திருக்குடந்தை ஈன்ற எண்ணற்ற கலை வல்லுநர்களில் ஒருவர் வேய்ங்குழல் மேதை திரு சரப சாஸ்திரிகளாகும். இவர் தொன்மை வாய்ந்த இன்னிசைக் கருவியான புல்லாங்குழலை இசைப்பதில் நிகரற்ற திறமையுடன் விள்ங்கினார்.
இறைப்பற்று மிகுந்து நெறியுடன் திருக்குடந்தையில் வாழ்க்கை நடத்திய விசுவநாத சாஸ்திரிகள், தர்மாம்பாள் அம்மையார் தம்பதியினருக்கு 1871ஆம் ஆண்டில் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே பார்வையை இழந்த அவர் மிக நுட்பமான ஸ்வரங்களின் வேற்றுமயைக் கண்டறியும் திறம் கொண்டிருந்தார்.
இத்தகைய அறிவுத்திறனால் திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகளின் சீடரான குப்புசாமி ஐயர் போன்றோரிடம் இசை பயிலும் பேறு பெற்றார். புல்லாங்குழலை தனி வாத்தியமாக இசை மேடைகளில் இசைப்பதை ஆரம்பித்து வைத்த பெருமை இவரையே சாரும். வேய்ங்குழல் வேந்தர் சரப சாஸ்திரிகள் ஸ்ரீராமரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார் தாம் பிறந்து வளர்ந்த சோலையப்பன் தெருவில் ஸ்ரீ ராம பஜன சபாவை நிறுவி, அவர் வழிபட்டு வந்த இராம பிரானின் படத்தை அதில் வைத்து வழிபட்டு வந்தார்.. ஏகாதசி தினங்களிலும், ஸ்ரீ ராம நவமி விழா பத்து நாட்களும் இசை வழிபாடு நடத்தி வந்தார். அவர் நிறுவனம் செய்த மடத்தில் இன்றும் ஸ்ரீ ராமநவமி விழா ஆண்டு தோறும் பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது.
பிரபல இசைக்கலைஞர்கள் இவ்விழாவில் பங்கேற்பதை தாம் பெற்ற பேறாகக் கருதுகிறார்கள். இனி சரப சாஸ்திரிகளைப் பற்றியும் அவர் நிறுவிய ஸ்ரீ ராம பஜன சபாவைப் பற்றியும் தனது தன்னலமற்ற தொண்டால் ஸ்ரீராம பஜன சபாவை சிறப்பாக நிர்வகித்து வரும் நிர்வாகி திரு சேது ராம சர்மா அவர்கள் கூறக் கேட்போம்.திருக்குடந்தை ஈன்ற எண்ணற்ற கலை வல்லுநர்களில் ஒருவர் வேய்ங்குழல் மேதை திரு சரப சாஸ்திரிகளாகும். இவர் தொன்மை வாய்ந்த இன்னிசைக் கருவியான புல்லாங்குழலை இசைப்பதில் நிகரற்ற திறமையுடன் விள்ங்கினார்.
இறைப்பற்று மிகுந்து நெறியுடன் திருக்குடந்தையில் வாழ்க்கை நடத்திய விசுவநாத சாஸ்திரிகள், தர்மாம்பாள் அம்மையார் தம்பதியினருக்கு 1872ஆம் ஆண்டில் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே பார்வையை இழந்த அவர் மிக நுட்பமான ஸ்வரங்களின் வேற்றுமையைக் கண்டறியும் திறம் கொண்டிருந்தார். இத்திறத்தால் அவ்ர் தியாகராஜ சுவாமிகளின் நேர் சீடரான இசை மேதை குப்புசாமி அய்யரிடம் இசை பயிலும் பேறு பெற்றார்.அவரிடம் இசை இலக்கணங்களைக் கற்று குருவுக்கு மிஞ்சிய சீடரானார். இவருடைய புகழ் வேகமாகப் பரவ, தஞ்சாவூர் சமஸ்தான வித்வான்கள் இவருக்குப் பேராதரவு காட்டினர். மானம்புச்சாவடி வேங்கட சுப்பையர் இவருக்கு சங்கீதத்தின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் கற்பித்தார். சிறு வயதிலேயே இசை மேடைகள் ஏறத் தொடங்கினார். பத்து வயதிலேயே இவரிடம் மிளிர்ந்த இசைத்திறனைக் கண்டு பல மேதைகள் வியந்தனர். மெல்லிய குழலில் இருந்து இவர் எழுப்பிய இனிய நாதம் கேட்பவரை பேரின்பத்தில் ஆழ்த்தியது.
இவரது காலத்தில் வாழ்ந்த இசை மேதைகளான மகா வைத்யநாத ஐயர், பட்டினம் சுப்ரமணிய ஐயர், திருவிசநல்லூர் நாராயணசாமி ஐயர், உமையாள்புரம் சாமிநாத ஐயர், இராமநாதபுரம் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார், நாமக்கல் நரசிம்ம ஐயங்கார் ஆகியோர் இவரைப் புகழ்ந்து பேசியுள்ளார்கள். அக்காலத்தில் புகழ் பெற்ற பிடில் வித்வான்கள் இவருக்குத் துணையாக வாசிப்பதை கிடைத்தற்கரிய அரும் பேறாகக் கருதினார்கள். அடுத்த கணத்தில் எந்த சங்கதி அவரது குழலிலிருந்து தோன்றி குதிக்குமோ என்று பிரசித்தி பெற்ற வேணு கான வித்வான்களால் கூட கற்பனை செய்ய முடியாதபடி அவ்வளவு வேகமாகவும் மாறுதல்களுடனும் சங்கதிகள் வந்து விழும். அக்காலத்திலேயே இவர் கச்சேரியைக் கேட்க தொலைதூரத்தில் இருந்து ரசிகர்கள் திரண்டு வந்து அலுக்காமல் சலிக்காமல் நிசப்தமாக இருந்து அனுபவித்து அன்புக்காணிக்கை செலுத்திச் செல்வார்கள். திருக்கோடிக்காவல் கிருஷ்ணையர் போன்ற பல வயலின் மேதைகள் இவரை விஞ்ச வேண்டும் என்ற எண்ணத்துடன் வாசித்து முடிவில் தோல்வியை ஒப்புக்கொண்டு இவருக்கு மரியாதை செலுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
பாம்புகள் கூட பல சமயங்களில் இவர் எதிரில் படமெடுத்தாடி இவருடைய தெய்வீக சங்கீதத்தில் பரவசமடைந்தன என்று இவருடன் கூடியிருந்த பலர் கூறியும் எழுதியுமிருக்கின்றனர். மேலும் அவர் ஆங்கிலம், மராட்டி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளை நன்கு அறிவார். பிடில், வீணை, மிருதங்கம் முதலிய இசைக்கருவிகளைக் கையாள்வதிலும் திறமை பெற்றவர். ஹரி கதா காலக்ஷேபம் செய்வதிலும் வல்லவர். சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் அவரிடம் கதா காலக்ஷேபம் செய்யப் பயின்று பெரும் புகழ் பெற்றவர்.
சரப சாஸ்திரிகளின் வாழ்க்கையில் அவர் செய்த ஒவ்வொரு செயலும் அவர் ஆண்டவனுக்குச் செய்த வழிபாடாகும். இப்பொழுது உள்ளது போல் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத அக்காலத்திலேயே மைசூர் மஹாராஜாவுக்கு இவர் புகழ் எட்டியது. அவர் அழைப்பின் பேரில் அங்கு சென்று அரசவையில் சில கச்சேரிகள் செய்தார். இவர் இசையை மிகவும் விரும்பிய மைசூர் மகாராஜா மிக்க மரியாதை செய்து இவரைத் தன் சபையில் இசைக் கலைஞராக இருக்குமாறு வெகுவாகக் கேட்டுக்கொண்ட போதிலும் மைசூரில் அதிக நாள் தங்க மறுத்துவிட்டார். இவ்வுலக இன்பத்தில் பற்று இல்லாமல் இருந்த அவரது வாழ்க்கை நாத மயமாகத் திகழ்ந்தது. நம்முடைய அதிருஷ்டமாக அவர் இரு மாணவர்களை விட்டுச் சென்றார். இவர் தம் மாணாக்கர்களான பல்லடம் சஞ்சீவ ராவ், நாகராஜ ராவ் அவர்களின் இசை சரப சாஸ்திரிகளின் இசையை நினைவூட்டும் வகையில் அமைந்தது. தனது மாணாக்கர்களை ஊக்குவிப்பதில் இவருக்கு நிகர் எவருமில்லை. தனது மாணவர்களை தமது முன்னிலையிலேயே கச்சேரிகள் செய்ய ஊக்குவித்தார். பொருளில் விருப்பமில்லாவிடிலும் இவருக்கு பொருள் தன்னால் வந்து குவிந்தது. யாவற்றையும் ஒரு வயோதிகரால் பூஜைக்கென வழங்கப்பட்ட ஸ்ரீராமபிரான் பாதத்தில் சமர்ப்பித்துவிடுவார். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளைப்போல் இவரும் இராமபிரானிடத்திலும், தாரக மந்திரத்திலும் தன்னை ஆழ்த்திக்கொண்டார்.
புல்லாங்குழலை தனி வாத்தியமாக இசை மேடைகளில் இசைப்பதை ஆரம்பித்து வைத்த பெருமை இவரையே சாரும். வேய்ங்குழல் வேந்தர் சரப சாஸ்திரிகள் தாம் பிறந்து வளர்ந்த சோலையப்பன் தெருவில் ஸ்ரீ ராம பஜன சபாவை நிறுவி, அவர் வழிபட்டு வந்த இராம பிரானின் படத்தை அதில் வைத்து வழிபாடு செய்து வந்தார். ஏகாதசி தினங்களிலும், ஸ்ரீ ராம நவமி விழா பத்து நாட்களும் இசை வழிபாடு நடத்தி வந்தார். தனக்கு விருப்பமானவர்களை விரைவிலேயே இறைவன் தம்முடன் சேர்த்துக் கொண்டுவிடுவார் என்ற கூற்றை ஒட்டி சரப சாஸ்திரிகள் தம்முடைய 32ஆவது வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார். இடையறாத பக்தியுடன் உலக நலனுக்காக தாம் கொண்டாடி வந்த பத்து நாட்கள் ஸ்ரீராம நவமி உற்சவமும் ஏகாதசி பஜனையும், அவர் நிறுவிய மடத்தில் நிரந்தரமாக நடக்கவேண்டுமென்று தன் பக்தர்களிடம் கட்டளை பிறப்பித்துவிட்டு அவர் இப்பூலக வாழ்வை நீத்தார். சரப சாஸ்திரிகள் நம்மிடம் ஒப்படைத்த இந்தப் புனித கைங்கர்யத்தை குன்றாத உற்சாகத்துடன் தொடர்ந்து நடத்துவது நம் கடமையாகும்.
சரப சாஸ்திரிகள் பக்தியுடன் பூஜை செய்துவந்த இராமர் படம் இன்றும் அம்மடத்தில் காட்சி அளிக்கிறது. அவர் இசைத்த புல்லாங்குழல் மடத்தில் பாதுகாக்கப் பட்டு வருகிறது. சரப சாஸ்திரிகளின் வேணுகான ரீங்காரமும், அவர் அருளும் இந்த மடத்தில் நிலவுகிறது என்பது திண்ணம்.
அவர் நிறுவனம் செய்த மடத்தில் இன்றும் ஸ்ரீ ராமநவமி விழா ஆண்டு தோறும் பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. பிரபல இசைக்கலைஞர்கள் இவ்விழாவில் பங்கேற்பதை தாம் பெற்ற பேறாகக் கருதுகிறார்கள். இனி சரப சாஸ்திரிகளைப் பற்றியும் அவர் நிறுவிய ஸ்ரீ ராம பஜன சபாவைப் பற்றியும் தனது தன்னலமற்ற தொண்டால் ஸ்ரீராம பஜன சபாவை சிறப்பாக நிர்வகித்து வரும் நிர்வாகி திரு சேது ராம சர்மா அவர்கள் கூறக் கேட்போம்.