top of page

Tiruvaikaavoor Vilvavaneswarar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.

*கோவை. கு.கருப்பசாமி.*

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

*(5)*

*சிவதல அருமைகள், பெருமைகள்.*

நேரில் சென்று தரிசித்தது போல.....

*திருவைகாவூர்.*

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

*இறைவன்:* வில்வ வனேஸ்வரர், வில்வ வனநாதர்.

*இறைவி:.*சர்வ வனநாதர்.

*தலமரம்:* வில்வ மரம்.

*தீர்த்தம்:* எமதீர்த்தம் கோவிலுக்கு எதிரில் இருக்கிறது.

*பெயர்க்காரணம்;*

ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள் சிவனை வணங்கி தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டனர்.

சிவனின் ஆலோசனயின்படி இத்தலத்தில் வில்வமரமாக நின்று தவம் புரிந்து வழிபட்டதால் வில்வராண்யம் என்று பெயர் பெற்றது.

சோழ நாட்டின் காவிரி வட கரையில் அமையப் பெற்றுள்ள 63 தலங்களுள் 48- வது தலமாக போற்றப் பெறுகிறது.

*தேவாரம் பாடியவர்கள்.*

*சம்பந்தர்* 3-ல் ஒரே ஒரு பாடல் மட்டும்.

*வழி.*

சுவாமி மலையிலிருந்து நாககுடி சென்று அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் பாதையில் சென்று இத்தலத்தை அடையலாம்.

*கோவில் அமைப்பு.*

கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் 1 ஏக்கர் நிலப்பரப்பளவில் கிழக்கு நோக்கியதும், இரண்டு பிரகாரங்களுடன் அமைந்துள்ளது.

இராஜ கோபுரம் இல்லை.

முகப்பு மண்டபம் மட்டும் ஐந்து கலசங்களுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறது.

இதன் முகப்பில் விநாயகர் அருள்பாலிக்கிறார்.

முகப்பு வாயிலிலிருந்து உள் நுழைந்தோமானால், நந்தி பெருமான் நம்மை நோக்கி திரும்பி (கிழக்கு நோக்கி) பார்ப்பதைக் காண்கிறோம்.

இத்தல வரலாறாகிய வேடன் நிகழ்ச்சி தொடர்பாக- அதாவது வேடனைப் பிடிக்க எமன் வருகிறார். இதை நந்தி தடுக்கிறார்.

எமன் மறி வருகிறார்.

இதனாலே எமனைத் திரும்ப தடுத்து நிறுத்துவதற்காக இவ்வாறு திரும்பி நோக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இத்திருக்கோவிலில் துவாரபாலகர்கள் கிடையாது.

நவக்கிரகங்கள் இல்லை.

உள்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால்.....வாயிலின் இடப்பக்கமாய் வேடன் நிகழ்ச்சி சுதை வடிவமாக சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

வெளிப் பிரகாரத்தில் சப்த கன்னியர் சந்நிதியும், விநாயகர் சந்நிதியும், வள்ளி தெய்வானை உடனாய கோலத்துடன் முருகன் சந்நிதியும் இருப்பதைக் காணலாம்.

முருகன் காட்சியளிக்கும் கோலத்துடன் இருக்கும் முருகன் வாகனமான மயிலின் முகம் திசை மாறி திரும்பியிருக்கிறது.

கோஷ்ட மூர்த்தமாக தட்சிணா மூர்த்தி திருவுருவம் அழகாக காட்சியளிக்கிறது. அதுவும் அரிய வேலைப்பாடுகளுடன்.

லிங்கோத்பவரும், அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும் உள்ளனர்.

துர்க்கைக்கு எதிரில் இரண்டு சண்டேசுவரர் திருமேனிகளைக் காணமுடியும்.

திருமால், நாராயணீ, பைரவர், சூரியன், சந்திரன், சனிபகவான் முதலிய மூலத் திருமேனிகள் பீடமிட்டு வரிசையாக இருக்கச் செய்திருப்பதைக் காணலாம்.

மகா மண்டபத்தில் விநாயகர், பிரம்மா, விஷ்ணு, வீணாதட்சிணா மூர்த்தி ஆகியோரின் மூலத் திருவுருவங்கள் இருக்கின்றன.

*தல அருமை:*

ஒரு முறை சிவராத்திரி நாளில் வேடன் ஒருவன் மானை விரட்டியோடி துரத்தி வந்தான்.

துள்ளியோடிய அந்தமான், அங்கே தங்கி தவம் மேற்க்கொண்டிருந்த முனிவரின் ஆசிரமத்தில் தஞ்சமாகிட உள் புகுந்தன.

விடாது அவ்வேடனும் அந்த மானை துரத்தியோடி, அவனும் அந்த முனிவரின் ஆசிரமத்துக்குள் உள் புகுந்தான். அதோடு முனிவரிடம் வேடன், இந்த மான் எனக்குரியது இதை என்னோடு அனுப்பி வையுங்கள் என கூறினான்.

நடந்தவையை உணர்ந்த முனிவர், கோபத்துடன் வேடனைப் பார்த்து, ஓடி வந்து என்னிடம் அடைக்கலமான இந்த மானைக் காப்பது என் கடமை என கூறினார்.

முனிவர் கூறியதை வேடன் பொருட்படுத்தாமல், முனிவரின் பின்னால் நின்றிருந்த மானை பிடிக்க முயன்றான்.

உடனே முனிவர் தன் தவ வலிமைையை பயன்படுத்தி அவ்விடத்திற்கு புலி ஒன்றை வரச் செய்தார் முனிவர்.

இதைக் கண்டு அரண்டு போன வேடன், அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி, அவ்விடத்திலிருந்த வில்வமரத்தில் மளமளவென்று ஏறி, அமர்ந்து கொண்டான்.

புலி இவனை விட்டு நகர்ந்த பாடுமில்லை. அவனும் மரத்தை விட்டு கீழிறங்கி வராமல் மரக்கிளையிலேயே அமர்ந்திருந்து கொண்டான்.

நேரம் ஆக ஆக வேடனுக்குத் தூக்கம் வந்தது. தூங்கினால் மரத்திலிருந்து கீழே விழுந்து விடுவோம் என எண்ணி, தூக்கம் வராதிருக்க ஒரு உபாயத்தை மேற்கொண்டான்.

வில்வமரத்திலிருந்தவாறு வில்வ இலைகளை ஒவ்வொன்றாக பறித்து பறித்துக் கீழே போட்டான்.

இப்படி தொடர்ச்சியாக செய்து வர, தன்னை தூக்கம் அண்டாது என நினைத்து அப்படி செய்தான்.

ஆனால் அந்த வில்வமரத்தினடியில், சுயம்பு மூர்த்தமாக லிங்கத் திருமேனி ஒன்று இருந்தது.

வேடன் பறித்துப் போட்ட வில்வ இலைகள் லிங்கத்திருமேனியின் மீது விழுந்து கொண்டே இருந்தன.

சிவனின் திருமேனி மீது வில்வ இலைகள் விழுந்து கொண்டிருந்த அந்நாள், சிவராத்திரி ஆகும்.

சிவராத்திரி நாளன்று வேடனால், தன் மீது தொடர்ச்சியாக வில்வம் சாத்தப்பட்டதால், அதில் ஈசன் மகிழ்ந்தார். வேடனை மன்னித்தார்.

அத்துடன் வேடனுக்கு முக்தியும் வழங்கி அருளினார்.

விடியும் அன்று அதிகாலையில் வேடனின் ஆயுள் முடிவதாக இருந்ததால், அவனின் உயிரைக் கவர எமன் அங்கு வந்தான்.

உடனே சிவபெருமான் தட்சிணா மூர்த்தி வடிவில் கையில் கோலேந்தி எமனை விரட்டினார்.

இத்தலத்தின் வாசற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மாவும் எங்குமே காணப்படாத நிலையில், துவார பாலகர்களாக நிற்பதைக் காணலாம்.

சப்த மாதர்கள் உந்தால முனிவரால் தமக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிக் கொள்ளும் பொருட்டு, இத்தலத்திலுள்ள எம தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கி வேண்டி அட்டமா சித்திகளை திரும்பப் பெற்ற தலம்.

*தல பெருமை:*

சிவராத்திரிக்குப் பிரசித்தி பெற்ற தலம்.

சிவராத்திரியன்று சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன், விழா நடக்கும்.

மறுநாள் அமாவாசை அன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, மூலஸ்தானத்தில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாரதனை காட்டுவர்.

வேடன் மோட்சம் பெற்றதை நினைவு படுத்தும் வகையில் இவ்விதமாக விழா நடத்துகின்றனர்.

அன்றிரவு சுவாமி, அம்பாள் ஓலைச் சப்பரத்தில் எழுந்தருளி அருள் வழங்குவார்கள்.

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

*பூஜா விதி.*

சிவாகம முறையில் நான்கு கால பூஜை.

காலை 6-30 மணி முதல் பகல் 12-00 மணி வரை.

மாலை 4-30 மணி முதல் இரவு 8-00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*

அருள்மிகு. வில்வ வனேஸ்வரர் திருக்கோயில்.

திருவைகாவூர் அஞ்சல்.

பாபநாசம் வட்டம்.

தஞ்சை மாவட்டம். 612 301

*தொடர்புக்கு:*

கண்ணப்ப குருக்கள். 0435--2941912.

94435 86453.....93443 30834

செந்தமிழ்ச் செல்வன்: 98436 06985

திருச்சிற்றம்பலம்.

Reposting it from Amritha Vahini Google group.

76 views0 comments
bottom of page