Vishwa Shanti Yagnya-Hatkeshwar Mandir
வடநகர் ஶ்ரீ ஹாட்கேஷ்வர் மந்திரில் பூர்ணகும்பம் வரவேற்பு- பூஜ்யஶ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளின் அனுக்ரஹ பாஷணம் – சிறப்பம்சங்கள்
10.11.2026
1. பாரதத்தின் புண்ணியத் தலங்களும் மூவகை ஆலயங்களும்
பாரதத்தில் 51 சக்திபீடங்கள், 12 ஜ்யோதிர்லிங்கங்கள், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகள் உள்ளன. ஆலயங்கள் மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை (மானவ பிரதிஷ்டை), பரத்வாஜர், வசிஷ்டர், அத்ரி, பிருகு போன்ற ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை (ரிஷி பிரதிஷ்டை), பகவான் தாமாகவே வெளிப்பட்ட ஸ்வயம்பு தலங்கள் என மூன்று வகைப்படும். இவற்றில் ஸ்வயம்பு தலங்களே மிகச் சிறந்தவை என்று பூஜ்யஶ்ரீ பெரியவா விளக்கினார்கள்.
2. ஸ்கந்த புராணமும் ஹாட்கேஷ்வர் தலத்தின் பெருமையும்
பகவான் பிக்ஷாடன ரூபத்தில் எழுந்தருளிய வடநகர் ஹாட்கேஷ்வர் தலத்தின் மகிமை, ஸ்கந்த புராணத்தில் சுமார் 15,000 சுலோகங்களில் விவரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். பாரதத்தின் தீர்த்தங்கள், அங்கு வந்த மகான்கள், சாப விமோசனம் மற்றும் அனுக்ரஹம் பெற்றவர்கள் பற்றிய விவரங்களும், ராம ஜன்மபூமி பற்றிய குறிப்புகளும் ஸ்கந்த புராணத்தில் உள்ளன. அண்மையில் பரோடா நூலகத்தில் ஸ்கந்த புராணம் தொடர்பான சிலவற்றைப் பார்த்ததாகவும் பூஜனீயர்கள் தெரிவித்தார்கள்.
3. ‘ஹாடக’ என்னும் ஸ்வர்ணத்தின் மகத்துவம்
‘ஹாடக’ என்றால் தங்கம், ஸ்வர்ணம். அது தூய்மை, நிர்மலம், பவித்திரம், உயர்ந்த தரம் ஆகியவற்றின் அடையாளமாகும். ஸ்வர்ண தானம், பூமி தானம், வீடில்லாதவர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்துதல், கோவம்சப் பராமரிப்புக்குப் பங்களித்தல் ஆகியவற்றால் ஏழு தலைமுறைகளுக்குப் புண்ணியம் கிடைக்கும் என்று கூறி,
“हाटक क्षिति गौरीनाम सप्त जन्मानुगम फलम्”
“ஹாடக க்ஷிதி கௌரீநாம ஸப்த ஜன்மாநுகம பலம்”
என்ற வாசகத்தையும் குறிப்பிட்டார்கள். தானத்தின் பெருமையை இவ்வாறு பூஜ்யஶ்ரீ பெரியவா எடுத்துரைத்தார்கள்.
4. ஹிரண்ய ஸ்வரூபமான பரமேஸ்வரன்
ஸ்வர்ணமே பகவானுடைய ஒரு ஸ்வரூபம் என்று கூறி,
“हिरण्यकेशा हिरण्यस्पृशु आप्रणखात् सर्व एव सुवर्णः”
“नमो हिरण्यबाहवे नमः”
“ஹிரண்யகேஶா ஹிரண்யஸ்ப்ருஶு
ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண:”
“நமோ ஹிரண்யபாஹவே நம:”
என்ற வேத வாக்கியங்களைக் குறிப்பிட்டார்கள். ஶ்ரீ ருத்ரத்திலும் ‘ஹிரண்ய’ என்ற சொல் இடம்பெறுவதையும், அம்பிகாபதி, உமாபதி, பசுபதி ஆகிய பரமேஸ்வரனுடைய திருநாமங்களையும் எடுத்துரைத்து, ஸ்வர்ண ஸ்வரூபமான ஹாட்கேஷ்வரரின் மகிமை புராணங்களில் விரிவாகப் போற்றப்பட்டுள்ளதாகப் பூஜனீயர்கள் விளக்கினார்கள்.
5. தேவர்களும் ரிஷிகளும் வழிபட்ட ஹாட்கேஷ்வர்
இந்தப் புண்ணியத் தலத்திற்கு இந்திரன் உள்ளிட்ட தேவர்களும், ரிஷிகளும், பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் வந்து பகவானுடைய அனுக்ரஹத்தையும் சாப விமோசனத்தையும் பெற்றதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஹாட்கேஷ்வர் ஆலயம் வடநகரில் அமைந்திருந்தாலும், அது பாரதம் முழுவதற்குமான தீர்த்தத் தலம் என்று பூஜ்யஶ்ரீ பெரியவா வலியுறுத்தினார்கள்.
6. பூஜ்யஶ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் குஜராத் விஜயம்
1980ஆம் ஆண்டில் தமது குருநாதரான பூஜ்யஶ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் வடநகருக்கு விஜயம் செய்தபோது, உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு மற்றும் பூஜை ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்ததை நினைவுகூர்ந்தார்கள். அக்காலத்தில் அகமதாபாத் சமர்த்தேஷ்வர் மஹாதேவ் ஆலயத்தில் சதுர்மாஸ்ய அனுஷ்டானம் நடைபெற்றதையும், பின்னர் மெஹ்சானா, சுரேந்திரநகர், துவாரகை ஆகிய பகுதிகளுக்குக் குருநாதர் விஜயம் செய்ததையும், சிறுவயதிலேயே தமக்கு இப்பிரதேசத்துடன் பரிச்சயம் ஏற்பட்டதையும் பூஜ்யஶ்ரீ பெரியவா அவர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
7. உலக அமைதிக்கான மஹாயக்ஞம்
வடநகர் ஹாட்கேஷ்வர் ஆலயத்தில் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு, அனுஷ நட்சத்திரத்தில் தொடங்கவுள்ள அனுஷ்டானத்தின் மூலம் அனைவருக்கும் ஆயுள், ஆரோக்கியம், குடும்ப நலம், வியாபார முன்னேற்றம், தேசப் பாதுகாப்பு, சுபிட்சம் ஆகியவை கிடைக்கப் பிரார்த்திக்கப்படவுள்ளது. மனிதனுடைய சக்தியும் பகவானிடமிருந்தே கிடைக்கிறது என்று எடுத்துரைத்தார்கள்.
குஜராத்தில் அனைவருக்கும் நலம் ஏற்பட்டு, அதன் மூலம் பாரதம் நன்மை பெற்று, பாரதத்தின் நலனால் உலக அமைதி ஏற்பட வேண்டும் என்பதே விஸ்வ சாந்தி மஹாயக்ஞத்தின் நோக்கம் என்று பூஜனீய ஶ்ரீ பெரியவா அவர்கள் அருளினார்கள்.
8. நவவருடமும் நவீகரணமும்
குஜராத்தி நவவருடத் தொடக்கத்தில் பழமையான ஆன்மிக சக்தியுடன் புதிய சக்தியும் இணைய வேண்டும். இதுவே ‘நவீகரணம்’ என்பதன் பொருள் என்று எடுத்துரைத்தார்கள். தீபாவளிக் காலமாகவும், மக்கள் வெளியூர்களுக்குச் செல்லும் நேரமாகவும் இருந்தபோதிலும், மாவட்ட நிர்வாகத்தினரும் உள்ளூர் மக்களும் இணைந்து குறுகிய காலத்தில் பந்தல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாகச் செய்துள்ளதாகப் பாராட்டி, அவர்களுடைய சேவையைப் பூஜ்யஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் பாராட்டினார்கள்.
9. மங்களமும் வெற்றியும் அருளப் பிரார்த்தனை
அனைவருக்கும் மங்களமும் வெற்றியும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து,
“मङ्गलं भगवान् विष्णुः मङ्गलं गरुडध्वजः”
“மங்களம் பகவான் விஷ்ணு:
மங்களம் கருடத்வஜ:”
“शिवौ नामरूपाभ्यां या देवी सर्वमङ्गला ।
तयोः संस्मरणात् पुंसां सर्वतो जयमङ्गलम् ॥”
“ ஶிவோ நாமரூபாப்யாம்
யாதேவீ ஸர்வமங்களா |
தயோ ஸம்ஸ்மரணாத் பும்ஸாம் ஸர்வதோ ஜய மங்களம் ||
என்ற மங்கள சுலோகங்களை எடுத்துரைத்து, பகவானுடைய அனுக்ரஹத்தால் அனைவருக்கும் ஜயமும் மங்களமும் ஏற்படப் பிரார்த்திப்பதாகக் கூறி ஜகத்குரு ஶ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் ஆசி வழங்கினார்கள்.
Comments