top of page

Thirupaalathurai temple

Reposting it from Amritha Vahini Google group.

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.

*கோவை.கு.கருப்பசாமி.*

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*(36)*

*சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.*

(நேரில் சென்று தரிசித்ததைப் போல......)

★★★★★★★★★★★★★★★★★★★★★

*திருப்பாலைத்துறை.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*இறைவன்:* பாலைவனேஸ்வரர், பாலைவன நாதர்.

*இறைவி:*தவளவெண்ணகையம்மை.

(தவளாம்பிகை, தவளாம்பாள்.)

*தலமரம்:* பனைமரம், பாலை. (இப்போது இல்லை.)

*தீர்த்தம்:*வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம், எம தீர்த்தம், காவிரி தீர்த்தங்கள்.

சோழ நாட்டில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள128 தலங்களுள் பத்தொன்பதாவது தலமாகப் போற்றப்பெறுகின்றது.

*இருப்பிடம்:*

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் NH 45C தேசீய நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசத்தை அடுத்து இரண்டு கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.

கும்பகோணம் - தஞ்சை இருப்புப் பாதையில் பாபநாசம் நிலையத்தில் இறங்கினால் ஒருஸகி.மீ வடகிழக்காகச் சென்றால் இத்தலத்தை அடையலாம்.

பாபநாசத்திலுள்ள 108 சிவலிங்கக் கோயிலோடு இணைக்கப் பெற்ற கோயில்.

சாலை அருகிலேயே கோவில் உள்ளது.

தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பாபநாசம் வர பேருந்து வசதிகள் உண்டு.

*பெயர்க்காரணம்:*

கலியுகத்தில் பாலைமர வனமாக இருந்ததினால் இப்பெயர் ஏற்பட்டது.

*தலப்பெருமை:* தாருகாவனத்து முனிவர்கள், இறைவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணி, தீயவேள்வி செய்து புலியை வரவழைத்தனர்.

அதை இறைவன் மீது அவர்கள் ஏவ, இறைவனும் அப்புலியின் தோலை உரித்து அதன் தோலை இடையில் ஆடையால உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலம் என்ற சிறப்பை திருப்பாலைத்துறை பெற்றுள்ளது.

இராமர், லட்சுமணன், சீதை, கெளமியர், அருச்சுனன் ஆகியோர் வழிபட்ட தலம்.

*கோவில் அமைப்பு:*

குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைப்பைக் கொண்டது.

ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கி இருப்பதைப் பார்த்ததும் *"சிவ சிவா"* என்று மோழிந்து வணங்கிக் கொள்கிறோம்.

இரண்டு பிரகாரங்கள் இருக்கின்றன.

கோபுர வாயிலின் முகப்புத் தூண்களில் பிட்டுக்கு மண்சுமந்த வரலாறுகள் சிற்பங்களாக அமைத்திருக்கிறார்கள்.

ராஜகோபுரத்தில் சிற்பங்கள் இருக்க வில்லை.

கீழ்ப்பகுதி கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கற் கட்டமைப்பிலும் காணப்படுகிறது.

உள்ளே நுழைந்ததும் நம் கண்கள் கொடிமரத்தைத் தேடியது.

இத்தலத்தில் கொடிமரமில்லை என தெரிந்து கொண்டோம்.

விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபம் அனைவரையும் வணங்கிக் கொள்கிறோம்.

வெளிப் பிரகாகாரத்தின் வலதுபுறம் நாம் பார்க்க நேர்ந்தது. அங்கே பெரிய பெரிய செங்கல்களால் உருளையான வடிவத்தில் கட்டப்பட்டிருப்பதைக் கண்டோம்.

அக்கட்டிடமானது என்னது? என வினவிய போது, நெல் சேமித்து வைக்கக்கூடிய நெற்களஞ்சியம் எனச் சொல்லத்ஸ தெரிந்து கொண்டோம்.

அந்தக் கட்டிடக் காட்சி

தான் வட்ட வடிவில் கூம்பு முனையுடன் கட்டப்பட்டுள்ள இக்களஞ்சியம் சுமார் 3000 கலம் நெல் கொட்டி வைக்கும் அளவு பெரியதானது எனக் கூறினார்கள்.

இவ்வளவு அதிகமான நெல் வருவாயைக் கொண்டதாக இக்கோயில் விளங்கியதென்பது இப்போது நமக்கு இதனால் தெரிய வருகின்றது.

இன்று இது பயன்படுத்தப்படாமல் வைத்திருக்கிறார்கள்.

உள்ளே இருக்கும் கோபுரம் மூன்று மூன்று நிலைகளுடன் காட்சி தர வணங்கிக் கொண்டோம்.

பின் வலப்புறமாக வர, விநாயகர், சோமாஸ்கந்தர், முருகர், வசிஷ்டர், மகாலட்சுமி, மலையத்துவசன், பார்த்திபன் ஆகியோர்களால் வழிபட்ட லிங்கம் இருக்க வணங்கிக் கொண்டு நகர்கிறோம்.

அறுபத்து மூவர் மூலவத் திருமேனிகள், நடராச சபை, காலபைரவர், சூரியன் சந்நிதிகளும் இருப்பதைக் கண்டு தொடர்ச்சியாக கைதொழுகிறோம்.

வெளிப் பிரகாரத்தில் இடதுபுறம் அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக, சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளபடி உள்ளது.

இதுவும் கிழக்கு நோக்கிய சந்நிதியே. அம்பாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.

சுவாமி அம்பாள் இருவரும் கல்யாண கோலத்தில் விளங்குகின்றனர்.

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், ஊர்த்துவ தாண்டவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

சண்டேஸ்வரர் சந்நிதியும் தனியே உள்ளது.

சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அபம்பாள் சந்நிதி அமைந்துள்ளதால் இத்தலம் திருமணத் தலமாக விளங்குகிறது. இப்பகுதி மக்கள் திருமண நிச்சயதார்த்தம், திருமணம் ஆகியவற்றை இக்கோவிலில் நடத்துகின்றனர்.

*தேவாரம் பாடியவர்கள்:*

*அப்பர்*- 5- ல் ஒரே ஒரு பதிகம் மட்டுமே பாடியுள்ளார்.

*மாணிக்கவாசகர்:* கீர்த்தித் திருஅகவல் அருளியிருக்கிறார்.

திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான் இப்பதிகம் 5-ஆம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தின் நடுப்பாடலாக......

உள்ள விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும் என்று தொடங்கும் பாடலின் நடுவில் சூட்சும பஞ்சாட்சரம் (சிவாய) விளங்குகிறது.

இச்சிறப்பினையுடைய பதிகத்திற்கு உரிய தலம் இதுவேயாகும்.

*நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக் கோல மாமதி கங்கையுங் கூட்டினார் சூல மான்மழு ஏந்திச் சுடர்முடிப் பால்நெய் ஆடுவர் பாலைத் துறையரே.*

*கவள மா களிற்றின் உரி போர்த்தவர் தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர் திவள வானவர் போற்றித் திசைதொழும் பவள மேனியர் பாலைத் துறையரே.*

*மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும் பொன்னி நீர்மூழ்கிப் போற்றி அடிதொழ மன்னி நான்மறை யோடு பல்கீதமும் பன்னினார் அவர் பாலைத் துறையரே.*

*நீடு காடு இடமாய் நின்ற பேய்க்கணங் கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே ஆடினார் அழகாகிய நான்மறை பாடினார் அவர் பாலைத் துறையரே.*

*சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர் பித்தர் நான்மறை வேதியர் பேணிய அத்தனே நமை யாளுடை யாயெனும் பத்தர் கட்கு அன்பர் பாலைத் துறையரே.*

*விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும் மண்ணினார் மறவாது சிவாய என்று எண்ணினார்க்கு இடமா எழில் வானகம் பண்ணினார் அவர் பாலைத் துறையரே.*

*குரவனார் கொடு கொட்டியுங் கொக்கரை விரவினார் பண் கெழுமிய வீணையும் மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம் பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே.*

*தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து அடரும் போது அரனாய் அருள் செய்பவர் கடலின் நஞ்சணி கண்டர் கடிபுனற் படரும் செஞ்சடைப் பாலைத் துறையரே.*

*மேகந் தோய்பிறை சூடுவர் மேகலை நாகந் தோய்ந்த அரையினர் நல்லியற் போகந் தோய்ந்த புணர்முலை மங்கையோர் பாகந் தோய்ந்தவர் பாலைத் துறையரே.*

*வெங்கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர் அங்கணார் அடியார்க்கு அருள் நல்குவர் செங்கண் மால் அயன் தேடற்கு அரியவர் பைங்கண் ஏற்றினர் பாலைத் துறையரே.*

*உரத்தினால் அரக்கன்ன் உயர் மாமலை நெருக்கினானை நெரித்து அவன் பாடலும் இரக்கமா அருள் செய்த பாலைத்துறைக் கரத்தினால் தொழவார் வினை ஓயுமே.*

திருப்பாலைத்துறை இறைவனை கரங்களால் தொழுவார் வினை யாவும் நீங்கும் என்று வாகீசப் பெருமான் தனது 10-வது பாடலில் குறிப்பிடுகிறார்.

*தல அருமை:*

திருமால், பிரமன், திசைப்பாலகர்கள், வசிட்டர், தேவர்கள் வழிபட்ட தலம்.

பாண்டவர்களின் வனவாச காலத்தில், தெளமிய முனிவரின் ஆலோசனைப்படி அர்ச்சுனன் இங்கு வந்து, வழிபட்டு, வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்தான் என சொல்லப்படுகிறது.

தாருகாவனத்து முனிவர்கள், சிவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க, தீயவேள்வி செய்து, புலியை வரவழைத்து, அப்புலியைச் சிவன்மீது ஏவ, சிவனோ அப்புலியின் முறுக்கித் தோலை உரித்து இடையில் உடுத்திக் கொண்டது இத்தலத்தில்.

*பாண்டிய மன்னனுக்குச் சாப விமோசனம்:*

மலையத்துவசன் என்னும் மன்னனானவன் ஒரு சமயம் பாண்டிய நாட்டின் புனித நதியான தாமிரபரணியில் நீராடிவிட்டு, அந்நதிக்கரையோரத்திலிருந்த காலவ முனிவரின் ஆசிரமத்துக்குள் சென்றான்.

அம்மன்னனை வரவேற்று உபசரித்த முனிவர், மன்னனிடம் நாட்டின் நடப்பு நிலைகளை விசாரித்து, நல்லாட்சி புரிய உபாயங்களை கூறினார்.

ஆனால், தனது ஊழ்வினைப் பயன் காரணமாக அரசனுக்கு அறிவுறை கூறும் தகுதி ஆண்டிகளுக்கு இல்லை என வாதிட்டான்.

மன்னன் இவ்விதம் கூறியதும், கோபங் கொண்ட முனிவர், பாண்டிய மன்னனைப் பார்த்து.... *நீ கரடியாகப் போகக் கடவாய்"* என சபித்து விட்டார்.

மன்னனின் மனைவியான பத்மாவதி, முனிவரைப் பணிந்து தனது கணவனை மன்னித்து சாப விமோசனம் கிடைக்க வழியருளுமாறு கேட்டாள்.

பத்மாவதியின் பணிதலுக்கு மனமிரங்கிய முனிவர், திருப்பாலைத்துறை சென்று அங்கிருக்கும் இறைவனை வணங்க, அதன் மூலம் சாபக்குறை நீங்கப்படும் என விமோசனத்துக்கு வழிகோலினார் முனிவர்.

கரடி உருவத்திலிருந்த மன்னன், பாலைவனநாதரை பக்தியோடு பூஜித்து வரலானான்.

ஒருநாள், பாலை மரங்கள் நிறைந்திருந்த இவ்வனத்திற்குள் வேட்டையாடவந்த வேடனொருவன், கரடி உருவிலிருந்த மன்னன் மீது அம்பை எய்தான்.

வலி தாங்காது ஓடிய கரடிமன்னன் காவிரி நதியில் குதிக்க, ஈசன் கருணையால் சாபம் நீங்கி தனது சுய உருவைப் பெற்றான்.

*கல்வெட்டுக்கள்:*

பழமைக்குச் சான்றாக விளங்கும் இக்கோயிலில் முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் ராஜராஜன் மற்றும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தாலான பநினொன்று கல்வெட்டுக்கள் உள்ளன.

இக்கல்வெட்டுக்களில் இறைவனின் திருநாமம் திருப்பாலைத்துறை மகாதேவர் என்று குறித்துப் பொறித்திருக்கின்றனர்.

*பரிகாரங்கள்:*

திருமணத்தடைகள் நீங்கவும், புத்திர பாக்கியம் ஏற்படவும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், விதி வசத்தால் ஏற்பட்ட வீண் பழி நீங்கவும் வெள்ளிக் கிழமைகளில் இங்கு வந்து நெய் தீபம் ஏற்றி இறைவனையும், இறைவியையும் தொழ, பலன் கிடைக்கும் பரிகாரத் தலம்.

*பிற செய்தி:*

திருநல்லூரைச் சேர்ந்த சப்த ஸ்தானத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது.

வேதங்களின் நடுவணதாகிய யஜுர் வேதத்தின் நடுவன் பஞ்சாக்ஷரம் விளங்குவது போல, திருமுறைகளில் தேவாரத்துள் நடுவணதாகிய அப்பர் தேவாரத்துள், குறுந்தொகையில், நடுப்பதிகமாகிய ஐம்பத்தொன்றாவது பதிகம் இத்தலத்தின் பதிகமாகும்.

இப்பதிகத்தின் நடுப்பாடலாக உள்ள *விண்ணினார் பணிந்து* எனத் தொடங்கும் பாடலின் நடுவில் சூட்சும பஞ்சாக்ஷரம் விளங்குகின்றது.

இச்சிறப்பினையுடைய (பதிகத்திற்கு) உரியதான தலம் இதுவாகும்.

*திருவிழாக்கள்:*

மகாசிவவராத்திரி, மார்கழித் திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

*பூஜை:*

காமீக, ஆகம முறையில் நான்கு கால பூஜை.

காலை 9.00 மணி முதல், பகல் 12.00 மணி வரை,

மாலை 5.30 மணி முதல், இரவு 8.00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*

அருள்மிகு, பாலைவனேஸ்வரர் திருக்கோயில்,

திருப்பாலைத்துறை,

பாபநாசம் வட்டம்,

தஞ்சை மாவட்டம்- 614 205

*தொடர்புக்கு:*

T.ராமலிங்க குருக்கள்.

94435 24410

திருச்சிற்றம்பலம்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

64 views0 comments
bottom of page