top of page

மகா பெரியவாவின் எத்தனயோ அதிசயங்களில் இதுவும் ஒன்று

மஹாபெரியவா மஹிமைகள்


உங்க தாத்தா என்னடா பண்றார்? -


வைத்தா மாமா கேட்டார். அவர் உள்ளூர் ப்ரோஹிதம். பஞ்சாங்கம் கொண்டு வந்து கொடுப்பார். பூணல், நோம்புக்கயிர், திருமாங்கல்ய சரடு எல்லாம் அப்போ அப்போ கொண்டு வந்து பல கிரகஸ்தர்களுக்கு கொடுத்து விட்டு ஏதாவது சில்லறை வாங்கி ஜீவனம். ரொம்ப நல்ல மனிதர். அதிகம் படிக்கவில்லை. வேதம் மந்திரங்கள் தெரியாது. உதவியாளனாக சுப அசுப காரியங்களுக்கு செல்வது. மேஸ்திரி கொடுப்பதை வாங்கிகொள்வதோடு சரி. அங்கங்கே தினமும் எங்காவது போஜனம் கிடைத்து விடும். ஒண்டிக்கட்டை.


''தாத்தா அழுதுண்டு இருக்கார்''

ஏன் தாத்தா அழறார்? என்ன ஆச்சு?

வேகமாக உள்ளே வந்த வைத்தா ''என்ன சார் ஆச்சு உங்களுக்கு உடம்பு ஏதாவது சரியில்லையா.?''

''வா வைத்தா,வா. உடம்புக்கு ஒண்ணுமே இல்லைடா. மனசைப் பிழிஞ்சுது ஒரு விஷயம். அப்படியே மனசு உருகி கண் வழியா ஜலம் வந்துடுத்து!''

என்ன சார் அப்படி? யார் என்ன பண்ணா ?

''எல்லாம் மகா பெரியவா விஷயம் தான் எனக்கு வேறே என்ன? யாரோ ஒரு சம்பவம் அனுப்பினதை படிச்சேன். என்னவோ பண்ணிடுத்து என்னை. உனக்கும் சொல்றேன் கேளு.


மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு,நாலு பொண்ணு ரெண்டு பிள்ளை. சின்ன வயசிலே சரியா கவனம் பண்ணலே. எதிலும் பொறுப்பில்லாம சுத்தினார். பின்னாலே அதாலே சங்கடம் வந்துடுத்து. உத்த்யோகம் யார் கொடுப்பா ? படிப்பு பள்ளிக்கூடத்திலேயும் இல்ல வைதிக பாடசாலையிலும் இல்லை. கல்யாணம் வேறே ஆயிடுத்து. குடும்பம் பெரிசாயிடுத்து. மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள் செய்விக்கும் வாத்யார்களுக்கு உதவியாளனாகச் செல்வார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட உன்னை மாதிரின்னு வைச்சுக்கோ. உனக்கு குடும்பம் இல்லை. பிள்ளை குட்டி பொண்டாட்டின்னு ஒண்ணும் கடமை இல்லை. ராமசாமி அய்யருக்கு பரம்பரையாக வந்த வீட்டில் வாசம், நல்ல வேளையாக வீட்டு வாடகை பிரச்னை இல்லை. கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பு, முப்பது தென்னைகள். 'தாளுண்ட..நீரைத் தலையாலே தான் தருதலால்' தினமும் ஒரு கால சாப்பாடு நிச்சயம் அது தந்தது. மகா பெரியவான்னா ரொம்ப பக்தி ராமசாமிக்கு.

காஞ்சிபுரம் போனார். மகா பெரியவாளை நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார். ராமஸ்வாமி,முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என்ன காரணம் தெரியுமா?

"பெரியவா, பெரிய பெண்ணுக்கு இருபத்திரண்டு. அடுத்தவளுக்கு இருபது. ரெண்டு பேருக்கும் ஒரே முகூர்த்தத்திலே கல்யாணம் பண்ணினால் செலவு குறையும். என்னென்னமோ எங்கெங்கோ அலைந்து திரிஞ்சு முயற்சி பண்ணினேன் . அது ஒத்து வரலே, மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது. பணம் தேவைப்பட்டது. தென்னந்தோப்பை கிரயம் பேசி, அட்வான்ஸ் வாங்கி, அக்ரிமென்ட் போட்டேன்..." ஆனா .... தொண்டை அடைத்துக் கொண்டது: மென்று விழுங்கினார்.

'' ம்'' பெரியவா அவரைப் பார்த்தார். மேலே சீக்கிரம் சொல்லு என்று அர்த்தம். "என் அண்ணாவுக்குக் கோபம். அவரைக் கேட்கலையாம். எப்படி பரம்பரை சொத்து. எனக்கு பாத்யதை இருக்கே என்னைக் கேக்காமல் கிரயம் பேசினே..என்று கோபமாக கத்தி திட்டினார். விரட்டினார். என் மேலே கோர்ட்டுலே பிராது போட்டு தோப்பை விக்க கூடாதுன்னு ஸ்டே வாங்கிட்டார்..." எனக்கு வேறே வழியே தெரியல்லே. எப்படி பெரியவளுக்கு கல்யாணம் பண்ணுவேன். நிர்க்கதியா நிக்கறேன்''

பெரியவாள் ஐந்து நிமிஷம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒன்னும் சொல்லலே. பிரசாதம் கொடுத்து அனுப்பிட்டார்.

ராமஸ்வாமிக்குப் படு ஏமாற்றம். 'கவலைப்படாதே' என்று ஒரு வார்த்தை கூட சொல்லலியே பெரியவா'', வெளிலே பெரியவாளின் அணுக்கத் தொண்டர் ராயவரம் பாலு கண்ணில் பட்டார். அவரிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் ராமஸ்வாமி..

"பெரியவா மனசு வெச்சா என்ன வேணுமானாலும் பண்ணலாம். என் அண்ணாவுக்கு என்ன குறைச்சல்? பெரிய வீடு, எப்போ பார்த்தாலும் வெளியூர்தான். நேரில் பார்க்கவே முடியறதில்லே. அப்பா சிரார்த்தத்துக்குக் கூட என்னைக் கூப்பிடறதில்லே.. நான் ஏழை என்று லட்சியம் பண்றதில்லே. என்னால் தனியாகப் பண்ண முடியுமா? நான். கஷ்டப்படறவன், உதவி செய்யப்படாதா?" பாலு கேட்டார்; பெரியவாளிடம் சொல்லப்படாதா?"

"சொன்னேனே பெரியவா கேட்டுண்டே இருந்தா ஆனா ஒண்ணுமே சொல்லலே. வெறுமே விபூதி பிரஸாதம் கொடுத்தா அவ்வளவுதான்!"

பாலுவுக்கும் புரியவில்லை. எல்லாருக்கும் ஆறுதல் கூறும் பெரியவா, ராமஸ்வாமியை மட்டும் ஏன் ஒதுக்கி விட்டார்கள்? ராமஸ்வாமி ஏழையே தவிர, ரொம்பவும் நல்லவர்;பக்திமான்; சாது பிராமணர். அவரை பெரியவாளுக்குத் தெரியுமே" ஏன் இப்படி???

"கவலைப்படாதே, ராமு, பெரியவா மேலே பாரத்தைப் போட்டுட்டு மேலே காரியத்தைப் பார்...வரட்டுமா"

அடுத்தநாள் காஞ்சி புரத்தில் பெரியவாளுக்கு எதிரே .... அரை அடி அகலத்துக்கு ஜரிகைக் கரை போட்ட வெள்ளை வெளேர் என்று வேஷ்டி அதற்கேற்ற அங்கவஸ்திரம், கொட்டைப் பாக்கு அளவில் தங்கப்பூண் கட்டிய ருத்ராட்ச மாலை ,நவரத்தினமாலை, ஐந்து பவுன் சங்கிலியில், இரண்டு அங்குல டயா மீட்டரில் ஒரு டாலர்; பத்தினியும் இரண்டு சிஷ்யர்களும் உடன் வர, தட்டு நிறையப் பழங்களுடன் கம்பீரமாக நடந்து வந்தார்.'உபன்யாஸ திலகம் மார்க்கபந்து சாஸ்திரிகள்.

பெரியவாளிடம் அவருக்கு எப்போதும் ஒரு சலுகை உண்டு. வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பார். சாயங்காலத்தில் பெரியவா சொல்லி அப்பப்போ ஒரு மணி நேரம் உபன்யாசம் செய்வார். பெரியவாள், பௌராணிகர் வந்திருப்பதை ஓரக் கண்ணால் பார்த்துட்டார். ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் யார் யாருடனோ, என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார் ..


'' இன்றக்கு என்ன, இப்படி? அகில பாரதத்திலும் புகழ் பெற்ற ஒரு பௌராணிகரை இப்படிக் காக்க வைக்கலாமா?

ராயவரம் பாலு, பெரியவாள் அருகில் சென்று ,"மார்க்கபந்து சாஸ்திரிகள் வந்திருக்கார்"என்று இரைந்து சொன்னார்.

பெரியவாள் பார்வை இவர் பக்கம் திரும்புகிற மாதிரி பட்டது. பழத்தட்டை சமர்ப்பித்துவிட்டு, நமஸ்காரம் பண்ணினார் சாஸ்திரிகள். ''என்ன ?''

"திருப்பதிக்குப் போயிண்டிருக்கேன்.ரொம்ப அபூர்வமா, ஏழெட்டு நாள் ரெஸ்ட் . புரோகிராம் எதுவும் இல்லே. ஸ்ரீனிவாசனுக்கு திருக்கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு, பத்தினி ஆசைப்பட்டா, உடனே புறப்பட்டுட்டேன். பெரியவா அனுக்ரஹத்தோட ஸ்ரீனிவாச கல்யாணம் நடக்கணும்..."

பெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்க்கவில்லை; முகம் கொடுத்துப் பேசவில்லை. தரிசனத்துக்கு வந்த பாட்டிகள் குடியானவர்களிடமெல்லாம் உற்சாகமாகப் பேசினார்கள்.

அரை மணி ஆயிற்று.

"சாஸ்திரிகள் நின்னுண்டுருக்கா..." என்று நினைவூட்டினார் பாலு.

"ஹி......ஹி......ஆமாம்......பெரியவா அனுக்ரஹம் பண்ணனும். ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம். "அவர் வாக்கியத்தை முடிக்கு முன் சட்டென்று பெரியவா எழுந்துட்டார்.

"முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ...." என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டார்.

எல்லாருக்கும் ஆச்சர்யம். ஸ்ரீநிவாஸ கல்யாணம் என்றால், அது பத்மாவதி கல்யாணமும் தானே? யார் போய் பெரியவாளிடம் விளக்கம் கேட்பது?

திருப்பதியில் நிறையப் பேர்கள், கல்யாணம் உற்சவம் செய்கிறார்கள் . நீ, திருச்சானூர் போய் பத்மாவதி கல்யாணம் உற்சவம் செய்' என்கிறார்களா? பெரியவா என்ன உத்தரவு போட்டுட்டுப் போயிருக்கா?"

சாஸ்திரிகள் புரிந்து கொண்டார். முதுகில் சுளீரென்று சாட்டையடி!

இரண்டு மாதங்கள் கழித்து, ஒருநாள் ராமசாமி வந்தார். முகமெல்லாம் பூரிப்பு. கையிலே இருந்த கல்யாணப் பத்திரிகையைப் பெரியவாளிடம் சமர்ப்பித்து விட்டு நமஸ்காரம் பண்ணினார்.

''என்ன பொண்ணு கல்யாணமா?'' ஏற்பாடு பண்ணிட்டியா ?

''பெரியவா, என்னத்த சொல்வேன்.. இங்க வந்து போன ரெண்டுநாளிலே எங்க அண்ணாவே ஆத்துக்கு வந்தார். நானே கல்யாணச் செலவு முழுக்க ஏத்துக்கறேன்னுட்டார். 'கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கிறது மட்டும்தான் உன் பொறுப்பு. மீதி எல்லாத்தையும் எங்கிட்ட விட்டுடு'ன்னார். ஆச்சர்யமா இருந்தது எனக்கு. தென்னந்தோப்பு கேஸையும் வாபஸ் வாங்கிண்டுட்டார்.

"சின்ன பையனுக்குப் பன்னிரண்டு வயது. பூணூல் போட்டு தன் சிஷ்யனா வைத்துக் கொள்வதாக வேறே சொல்லிட்டார். எங்க அண்ணா,இப்படி அனுகூலமா மாறுவார்னு நான் கனவு கூட கண்டதில்லே....


பெரியவாள் வலக் கரத்தைத் தூக்கி ஆசிர்வதித்து பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள். வெளியே வந்தார் ராமஸ்வாமி . எதிரே ராயவரம் பாலு!

''இந்தாப்பா பாலு நீ சொன்னமாதிரி இங்கே வந்து போனவுடனேயே தெய்வானுக்ரஹமா என் பொண்ணு கல்யாணம் பிக்ஸ் ஆயிடுத்து. எங்க அண்ணாவே பொறுப்பு எடுத்துண்டுட்டார். பெரியவா கிட்டே சொல்லிட்டு இப்பதான் வரேன்'' "என்ன மரவக்காடு! பேஷ் பேஷ். பொண்ணு கல்யாணப் பத்திரிகையா? கையிலே காலணா இல்லேன்னு கண்ணீர் விட்டீரே?" பத்திரிகை யைப் பிரித்துப் பார்த்தார் பாலு.

"...மரவக்காடு ஜகதீஸ்வர சாஸ்திரிகள் பௌத்ரியும் என் இளைய சகோதரன் சிவி. .ராமஸ்வாமியின் ஸீமந்த புத்திரியுமான சௌ.பத்மா வதியை

. .................................


."விதேயன்;மார்க்கபந்து சாஸ்திரி.''..

பாலுவின் கால்கள் தரையில் வேர்விட்டன. முகமெல்லாம் வியர்த்தது. உடம்பு பக்தியில் நடுங்கியது.

"பாலு அண்ணா அவசியம் கல்யாணத்துக்கு வந்துடணும்... அண்ணா பொறுப்பிலே நடக்கிறது. உங்களைப் பார்த்தால், அண்ணா சந்தோஷப்படுவார்..." என்ற ராமசாமி அங்கிருந்து நகர்ந்தார்.

தலையை அசைத்த பாலுவுக்கு இரண்டு மாதங்கள் முன்னர், பெரியவாள் சொன்ன சொற்கள் காதருகில் மீண்டும் ஒலித்தன. 'முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ..."

"எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?

ராமஸ்வாமியினுடைய பெண்ணின் பெயர் 'பத்மாவதி' என்று பெரியவாளுக்கு யார் சொல்லியிருப்பார்கள்?.

தெய்வத்துக்கு தெரியாத விஷயமா.....? நாம் அவற்றுள் தலையிட நமக்கு யோக்யதாம்சம் உண்டா.....?

ஜய ஜய சங்கர

ஹர ஹர சங்கர.

40 views0 comments

Comments


bottom of page