top of page

Markazhi Special


காப்பு


முதல்வொலியின் வடிவினனாம்

நுதல்கண்ணன் பரமசிவன்

முதற்பிள்ளை ஆனவனாம்

முழுமுதற் காரணனை

முதற்கொண்டுப் பணிதுவங்கிப்

பதம்பணிவார் எய்துவரே

முதன்மையு மேன்மையு மே.



பள்ளிஎழுச்சி


முதல்கிரணம் கண்டுநாணித்

துகிலேற்கும் விண்மடியில்

முதல்வணக்கம் தான்கூறிப்

புள்ளினங்கள் ஆர்ப்பரிக்க

முதல்முடிவு ஏதில்லாப்

பரம்பொருளுன் மோனத்திரு

முதல்தோற்றம் யாம்காண

எஞ்சிவனே எழுந்தருள்வாய்


மணியோசை மத்தளமென

மங்களஇசை தான்முழங்க

அணிவகுத்துன் வாயிலில்சூழ்

அன்பர்குழாம் தம்பிறவிப்

பிணிதீர்க்கும் அருமருந்தாம்

பரம்பொருள்நீ குமிழ்சிரிப்பு

அணிந்தவாறை யாம்காண

எஞ்சிவனே எழுந்தருள்வாய்



ஆதவனைக் கருத்தரித்தக்

கார்முகிலின் துயரறிவாய்

வாதவூ ரார்முதலா

மடியவரின் பண்ணேலாய்

காதலுமை மையலிலே

உறங்குதியோ பரம்பொருளே

ஏதுன்முகம் யாம்காண

எஞ்சிவனே எழுந்தருள்வாய்



ஓதிடுவார் கடன்முடித்துத்

திரைவிலகக் காத்திருக்க

மாதர்தம் தலைக்குளித்துக்

கோலமிட்டுக் காத்திருக்க

போதுமலர்த் தும்பிகளும்

துயில்நீங்கிப் பணிசெய்யப்

போதாதோ உன்னுறக்கம்

பரம்பொருளே மால்காணாப்

பதமலர் யாம்காண

எஞ்சிவனே எழுந்தருள்வாய்



கயிலையம் பதியினிலே

கனிவேண்டிக் கணபதியும்

மயிலோடு ஓங்காரப்

பரமகுரு சண்முகனும்

குயிலன்ன மொழிபேசிக்

கிளியேந்தும் தாயுமையுன்

துயில்நீங்கத் தவமிருக்க

எளியவராம் யாம்காண

எஞ்சிவனே எழுந்தருள்வாய்



உந்தன் விழிமலர்

விழித்து நோக்கிட

வெந்தன திரிபுரம்

எரிந்தனன் காமனும்

கந்தன் பிறந்தனன்

காமாட்சி நெகிழ்ந்தனள்

விந்தை யிதுவன்றோ

பரம்பொருளே உன்விழியில்

கருணையே யாம்காண

எஞ்சிவனே எழுந்தருள்வாய்




வரம்கொண்ட அசுரன்உன்

சிரம்தேடி அலைவான்தலைக்

கனம்கொண்ட நான்முகன்உன்

சிரம்காண விழைந்தான்

அவர்கண்ட முடிவென்ன

அறிந்ததனால் என்றும்

சிரம்காணத் துணியாது

பரம்பொருளே உந்தன்திரு

பதமிரண்டும் யாம்காண

எஞ்சிவனே எழுந்தருள்வாய்


பதஞ்சலியா தாடிடுமுன்

பதம்நோத லாற்றாமல்

இதமாகப் பிடித்திடுவாள்

உன்பதங்கள் எந்தாயும்

மிதமாக நீயுறங்கி

மீண்டெழுந்து ஆடிடுவாய்

சதமாக யாம்காண

எஞ்சிவனே எழுந்தருள்வாய்


நீயுறங்க உன்பாதி

உமையுறங்க உன்கரத்து

மானுறங்க உன்சிரத்தில்

நதியுறங்க உன்பதத்தில்

தாயுறங்கப் பல்லுயிரும்

ஓய்ந்துறங்க அலையுறங்காக்

கடல் வணங்கும்

செந்தூரான் கொடிச்சேவல்

கூவிடச் செவிமடுத்துப்

பரம்பொருளே யாம்காண

எஞ்சிவனே எழுந்தருள்வாய்


தாயுறங்கக் கேட்டதுண்டோ

தரணியிலே கூற்றுண்டு

வாய்வேறு வயிறும்

வேறென்பார் அறியாதார்

சேயுறக்கம் தான்கலைந்து

வாயெடுத்து அழுமுன்னர்

தாய்நினைந்து ஊட்டிடுவாள்

அறியாயோ தயாபரனே

தாயுமா னவன்நீயே

உன்னுறக்கம் பொய்யென்று

யாமறிவோம் யாம்காண

எஞ்சிவனே எழுந்தருள்வாய்


திருச்சிற்றம்பலம்



Written by:Sri. S Suresh

49 S S Nagar Natham Road

Dindigul 624003

Mob: 9442024389

49 views1 comment

Recent Posts

See All

1件のコメント


L Srinivasan rao
2021年1月09日

Thanks Suresh. The poem is very good. May God bless you. Please write many more poems on all Gods!

95660 79862

いいね!
bottom of page