெளிவந்த பரிமேலழகர் உரையே சாலச் சிறந்தது என்றும் கூறினார். இரண்டறக் கலந்துவிட்ட தமிழையும் பக்தியையும், தமிழையும் தெய்வீகத்தையும் பிரிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது, என்றார். எனவேதான் இம் மொழி, “ தெய்வத்தமிழ்” எனப்படுகிறது என்று, ஶ்ரீ பெரியவாள் அவர்கள் பெயரிட்ட, “ ஶ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தெய்வத் தமிழ் ஆய்விருக்கை” என்ற பெயருக்கு உரையாக, வியாக்யானமாக பாஷ்யமாக, ஶ்ரீ கம்பவாரிதி இலங்கை ஶ்ரீ ஜயராஜ் அவரகளின் சிறப்புரை அமைந்துள்ளது என்றால் அது மிகை இல்லை.

இவ்வாறாக, ஶ்ரீ்பெரியவாளின் அபரிமிதமான குரு பக்தியின் காரணமாகவும், அவர்களது உத்தம குரு ஶ்ரீ ஶ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் சமய, சமூக, கலாச்சார மொழி ஆகிய பல் பெரும் பிரிவுகளில் அவர் ஆற்றியுள்ள மகத்தான பணிகளையும் பங்களிப்பையும், போற்றியும் பாராட்டியும், ஶ்ரீ பெரியவர்கள் இன்று தொடங்கி வைத்த, காஞ்சி, ஶ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், “ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தெய்வத் தமிழ் ஆய்விருக்கை” எனும் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான நிதியத்தின் நோக்கங்கள் மற்றும் பணிகள் சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவித்து அற்புதமான சிறப்புரை ஒன்றை கம்பவாரிதி ஶ்ரீ ஜயராஜ் அவர்கள் வழங்கினார்கள்.

தொகுப்புரை: சேது. இராமச்சந்திரன்

Comments


bottom of page