தமிழ் அந்தணக் குடும்பங்களில், பொங்கல் முடிந்த மறு நாள் கனுப்பண்டிகை கொண்டாடி, பெண்கள் தங்கள் சகோதரர்கள் நலனை வேண்டி காகங்களுக்கு விருந்து வைக்கும் வழக்கம் உள்ளது. நம் பாரதத்தில் கொண்டாடப்படும் பல பண்டிகைகள் உறவுகளை பலப்படுத்துவதற்காகவே வழக்கத்தில் வந்தவை. வட இந்தியாவில் கொண்டாடப்படும் ராகிப் பண்டிகையை ஒத்த கனுப்பண்டிகை, உலகின் எந்த மூலையிலிருந்தாலும் பெண்களுக்கு தன் பிறந்தகத்தை மகிழ்வுடன் நினைவு கூர வைக்கிறது. பெண்கள் தங்கள் சிறுவயதில் சகோதரர்களுடன் விளையாடியதை, சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டு மீண்டும் பாசத்துடன் ஒன்று சேர்ந்ததை நினைவு கூர்ந்து, அவர்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்து மகிழ்கிறார்காள். சகோதரர்களும் தங்களால் இயன்ற பரிசுகளை சகோதரிகளுக்கு மனமுவந்து அளிக்கிறார்கள்.
ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டோடிய அந்த நாட்களில் அந்தணப் பெண்மணிகளும், சிறுமியரும் கூடி ஆற்றங்கரையில் கனு வைப்பது பார்ப்பதற்கு மிக ஆனந்தமாக இருக்கும். முதல் நாள் மாலை சிறுமியர் கூடி கையில் புது மஞ்சள் எடுத்துக்கொண்டு அக்ரஹாரத்திலுள்ள மூத்த பெண்மணிகளிடம் மஞ்சள் தீற்றிக்கொள்கையில் அவர்கள் கூறும் 'தாயோட, தந்தையோட, சீரோட, செனத்தியோட, ஆல் போல் விதைத்து, அரசு போல் தழைத்து, சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு, பெரியாம்படையானுக்கு பிள்ளை பெத்து சீரும் சிறப்புமா இருக்கணும்." என்ற வாழ்த்தைக் கேட்டு புரியாமல் வெட்கப்பட்டு சிணுங்கி, பின்பு மறு நாள் காலையில் ஆற்றங்கரையில் கூடி கனுப்பிடி வைத்த நாட்களை நினைக்கையிலேயே இனிக்கிறது. முன்னாட்களில் சிறு வயதில் திருமணம் நடந்தபோது வழக்கில் வந்த வாழ்த்து இது. காகங்களுக்கு உணவிடுவது காகங்கள் போல் கூடி வாழவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக ஏறபடுத்தப்பட்டது என்றே தோன்றுகிறது.
காகங்களுக்கு உணவிட்டபின் ஆற்றில் கும்மாளமிட்டு குளித்து, மனமில்லாமல் கரையேறி, புத்தாடை உடுத்தி, ஆற்றங்கரையிலேயே தயிர் சாதம் சாப்பிட்டபின் மருதாணி இட்ட கையை முகர்ந்து பார்த்து மகிழ்ந்ததும் ஒரு இனிமையான நினைவு. மறைந்திருந்து காக்கைகள் சாப்பிடுவதைப் பார்த்து 'என்னுடைய இலையிலிருந்துதான் அதிகம் சாப்பிட்டது' என்று தோழிகளிடம் போட்டி போடுவதில் ஒரு தனி இன்பம். அதன் பின் தோழிகளுடன் ஆற்றங்கரை பிள்ளையாரை வழிபட்டபின், கோவிலுக்குச் செல்வது பழக்கத்தில் வந்த ஒன்று. இளமையிலேயே இறை வழிபாட்டுக்கு பாரம்பரிய பண்டிகைகள் வித்திட்டன.
சில கிராமங்களில் கனு வைத்தபின் ஆற்றங்கரையில் கும்மி அடிப்பது வழக்கத்தில் இருந்தது. அன்று உணவில் சித்ரான்னங்கள் இடம் பெறும். 'கனுச்சாறு காய்ச்சக்கூடாது' என்று அன்று ரசம் வைப்பது வழக்கத்தில் இல்லை.
தங்களுடைய கனு அனுபவங்களை குடந்தை நகரப் பெண்மணிகள் சிலர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.