Reposting it from Amritha Vahini Google group.
உ
சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(தலத்தொடர்.40)*
*சிவ தல அருமைகள்,பெருமைகள் தொடர்.*
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
*சக்கரப்பள்ளி.*
*இறைவன்:*
சக்ரவாகைஸ்வரர்.
*இறைவி:* தேவநாயகி.
*தலமரம்:* வில்வமரம்.
*தீர்த்தம்:*காவிரி ஆறு, காக தீர்த்தம்.
சோழ நாட்டின் காவிரி தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் இத்தலம் 17-வது தலமாகப் போற்றப்படுவனவாகும்.
*இருப்பிடம்:*
மக்கள் வழக்கில் இவ்வூர் ஐயம்பேட்டை என்று வழங்கப்படுகிறது.
இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இவ்வூரை தஞ்சாவூர் ஐயம்பேட்டை என்று கூறுகின்றனர்.
நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே சற்று உள்ளடங்கி கோயில் உள்ளது.
கும்பகோணம் --தஞ்சாவூர் புகை வண்டிப் பாதையில் ஐயம்பேட்டை புகை வண்டி நிலையம் உள்ளது.
*பெயர்க்காரணம்:*
ஊர்ப் பெயர் ஐயம்பேட்டை.
கோவில் இருக்கும் பகுதி சக்கரபள்ளி என்று வழங்குகிறது.
சக்கரவாகக் பறவை வழிபட்ட தலம்.
திருமால் வழிபட்டு சக்ராயுதம் பெற்ற தலம்.
வண்சக்கரம் மால் உறைப்பால் அடிப் போற்றக் கொடுத்தப் பள்ளி என்பது இத்தலப் புராண செய்தி.
*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்*3-ல் ஒரே ஒரு பதிகம் மட்டுமே பாடியுள்ளார்.
*கோவில் அமைப்பு:*
குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
கொடிமரம் இல்லை.
கோயிலில் நுழையவும் வலப்புறமாக அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கிய வண்ணம் இருக்கிறது.
அம்பாள் நின்ற நிலை.
இதைத்தாண்டி உள்ளே சென்றால் மூலவர், வாயில் மண்டபத்தின் முகப்பில் மேலே ரிஷபாரூடர் விநாயகர், வேலவர் உருவங்கள் சுதையாலானதாக அமைக்கப்பட்டுள்ளன.
கருவறைக் கீழ்ப்புறம் கருங்கல்லாலும், மேற்புறம் விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை.
விமானத்தில் அதிக சிற்பங்கள் கிடையாது.
காலனைச் சாடினார் என சம்பந்தர் பாடியிருப்பதால் இக்கோயிலின் தென்புறச் சுவரில் வடக்கு முகமாக நின்ற கோலத்துடன், வலக்கையில் திரிசூலம் கொண்டு விளங்கும் சிவதுர்க்கையும் பசுபதிநாதராக அருள் புரியும் சக்கரவாகேஸ்வரரையும் தரிசிப்பவர்களுக்கு எமபயம் நீங்கி தீர்க்க ஆயுள் கிடைக்கும்.
தென் திசையில் வடக்கு நோக்கி உள்ளாள்.
வலக்கரத்தில் திரிசூலம் தாங்கிய சிவதுர்க்கை, இவளை வழிபடுவோர் எமபயம் நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம்.
துவார பாலகர்களின் அனுமதியுடன் உள்ளே சென்றால் ஈசன், ஆவுடையார் சகித திருசக்கர வடிவில் தரிசனம் தருகிறார்.
திரும்பி வரும் போது வடக்கே பைரவர், சூரியனும், தெற்கே சந்திரனும் காட்சி தருகின்றனர்.
பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் இத்தல நாயகனை வழிபடுவதாக மரபு.
கோவிலுக்கு வெளியே வந்து பிராகாரம் சுற்றுகையில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கியும், தென் கிழக்கில் கிழக்கு நோக்கிய கணபதி சந்நிதியும், மேற்கில் கிழக்கு நோக்கிய வள்ளி, தெய்வானை சமேத மயில் வாகனனும் காட்சி தருகின்றனர்.
கருவறையின் பின் புற சுவரில் லிங்கோத்பவர் உள்ளார்.
இடப்புற பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர் உள்ளார்.
*தல அருமை:*
பிரம்ம தேவன் தனக்கு ஏற்பட்ட சாபத்தின் காரணமாக சக்கரவாகம் என்ற பறவையாக உருக் கொண்டு இத்தலத்தில் தவமிருந்து கோயிலில் தாமரைத் தடாகத்தில் நீராடி சாபம் நீங்கப் பெற்றார்.
திருமால் இத்தலத்தில் திருச்சக்கரவாகேஸ்வரரை வழிபட்டு சக்ராயுதம் பெற்றார்.
இக்காரணத்தினால் இத்தலம் திருச்சக்கரப்பள்ளி எனப் பெயர் பெற்றது.
தஞ்சை மாவட்டத்திலுள்ள சப்த ஸ்தலங்களுள் இரண்டாவதாக கருதப்படுவது திருச்சக்கரப்பள்ளி எனும் சக்கரமங்கை திருத்தலம்.
சப்த மாதர்களில் ஒருவரான பிராமி பூசித்த தலம்.
குபேரன் இக்கோவில் இறைவனை வழிபட்டு, இழந்த குபேர பட்டணத்தையும், சங்க நிதி, பதும நிதி பெற்றான். என தலபுராணம் கூறுகிறது.
இந்திரன் குமாரரான ஜெயந்தனும், தேவர்களும் பூசித்த தலம்.
*தல பெருமை:*
கோவிலின் ஆகம அமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது.
கோவிலுள் நுழைந்ததும் ஓம்கார முதல்வன் கணபதி இருப்பதற்குப் பதிலாக சக்கரதேவநாயகி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருவது, தென்திசை அதிபதியான எமனை அன்னை தன் கட்டுக்குள் வைத்திருப்பது போல் உள்ளது.
அன்னையின் முகத்திற்கு நேராக தென்திசையில் அமைந்துள்ளது குங்கிலிய மகா குண்டம்.
இந்தக் குண்டத்தில் சதா எரியும் நெருப்பில் குங்கிலியம் போட்டு வழிபட்டால் மங்கையர் மாங்கல்ய பலம் பெறுவர்.
ஆண்களுக்கு எமபயம் நீங்கும்.
சண்டிகேஸ்வரருக்கு எதிரில் எமபயம் நீக்கும் வலதுகர திரிசூலி சிவதுர்க்கை அமைந்துள்ளது.
இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.
நவக்கிரக நாயகனாகவே சக்கரவாகேஸ்வரர் விளங்குவதால் இங்கு நவக்கிரக சந்நிதி இல்லை.
*கல்வெட்டுக்கள்:*
கல்வெட்டுக்களில், இவ்வூர் குலோத்துங்க சோழ வளநாட்டு, விளநாட்டு, இராசேந்திர சோழ சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12- வது ஆண்டு கல்வெட்டு, இவ்வூர்ச் சபைக்குரிய சில விதிகளைக் கூறுகின்றது.
நாற்பது வயதுக்கும் மேற்பட்டவரே ஊர்ச் சபை உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுக்குள் உறுப்பினர்க்கு நிற்காதவராக இருத்தல் வேண்டுமென்றும் ஊர்ச் சபை விதிகள் கூறப்பட்டுள்ளன.
*திருவிழாக்கள்:*
பங்குனி உத்திரம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழித் திருவாதிரை.
*பூஜை:*
சிவாகம முறையில் நான்கு கால பூஜை.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு8.30 மணி வரை.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில்,
ஐயம்பேட்டை அஞ்சல்,
தஞ்சை மாவட்டம் -614 201
*தொடர்புக்கு:*
குமார் குருக்கள். 04374-292971
97513 51212....93454 49743
திருச்சிற்றம்பலம்.