"யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரைதானே."
என்று திருமூலர் இறைவனுக்கு அடுத்தபடியாக பசுவைக் குறிப்பிடுகிறார். 'கோரக்ஷணமே பூரக்ஷணம் என்கிறது வேதம். மகா பாரதத்தில் பீஷ்மர் தர்மத்தை உபதேசிக்கும்போது பசுவைத்தானம் அளித்தால் பெரும்பாவம் கூட நீங்கும் என்று கோதானம் பற்றி உயர்வாகக் கூறுகிறார். "எந்த நாட்டில் பசுக்கள் தங்களுக்கு இன்னல் நேருமோ என்ற பயமில்லாமல் நிம்மதியாக மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறதோ அந்த நாட்டில் பாவம் என்பதே இருக்காது. அந்த நாடே ஒளியுடையதாய் பிரகாசிக்கும்" என்று சியவன மகரிஷி கூறியுள்ளார்.
"அம்மா என்று குரல் கொடுப்பது பசு. ஆனால் அந்தப் பசு நமக்கெல்லாம் அம்மாவாக இருக்கிறது. நாம் குழந்தையாயிருந்தபோது நம்மைப் பெற்றெடுத்த தாயார் நமக்குப் பாலூட்டி உயிரூட்டினாள். அதுபோல நமக்கு வயதானபின்னரும் பசு தரும் பாலும், அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், நெய் ஆகியவையும் நம் ஆகாரத்தில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. நம்முடைய ஆயுசின் ஆரம்பத்தில் ஒரு குறுகிய கால கட்டத்தில் மாத்திரம் நம்மைப் பெற்றெடுத்த தாய் பால் தருகிறாள் என்றால் பசுவோ நம்முடைய ஆயுள் காலம் பூராவும் பால் தருகிறது. அதனால்தான் உறவுகளிலேயே உத்தமமான தாய்க்கு ஈடாக பசுவை 'கோமாதா' என்கிறோம். பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனக மாதா என்போம். அதே மாதிரி கோமாதாவும் இருக்கிறாள். பூமிக்குள் இருந்து காய்கறி, பழம், உலோகங்கள் தரும் தாயை 'பூமாதா' என்கிறோம். மிருகமாகத் தெரிகிற பசு, ஜடமாகத் தெரிகிற பூமி ஆகிய எல்லாவற்றிற்கும் உயிருள்ளதும், அன்பே உருவானதுமான தாயன்பை மாத்ருத்வம் என்னும் தாய் தத்துவத்தைக் கொண்டு நம்முடைய முன்னோர் கோமாதா என்றும், பூமாதா என்றும் சொன்னார்கள்."
என்று காஞ்சி மாமுனிவர் பசு பாதுகாப்பு பற்றி கூறியிருக்கிறார்.
The Cow In Hinduism
The central fact of Hinduism is cow protection. Cow protection to me is one of the most wonderful phenomena in human evolution. It takes the human being beyond this species. The cow to me means the entire sub-human world. Man through the cow is enjoined to realize his identity with all that lives. Why the cow was selected for apotheosis is obvious to me. The cow was in India the best companion. She was the giver of plenty. Not only did she give milk, but she also made agriculture possible….....
Cow protection is the gift of Hinduism to the world. And Hinduism will live so long as there are Hindus to protect the cow…… Hindus will be judged not by their TILAKS, not by the correct chanting of MANTRAS, not by their pilgrimages, not by their most punctilious observances of caste rules, but their ability to protect the cow. (YI, 6-10-1921, p. 36)
என்று நம் தேசப்பிதா மஹாத்மா காந்தி கூறியுள்ளார்.
சுமார் முப்பது ஆண்டுகள் முன் வரை கோமாதா ஒவ்வொரு வீட்டிலும் இன்றியமையாத ஒரு அங்கத்தினராகத் திகழ்ந்தாள். மாட்டுத் தொழுவம் ஒரு பூஜையறையைப்போல் மதிக்கப்பட்ட காலம் அது. கோமாதா இருக்கும் இடத்தில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே வேரூன்றி இருந்தது.
எங்கள் வீட்டில் இருந்த லக்ஷ்மிக்கும் எங்களுக்கும் இருந்த பாசப்பிணைப்பை மறக்கவே முடியாது. வெளியிலிருந்து நான் உள்ளே நுழைந்ததும் கனைத்து என் கவனத்தை ஈர்க்கும். அவள் முகத்தோடு முகம் வைத்து இதமாக கழுத்து வருடி பகிர்ந்து கொண்ட கதைகள் கணக்கிலடங்கா. புரியாத பௌதிகப்பாடம், ரசித்த ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை... இது போல் இன்னும் ஏராளம். மாட்டுக்கொட்டகையில் உட்கார்ந்து மனப்பாடம் செய்த குறளும், நாலடியாரும் இன்னும் மறக்கவில்லை. இது போல் பல குடும்பங்களில் உற்ற தோழியாக, பெற்ற பிள்ளைகளாக, உடன் பிறப்புகளாக பசுக்கள் வளர்க்கப்பட்டன.
அதன்பின் வேலை நிமித்தமாக நகரங்களில் பலர் இடம் பெயர்ந்ததினால் கறவை மாடுகள் வீட்டில் வளர்ப்பது குறைந்துபோய், இருசக்கர வாகனத்தில் இரண்டு பக்கம் குடங்களும், நீண்ட குவளையும் வைத்து வாசலில் ஒலி செய்து பால் கொடுக்கும் பால்காரரிடம் பால் வாங்கும் பழக்கம் வந்தது. அதிகம் பால் வாங்கினால், "பாப்பா ஊர்லந்து வந்திருக்குதாம்மா?" என்று கனிவோடு விசாரித்து 'கொசுறு' அதிகம் விடும் அன்பில் பால் சில காலம் தித்தித்தது. அதன்பின் வந்ததுதான் இன்று புழக்கத்தில் இருக்கும் 'பாக்கெட் பால்'. இயந்திரமாக நாம் போய் வாங்கிவரும், அல்லது இயந்திரத்தனமாக வாசலில் உள்ள பையில் வந்துவிழும் குளிர்பதனப்படுத்தப்பட்ட பால்.
இப்போது நாம் சாப்பிடும் இந்தப்பால், நம் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியதா என்றால் இல்லை என்றுதான் பதில் கூறவேண்டும். ஏனெனில் அமுதமான பாலை அளித்துவந்த நம் நாட்டு மாடுகள் குறைந்து, கறவை அதிகம் என்ற ஒரே காரணத்திற்காக வெளி நாட்டு மாடுகள் உள்ளே நுழைந்தன. 1970களில், பால் உற்பத்தி அதிகம் உள்ள நாடாக இந்தியா மாறவேண்டும் என்பதற்காக வெளிநாட்டு மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டன. கலப்பின மாடுகள் அதிகமாயின.
டாக்டர் கெய்த் உட்ஃபோர்ட் என்பவர் "Devil in the Milk: Illness, Health and the Politics of A1 and A2 Milk" என்று ஹோல்ஸ்டின் ப்ரீசியன், ஜெர்சி, ரெட்டேன் போன்ற கலப்பின மாட்டுப் பாலின் தீமைகளைபற்றி ஒரு புத்தகமே வெளியிட்டிருக்கிறார்.
தொடரும்...
Reference:
http://www.dinamalar.com/news_detail.asp?id=386453&Print=1w
http://www.mkgandhi.org/momgandhi/chap81.htm
Thanks to Smt. Malathi Jayaraman, Kumbakonam for compiling this article.