top of page

Sri Arunachala Iyer

ஸ்ரீ அருணாசலம் ஐயர். 12.4.25 பங்குனி பௌர்ணமி அன்று இறைவனடி சேர்ந்து விட்டார். வயது 99. அனுஷ்டானத்திற்கு பங்கமில்லாமல் தொடர்ந்து நித்திய கர்மாக்களை செய்து நிம்மதியாக வாழ்ந்தார். தீவிர குரு பக்தி.

சொந்த ஊர் மகேந்திரவாடி வட ஆற்காடு தகப்பனார் ஸ்ரீ சேஷாத்திரி ஐயர்

தாயார் லக்ஷ்மி அம்மாள்.பெரிய குடும்பம். எல்லா ஷேத்ரங்களுக்கும்சென்று வந்திருக்கிறார் நேபால் , பத்ரிநாத், கேதார்நாத், காசி, ப்ரயாக் என முக்கியமான க்ஷேத்ரங்களுக்கு பயணம் செய்தவர்.

காஞ்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு பல முறை நடந்தே செல்வார். உடனே கிரி வலமும் செய்து விடுவார். என்ன ஒரு வைராக்கியம்.!

பர்வத மலையை கிரிவலம் செய்யும் முறையை ஸ்ரீ ஜெயேந்திர பெரியவா அறிவுரையின் பேரில் வெகு ஜனங்களுக்கு பிரபலப்படுத்தி‌ பல வருடங்கள் செய்து வந்தார். கும்பகோணம் மகாமகம் சமயம் மஹா பெரியவா உத்தரவின்படி ஒரு சிறந்த புத்தகத்தை மஹாமஹம் என்ற தலைப்பில் அச்சிட்டு தானாகவே கும்பகோணம் சென்று அங்கு வந்தவர்களுக்கு வினியோகம் செய்தார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் மடத்திற்கு வரும். பக்தர்களைத்தவிர பல கடிதங்கள் சிறையில் தண்டனை அனுபவத்துக் கொண்டிருக்கும் கைதிகளிடமிருந்து வந்து கொண்டிருக்கும். அவர்கள் கடிதங்களில் தங்கள் வருத்தங்களையும் வேதனைகளையும் மனமுருகி எழுதி மன நிம்மதி பெற அனுக்ரஹம் செய்ய‌ வேண்டும் என்று கோரியிருப்பார்கள். ஸ்ரீ பெரியவர்களும் கருணையோடு பகவத் கீதை தேவாரம் திருவாசகம் போன்றவற்றை இவர் மூலம் அனுப்ப சொல்ல இவரும் அந்த பணியை விடாமல் செய்து வந்தார். குருவின் ஆணையை சிரமேற்கொண்டு விடாமல் நடத்தியவர்.

ஒரு சாமானிய மனிதரை அசாத்திய கார்யங்கள் செய்ய வைத்து சந்தோஷம் அளித்து வந்த ஆச்சார்யர்களை குரு ஸ்தானத்தில் வைத்து அசஞ்சல பக்தியோடு வாழ்ந்து வந்தார் அருணாசல ஐயர். வழக்கம்போல வாரா வாரம் முகாம் எங்கிருந்தாலும் பெரியவாளை தரிசனம் செய்யும் வழக்கம் வைத்திருந்த போது ஒரு சமயம் மஹா பெரியவா ஆந்திரா துனி என்ற‌ இடத்தில் சஞ்சாரம் செய்தார். இவரை தன்னோடு வர சொல்லி ஓடையில் ஸ்னானம் செய்து விட்டு ஒரு மணி ஜபம் முடித்து அருணாசலம் ஜயரிடம் வால்மீகி ராமாயணத்தில் ராம கதை எவ்வாறு திரும்ப திரும்ப விவரிக்கப்படுகிறது என்று நீண்ட அருளுரை வழங்கியதை மிகவும் பாக்கியமாக கருதினார். தன்னிடம் சௌஜன்யமாக ஒரு மணி நேரம் மஹா பெரியவா பேசியதை பெரும் பேறாக நினைத்து வந்தார்.


ஒரு சமயம் அவர் மேற்பார்வையில் இருந்த பிரஸ் சரியாக நடக்க முடியாமல் போனபோது அருணாசலம் ஐயர் புது பெரியவாளிடம் தன் மனவேதனையை காண்பித்த போது உடனே உற்சாகப்படுத்தி பெரியவா பவானி என்று பெயர் வை எல்லாம் நன்றாக வளரும் என்று அறிவுரை வழங்கிய இடம்: துல்ஜாபூர் முகாம் பவானி கோவில் பிரசித்தம். அதன் பிறகு பவானி புக் சென்டர் சுரபி ப்ரிண்டர்ஸ் என்று மேற்கு மாம்பலம் பகுதியில் நல்ல முறையில் இயங்கி வருகிறது. அருணாசலம் ஜயர் மிகவும் சகஜமாக பழகி ஸ்ரீ மடத்திற்கு வரும் பக்தர்களை கரிசனத்தோடு விசாரித்து ஆகாரத்திற்கு ஏற்பாடு செய்ய உதவுவார். பணிவோடு ஆர்வத்தோடு பக்தியோடு பழகி வந்த நல்ல ஆத்மா சுறுசுறுப்புடன் நட்புடன் பழகியவர். காஞ்சி மடத்தில் அவர் நெருங்கி பழகியவர்களுள் முக்கியமாக குறிப்பிடத்தக்கவர்கள் : ஐசிஎஃப் நீலகண்ட ஐயர், சிதம்பரேச ஐயர் ஸ்ரீ கார்யம்மேட்டூர் நீலகண்ட ஐயர் மற்றும் பலர்.

தற்போதைய எழுபதாவது பீடாதிபதியிடம் மிகுந்த பக்தியும் பணிவும் அன்பும் வைத்திருந்தார்.

99 வயது வரை நல்ல உடல் ஆரோக்கியுத்தடன் கடைசி நிமிடம் வரை சுய நினைவோடு பேசிக்கொண்டு இருந்தார் என்பது அவர் வாழ்ந்த ஆத்மார்த்தமான ஆழ்ந்த குரு பக்தி நிறைந்த வாழ்க்கையின் பலன் என்றே சொல்லலாம்.


ஸ்ரீ அருணாசலம் அவர்கள் மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ பக்த சமாஜத்தில் பணியாற்றினார், இதன் மேற்பார்வையில் அங்குள்ள ஸ்ரீ சங்கர மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாதுகா லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது. மற்றும் ஆதிசங்கரர் ஜெயந்தி, சமஷ்டி உபநயனம் நடைபெறும்போது இவர் கைங்கர்யம் செய்து வந்தார். மகா பெரியவாளின் வழிகாட்டுதலின் கீழ் பல அரிய புத்தகங்களை வெளியிட்டார். மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக "காமகோடி வாணி" யை ஆங்கிலத்தில் வெளியிட்டார், (ஆசிரியர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாஸ்திரி) மகா பெரியவாளின் அறிவுறுத்தலின் கீழ். டாக்டர் டி.எம்.பி. மகாதேவன் மற்றும் பிறரின் அரிய தத்துவக் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தார். இது இப்போது பெங்களூரிலிருந்து வருகிறது. பிற்காலத்தில் அவர் காமகோடி இதழை தமிழில் வெளியிட்டார், (ஆசிரியர் ஸ்ரீ மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகள்).

Comments


bottom of page