மாந்தை
கும்பகோணம் காரைக்கால் சாலையில் கும்பகோணம் சாலையில் கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ தொலைவில், பாலையூருக்குப் பக்கத்தில் மாந்தை கிராமம் உள்ளது. ஒரு சமயம் பாரவதி தேவிக்கும், ஸ்ரீ பரமேஸ்வரனுக்கும் ஏற்பட்ட சிறு பிணக்கு காரணமாக ஈசன் உமாதேவியை பசுவாக சபித்த காரணத்தினால் பார்வதி தேவியாரும் தனக்கென்று ஒரு பசுக் கூட்டத்தை சேர்த்துக்கொண்டு தென்னாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் சஞ்சரித்து ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நிகழ்ச்சியை பக்தர்களுக்கு காட்டி வந்து கொண்டிருந்தாள். சக்தி சொரூபியான பார்வதி தேவி ஈஸ்வரனிடம் சேர்ந்து இல்லாததால் உலக மக்கள், தங்களுக்குச் சக்தி இல்லாமல் ஸ்தம்பித்தனர். இதைக்கண்ட தேவர்கள் மகாவிஷ்ணுவான எம்பெருமானிடம் முறையிட விஷ்ணுவும் அதை ஏற்றுக்கொண்டு அபயமளிக்க காவிரி கிளை நதியான நடன காவேரியின் (நாட்டாறு) தென்கரையில் நவநீத கிருஷ்ணனாக வந்து தனக்கு ஒரு பசுமந்தையைச் சேர்த்துக்கொண்டு அங்குள்ள மாடு மேய்ப்பவர்களுடன் சேர்ந்துகொண்டார். தன் சகோதரியான பார்வதி தேவியும் பசுமந்தையுடன் வருவதைக் கண்டு, எதிர்கொண்டு அழைத்தார். பிறகு தத்தம் பசுமந்தைகளுடன் ஒன்றாக சேர்ந்தனர். அச்சமயம் பரமேஸ்வரன் தன் ஞான திருஷ்டியால் பார்வதி தேவி எங்கிருக்கிறாள் என்று கண்டறிந்தார். அந்த இடம் அம்பாளை(ஸ்ரீ) கண்டறிந்த இடமானதால் ஸ்ரீகண்டபுரம் எனவும், பார்வதி தேவி பசுவாக தன் மந்தையுடன் புல் மேய்ந்த இடம் புல்லூர் என்றாகி தற்சமயம் பில்லூர் என்று அழைக்கப்படுகிறது. இப்படி பசு மந்தைகளுடன் வந்துகொண்டிருக்கும் சமயம் பார்வதி தேவியாகிய பசுமாடு ஒரு மேடான மண்முட்டின் மீது கோபத்துடனும், அதே சமயம் சந்தோஷத்துடனும் ஏதோவொரு எண்ணத்தில் திரும்ப திரும்ப தனது கொம்பால் முட்டி தள்ளியபோது அங்கு ஒரு லிங்கம் தென்பட்டது. அதே சமயம் சிவபெருமான் அந்த இடத்தில் ரிஷபாரூடராய் காட்சி கொடுத்து தானும் மந்தையில் சேர்ந்துகொண்டவுடன் தேவர்கள் விருப்பப்படி, பூவுலகிற்கு சுபிக்ஷம் கிடைத்தது. அந்த இடமே மந்தை என்று அழைக்கப்பட்டு பின்னாளில் மருவி மாந்தை என்று ஆனது. ஈசன் ரிஷபாரூடராய் காட்சி அளித்த இடமே பிற்காலத்தில் சிவன் கோவில் ஆனது.
இறைவன் ஸ்ரீசுந்தரேஸ்வரர், இறைவி ஸ்ரீமீனாக்ஷி. இறைவனின் மறுபெயர் ஸ்ரீசௌந்தரேஸ்வரர் இறைவி ஸ்ரீஅபிராமி.
ஸ்ரீகிருஷ்ணனாக வந்த மஹா விஷ்ணுவும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாளாக இங்கு கோவில் கொண்டுள்ளார். ஊருக்குள் நுழைந்தவுடன் மங்கள விநாயகர் நம்மை வரவேற்கிறார்.
அந்த இடத்தில் மாந்தை அக்ரஹாரம் ஆரம்பமாகிறது. சிறிய கிராம வீதி மிகவும் அழகாக உள்ளது. அக்ரஹாரம் முடிவில் கிழக்கு முகமாக ரம்மியமான ஸ்ரீநிவாச பெருமாள் தன்னிடம் வந்து சேவிக்கும் பக்தர்களுக்கு அருள் மழை பொழிகிறார். மாட்டு மந்தையை மேய்த்து வந்தவர் ஸ்ரீநிவாசப் பெருமாளாக உள்ளார். உற்சவர் ஸ்ரீவெங்கடாஜலபதியும் உள்ளார். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இங்கு வந்ததன் அடையாளமாக ஸ்ரீகிருஷ்ணர் நவநீதகிருஷ்ணராக கொள்ளை அழகாக காட்சி அளிக்கிறார். இந்த நவநீத கிருஷ்ணன் வருடாவருடம் மாட்டுப்பொங்கல் அன்று மாலை அலங்காரம் செய்துகொண்டு வீதியுலா புறப்படுகிறார். ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று நடைபெறும் இந்த உற்சவம் அம்பாள் பசுவாக மாறிய தலபுராணத்துடன் தொடர்புடையது. ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீகிருஷ்ணன் புறப்பட்டவுடன் கூடவே சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் பசுக்களையும் ஆடு மாடுகளையும் ஓட்டி வருகின்றனர். பசுக்கூட்டங்களுடனும், கிராம மக்களுடனும் புறப்பட்டு வீதியுலாவாகச் சென்று கிழக்கே சுமார் 1கி.மீ தொலைவில் உள்ள சிவன் கோவில் வரை செல்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணன் சிவாலயத்துக்கு அருகில் சென்றதும் கிருஷ்ணனை கீழே இறக்கி வைத்து அங்கு பொங்கல் முதலானவைகளை நிவேதனம் செய்து தீபாராதனைகள் செய்யப்படுகின்றன. சிவன் கோயில் சிவாச்சாரியார் ஆலய மரியாதைகளோடு ஸ்ரீநவநீதகிருஷ்ணனை எதிர்கொண்டு அழைத்துவிட்டு, பதில் மரியாதைகளையும் பெற்றுக்கொள்கிறார். மாந்தை கிரமத்தில் நடக்கும் இந்த உற்சவம் சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. கிராம மக்களும் எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒன்றுபட்டு அந்த இன்பத்தில் திளைப்பது சமுதாயத்தின் ஒற்றுமையை பலப்படுத்துவதாக உள்ளது. ஒற்றுமையை வளர்க்கும் நோக்கத்துடன்தான் முற்காலத்தில் ஆலயத்திருவிழாக்களும், தேரோட்டங்களும் நாடு முழுவதும் நடந்து வந்தன. நமது முன்னோர்கள் சமய வாழ்வோடு ஆலய வழிபாட்டை சேர்த்து சமுதாய நலத்தையும் ஒற்றுமையும் இணைத்துள்ளர்கள். காலத்தின் கட்டாயத்தால் சில கிராமங்களில் வழக்கமான உற்சவங்கள் மறைந்துவிட்டன. மறைந்துவிட்ட விழாக்கள் மீண்டும் தொடங்கப்பட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைத்து அவைகளை நடத்திவந்தால் சமய சச்சரவுகள் கூட மறையும். பாடல் பெற்ற தலமான அம்பர் மாகாளத்தில் சோமாசிமாற நாயனார் செய்த யாகத்தில் ஆரூர் தியாகராஜர் புலையன் வேடத்தில் வந்த நிகழ்ச்சி இன்றும் திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெறுவதுபோல் இங்கு மாந்தையிலும் ஸ்ரீகிருஷ்ணன் அனைத்து மக்களுடன் மாடு மேய்த்த வரலாறு மாட்டுப்பொங்கல் அன்று விழாவாக நடைபெறுகிறது.
மார்கழி மாதம் கூடாரவல்லி அன்று இங்கு மணமாகாத பெண்கள் தாயாருக்கு பூஜை செய்து பாடல்கள் பாடி மகிழ்ந்து பலன் பெற்றுள்ளனர். நவராத்திரி, ஸ்ரீராம நவமி, வைகுண்ட ஏகாதசி சமயங்களில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் உள்ள சூர்ய தீர்த்தம் என்ற திருக்குளத்தில் நீராடினால் அனைத்து செல்வங்களும் உண்டாகும் என்று காலங்காலமாக பெரியவர்கள் கூறி வருகின்றனர்.
அய்யனார் கோவில்:
மாந்தை கிராம எல்லையில் நாட்டாற்றங்கரையில் மிகவும் சக்தி வாய்ந்த பூர்ண புஷ்கலாம்பா சமேத ஸ்ரீஹரிஹர புத்ர அய்யனார் கோயில் கொண்டுள்ளார். இந்த மாந்தை அய்யனார் பலருக்கு குல தெய்வமாக இருப்பதால் பலர் நேர்த்திக் கடன்களை செய்து வருகிறார்கள். இந்த அய்யனார் கோயிலுக்கு பால் காவடி எடுத்து பிரார்த்தனை செய்கிறார்கள். கோயிலுக்கு எதிரில் உள்ள புற்றில் வாழும் பாம்பு உள்ளது என்று கோயிலுக்கு வருபவர்கள் பால் வார்த்து செல்கின்றனர்.
இன்றளவும் மாந்தை கிராமத்து மக்கள் உலகத்தில் எந்தக் கோடியில் இருந்தாலும் கோவில்களில் வழிபாடு நடத்த தங்கள் கிராமத்துக்கு வந்து சிறப்பாக நிறைவேற்றத் தவறுவதில்லை.
18 வாத்யம கிராமங்களுக்கே உரிய அமிச்சாள் படையல் என்ற தேவி வழிபாட்டைப்பற்றி மாந்தை கிராமத்து அந்தணப் பெண்மணிகள் விளக்குவதைக் காண்போம். இவ்வுலகத்தை அமைத்தாள் படையல் என்பது அமிச்சாள் படையல் என்று மருவியிருக்கலாம்.
Courtesy:
Compilation by - Smt. Malathi Jayaramani, Kumbakonam
Source:Kumbabishega Malar, Madhyama Dharma Samaj