top of page

Sri Periyava's Anugraha Bhashanam in Unjha - Key Highlights

41 minutes ago
4 min read

ஊஞ்சா அனுக்ரஹ பாஷணம் — சிறப்பம்சங்கள்

18-11-2026

1. பாஷ்யத் தாமரையின் மகரந்தம்


यद्वक्त्रमानससरःप्रतिलब्धजन्म

भाष्यारविन्दमकरन्दरसं पिबन्ति ।

प्रत्याशमुन्मुखविनीतविनेयभृङ्गाः

तान् भाष्यवित्तकगुरून् प्रणतोऽस्मि मूर्ध्ना ॥


யத்வக்த்ரமானஸஸர:

ப்ரதிலப்தஜன்ம

பாஷ்யாரவிந்த மகரந்தரசம் பிபந்தி |

ப்ரத்யாஶமுன்முக விநீதவிநேய ப்ருங்கா:

தான் பாஷ்யவித்தக குரூன்

ப்ரணதோஸ்மி மூர்த்னா ||


சங்கர பகவத்பாதரையும் குருபரம்பரையையும் ஸ்லோகங்களால் வணங்கி உரையைத் தொடங்கினார்கள். தாமரையின் மகரந்தத்தைப் பருக வண்டுகள் எல்லாத் திசைகளிலிருந்தும் வருவது போல, பகவத்பாதருடைய வாக்கையும் பாஷ்யத்தையும் உபதேசத்தையும் கேட்க மக்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் ஆவலோடு வருகிறார்கள் என்று விளக்கி, இந்த ஸ்லோகத்தை 1980-ல் ஊஞ்சாவில்தான் கேட்டுக் கற்றுக்கொண்டதாக பூஜ்யஶ்ரீ பெரியவா நினைவுகூர்ந்தார்கள்.


2. பிரவசனத்துக்கு முன் வேத மந்திரங்கள் - குருநாதர் தமக்கு அருளியதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த தருணம்


நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, நவராத்திரியில் தினமும் ஸத்ஸங்கத்துக்கு முன்னால் வேதம் உச்சரிக்க மாணவர்களுக்கு பூஜ்யஶ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் வாய்ப்பளித்தார்கள். வேதங்களில் ரிக்வேதம் முதலாவதாக இருப்பதாலும், தாம் ரிக்வேதம் பயின்றதாலும் தமக்கு முதல் வாய்ப்புக் கிடைத்தது என்றார்கள். அப்போது சொன்ன மந்திரங்களில் நினைவுக்கு வந்த சில வரிகளை உச்சரித்து, மைக்கில் பேசத் தொடங்கியதும் ஊஞ்சாவில்தான் என்று ஶ்ரீ பூஜனீயர்கள் அவர்கள் தம் குருநாதர் தனக்கு சொன்னதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்கள்.


3. வித்யா, வைத்யம், வேதம்


कुत्र विधेयो यत्नः? विद्याभ्यासे सदौषधे दाने ।


குத்ர விதேயோ யத்ன:?

வித்யாப்யாஸே ஸதௌஷதே தானே |


கல்வியிலும் நல்ல மருந்து கிடைப்பதிலும் தானத்திலும் முயற்சி வேண்டும் என்ற பகவத்பாதரின் வாக்கை எடுத்துரைத்தார்கள். உதவி தேவைப்படுவோருக்குத் துணி, கல்வி, மருந்து கொடுக்கலாம் என்றும், நியாயத்தோடும் தர்மத்தோடும் வியாபாரம் செய்பவர்களுக்கும் தேவையான உதவியைச் செய்யலாம் என்றும் கூறினார்கள். வைஷ்ணவி தேவி கோயிலுக்கு மலை ஏறுபவர்களுக்குக் கையில் பிடித்துக்கொள்ளக் குச்சி கொடுப்பதையும் பரோபகாரத்துக்கு உதாரணமாகச் சொல்லி, வித்யா, வைத்யம், வேதம் ஆகிய துறைகளில் காஞ்சி காமகோடி பீடம் பணியாற்றுவதாக பூஜ்யஶ்ரீ பெரியவா அவர்கள் எடுத்துரைத்தார்கள்.


4. பரமாசாரியாரின் குஜராத் பாசமும் டோங்கரே மஹாராஜின் வாக்கும்


குஜராத் மக்களிடம் மிகுந்த ஸ்நேகமும் மரியாதையும் கொண்டிருந்த பரமாசாரியார், தமது சிஷ்யரான பூஜ்யஶ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளை ஆசீர்வதித்துக் குஜராத் பிரவாஸத்துக்கு அனுப்பினார்கள் என்று பூஜ்யஶ்ரீ பெரியவா நினைவுகூர்ந்தார்கள். சாதுர்மாஸ்யத்தின்போது கதை சொல்வதாக வாக்களித்திருந்த டோங்கரே மஹாராஜின் வீட்டில் திடீரெனத் துக்கம் ஏற்பட்டது. இருந்தபோதும், “மஹாராஜுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன். மஹாராஜ் முன்னால் நிச்சயமாகக் கதை செய்வேன்” என்று சொல்லி, ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் கதை செய்ததை ஶ்ரீ பூஜனீயர்கள் நினைவுகூர்ந்தார்கள்.


5. ஊஞ்சாவில் நவராத்திரியும் ஸ்படிகலிங்க தரிசனமும்


விஸ்நகரிலிருந்து நடந்துவந்த பூஜ்யஶ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி மஹாராஜைத் தெற்கு வாசலில் செம்புக் கலசங்களோடு ஶோபாயாத்திரையாக வரவேற்றார்கள். மேடைக்கு ஈசான திசையில் ஹோமகுண்டம் வைக்க இடம் இல்லாததால் வராந்தாவில் உடனே பூஜைக்கு ஏற்பாடு செய்தார்கள். அங்கே சந்திரமௌளீஸ்வரருக்கு நடந்த பால் அபிஷேகத்தைச் சிறுவயதில் அருகிலிருந்து தரிசித்ததையும், அந்த அனுபவத்தை ஒரு பிரதோஷத்தன்று பரமாசாரியாரிடம் சொன்னதையும் நினைவுகூர்ந்தார்கள். மஞ்சள் வஸ்திரம் அணிந்த குஜராத் பண்டிதர்களின் சண்டி ஹோமம், உள்ளூர் மக்களுக்கு மஹாராஜ் சார்பில் அளித்த அன்னதானம், ஜீரக மண்டிக்கு விடுபட்ட பாதுகையைத் தாமே எடுத்துச் சென்றது என்று இந்த நிகழ்ச்சியை விவரிக்கும்போது தம் குருநாதர் மீது இவர்களுக்கு இருக்கின்ற ஆழ்ந்த பக்தியும், மதிப்பும், மரியாதையும் வெளிப்பட்டது.


6. “Last அத்தியாயம்” — “அந்திம அத்தியாயம்”


स॒मु॒द्रादू॒र्मिर्मधु॑माँ॒ उदा॑रत्

ஸமுத்ராதூர்மிர் மதுமான் உதாரத்


இந்தப் பூர்ணாஹுதி மந்திரத்தை ஊஞ்சாவில் ஒரே நாளில் மனப்பாடம் செய்ததாகச் சொன்னார்கள். என்ன ஹோமம் நடக்கிறது என்று குருநாதர் கேட்டபோது, “மூன்றாவது அஷ்டகத்தில் last அத்தியாயத்தின் ஹோமம் நடக்கிறது” என்று பதிலளித்தார்களாம். “என்ன last? அந்திம அத்தியாயம் என்று சொல்லலாமே” என்று மஹாராஜ் சொன்னதை நினைவுகூர்ந்து, குருநாதருடனான தமது நெருக்கம் இங்கே வளர்ந்ததாக நெஞ்சம் நெகிழ்ந்து தம் குருநாதரை நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது..


7. சித்தபூர் பாதயாத்திரையும் ஊஞ்சாவின் இரு அடையாளங்களும்


விஜயதசமியன்று தீவட்டி, பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் “ஹர ஹர சங்கர” என்று சொல்லிக்கொண்டு மஹாராஜுடன் சித்தபூரை நோக்கி நடந்ததை நினைவுகூர்ந்தார்கள். ஏகாதசியன்று சரஸ்வதி நதியில் ஸ்நானம் செய்ததையும், இப்போதும் சித்தபூருக்குப் போய்விட்டு வந்ததையும் கூறினார்கள். ஊஞ்சாவுக்கு வரப் பல ஆண்டுகளாகக் காத்திருந்ததாகச் சொல்லி, உமியா மாதா கோயில் ஊஞ்சாவின் ஆன்மிக அடையாளம், ஜீரக மண்டி அதன் பொருளாதார அடையாளம் என்றும், உமியா மாதா கோயில் அனுஷ்டானத்துக்கு ஏற்ற இடம் என்றும் பூஜ்யஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் எடுத்துரைத்தார்கள்.


8. ஆனந்தில் கண் மருத்துவச் சேவை, வட்நகரில் “குஜராத்தின் காசி”


ஆனந்த் சங்கரா கண் மருத்துவமனை மூலம் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவசக் கண் சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகவும், குஜராத்தின் ஒன்பது மாவட்டங்களிலும் மஹாராஷ்டிரத்தின் மூன்று மாவட்டங்களிலும் இந்தச் சேவை நடைபெறுவதாகவும் கூறினார்கள். சோமநாத்தில் நடைபெறும் வேத பாடசாலையையும், அம்பாஜியில் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தையும் குறிப்பிட்டார்கள். “மஹேசானா” என்பதை “மஹா ஈசானன்” என்றும் சொல்லலாம் எனக் கூறி, வட்நகர் ஹாடகேஷ்வர் கோயிலில் ஸம்ஸ்கிருதப் பள்ளி, கோசாலை, தர்மசாலை, தினசரி பூஜை, அன்னதானம், சங்கீதம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்து, அத்தலத்தைக் “குஜராத்தின் காசி”யாக வளர்க்க ஆலோசனை வழங்கியிருப்பதாக பஜனீயர்கள்  தெரிவித்தார்கள்.


9. பத்துப் பாடல்கள், பத்துக் கோலங்கள், பத்துக் கதைகள்


பன்னிரண்டாம் வகுப்புக்குப் பின் உயர்கல்வி பயிலும் இளைஞர்களுக்குப் பாரதீய ஞானப் பரம்பரையை அறிமுகப்படுத்தச் சனி, ஞாயிறுகளில் வகுப்புகள் நடத்தும் திட்டத்தை விவரித்தார்கள். ஓங்காரம் போன்ற பத்துப் பாடல்கள், பத்துக் கோலங்கள், பத்துக் கதைகள், இதிஹாசம், புராணம், ஆயுர்வேதம், பஞ்சாங்கம் ஆகியவற்றின் அறிமுகம் அதில் இடம்பெறும் என்றார்கள். பத்தாயிரம் பேரில் தொடங்கி ஒரு லட்சம் மாணவர்கள் வரை பயன் பெறலாம் என்று கூறி, “சுப லாபம், வியாபார லாபம், புண்ணிய லாபம்” என்று சொல்லி, லாபத்தின் பிரதேசமான குஜராத்தில் இது புண்ணிய லாபத்துக்கான பணி என்று பூஜனீயர்கள் எடுத்துரைத்தார்கள்.


10. அருங்காட்சியகத்தில் சரித்திரம், வாழ்க்கையில் அனுஷ்டானம்


அருங்காட்சியகமும் கலைக்கூடமும் பழைய காலத்துச் சிற்பம், உலோகம், கல் ஆகியவற்றையும், “நாம் யார்?” என்பதையும் அறிய உதவுகின்றன. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அனுஷ்டானம், தவம், வித்யை, நாகரிகம், சதாசாரம் வளரவும் பணி செய்ய வேண்டும் என்றார்கள். “யுக யுகங்களின் வரலாறு நம்மிடம் இருக்கிறது. வெளியிலும் சொல்வதில்லை, நம் வீட்டிலும் சொல்வதில்லை” என்று கூறி, “A for Arjuna, B for Bhishma”, “ஈ ஈஸ்வரா, உ உமா” என்று குழந்தைகளுக்குப் புத்தகங்கள் மூலம் அறிமுகம் கொடுத்த தம்முடைய குருநாதர் பூஜ்யஶ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி மஹாராஜின் அரிய முயற்சியை ஶ்ரீ பூஜனீயர்கள் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்கள்.


11. “கராக்ரே வஸதே லக்ஷ்மீ:” முதல் வேத வித்யை வரை


இதே மேடையில் மஹாராஜ் சொல்ல, மக்கள் திருப்பிச் சொன்னதைத் தாம் கேட்டதாகவும், திலகம், கோபூஜை, ஸ்தோத்திரம் போன்றவற்றிலிருந்து எல்லாப் பிரிவினருக்கும் தர்மத்தை அறிமுகப்படுத்தினார்கள் என்றும் கூறினார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களின் வீடுகளிலும் வைதிக ஸம்ஸ்காரங்கள் நடைபெற, தர்மத்துடன் லௌகிகக் கல்வியையும் அளிக்கும் பள்ளி, வேத சாஸ்திரப் பாதுகாப்புக்கான ஸனாதன தர்ம சேவா கிராமம், பெண்களுக்குச் ஸௌந்தர்ய லஹரி, சங்கீதம், கோத்ரம், பழக்கவழக்கங்கள் கற்பிக்கும் சம்பிரதாய பாடசாலை ஆகிய திட்டங்களைக் குறிப்பிட்டார்கள். நித்ய கர்மம், சம்ஸ்கிருதம், சாந்தி பாடம் ஆகியவற்றில் தொடங்கி, விருப்பமுள்ளவர்கள் மீமாம்ஸை, தர்க்கம், வேதாந்தம் படிக்க “நுழைவாயிலை நாம் உருவாக்க வேண்டும்” என்று கூறி, குழந்தைகளைப் படிக்க அனுப்புமாறு பெற்றோர்களைப் பூஜ்யஶ்ரீ பெரியவா  கேட்டுக்கொண்டார்கள்.


12. “அதிதி தேவோ பவ” — குஜராத்தில் கண்ட விருந்தோம்பல்



பாஷை தெரியாத சிறுவயதில் விஸ்நகர் ஆசிரமத்துக்கு வந்தபோது, அங்கிருந்தவர்கள் பாத்திரம், நெய், அரிசி கொடுத்து, தங்களுக்கேற்ற முறையில் சமைத்துக்கொள்ள ஏற்பாடு செய்ததை நினைவுகூர்ந்தார்கள். அதிதியை வரவேற்பதற்குக் குஜராத் ஓர் உதாரணம் என்றும், தேசத்தின் முன்னேற்றத்துக்கு வியாபாரமும் வம்சத்தின் உயர்வுக்குத் தர்மமும் வேண்டும் என்றும் கூறினார்கள். ரயில்வேயில் metre gauge-லிருந்து broad gauge-க்கு மாற வேண்டும் என்ற உதாரணத்தைச் சொல்லி, தமது வைதிக ஹிந்து தர்மத்தைப் பேணுமாறு ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் கேட்டுக்கொண்டார்கள்.


13. “ஊஞ்சா” — தர்மத்திலும் சிகரத்தில்


धर्मो रक्षति रक्षितः ।


தர்மோ ரக்ஷதி ரக்ஷித: |


“ஊஞ்சா” என்ற பெயரில் உள்ள உயரத்தைக் குறிப்பிட்டு, தர்மத்திலும் ஊஞ்சா சிகரத்தில் இருக்க வேண்டும் என்று கூறினார்கள். இதே மண்டபத்தில் மஹாராஜ் कर्मण्येवाधिकारस्ते… என்று பகவத் கீதையிலிருந்து எடுத்துச் சொல்லியதையும், “ஶ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்” என்ற நாமத்தை இங்கே கற்றதையும் நினைவுகூர்ந்தார்கள். எதிரிலுள்ள கோயிலில் தமது குருநாதர் பிரதிஷ்டை செய்த சங்கர பகவத்பாதரின் மூர்த்தி, ஊஞ்சாவுடனான நித்ய சம்பந்தத்துக்கு உதாரணம் என்று கூறினார்கள். வேதம், சாஸ்திரம், கோசம்ரக்ஷணம், சமூக நலன் ஆகியவற்றுக்கான பணிகள் இங்கு வளர உமியா மாதா, சந்திரமௌளீஸ்வரர், காமாக்ஷி ஆகியோரிடம் பிரார்த்தித்து, ஜகத்குரு ஶ்ரீ காஞ்சி சங்கராசாரியார் ஸ்வாமிகள் அவர்கள் ஆசி வழங்கினார்கள்.


Source Courtesy: Transcriptions by Smt. Madhu, USA and Smt. Nivedita Adinarayanan.

Comments


bottom of page