16-Jun-2024 Sri Sri Periyava Anugraha Bashanam
There are some sentences for introspection, some for practice and one or two for mulling and meditating
"ஆங்கிலத்தின் மூலமாகவும், படிப்பது ஆங்கிலமாக இருந்தாலும், எண்ணம் நமது பக்தியை சார்ந்ததாக இருக்க வேண்டும்"
ஸ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்
அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்தரூபினம்
ஸ்ரீ சந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதாந்வஹம்
देवे देहे च देशे च भक्त्यारोग्यसुखप्रदम्।बुधपामरसेव्यं तं श्रीजयेन्द्रं नमाम्यहम्தேவே தேஹே ச தேஶே ச பக்த்யாரோக்யஸுகப்ரதம்|புதபாமரஸேவ்யம் தம் ஶ்ரீஜயேந்த்ரம் நமாம்யஹம்
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
இந்த சங்கரா ஸ்கூல்க்கு ஏற்கனவே வந்திருக்கிறோம் ஒரு இருபது வருஷத்திக்கு முன்பாக. இந்த இடத்திற்கு வந்து, அப்பொழுது தான் மேடை எல்லாம் கட்டிண்டு இருந்தாங்க. பூச்சு வேலை நடந்திண்டு இருந்தது. அச்சமயத்தில் இங்கு சந்திர மௌலீச்வர பூஜையை இங்கு விசேஷமாக நடத்தி, நம்முடைய ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆசியும் பெற்று, இந்தப் பள்ளிக்கூடமானது இந்தப் பகுதியிலே தற்போது மிக சிறப்பாக வளர்ந்து, 2200 மாணவி மாணவர்களுடன் சிறப்பாக கல்வி சேவை செய்து கொண்டு வருகிறது. அப்படி இந்த ரங்கநாதன் குடும்பத்தின் மூலமாக செயல்படும் இந்த பள்ளிக்கூடமானது - மக்களுக்கு கல்வி என்பது தேவை. அந்தக் கல்வி என்பது கலாச்சாரத்துடன் கூடியதாக இருக்க வேண்டும். நம்முடைய கொன்றை வேந்தன், ஆத்திச் சூடி, பிரபந்தங்கள், திருப்புகழ் இது போன்று தமிழ் இலக்கியங்களில் என்ன நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டு இருக்கின்றதோ, அது போன்ற கருத்துக்களை மக்கள் மனதிலே பதிய வைக்குமாறு இருக்க வேண்டும் கல்வித் திட்டம்.
அதற்காக நமது புதுப் பெரியவர்கள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஒரு புஸ்தகத்தையே வெளியிட்டார்கள். அறவழி வாசகம் என்பதாக அ - அப்பர் , எ - எறிபத்தர் - இது போன்று தமிழையும் சொல்லிக் கொடுத்து, தமிழர்களின் தெய்வீக வரலாறுகளையும் மாணாக்கர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அறவழி வாசகம் என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள். ஆங்கிலத்தின் மூலமாகவும், படிப்பது ஆங்கிலமாக இருந்தாலும், எண்ணம் நமது பக்தியை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக – A for Arjuna, B for Bheeshma, C for Cauvery, D for Durga,E for Ekalavya, L for Lakshmi, S for Saraswathi, N for Narada - இது போன்று A to Z இந்த ஆங்கிலக் கல்வியையும், நம்முடைய பாரத தேசத்தின் கலாச்சாரத்தின் பின்னணியோடு நாம் படித்தால், இந்தியா என்பது முன்னணியில் இருக்கும். அதற்குத் தேவை கலாச்சார பின்னணி.
இந்தியா முன்னணியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவின் கலாச்சாரத்தின் பின்னணியாக, முக்கிய கருத்தாக ஆன்மீகம் இருக்க வேண்டும். நம்முடைய ஆன்மீகம் தான், மனிதனுடைய வாழ்க்கை முறையை சொல்லித் தருகிறது. மனிதன் மனிதனாக வாழ்வது எப்படி? மனிதன் நல்ல மனிதனாக வாழ்ந்து, தெய்வமாக வளர்வது எப்படி? என்பதாக இந்த தெய்வீக சக்தியை மனதில் உணர வைப்பது எப்படி? உணரவைப்பது, உணர்த்துவது நமது இந்து சமயம்.
ஆகவே. இந்து சமயம் என்பது, எண்ணத்தின் காரணமாக வளர்ந்தது. எண்ணிக்கை வளர்வது என்பது வேறு. எண்ணங்கள் வளர்வது என்பது வேறு. அந்த எண்ணங்களை வளரச் செய்வது நமது இந்து சமயம். ஆகவே இந்து சமயமானது உயர்ந்த நாகரீகத்தை தெரியப்படுத்துகிறது. உயர்ந்த நாகரீகத்தின் மூலமாக, மனித இலக்கணத்தை தெளிவு படுத்துகிறது. மனிதர்கள் மனிதர்களாக வாழ்ந்து, தானும் சிறந்து விளங்கி, பிறருக்கும் உபத்திரம் செய்யாமல்,பிறருக்கு கஷ்டத்தை அளிக்காமல், பிறருக்கு தீங்கை விளைவிக்காமல், அவர்களும் நன்றாக இருந்து, நாமும் நன்றாக இருந்து, உலகம் சிறக்க பாடுபடுதல் தான் நமது இந்து மதத்தின் சித்தாந்தம்.
ஆகவே, அந்த இந்து சமயத்தை அந்தக் காலத்திலே ஒவ்வொரு வீட்டிலும் சொல்லிக் கொடுத்தார்கள் . பாட்டு வழியாகச் சொல்லிக் கொடுத்தார்கள் , வழிபாட்டு வழியாகச் சொல்லிக் கொடுத்தார்கள். மரம், செடி,கொடி மூலம் சொல்லிக் கொடுத்தார்கள். ஆற்றுத் திருவிழா மூலம் சொல்லிக் கொடுத்தார்கள், தெப்பத் திருவிழா மூலம் சொல்லிக் கொடுத்தார்கள். மரத்தடியில் உட்கார வைத்து சொல்லிக் கொடுத்தார்கள். நுகத்தடி மூலம் சொல்லிக் கொடுத்தார்கள். நாலடி செய்யுள்கள், பாட்டுக்கள் மூலமாக சொல்லிக் கொடுத்தார்கள். காலடி பக்தியின் மூலமாகச் சொல்லிக் கொடுத்தார்கள். வரும் பொது கூட, காலடி என்ற ஒரு ஊர் பார்த்தோம். காலடி என்பது ஆதிசங்கரரின் ஊர். யாரோ இங்கே பக்கத்து ஊரில் காலடி என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். இப்படி இந்து சமயம் என்பது இயற்கை ஒட்டிய வாழ்க்கை முறையை போதிக்கக் கூடிய சமயம்.
இன்றைக்கு ஒரு மஞ்சள், ஒரு வேப்பிலை, இதற்கும் நம்முடைய உரிமையை தலைமுறை தலைமுறையாக நாம் பின்பற்றி வந்த விஞ்ஞான அணுகு முறையை, வேறு யாராவது வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் patent காப்பு உரிமையை செய்து விட்டால், அவர்களிடத்தில், அவர்களிடத்தில் சென்று அனுமதி பெற்று நாம் செயல்பட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இப்படி நம்முடைய சொத்தை, நம்முடைய பாரம்பரியத்தை , நம்முடைய் பெருமைகளை நாமறியாமல், கடைபிடிக்காமல், பிரச்சாரம் செய்யாமல், நாம் வேறு விதத்திலே ஒரு முனிவர்களாக, ஒதுங்கியவர்களாக, உலக வாழ்க்கையிலிருந்து; எதிலே நாம் நம்முடைய பற்றை வளத்துக்கொள்ள வேண்டுமோ, அதிலே பற்றற்றவர்களாக, எதிலே பற்று தேவை இல்லையோ, அதிலே பற்றுள்ளவர்களாக இப்படி நாம் நம்மை மாற்றிக் கொண்டு, நாம் ஏமாற்றிக் கொண்டு வருகிறோம்.
ஆகவே, நம்முடைய் கலாச்சாரத்தை நாம் பின்பற்றுவதற்கு, கல்வியிலே தாய் மொழியையும் சொல்லித் தர வேண்டும். தாய் மொழியில் பேசக் கூடிய பழக்கத்தை குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். அதோடு சேர்ந்து , இங்க்லீஷ், அதை இங்க்லீஷ்காரன் கூட இந்தியாவில் நன்றாக பேசுகிறான் . என்ற அளவிற்கு ஒரு இருநூறு வருஷத்திலே, ஆங்கில மொழியை நம்மவர்கள் சிறப்பாகக் கையாண்டு, அதிலே தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். அதனால், அதற்கு விசேஷ முயற்சி என்பது தேவையில்லை. அது இயற்கையாக வந்து கொண்டு இருக்கிறது. முயற்சி தாய் மொழியை காப்பாற்றத் தேவை.
அது போன்று நம்முடைய வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பலி பீடம் என்றால் என்ன? ஸ்வத ஸ்தம்பம், கொடி மரம் என்றால் என்ன? அர்த்த மண்டபம் என்றால் என்ன? மஹா மண்டபம் என்றால் என்ன? கர்ப கிரஹம என்றால் என்ன? உற்சவ விக்ரஹம் என்றால் என்ன? வாகனங்கள் என்றால் என்ன? காப்பு கட்டுவது என்றால் என்ன? திருவிழாக்கள் என்றால் என்ன? ஜாத்திரை என்றால் என்ன? கங்கம்மா ஜாத்திரை பெரிய பாளையத்து அம்மன் உற்சவம் என்றால் என்ன? இது போன்ற நம்முடைய இந்து சமயம் சார்ந்த பண்டிகைகள் - சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை இருக்கக் கூடிய பண்டிகைகளை- மகர சங்கராந்தி பொங்கல், தீபாவளி, காரடையான் நோம்பு, இன்னும் பல விரதங்கள் இருக்கின்றன. இவைகளைப் பற்றியெல்லாம்- காலேண்டர் நம்முடைய மக்களுக்குத் தெரியும்- ஜனவரி , பிப்ரவரி என்று தெரியும். ஆனால், சித்திரை - சித்திரா பௌர்ணமி, வைகாசி - வைகாசி விகாசம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப் பெருக்கு, ஆவணி மூலம், ஐப்பசி பூரம், கார்த்திகை - கிருத்திகை தீபம், மார்கழி வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை, தைப் பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், இது போன்று தமிழ் மாதம் சார்ந்த திருவிழாக்களை ; அது போன்று அற வழியிலே - அறம் செய்ய விரும்பு என்பது .தான் நம்முடைய பழமொழி, ஆலயம் தொழுவது சாலமும் நன்று. என்பது நம்முடைய பழமொழி. ஒவ்வையார்,, எத்தனையோ சித்தர்கள் - சித்தர்கள் பல பாடல்களை பாடி இருக்கிறார்கள். இன்று கருத்துப் பாடல்கள் என்று எதையோ தனியாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மையான தெய்வீகக் கருத்தை தெரிவித்தவர்கள் சித்தர்கள்.
கருவூர் சித்தர், திருமூலர் திருமந்திரம் - இது போன்று தமிழில் இருக்கும் நல்ல செய்யுள்கள் எல்லாம், ஒரு மாதிரிக்காக குழந்தைகளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து, அதற்காக ஒரு புஸ்தகம் போட்டு இருக்கோம். IITயில் படிப்பவர்கள், படித்து முடித்தவுடன் உடனே வெளிநாட்டிற்கு நிறைய பேர் போய் விடுகிறார்கள். அவர்கள் வெளிநாட்டிற்குப் போய் இந்தியாவைப் பற்றி என்ன சொல்கிறார்கள். நல்ல விதமாக சொல்வதற்காக, இந்தியாவைப் பற்றி தெரிந்த கொண்ட பின்தான் அவர்களை வெளிநாடு போக அனுமதிக்கனும்.
வேலை கிடைக்கிறது. வியாபாரம் இருக்கிறது என்பதற்காக, பொருளை export செய்வது போன்று மக்களை export செய்யக் கூடாது. அவர்களுக்கு நாம் இந்து மதத்தை பற்றி, இந்தியாவைப் பற்றி நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்து, அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதி கொடுத்து அனுப்பினால், அவர்கள் இந்தியாவைப் பற்றி சரியான கருத்துக்களை தெரிவிப்பதற்கு வசதியாக இருக்கும். அதற்காக ஒரு தனியான புஸ்தகம் போட்டோம் டிவிஎஸ் அவர்களிடம் சொல்லி ஒரு புத்தகம் போட்டோம். அவ்வையார் புஸ்தகம் என்றால் என்ன? கம்ப ராமாயணம் புஸ்தகம் என்ன, காளிதாசன் புஸ்தகங்கள் என்ன, புஸ்தகங்கள் அறிமுகம் , சமஸ்க்ரித நூல்கள் அறிமுகம், தமிழில் இருக்கக் கூடிய நீதி நூல்கள் அறிமுகம் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, பிறகு வெளி நாட்டிற்கு அனுப்பனும்.
இங்கிருந்து வெளிநாடு செல்பவர்கள், அங்கு பேசக்கூடிய, அங்கு உச்சரிக்கக் கூடிய ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு முறை இருக்கும் போது, ஒரு கட்டுப்பாடு இருக்கும் போது, நம்முடைய பிரஜைகளை வெளிநாட்டிற்கு அனுப்பும் போது, இந்த தேச பக்தியோடு, இந்த தெய்வ பக்தியோடு, நம்முடைய தேசத்தைப் பற்றி நன்றாகச் நல்லதைச் சொல்ல வேண்டும். தேச பக்தி, தெய்வ பக்தி முக்கியம் இரண்டும் முக்கியம்..
அதைத் தான் நமது ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பல ஊருக்கு வந்து, இந்த சேவை செய்பவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு எல்லாம் விசேஷ ஆசிர்வாதம் செய்து, நம்முடைய தேசத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்துக்கள் அனைவரும் தெய்வ பக்தியோடு இருக்க வேண்டும்.
இந்துக்கள் என்றால் என்ன? விக்ரஹ ஆராதனையை நம்புவர்கள் இந்துக்கள்.- பிள்ளையார், முருகன், சிவன், பார்வதி, வீரபத்திரர், பைரவர், மகா லக்ஷ்மி, சப்த கன்னிகைகள் - இது போன்று பல விதமான தெய்வ வழிபாட்டை செய்து, நாம் புண்ணியத்தை பெறுகிறோம். பட்டத்தை பெறுகிறோம், பதவியைப் பெறுகிறோம், பணத்தையும் பெறுகிறோம். நம்முடைய் சமய கலாச்சாரத்தை பின்பற்றுவதன் மூலமாக புண்ணியத்தைப் பெறுகிறோம். விக்ரஹ ஆராதனை செய்பவர்கள், உருவ வழிபாட்டை மேற்க் கொள்பவர்கள், முகத்திலே விபூதி, சந்தனம், திருமண் , குங்குமம் இது போன்று திலக தாரணம் செய்பவர்கள் இந்துக்கள். பசுவிலே கோமாதாவை, காமதேனுவை காண்பவர்கள், தெய்வீகத் தன்மையைக் காண்பவர்கள் இந்துக்கள். பசுவை பாதுகாப்பவர்கள் இந்துக்கள். மரம், செடி, கொடி, இயற்கையிலே அரச மரத்திலே மூன்று தெய்வங்கள் இருக்கிறார்கள் - பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரா- இந்த மும்மூர்த்திகளும் வசிக்கும் இடம் இந்த அரச மரம். அரச மரத்தை திங்கட்கிழமை, அம்மாவாசை நாட்களில் ப்ரதக்ஷிணம் செய்தல் விசேஷம். அப்படி நதிகள் - கங்கைச்ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி, நர்மதே சிந்து காவேரி - என்பதாக அந்த சப்த நதிகளிலே - தெய்வத் தன்மையை, கும்ப மேளாவை, புஷ்கர விழாவை கொண்டாடுபவர்கள் இந்துக்கள்.
இப்படி தாய், தந்தையர்களை தெய்வமாகக் கொண்டாடுபவர்கள், மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று வணங்குபவர்கள் நம்முடைய் இந்துக்கள். இப்படி நாம் இந்துக்களுடைய இலக்கணத்தை நாம் தெரிந்து கொண்டு, உலகத்திலே அநாதியான மதம் இந்து மதம். ஐந்தாயிரம் வருஷம், பத்தாயிரம் வருஷம் , பத்து லக்ஷம் வருஷம், எப்பொழுது படைப்பு என்று ஆரம்பிக்கப் பட்டதோ, creation என்பது ஆரம்பிக்கப் பட்டதோ, அந்த சமயத்திலிருந்து வரக் கூடிய மதம் , ஒரே மதம் இந்து மதம்.
அதே போல் அக்னியை உபாசிப்பவர்கள் இந்துக்கள் கல்யாணம், பிறந்த நாள், மணி விழா - இப்படி பல சந்தர்ப்பங்களில் நாம் அக்னியை சாட்சியாக வைத்து - கல்யாணம், அருந்ததி , அம்மி மிதித்து - அக்னி வழிபாட்டை, வேள்விகளை மேற்கொள்பவர்கள் இந்துக்கள். கும்பாபிஷேகம், சண்டி ஹோமம் இப்படி அக்னி மூலமாக, பல்வேறு தெய்வங்களுக்கு நாம் செலுத்தவேண்டிய காணிக்கையை அளிப்பவர்கள் இந்துக்கள். இப்படி இந்த இந்து மதம் புராதனமானது, பெருமையானது. அனைவருக்கும் நல்லதைக் கூறுவது. நாம் இப்படிப்பட்ட இந்துக்களாக பிறந்தது பூர்வ புண்ணியம்.
நமக்கு இங்கிலீஷ் தேவை. கம்ப்யூட்டர் தேவை. அறிவியல் தேவை, விளையாட்டுத் தேவை. யோகா மிகவும் தேவை. அதோடு சேர்ந்து நம்முடைய வேத மார்க்கத்தை, நமது புராணங்களை, சாஸ்திரங்களை நாமெல்லாம் அறிந்து - அந்த புராணங்களுடைய இடத்திற்கு எல்லாம் போய் வந்தோம் -போன வருஷம் நாங்கள் எல்லாம் வெளியூர் போய் இருந்தோம். வெளியூர் என்றால் வெளிநாடு அல்ல. நாங்கள் வெளிநாடு எல்லாம் செல்வது கிடையாது. வட நாட்டில் காசி, பிரயாக், அயோத்யா, நைமிசாரண்யம் - அயோத்தியில் இருபது நாள் அங்கு இருந்துட்டு வந்தம். நைமிசாரண்யம் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரில் தான் அக்னி புராணம், வாயு புராணம், பிரம்ம புராணம், சிவ புராணம், ஸ்கந்த புராணம், இப்படி பல புராணங்களை பிரவசனம் செய்த ஊர். அந்த நைமிசாரண்யம். அந்த ஊருக்கும் போய்விட்டு வந்தோம்.
இப்படி தீர்த்த யாத்திரை எல்லாம் அடிக்கடி இந்துக்கள் மேற்கொண்டு, காசி யாத்திரை, பத்ரி கேதார் எல்லாம் சென்று வந்து, அறுபடை வீடு, பஞ்ச பூத ஸ்தலங்கள்,- இதெல்லாம் குழந்தைகளை அழைத்துச் சென்று வந்து, ஒவ்வொரு குடும்பத்திலேயும் இந்த வாழ்க்கை முறையை பின்பற்றி வந்த நிலையிலே, தற்பொழுது அந்த வாழ்க்கை முறை, தொழில் முறை மாறி இருக்கக் கூடிய நிலையிலே, நம்முடைய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு, கல்வி முறையிலே நாம் விசேஷ கவனம் செலுத்தி, குடும்பத்திலே சொல்லி கொடுத்து வந்த நல்ல விஷயங்களை, பள்ளிக்கூடம் மூலமாக சொல்லிக் கொடுத்து, நாம் தர்ம வழியில் மேன்மேலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
ரங்கநாதன் குடும்பம் ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். போன வாரம் காஞ்சிபுரம் வந்தாங்க. விசேஷமா நல்ல கட்டிடம் எல்லாம் கட்டி, நல்லா வளர்ந்து இருக்கிறது. எண்ணிக்கையும் வளர்ந்திருக்கிறது. கட்டிடமும் நன்றாக எழுந்திருக்கிறது. இதோடு சேர்ந்து அங்கெங்கே கல்வி முறையையும் சொல்லிண்டு வந்துள்ளோம். கோவில் நமது ஊரில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்ப்பட்ட கோவில்கள் இருக்கின்றன. அந்தக் கோவில்கள் சிறப்பாக் நடைபெறுவதற்கு நாதஸ்வரக்காரர்கள் தேவை, சிற்பிகள் தேவை, மடப்பள்ளியிலே பிரசாதம் செய்பவர்கள் தேவை, தேவாரம், ப்ரபந்தம் பாடுவதற்குத் தேவை. பூஜை செய்வதற்கு அர்ச்சகர்கள் தேவை. அந்த செய்யக் கூடிய பூஜைக்கு உதவிகரமாக பரிஜாரகர்கள் தேவை. இதையெல்லாம் நடத்துவதற்கு அத்யயன பட்டர் தேவை. வேதம் படித்தவர்கள் தேவை. இப்படி கோவில் சார்ந்த உள் கட்டமைப்பை, infrastructure , உருவாக்குவதற்காக, பல ஊர்களிலும் கல்வி முறையிலே, ஒரு அணுகு முறையை பின்பற்றி, பாண்டிச்சேரி, மாயவரம், ஆவடி, ராஜ்கீழ்பாக்கம் போன்ற பல ஊர்களிலே, பல கல்வி முறைகள் நடைபெறுகின்றன. அதே போன்று, வட சென்னையின் ஆன்மீக கல்வியின் தேவையை பூர்த்தி செய்து, இந்தப் பகுதியிலே தர்மப் பிரசாரம் விசேஷமாக நடைபெற்று, ஐநூறு வருடங்களுக்கு மேலாக , இந்த திருவோற்றியூருக்கும், காஞ்சி சங்கர மடத்திற்கும் தொடர்பு இருந்து வருகிறது. இங்கு இரண்டு அதிஸ்டானங்கள் அமையப் பெற்று இருக்கின்றன. கோவில் பக்கத்திலே ஒன்று, இன்னொன்று சங்கராசாரியார் புரத்திலே. இப்படி இங்கே உங்களுக்கு இரண்டு பெரியவர்கள் ஆசிர்வாதம் உங்களுக்கு அளித்து, 1507 ம் வருஷம் முன்பு, அப்படியாக ஐநூறு வருஷத்திற்கு மேற்ப்பட்ட ஆன்மீகத் தொடர்பை, பராமரித்து வரக்கூடிய இந்த திருவொற்றியூரிலே, பகவதி அம்மன் தொடங்கி, கன்னியாகுமரி பகவதி அம்மன் துவங்கி வடிவுடைய அம்மன் வரையிலே இருக்கும் இந்த தமிழ்நாட்டிலே - இப்பொழுது தான் இந்த ஊருக்கு வந்துள்ளோம், ஆனால் வெவேறு ஊரில் திருவொற்றியூர் பற்றி சொல்லி வருகிறோம்- அனைவரும் நல்ல முறையிலே வாழ்ந்து, பக்தி முறையிலே வாழ்ந்து, இங்கே கிட்டத்தட்ட நூறு பேர் வேலை செய்கிறார்கள், நூறுக்கும் மேலாக வேலை செய்கிறார்கள்.இப்படி ஆசிரியர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும், இறைவனுடைய அருள் துணை நின்று, உன் அருளை தொடரச்செய்து, நல்வழி சேர்த்து காக்க வேண்டும் நமோ நம ஓம் சக்தி என்று பாரதியார் குறிப்பிடுகிறார்.
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாட்சி உமையே என்று காமாட்சி அம்மையின் அருளோடு, மேன்மேலும இந்த பகுதியிலே கல்வியும் , கலாச்சாரமும் கடவுள் வழிபாடும் சிறந்து, அனைவருக்கும் நன்மை கிடைக்க வேண்டுமாய், தியாகராஜ ஸ்வாமியையும், வடிவுடைய அம்மனையும் பிரார்த்திக்கிறோம்.
ஹர ஹர நமப் பார்வதிபதையே, ஹர ஹர மகாதேவா
தென்னாடுடைய சிவனே
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
Comments