உ
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை. கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*சிவ தல தொடர்.73.*
*சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.*
*திருஅம்பர்மாகாளம்.*
*(நேரில் சென்று தரிசித்ததைப் போல......)*
*சிவஸ்தலம்:*
அம்பர் மாகாளம்.
*இறைவன்:* மாகாளநாதர், காளகண்டேஸ்வரர்.
*இறைவி:* பக்ஷயாம்பிகை, ராஜமாதங்கி.
*தல விருட்சம்:* புன்னை மரம்.
*தலதீர்த்தம்:* அரி சொல்லாறு, மாகாள தீர்த்தம்.
*தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர்
*இருப்பிடம்:*
மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில்,
மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மி. தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே அரிசிலாற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.
அம்பர் பெருந்திருக்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் மாகாளநாதர் கோவிலுக்கு கிழக்கே 1 கி.மி. தொலைவில் உள்ளது.
*ஆலய முகவரி:*
அருள்மிகு மாகாளநாதர் திருக்கோயில்
அம்பர் மாகாளம்
பூந்தோட்டம் அஞ்சல்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 609503
*பூஜை காலம்:*
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும். வழிபாட்டுக்குத் திறந்திருக்கும்.
மாகாளம் என்ற பெயர் பெற்ற சிவஸ்தலங்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவை வட இந்தியாவிலுள்ள *உஜ்ஜயனி மாகாளம்,* தொண்டை நாட்டுத் தலமான *இரும்பை மாகாளம்,* மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான *அம்பர் மாகாளம்* என்ற இத்தலம்.
*தல அருமை:*
63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமார் நாயனார் நடத்திய யாகத்திறகு இறைவனும் இறைவியும் நேரில் வந்த தலம் இதுவாகும்.
சோமாசியார் தான் நடத்தும் யாகத்திற்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார்.
சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார். இறைவனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது.
சோமாசிமாற நாயனார் விரும்பியபடி, அவர் நடத்தும் சோமயாகத்திற்கு இறைவன் நேரில் எழுந்தருளினார். ஆனால் பறையன் உருவில் எழுந்தருளுகிறார்.
நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாகப் பிடித்துக் கொண்டு தம்பட்டம், மதுக்குடம், மாட்டு இறைச்சி ஆகியவற்றை சுமந்து கொண்டு யாகத்திற்கு எழுந்தருளுகிறார்.
யாகத்தை நடத்திவந்த அந்தணர்கள், பறையன் வந்ததால் யாகம் கெட்டுவிட்டது என்று கூறி ஓடி விடுகின்றனர்.
தந்தை தான் இவ்வாறு வருகிறார் என்பதை சோமாசிமாற நாயனாருக்கு விநாயகர் குறிப்பாக உணர்த்தி அச்சத்தைப் போக்கினார்.
ஆகையால் சோமாசிமாற நாயனார் வந்திருப்பது இறைவன் எனத் தெரிந்து, தனது மனைவியுடன் பறைத் தம்பதிகளை எதிர்கொண்டு வரவேற்று அவிர்பாகம் கொடுக்கிறார்கள்.
இறைவனும் தனது பறையன் உருவைக் களைந்து ரிஷப வாகனத்தில் சோமாசிமாற நாயனாருக்கும் அவர் மனைவிக்கும் காட்சி கொடுத்து அருளினார்.
மறுநாள் அவரைக் கண்டு பயந்து யாகத்திலிருந்து ஓடியவர்களுக்கெல்லாம் காட்சி கொடுத்தருளினார்.
சோமாசிமாற நாயனாருக்கு இறைவன் வந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்திய அவ்விநாயகரை *அச்சந்தீர்த்த விநாயகர்* என்றழைக்கின்றனர்.
வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தில் சோமயாகப்பெருவிழா நடக்கிறது. இந்த விழாவில் காலில் செருப்பு, கையில் மத்தளம், அருகில் மதுக்குடம் ஏந்திய பார்வதியுடன் சிவன் அருள்பாலிப்பது சிறப்பு.
திருவாரூரில் இருந்து தியாகராஜர் இவ்விழவிற்கு எழுந்தருள்வதால் அன்றைய தினம் திருவாரூரில் தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது.
புலத்தியர் மரபில் வந்த சம்சாரசீலன் என்பவனிடம் தோற்று தேவேந்திரன் இத்தல இறைவனிடம் அடைக்கலம் அடைந்தான்.
சுவாமி பைரவ திருக்கோலம் தாங்கி சம்சாரசீலனைக் கொன்று சட்டைநாதராக எழுந்தருளி தேவேந்திரனை மீண்டும் அமராவதிக்கு அதிபதியாக்கினார்.
அதனால் இத்தலத்திற்கு *இந்திரபுரி*என்ற மற்றொரு பெயரும் ஏற்பட்டது. சட்டைநாதருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.
மன்மதன் தேவர்களால் ஏவப்பட்டு, விசுவாமித்தர முனிவரின் தவத்தைக் குலைக்க அவர்மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான்.
அதனால் சினம் கொண்ட முனிவர் இந்திரனை சபிக்க, அவன் மாகாளநாதரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இத்தலம் *மாரபுரி* என்ற பெயரையும் பெற்றது.
அஷ்டநாகங்களில் ஒன்றாகிய வாசுகி என்ற் நாகம் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றது.
நாகதோஷம், புத்திரதோஷம், திருமணத்தடை உள்ளவர்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்க கிழமைகளில் இராகு காலத்தில் வாசுகிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நற்பலன்கள் அடையலாம்.
அம்பர் பெருந்திருக்கோவில், அம்பர் மாகாளம் என்ற இரண்டு கோவில்களுக்கும் இடையில் சாலையோரமாக சோமாசிமார் நாயனார் செய்த யாககுண்டம் உள்ளது.
ஆண்டு தோறும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று இங்கு யாக உற்சவம் நடைபெறும்.
இத்தலத்தில் மாகாள முனிவர், காளி ஆகியோர் இறைவன் மாகாளநாதரை வழிபட்டுள்ளனர்.
இறைவன் சோழ மன்னன் ஒருவனுக்கு தனது மனக்கோலத்தைக் காட்டியருளிய தலம்.
அம்பாள் அம்பரனை வதம் செய்ததும் இத்தலத்தில் தான்.
இறைவன், இறைவி பறையர் உருவத்தில் செப்புச் சிலை வடிவில் இக்கோவிலில் உள்ளனர்.
சோமாசிமார் நாயனார், அவர் மனைவி ஆகியோரின் உருவச் சிலைகளும் இக்கோவிலில் உள்ளன.
ஆலயம் ஒரு கட்டுமலை மேல் அமைந்துள்ளது. சோழ மன்னன் கோச்செங்கட் சோழன் கட்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.
*கோவில்அமைப்பு:*
இவ்வாலயம் செல்வதற்கு அரிசிலாற்றின் வடகரையக்குச் சென்றோம்.
முதலாவதாக நம் கண்களுக்கு ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் காட்சி தெரிய, *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து, கோபுரத்தை வணங்கி தரிசனம் செய்தோம்.
கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லவும், அங்கே விசாலமான முற்றம் இருந்தது.
இறைவன் சந்நிதிக்கு நேரே முன்னதாக, இருந்த பலிபீடத்திடன் முன் வந்து நின்று, ஆணவமலத்தை முழுவதும் பலியிடாடுக் கொண்டோம்.
அடுத்தாற்போல அதனருகே உள்ள நந்தி மண்டபம் முன் நின்று அவர் முன் வீழ்ந்து வணங்கியெழுந்தோம்.
வடகிழக்கு மூலையில் கல்யாண மண்டபம் அருகே முற்றவெளியை அடுத்து இருந்தது *அதிகார நந்தி கோபுரம்* அவற்றையும் கைதொழுது வணங்கிக் கொண்டோம்.
இந்த அதிகார நந்தி கோபுரமானது மூன்று நிலைகளுடன் இரண்டாம் கோபுரமாக உள்ளதையும் தலைமேல் கைகுவித்து வணங்கிக் கொண்டோம்.
உள்ளே மகாமண்டபத்தில் நாகநாதசுவாமி லிங்கத் திருமேனியுடன் காட்சி அருள வணங்கி அவரரருளைப் பெற்று நகர்ந்தோம்.
எதிரில் நந்தியெம் பெருமான் கால்மடக்கி அமர்ந்திருந்தார். அவருக்கு வலதுபுறமாக அம்பிகை அமர்ந்த கோலத்தில் காட்சி தர, மனமுருகிப் பிரார்த்தித்து வெளியேறினோம்.
பின் வலம் திரும்புகையில்,
நாகநாதசுவாமிக்குப் பினபுறம் வருகையில், அங்கே நாககன்னிகை யோகாசனத்தில் வீற்றிருப்பதைப் பார்த்தோம்.
இந்த நாக கன்னிகை இத்தலத்தில் இறைவனை வழிபட்டு நற்கதி பெற்றாள் என்று அருகாக நின்ற பக்தர் ஒருவர் கூறினார்.
காளம் என்றால் நாகம் என்ற பொருளுண்டு. காளம் வழிபட்டதால் மாகாளம் என்று இத்தலம் பெயர் பெற்றது என்பதையும் அவர் கூறுனார்.
இவ்வளத்திற்குப் பிறகு வடக்குப் புறம் நாம் வந்து சேர, அங்கே சோமாசிமாற நாயனாருக்குக் காட்சி கொடுத்த நாயகரான, நடராஜ பெருமான், மற்றும் மற்ற உற்சவமூர்த்திகளையும் பார்த்து மனத்தெளிவு பெற்றோம்.
தொடர்ந்து உள்ளே நகர, மாகாளநாதர் சந்நிதிக்கு வந்தோம். அவரை கண் இமையாது வணங்கியும், மனமுருகப் பிரார்த்தனையும் செய்தோம். பக்தர்கள் சிலர் தரிசனத்திற்கு உள் வர, அர்ச்சகரிடம் வெள்ளியவிபூதியைப் பெற்று ஆனந்தமாக வழிவிட்டு வெளி வந்தோம்.
வெளி வந்த பிறகும், கருவறையில் நாம் கண்ட, காளி தன் கையால் பிடித்து வைத்த சிறிய *லிங்கத் திருமேனி* திரும்ப திரும்ப எங்கள் கண்களுக்குள் நிழலாடியது ஆனந்தமாக இருந்தது.
கருவறையை வலம் வரும்போது தெற்குப் புறத்தை நோக்கினோம். அங்கே தியாகராஜர் சந்நிதி கொண்டுள்ளார் என தெரியவும் அவரையும் தொடர்ந்து வணங்கி பலத்தைத் தொடர்ந்தோம்.
அதற்கடுத்திருந்த 63 மூவரையும், நெஞ்சுமுன் கூப்பிய கைகளை இறக்கிவிடாமல் அறுபத்து மூவரையும் வணங்கித் தொடர்ந்து......... பரிவார கணபதி, தட்சிணாமூர்த்தி, உதங்க, மதங்க முனிவர்கள், தனுசு சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டேஸ்வரர் ஆகியோரை தரிசித்தோம்.
இப்போது வணங்கப் பெற்ற தனுசு சுப்பிரமணியர் வடிவம் வில்லேந்திய காட்சியருள் மிக அழகாகவுள்ளது.
உட்பிரகாரத்து வலச் சுற்று முடியவும், வெளிப் பிரகார வலம் செய்ய ஆரம்பித்தோம். வலத்தின்போது அங்கே தென்மேற்கு மூலையில் காளி கோவில் இருந்தன.
இவள், அம்பாசுரனை வதம் செய்ததனால், அந்த தோஷம் நீங்க இந்த மாகாளநாதரை வழிபட, இவள் மாகாளியானவளானாள்.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இத்தலம் வந்து சிவப்பு அரளிப்பூ மாலைகள் இரண்டு தொடுத்து அதை இறைவன், இறைவிக்கு சார்த்தி ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, பின்பு ஒரு மாலையைப் பெற்று கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இவ்வாலயத்தின் சிறப்பு.
*திருஞானசம்பந்தர் தேவாரம்*
பாடியுளார் விடையினர் பாய்புலித்
தோலினர் பாவநாசர்
பொடிகொண்மா மேனியர் பூதமார்
படையினர் பூணநூலர்
கடிகொண்மா மலரிடு மடியினர்
பிடிநடை மங்கையோடும்
அடிகளா ரருள்புரிந் திருப்பிட
மம்பர்மா காளந்தானே
சிவபெருமான் உலகில் பொருந்திய இடப வாகனம் உடையவர். பாய்கின்ற புலித்தோலை ஆடையாக அணிந்துள்ளவர். மன்னுயிர்களின் பாவத்தைப் போக்குபவர். திருவெண்ணீறணிந்த திருமேனியர். பூதங்களாகிய படைகளை உடையவர். முப்புரி நூலணிந்த மார்பினர். பூசிக்கும் அடியவர்களால் நறுமணம் கமழும் மலர்கள் இடப்படுகின்ற திருவடிகளையுடையவர். அத்தகைய பெருமான் பெண்யானை போன்ற நடையுடைய உமாதேவியோடும் அன்பர்களுக்கு அருள்புரிந்து வீற்றிருந்தருளும் இடமாவது திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
கையின்மா மழுவினர் கடுவிட
முண்டவெங் காளகண்டர்
செய்யமா மேனிய ரூனம
ருடைதலைப் பலிதிரிவார்
வையமார் பொதுவினின் மறையவர்
தொழுதெழ நடமதாடும்
ஐயன்மா தேவியோ டிருப்பிட
மம்பர்மா காளந்தானே
சிவபெருமான் கையில் பெருமையான மழுப்படையை உடையவர். கொடிய விடமுண்டதால் கரிய கண்டத்தை உடையவர். சிவந்த திருமேனியர். ஊன்பொருந்திய உடைந்த மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவர். உலகனைத்திற்கும் உரியதான சிற்சபையில் அந்தணர்கள் தொழுது போற்ற நடனமாடும் தலைவர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
பரவின வடியவர் படுதுயர்
கெடுப்பவர் பரிவிலார்பால்
கரவினர் கனலன வுருவினர்
படுதலைப் பலிகொடேகும்
இரவினர் பகலெரி கானிடை
யாடிய வேடர்பூணும்
அரவின ரரிவையோ டிருப்பிட
மம்பர்மா காளந்தானே
இறைவர் தம்மை வணங்கிப் போற்றும் அடியவர்கள் படும் துயரத்தைத் தீர்ப்பவர். தம்மிடத்து அன்பில்லாதவர்கள் பால் தோன்றாத நிலையில் மறைந்திருப்பவர். நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமுடையவர். பிரமகபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர். நண்பகல் போல் சுடுகின்ற முதுகாட்டில் இரவில் நெருப்பேந்தி ஆடும் வேடத்தை உடையவர். பாம்பை அணிந்துள்ளவர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத் தலமாகும்.
நீற்றினர் நீண்டவார் சடையினர்
படையினர் நிமலர்வெள்ளை
ஏற்றின ரெரிபுரி கரத்தினர்
புரத்துளா ருயிரைவவ்வும்
கூற்றினர் கொடியிடை முனிவுற
நனிவருங் குலவுகங்கை
ஆற்றின ரரிவையோ டிருப்பிட
மம்பர்மா காளந்தானே
சிவபெருமான் திருவெண்ணீறணிந்த மேனியர். நீண்டு தொங்கும் சடையினர். கரங்களில் பலவகை ஆயுதங்கனை ஏந்தியுள்ளவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர். நெருப்பேந்திய கரத்தினர். திரிபுர அசுரர்களின் உயிரைக் கவரும் எமனாக விளங்கியவர். கொடிபோன்ற இடையுடைய உமாதேவி கோபம் கொள்ளும்படி கங்கையாகிய நங்கையை மகிழ்வுடன் சடையில் தாங்கியவர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
புறத்தின ரகத்துளர் போற்றிநின்
றழுதெழு மன்பர்சிந்தைத்
திறத்தின ரறிவிலாச் செதுமதித்
தக்கன்றன் வேள்விசெற்ற
மறத்தினர் மாதவர் நால்வருக்
காலின்கீ ழருள்புரிந்த
அறத்தின ரரிவையோ டிருப்பிட
மம்பர்மா காளந்தானே
இறைவர் உள்ளும், புறமும் நிறைந்தவர். உள்ளம் உருகிப் போற்றிக் கண்ணீர் மல்கும் அன்பர்களின் சிந்தையில் விளங்குபவர். அறிவில்லாத, அழிதற்கேதுவாகிய புத்தி படைத்த தக்கனின் வேள்வியை அழித்தவர். சனகர், சனந்தரர், சனாதரர், சனற்குமாரர் என்ற நான்கு முனிவர்கட்குக் கல்லாலின் கீழிருந்து அறமுரைத்து அருள்புரிந்தவர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
பழகமா மலர்பறித் திண்டைகொண்
டிறைஞ்சுவார் பாற்செறிந்த
குழகனார் குணம்புகழ்ந் தேத்துவா
ரவர்பலர் கூடநின்ற
கழகனார் கரியுரித் தாடுகங்
காளர்நங் காளியேத்தும்
அழகனா ரரிவையோ டிருப்பிட
மம்பர்மா காளந்தானே
இறைவர், தினம்தோறும் மலர் பறித்து மாலை கட்டி வழிபாடு செய்யும் அடியவர்களைவிட்டு நீங்காத இளையர். தம் குணங்களைப் புகழ்ந்து போற்றும் அன்பர்கள் கூட்டத்திலிருக்கும் அழகர். யானைத் தோலை உரித்துப் போர்த்தி ஆடுபவர். எலும்பு மாலை அணிந்துள்ளவர். காளியால் வணங்கப்பட்ட அழகர். அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
சங்கவார் குழையினர் தழலன
வுருவினர் தமதருளே
எங்குமா யிருந்தவ ரருந்தவ
முனிவருக் களித்துகந்தார்
பொங்குமா புனல்பரந் தரிசிலின்
வடகரை திருத்தம்பேணி
அங்கமா றோதுவா ரிருப்பிட
மம்பர்மா காளந்தானே
இறைவர் சங்கினாலாகிய குழையைக் காதிலணிந்துள்ளவர். நெருப்புப் போன்ற செந்நிற மேனியர். தமது அருளால் எங்கும் வியாபித்துள்ளவர். அரிய தவம் செய்யும் முனிவர்களுக்குத் தம்மையே அளித்து மகிழ்பவர். அவர் அங்கு, பொங்கும் நீர் பரந்த அரிசிலாற்றினைத் தீர்த்தமாகக் கொண்டு, வேதத்தின் ஆறு அங்கங்களை ஓதுபவராய் வீற்றிருந்தருளும் இடம் ஆற்றின் வடகரையில் உள்ள திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
பொருசிலை மதனனைப் பொடிபட
விழித்தவர் பொழிலிலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழுற
வடர்த்தவர் கோயில்கூறில்
பெருசிலை நலமணி பீலியோ
டேலமும் பெருகநுந்தும்
அரிசிலின் வடகரை யழகம
ரம்பர்மா காளந்தானே
சிவபெருமான், போர்புரியும் வில்லுடைய மன்மதனை எரித்துச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து விழித்தவர். சோலைகளையுடைய இலங்கை மன்னனைக் கயிலை மலையின்கீழ் அடர்த்த அப்பெருமான் வீற்றிருந்தருளும் கோயில், பெரிய மலையினின்றும் நவமணிகளையும், மயிற்பீலி ஏலம் முதலியவற்றையும் மிகுதியாக அடித்துக் கொண்டு வரும் அரிசிலாற்றின் வடகரையில் அமைந்துள்ள அழகிய திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
வரியரா வதன்மிசைத் துயின்றவன்
றானுமா மலருளானும்
எரியரா வணிகழ லேத்தவொண்
ணாவகை யுயர்ந்துபின்னும்
பிரியரா மடியவர்க் கணியராய்ப்
பணிவிலா தவருக்கென்றும்
அரியரா யரிவையோ டிருப்பிட
மம்பர்மா காளந்தானே
வரிகளையுடைய பாம்புப் படுக்கையில் பள்ளிகொள்ளும் திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் உணர்ந்து போற்ற முடியாவண்ணம் எரியுருவாய்ச் சிவபெருமான் உயர்ந்து நின்றவர். தம்மிடத்து அன்புசெலுத்தும் அடியவர்கட்கு அணியராகியும், பணிவில்லாதவர்கட்கு அரியராயும் விளங்குபவர். அவர் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும்.
சாக்கியக் கயவர்வன் றலைபறிக்
கையரும் பொய்யினானூல்
ஆக்கிய மொழியவை பிழையவை
யாதலில் வழிபடுவீர்
வீக்கிய வரவுடைக் கச்சையா
னிச்சையா னவர்கட்கெல்லாம்
ஆக்கிய வரனுறை யம்பர்மா
காளமே யடை மினீரே
புத்தர்களாகிய கீழ்மக்களும், தலைமயிர் பறிக்கும் இயல்புடைய வஞ்சகர்களாகிய சமணர்களும், இறைவனை உணராது, பொய்யினால் சிருட்டித்த நூல்களிலுள்ள உபதேசங்கள் குற்றமுடையவை. அவற்றைக் கேட்கவேண்டா. பாம்பைக் கச்சாக அணிந்தவனும், தன்னிடத்துப் பக்தி செலுத்தும் அடியவர்கட்கு அருள் புரிபவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக!
செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை
வருபுன லரிசில்சூழ்ந்த
அம்பர்மா காளமே கோயிலா
வணங்கினோ டிருந்தகோனைக்
கம்பினார் நெடுமதிற் காழியுண்
ஞானசம் பந்தன்சொன்ன
நம்பிநாண் மொழிபவர்க் கில்லையாம்
வினைநலம் பெறுவர்தாமே
செம்பொன்னையும், இரத்தினங்களையும் அடித்துக் கொண்டு அலை வரும் நீரையுடைய அரிசிலாறு சூழ்ந்த திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள, உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி, சங்கு, சுட்ட சுண்ணாம்பு இவற்றால் சுதை பூசப்பட்ட நெடிய மதில்களையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி, நாள்தோறும் பாடுபவர்களுக்கு வினை இல்லை. அவர்கள் எல்லா நலன்களும் பெறுவர். இது உறுதி.
*சிறப்பு செய்தி:*
இறைவன் யாகத்திற்கு நீசவடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்த கள் குடம் பொங்கிய இடம் *"பொங்கு சாராயநல்லூர்"* (இன்று வழக்கில் *"கொங்கராய ' நல்லூர்")* என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடிப்பட்ட இடம் *"அடியுக்க மங்கலம்"* (இன்று வழக்கில் *"அடியக்கமங்கலம்")* என்றும், இறந்தக் கன்றை ஏந்திய இடம் *"கடா மங்கலம்"* என்றும் இன்றும் வழங்குகின்றன.
சோமாசி நாயனார் யாக குண்டம் அமைத்து யாகம் செய்த இடம் அம்பர் மாகாளத்திற்கும் அம்பர்பெருந் திருக்கோயிலுக்கும் இடையில் உள்ளது.
அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது; இன்று அந்த இடம் *"பண்டாரவாடை திருமாளம்"* என்று வழங்குகின்றது. இன்றும் சோம யாக உற்சவம் இவ்விடத்தில்தான் நடைபெறுகிறது.
*சிறப்புகள்:*
திருஞானசம்பந்தர் பாடல் பெற்றத் திருத்தலம்.
ஆண்டு தோறும் வைகாசி மாதம் சோமாசி மாறனார் யாக விழா நடைபெறுகிறது.
*சோமாசிமாற நாயனார் அவதாரத் தலம்:*
*வழிபாடு:*குரு வழிபாடு. *முத்தித் தலம்:*திருவாரூர். *குருபூசை நாள்:*வைகாசி *நட்சத்திரம்:*ஆயில்யம்.
அதிகார நந்தி மானிட உருவ வடிவில் காட்சி தருகிறது.
திருக்கோயிலில் ஐந்து கால பூசைகள் நடைபெறுகின்றன.
சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.
'அம்பர்புராணம் - தலபுராணம்'' மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பாடியுள்ளார்.
*அஞ்சல் முகவரி:*
அ/மி. மாகாளேஸ்வரர் திருக்கோயில், கோயில் திருமாளம், பூந்தோட்டம் (அஞ்சல்) - 609 503. நன்னிலம் (வட்டம்), திருவாரூர் (மாவட்டம்).
*தொடர்புக்கு:*
09486601401
திருச்சிற்றம்பலம்.
Reposting it from Amritha Vahini Google group.