top of page

பெரியவா மகிமை - நடுக்காவேரியில்...


திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள், எல்லாவற்றுக்கும் மேலே பெரியவாளிடம் அப்படி ஒரு ஆத்மார்த்தமான பக்தி! திருவையாறு வரும்போதெல்லாம் பெரியவா இவருடைய க்ருஹத்துக்கு கட்டாயம் வருவார். சின்னஸ்வாமி ஐயர் நித்யம் வீட்டில் சிவபூஜை, அப்புறம் உள்ளூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பரமேஸ்வரனை மனமுருகி வழிபடுவார்.

சாயங்கால வேளைகளில் இராமாயண உபன்யாசம் செய்வார். இவருடைய பிள்ளை நாட்டுப்பெண் பெயர் பொருத்தம் வெகு அழகாக ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி என்று அமைந்தது. மனமொத்த குடும்பமாக இருந்தாலும், கல்யாணமாகி 13 வர்ஷங்கள் ஆகியும் ஸந்தானப்ராப்தி இல்லையே என்ற குறைஎல்லார் மனசையும் அரித்துக் கொண்டிருந்தது. முதலில் பிறந்த குழந்தை தங்கவில்லை. நிச்சயம் பெரியவா அனுக்ரகத்தால் தங்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களுக்கு துளியும் குறையவில்லை. அப்போது பெரியவா நடுக்காவேரிக்கு விஜயம் செய்தார். அங்கு வேறொரு பக்தர் க்ருஹத்தில் பெரியவா தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேதகோஷம் முழங்க பூர்ணகும்பங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைக்கப்பட்டு பெரியவா ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தார். ஸீதாலக்ஷ்மி வீட்டு வாசலில் அழகாக கோலமிட்டுக் கொண்டிருந்தாள். இவர்கள் வீட்டைத் தாண்டித்தான் பெரியவா தங்கப்போகும் வீட்டுக்கு செல்ல வேண்டும். ஸீதாலக்ஷ்மியை பார்த்ததும், ஊர்வலத்திலிருந்து விலகி விறுவிறுவென்று அவள் போட்டிருந்த மாக்கோலத்தின் மேல் திருப்பாதங்கள் பதிந்தும் பதியாமலும் நின்றார். திடீரென்று தன் எதிரில் வந்து நின்ற கண்கண்ட தெய்வத்தை கண்டதும், சந்தோஷம், பக்தி, குழந்தை இல்லா ஏக்கம் எல்லாம் சேர்ந்து அப்படியே அவர் பாதங்களில் விழுந்து கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள். “எந்திரு..சீதே…ஒன்னோட ராமன் எங்க? கூப்டு அவனை..” என்றவர் யாரும் எதிர்பாராத நேரத்தில், சின்னஸ்வாமி ஐயரின் க்ருஹத்துக்குள் ப்ரவேசித்தார்.

ஸீதாலக்ஷ்மி தன் அகத்துக்காரர் ராமச்சந்த்ரனை தேடிக்கொண்டு ஓடினாள். முன்னறிவிப்பு ஏதுமின்றி தனது வீட்டுக்குள் சாக்ஷாத் பரமேஸ்வரனே வந்து நின்றதைக்கண்டு சின்னஸ்வாமி ஐயர் ப்ரமித்தார்! அவ்வளவுதான்! தெருவே அவர் க்ருஹத்துக்குள் கூடிவிட்டது! பெரியவா தனக்கு ரொம்ப ஸ்வாதீனமான இடம்போல விறுவிறுவென்று நுழைந்து அங்குமிங்கும் பார்வையால் துழாவினார். பிறகு தாழ்ப்பாள் போட்டிருந்த ஒரு அறையை தானே திறந்து அதற்குள் சென்றார். அது ஜாஸ்தி பயன்படுத்தாததால், தட்டுமுட்டு சாமான்கள் நிறைய காணப்பட்டது. அதோடு ஒரு வண்டி தூசி! பெரியவா கதவைத் திறந்ததும் ஒரே புழுதிப்படலம் மேலே கிளம்பியது! தன்னுடைய ஒத்தை வஸ்த்ரத்தின் ஒரு முனையால் கீழே தூசியைத் தட்டிவிட்டு, அதையே லேசாக விரித்துக்கொண்டு தரையிலேயே அமர்ந்துவிட்டார் கருணைவள்ளல் ! “பெரியவா……இந்த ரூம் ஒரே புழுதியா இருக்கு…..கூடத்ல ஒக்காந்துக்கோங்கோளேன்!” என்றார் ஐயர். இதற்குள் ஸீதாலக்ஷ்மி கணவனுடன் வந்து

பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினாள். ராமா!…..ஒடனே போயி ஒங்காத்து பசுமாட்டுலேர்ந்து பால் கறந்து ஒரு சொம்புல எடுத்துண்டு வா…போ!” “உத்தரவு பெரியவா……” அடுத்த க்ஷணம் ஒரு சொம்பு பசும்பாலோடு பெரியவா முன் நின்றார். பெரியவா கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தார். பிறகு, “ராமா…..இந்தப்பாலை கொண்டுபோயி கொடமுருட்டி ஆத்துல ஊத்திடு! அப்றம் சொச்சம் இருக்கற கொஞ்சூண்டு பாலை அந்த ஆத்தோட கரைல ஊத்திடு! அந்த ஊத்தின எடத்ல இருக்கற மணலை கொஞ்சம் தோண்டு……அதுல ஒரு அஸ்திவாரம் தெரியும்…..அதுக்கு மேல பிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டு. க்ஷேமமா இருப்பேள்” என்று சொல்லிவிட்டு, வஸ்த்ரத்தை எடுத்து உதறிவிட்டு வெளியே வந்து, தான் தங்க வேண்டிய க்ருஹத்தை நோக்கி நடந்தார். பெரியவா சொன்னபடி உடனே குடமுருட்டி ஆற்றுக்கு சென்று பாலை விட்டுவிட்டு, அதன் கரையில் மீதிப்பாலை ஊற்றி மண்ணை தோண்டினால்… அஸ்திவாரம் தெரிந்தது! உடனேயே விநாயகருக்கு ஒரு அழகான சிறிய ஆலயம் எழும்பியது! அதற்கு

அடுத்த வருஷமே ஸீதாலக்ஷ்மி ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள்! “கணேசன்” என்ற நாமகரணம் சூட்டப்பட்டான் அந்தக் குழந்தை. இப்போதும் நடுக்காவிரியில் “காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி” கோவிலில் உள்ள விநாயகப் பெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

Courtesy:

N.Ramesh Natarajan/S.Ramanathan/WB Kannan (SRI KARYAM)

Shared in Google groups (Sreemutt devotees)

130 views0 comments
bottom of page