ஆனந்த மஹா கணபதி வார்ஷிக நிரமணி உத்ஸவம் உமையாள்புரம்
உமையாள்புரம் கிராமத்தின் தெற்கே காவிரி ஆற்றங்கரையில் ஆனந்த மஹா கணபதி ஆனந்தமாக அம்ர்ந்து தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் வைதீக பிரதிஷ்டையின் விதிமுறைகளைப் பின்பற்றி நித்திய பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இக்கோவில் தூய்மைக்கும், புனிதத்தன்மைக்கும் பிரசித்தி பெற்றது.
சுமார் 150 வருடங்களுக்கு முன் இவ்விநாயகர் இப்பொழுது இருக்கும் இடத்திலேயே ஓர் அரச மரத்தடியில் இருந்தார் என்றும், ஒருநாள் அரசமரம் விநாயகருக்கு கொஞ்சமும் சேதம் இல்லாமல் வேருடன் விழவே, அவதூத ஸ்வாமிகள் ஒருவர் மான் தோல் யந்திரம் வைத்து அவ்விடத்திலேயே ப்ரதிஷ்டை செய்தார் என்றும் கூறப்படுகிறது.
நித்திய பூஜைக்கு இடையூறு இல்லாமலும், பாலாலயம் எழுப்பப்படாமலும் இதே இடத்தில் ஒரு கோவில் அமைத்து, முதன்முதல் 1931வது வருடம் கிராம மக்களின் ஒற்றுமையுடன் வைதீக முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் புனிதத்தன்மையை பாதுகாப்பதன் பொருட்டு சந்நிதிக்கு முன்பு ஒரு மண்டபம் எழுப்பி ஆஸ்திக மக்களின் உதவியுடனும், இச்சிற்றூர் மக்களின் உதவி ஒத்துழைப்பினுடனும் அஷ்ட பந்தனம் சிறப்பாக நடைபெற்றது. இக்கோவிலில் இன்றும் தூய்மையும் புனிதமும் பாதுகாக்கப்படுகிறது.
இக்கோவிலைச் சுற்றியுள்ள நந்தவனங்கள் பராமரிக்கப்பட்டு தினமும் பூஜைக்குத் தேவையான மலர்களைக் கொடுக்கின்றன. மாதம் தோறும் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி அபிஷேக ஆராதனையும், வருடம் தோறும் விநாயக சதுர்த்திக்கு முன் நடைபெறும் நிரமணி உத்ஸவமும் குறிப்பிடத்தக்கவை.
இந்த ஆண்டும் வழக்கம்போல் நிரமணி உத்ஸவம் 27-8- 2016 வெகு சிறப்பாக நடைபெற்றது. காலையில் ஏகாதச திரவியங்களுடன் மஹாபிஷேகம் நடைபெறுகிறது.
மாலையில் சந்தனக்காப்பு, புஷ்பாலங்காரத்தில் ஆனந்த விநாயகரைக் காண கண் கோடி வேண்டும். பல விதமான, நறுமணமுள்ள மலர்களைக் கொண்டு மிக நேர்த்தியாக அலங்காரம் செய்கிறார்கள்.
இந்த ஆலயத்திற்காக அயராது உழைக்கும் திரு ஜகதீசன் அவர்களின் தொண்டு நம்மை வியக்க வைக்கிறது. ஒவ்வொரு சங்கடஹரசதுர்த்திக்கும் சென்னையிலிருந்து வந்து சிறப்பு பூஜைகள் நடத்துகிறார்.
மாலையில் இன்னிசை நிகழ்ச்சி நம் செவிகளுக்கு விருந்தாக அமைகிறது. இந்த வருடம் ஸ்ரீ ராமகிருஷ்ணமூர்த்தி அவர்கள் தன் இசையால் பக்தர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். ஸ்ரீ ஆர்.கே. ஸ்ரீராம்குமாரின் வயலின் இசையும், ஸ்ரீ என்.மனோஜ் சிவாவின் மிருதங்கமும் மேலும் மெருகூட்டின.
மாலையில் இன்னிசை நிகழ்ச்சி நம் செவிகளுக்கு விருந்தாக அமைகிறது. இந்த வருடம் ஸ்ரீ ராமகிருஷ்ணமூர்த்தி அவர்கள் தன் இசையால் பக்தர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். ஸ்ரீ ஆர்.கே. ஸ்ரீராம்குமாரின் வயலின் இசையும், ஸ்ரீ என்.மனோஜ் சிவாவின் மிருதங்கமும் மேலும் மெருகூட்டின.
நிரமணி தினத்தன்று புஷ்பாலங்காரத்தில் ஆனந்தமாக அமர்ந்திருக்கும் ஆனந்த விநாயகர் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நிறைந்த அருள் மழை பொழிகிறார்.
Courtesy:
Smt. Malathi Jayaraman, Kumbakonam