top of page

Prayer to Periyava

”எங்கிட்ட வேண்டிண்டா!” - மகா பெரியவா*


பெரியவாளே கதி! என்றிருக்கும் குடும்பங்களில், ஸ்ரீ வேதநாராயணன் குடும்பமும் ஒன்று! 1986-ல் பம்பாயில் உள்ள ‘கார்’ ரோடில் ஸ்ரீ ராமநவமி உத்ஸவத்தில் நடந்த உபன்யாஸத்தை கேட்கச் சென்றார் வேதநாராயணன். உபன்யாசம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே, இவருக்கு உடம்பை என்னவோ பண்ண ஆரம்பித்தது இன்னதுதான் என்று சொல்லத் தெரியாத ஒரு உபாதை! உபன்யாஸத்தில் மனஸ் லயிக்கவில்லை. உடனேயே எப்படியாவது வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று எழுந்து வெளியே வந்தார்.


ஆட்டோவிலோ, டாக்ஸியிலோ போக தயக்கமாக இருந்தது. பஸ்ஸில் சென்றால், பக்கத்தில் சுற்றி பலபேர் இருப்பார்களே! என்ற தைர்யத்தில், வீட்டுக்குப் போக பஸ்ஸில் ஏறிவிட்டார். முன்ஜாக்ரதையாக, தன்னுடைய பெயர், அட்ரஸ், ஃபோன் நம்பர் எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் எழுதி, ஷர்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். வழியில் ஏதாவது ஆகிவிட்டால்? என்ற பயம்!


சரீரம் ஏதோ உபாதையிலிருந்தாலும், இத்தனை கார்யத்தையும் கைகள் செய்து கொண்டிருந்தாலும், மனஸ் மட்டும், விடாமல் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தது.


அவருடைய காலனிக்குள் சென்றதும், அவருடைய வீட்டுக்கருகில் குடியிருக்கும் டாக்டர், எதிரே வந்தார்…. இவரைப் பார்த்ததும்,


“என்ன? ஸார்… ஒரு மாதிரி இருக்கேளே? ஒடம்புக்கென்ன?..”


கேட்டுவிட்டு, கையோடு தன்னுடைய வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று, அவருடைய ரத்த அழுத்தம் நாடி எல்லாம் செக் பண்ணினார். டாக்டரின் முகம் ஸரியாக இல்லை கலவரமடைந்து இருந்தது!


”பிரஷர் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே! ஒங்களுக்கு ஏதாவது ஹார்ட் ப்ராப்ளம் உண்டா?…”


“எனக்குத் தெரிஞ்சு அப்டியொண்ணும் இல்ல…..டாக்டர்”


“நீங்க இப்போதானே வெளிலேர்ந்து வந்திருக்கேள்! ரொம்ப டயர்டா இருப்பேள்….. வாங்கோ! நானே வீட்டுல கொண்டு விடறேன். அப்றம் கொஞ்ச நேரம் கழிச்சு, மறுபடியும் வந்து செக் பண்றேன்……. பேசாம படுத்துண்டு ரெஸ்ட் எடுங்கோ! ப்ரஷர் எறங்கலேன்னா… ICU-லதான் சேக்கணும்…..”


டாக்டர் துணைக்கு வர, வீட்டுக்கு சென்றார். அவர் மனைவியிடம் விஷயத்தை சொன்னார் டாக்டர். அவளோ நேராக பெரியவா முன்னால் போய் நமஸ்காரம் செய்தாள்.


“பெரியவா….. எனக்கு ஒண்ணுமே தோணல! ஒங்கள விட்டா….. எங்களுக்கு கதி யாருமில்ல! நீங்கதான் எங்களோட பகவான்.! …..நீங்கதான் அவரை காப்பாத்தணும் …..அவர் ஒங்களோட பொறுப்பு! எனக்கு மாங்கல்ய பிச்சை போடுங்கோ! பெரியவா….. ஒங்களையே நம்பியிருக்கேன்…”


‘அப்பீல்’ போட்ட இடம் ‘ஶ்ரீஶ்ரீமேரு’வாச்சே!


அரைமணி நேரம் கழித்து வந்து, டாக்டர் செக் பண்ணினால், ப்ரஷர் குறைந்திருந்தது!


“நன்னா…..ரெஸ்ட் எடுங்கோ! ஒண்ணும் பயமில்ல! காலேல வந்து பாக்கறேன்…”


வேதநாராயணனும், பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, படுத்துக் கொண்டார்….. நன்றாகத் தூங்கினார். மறுநாள் காலை, டாக்டர் மறுபடியும் வந்து செக் பண்ணினார்.


“ப்ரஷர் ரொம்ப நார்மலா ஆய்டுத்து! ஆனா, ஒருவாரம் ஆஃபீஸ் போக வேணாம். நன்னா ரெஸ்ட் எடுங்கோ!..”


ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு, “ஒண்ணும் பயப்பட வேணாம்…” என்று சொல்லிவிட்டுப் போனார்.


*இனிமேத்தான் ‘ஹை லைட்’ !*


மறுநாள் வேதநாராயணன் வீட்டு டெலிபோன் ‘ரிங்’கியது அவர்களுக்குத் தெரிந்தவர்கள் பேசினார்கள்!


“ஹலோ! நா….. புதுக்கோட்டை ராஜம்மா மாமியோட பொண்ணு, ராஜேஸ்வரி பேசறேன்… காசி போய்ருந்தேன்! முந்தாநாள், காசி ‘ஹனுமான் காட்’-ல, வஸந்த நவராத்ரி.. புதுப் பெரியவாளுக்கு பிக்ஷா வந்தனம் பண்ணினோம்! பிக்ஷா வந்தனம் ஆனதும், புதுப் பெரியவா எனக்கு ப்ரஸாதம் குடுக்கறச்சே, எங்கிட்ட தனியா ஒரு குங்கும ப்ரஸாதத்தை குடுத்துட்டு சொன்னார் ….


“பம்பாய் போனவொடனே… இந்த ப்ரஸாதத்தை வேதநாராயணன் ஆத்துல கொண்டு போய்க் குடு! அவனோட பார்யாள்… எங்கிட்ட வேண்டிண்டா. அவளைக் கவலைப்பட வேண்டான்னு நா…சொன்னதா சொல்லு!…”


அப்டீன்னு சொல்லிட்டு, கண்ணை மூடிண்டு ப்ரார்த்தனை பண்ணிண்டு, இந்த ப்ரஸாதத்தை அனுக்ரஹம் பண்ணி அனுப்பியிருக்கா!… ஸாயங்காலம் கொண்டு வந்து தரேன்!…”


வேதநாராயணனும், அவர் மனைவியும் அந்த ‘தெய்வாநுக்ரஹ சுமையை’ தாங்க முடியாத உணர்ச்சியில் தள்ளாடினார்கள்! அவள் வேண்டிக் கொண்ட நேரமும், காஸியில் [புது]பெரியவா ப்ரஸாதம் அனுக்ரஹித்த நேரமும் ஒன்றே!


“பெரியவா….. எனக்கு ஒண்ணுமே தோணல! ஒங்கள விட்டா….. எங்களுக்கு கதி யாருமில்ல! நீங்கதான் எங்களோட பகவான்.! …..நீங்கதான் அவரை காப்பத்தணும் ….. அவர் ஒங்களோட பொறுப்பு! ..எனக்கு மாங்கல்ய பிச்சை போடுங்கோ! பெரியவா….. ஒங்களையே நம்பியிருக்கேன்…”


மஹாபெரியவா முன் மனமுருகி வேண்டிய மாங்கல்ய பிச்சையை, புதுப் பெரியவா அனுக்ரஹித்துவிட்டார்! தந்தையும்-மகனும், குருவும்-சிஷ்யனும் ஒன்றே! என்பதை இங்கே பொட்டில் அடித்த மாதிரி புரிய வைத்தார். நமக்குத்தான் எத்தனை அடி வாங்கினாலும் புரியாதே!


கடவுள் மேல் நமக்குள்ள நம்பிக்கையும், அன்புமே, ஒரு குருவுருவில் நம் முன் தோன்றுகிறது. குருவின் உன்னதமான மஹத்வத்தை அறிந்து கொள்ளும் அறிவில்லாமல், குருவின் வடிவங்களில் பேதங்களை, த்வேஷங்களை காண்கிறோம்.


நமக்கு ஏதோ எல்லாம் தெரிந்தது போல், எந்த குருவையும் நிந்தனை செய்தாலும், கேலி செய்தாலும், அது ஸாக்ஷாத் மஹா பெரியவாளையே நிந்தனையும், செய்வதாகும்!

Thank you Sri. K. N. Ramesh for sharing the information.

65 views0 comments

Commentaires


bottom of page