top of page

Thirukkannarakovil

பெரும் பாவங்களும் நீங்கும் தலம்

தேவர்களில் இந்திரனும் சந்திரனும் சாபங்கள் பெற்றதாகப் புராணங்கள் மூலம் அறிகிறோம். தேவ சபையில் அரம்பையர்களின் நடனத்தைக் கண்டு கொண்டிருக்கும் வேளையில் அங்கு எழுந்தருளிய துருவாச முனிவரையும் அவர் கொண்டு வந்த சிவ பிரசாதத்தையும் மதிக்காததால் முனிவரது சாபத்தைப் பெற்றான் என்று திருவிளையாடல் புராணம் கூறும். மற்றொரு சமயம் கௌதம முனிவரது துணைவியாரான அகலிகையை விரும்பியதால் உடல் முழுதும் கண்களாகுமாறு சபிக்கப்பட்டான். கல்லாக மாறிய அகலிகை இராமபிரானது பாதம் பெற்றுப் பழைய உருவை மீண்டும் பெற்றாள் என்று இராமாயணம் கூறுகிறது. இப்பாவத்தைச் செய்த தேவேந்திரன் எவ்வாறு சாப விமோசனம் பெற்றான் என்று அறிய வேண்டாமா?

தேவ சபையில் முனிவர் அளித்த சிவ பிரசாதத்தை அருகிலிருந்த ஐராவதம் என்ற தனது யானையின் மத்தகத்தின் மீது இந்திரன் வைத்தவுடன், அந்த யானை அதனைத் தனது காலால் தரையில் தேய்த்தது. இதனால் வெகுண்ட துருவாசர், இந்திரன் தனது பதவியை இழக்குமாறும், அவனது யானை, காட்டானையாக மாறுமாறும் சபித்தார். திருவெண்காட்டை அடைந்து தவம் செய்த ஐராவதம், பின்னர் மதுரையை அடைந்து தவமியற்றவே, அதனால் மகிழ்ந்த பெருமான் அந்த யானைக்குப் பழைய உருவம் வருமாறு அருளினார்.

கௌதம முனிவரின் சாபத்தால் பீடிக்கப்பட்ட தேவேந்திரன் இத்தலத்தை வந்தடைந்து தவம் செய்தான். அதன் பயனாக அவனது உடலில் இருந்த ஆயிரம் யோனிகளும் ஆயிரம் கண்களாக மாறின. அதனால் இறைவனுக்குக் கண்ணாயிர நாதர் என்ற நாமம் வந்தது. இவ்வாறு இந்திரன் வழிபட்ட திருக் கண்ணார் கோயில் என்ற தலத்தை நாம் இப்போது கண்ணாரக் கண்டு களிக்கிறோம்.

தலத்தின் இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் செல்லும் பாதையில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சுமார் மூன்று கி.மீ. முன்பாக அமைந்துள்ள கதிராமங்கலம் என்ற இடத்திலிருந்து குறுமாணக்குடி என்ற ஊர் செல்வதற்கான கைகாட்டி உள்ளது.கிழக்கு நோக்கிச் செல்லும் அப்பாதையில் திரும்பி சுமார் மூன்று கி. மீ. பயணித்தால் குறுமாணக்குடி என்று தற்போது வழங்கப்படும் திருக்கண்ணார் கோயிலை அடையலாம்.

மகாபலி என்ற மன்னனை வெல்லுமாறு தேவர்கள் வேண்ட, திருமால் வாமன அவதாரம் எடுத்தார். குறு மாண் ( குள்ளமான பிரமச்சாரி) வடிவில் தோன்றி, மாபலியிடம் சென்று மூவடி மண் யாசித்தார். தனது குருவான சுக்கிராச்சாரியார் தடுத்தும் கேளாமல் மூன்றடி மண் தருவதாக வாக்களித்தான். அப்போது வாமனர் , திரிவிக்கிரம வடிவெடுத்து, மண்ணை ஓர் அடியாலும், விண்ணை ஓர் அடியாலும் அளந்தார்.மூன்றாவது அடியாக மாவலியின் முடி மீது வைத்தார். இவ்வாறு குறு மாண் வடிவில் வந்த திருமால் வழிபட்ட தலம் இக் கண்ணார் கோயிலாகும். அதனால் தான் இத்தலத்திற்குக் குறு மாணக்குடி என்று பெயர் வந்தது. இக்கோயிலிலுள்ள ராஜ ராஜ சோழ மன்னரின் கல்வெட்டில் தலப்பெயர், குறு வாணியக்குடி என உள்ளது. இவ்வரலாற்றை, இத்தலத்தின் மீது திருஞான சம்பந்தர் பாடியருளிய தேவாரத் திருப் பதிகத்தில் வரும் பின்வரும் பாடலால் அறியலாம்.

மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரைச்

செறு மாவலி பால் சென்று உலகெலாம் அளவிட்ட

குறு மாண் உருவன் தற் குறியாகக் கொண்டாடும்

கறு மாகண்டன் மேயது கண்ணார் கோயிலே.

மேலும், இந்திரன் வழிபட்ட வரலாற்றுச் செய்தியையும் சம்பந்தரின் பதிகம் நமக்கு உணர்த்துகிறது:

முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம்

பின் ஒரு நாள் அவ்விண்ணவர் ஏத்தப் பெயர்வெய்தித்

தன்னருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர்

கன்னியர் நாளும் துன்னமர் கண்ணார் கோயிலே.

என்பது அப்பாடல்.

ஆலய அமைப்பு: கிழக்கு நோக்கிய அழகிய ஆலயம். மதில் சுவர்களால் சூழப்பெற்றுள்ளது. மண்ணியாற்றின் வளம் சேர்க்கும் ஊர். கோயிலுக்கு எதிரில் அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. நாட்டுக்கோட்டை நகரத்தார் திருப்பணி செய்துள்ளனர். திருக்குளத்தையும் சீரமைத்துள்ளனர். படிக்கட்டருகிலுள்ள விநாயகர் ஆலயச் சுவற்றில் திருக்குளப் புனரமைப்பு செய்த கல்வெட்டை அமைத்துள்ளனர்.

ஆலய முகப்பில் ராஜ கோபுரம் இல்லை. ரிஷபாரூடரின் சுதைச் சிற்பம் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும், விநாயகர், முருகன் ஆகிய மூர்த்திகள் தங்களது வாகனங்களில் வீற்றிருக்கும் சுதைச் சிற்பங்கள் உள்ளன. சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அம்பிகையின் சன்னது தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. இந்திரனுக்கு ஆயிரம் கண் அருளியபடியால் பெருமானுக்குக் கண்ணாயிர நாதர் என்றும் அம்பிகைக்கு முருகு வளர் கோதை என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

இவ்வளவு புராணச் சிறப்புக்களைக் கொண்ட இந்தத் தலத்தைத் தேவாரப் பாடல் பெற்ற தல யாத்திரை செய்பவர்களே பெரும்பாலும் தரிசிக்க வருகிறார்கள். தீராத பாவங்களும் தீர்க்கும் கோயில் என்று ஜோதிடர்கள் சொன்னால் தான் மக்கள் வருவார்களோ என்னவோ! பாவம் தீரும் காலம் வந்தால் தான் வருவார்கள் போலும். நாம் அறியோம். நவக்கிரகத் தல யாத்திரையாக வைதீஸ்வரன் கோயில் வருவோர் அநேகர் உளர். அதேபோல் வைத்திய நாத சுவாமியைக் குல தெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் ஏராளம். இவர்கள் எல்லாம் வைதீஸ்வரன் கோயிலுக்கு வரும்போது இது போன்ற கோயில்களைத் தரிசிக்க வரலாம். பிறருக்கும் எடுத்துச் சொல்லலாம். இதனால் அர்ச்சகருக்கும் உபகாரமாக இருக்கும். கோயில்களும் பொலிவடையும். இனியாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம். கண்ணாயிர நாதரைப் பிரார்த்திப்போம்.

சுவாமியும் அம்பாளும் யாகசாலைக்கு எழுந்தருளி சோமாசி மாறருக்கும் சுந்தரருக்கும் காக்ஷி கொடுத்தருளுகின்றனர்.

Article Courtesy:

திரு சேகர் வெங்கட்ராமன்,

சென்னை.

Thanks to Smt. Malathi Jayaraman, Kumbakonam for sharing the article details.

150 views0 comments
bottom of page