top of page

Thirukalayanallur temple Chaakottai

உ.

சிவாயநம.. திருச்சிற்றம்பலம்.

*கோவை.கு.கருப்பசாமி.*

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

*பாடல் பெற்ற சிவ தல தொடர்.86.*

*சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*

(நேரில் சென்று தரிசித்ததைப் போல.............)

☘ *திருகலயநல்லூர்.* ☘

*அமிர்தகலசநாதர் கோவில்,திருக்கலயநல்லூர்.*

(தற்போது சாக்கோட்டை என்று வழங்குகிறது)

*இறைவன்:* அமிர்தகலச நாதர். அமிர்தகடேஸ்வரர்.

*உற்சவர்:* அமிர்தகலச நாதர்.

*இறைவி:* அமிர்தவல்லி.

*தல விருட்சம்:* வன்னிமரம்.

*தல தீர்த்தம்:* நால்வேத தீர்த்தம்.

*பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*பூஜை:* ஆகமம்.

சோழ நாட்டின் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள 274 தலங்களுள் இத்தலம் அறுபத்தெட்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இருப்பிடம்:*

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கி.மீ. தொலைவில் சாக்கோட்டை என்ற இடத்தில் இத்தலம் இருக்கிறது. சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. ஊர் மக்கள் இத்தலத்தை கோட்டை சிவன் கோவில் என்று அழைக்கிறார்கள்.

*அஞ்சல் முகவரி:*

அருள்மிகு

அமிர்தகலசநாதர் திருக்கோவில்,

சாக்கோட்டை அஞ்சல்,

கும்பகோணம் வட்டம்

தஞ்சாவூர் மாவட்டம்,

PIN - 612 401.

*பூஜா காலம்:*

காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும்.

*கோவில் அமைப்பு:*

இது ஒரு கிழக்கு நோக்கிய கோவில். முதலில் நம்மை வரவேற்பது மதிற்சுவருடன் உள்ள ஒரு நுழைவாயில். நுழைவாயில் மேற்புறம் அமர்ந்த நிலையில் சிவன், பார்வதி, அவர்களுக்கு இருபுறமும் நின்ற நிலையில் விநாயகரும், முருகரும் சுதை வடிவில் காட்சி தருகின்றனர். அதைக் கடந்து உள்ளே சென்றால் 3 நிலை இராஜ கோபுரம் உள்ளது. நுழைவாயிலுக்கும் மூன்று நிலை இராஜ கோபுரத்திற்கும் இடையில் நந்தி மண்டபம் உள்ளது. உள்ளே கருவறையில் இறைவன் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். அம்பாள் கோவில் தெற்கு நோக்கியுள்ளது. ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ள சப்தமாதர்கள் சிற்பங்கள் பார்த்து ரசிக்கத் தக்கது. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிற்பம் சற்று வித்தியாசமாக காணப்படுகிறது. இத்திருமேனி வலது மேற்கையில் ருத்ராட்ச மாலையும் இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும், தலைமுடி சூரியபிரபை போலவும் அமைப்புடையதாக விளங்குகிறது. இடது காலை மடித்து வைத்துக் கோண்டு வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள லிங்கோத்பவர் சிற்பம் பச்சை மரகதக் கல்லால் ஆனது. தபஸ்வியம்மனின் புடைப்புச்சிற்பம் மிகவும் அழகானது. வலக்கால் தரையில் ஊன்றி, இடக்காலை வலது தொடையில் பொருந்த மடக்கி மேல் நோக்கிய நின்ற நிலையில் வைத்து, வலக்கரம் உச்சிமீது உள்ளங்கை கவித்துவைத்து, இடக்கரம் வயிற்றின்கீழ் அங்கைமேல் நோக்கி வைத்துத் தவம் செய்கின்ற கோலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் புடைப்புச் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.

சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி மற்றும் சதாபிஷேகம் ஆகியன செய்து கொள்ள இத்தலம் ஒரு சிறந்த தலமாக விளங்குகிறது.

*கோவில் அமைப்பு:*

ஆலயத்திற்கு நாம் வந்தபோது,

முதலில் நம்மை வரவேற்பது மதிற்சுவருடன் கிழக்கு பார்த்த வண்ணம் உள்ள ஒரு நுழைவாயில் தென்பட, *சிவ சிவ சிவ சிவ* மொழிந்து பூமியைத் தொட்டு வணங்கிக் கொண்டோம்.

நுழைவாயிலின் மேற்புறத்தை அன்னாந்து நோக்கினோம். அமர்ந்த நிலையில் சிவன், பார்வதி, அவர்களுக்கு இருபுறமும் நின்ற நிலையில் விநாயகரும், முருகரும் சுதை வடிவில் காட்சி தருகின்றனர்.

இதைக் கடந்து உள்ளே சென்றால் மூன்று நிலை இராஜ கோபுரம் தெரியவும், மறுபடியும் *"சிவ சிவ சிவ சிவ"* மொழிந்து கோபுரத் தரிசனம் செய்து கொண்டோம்.

நுழைவாயிலுக்கும் மூன்று நிலை இராஜ கோபுரத்திற்கும் இடையில் நந்தி மண்டபத்தைக் கண்டோம்.

நந்தியாரை வணங்கிக் கொண்டு ஆலயத் தரிசனத்திற்கு உள் புக அவரிடம் விண்ணப்பம் அளித்து விட்டு நகர்ந்தோம்.

இறைவன் சந்நிதிக்கு வந்தபோது, கருவறையில் இறைவன் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி அருளிக் கொண்டிருந்தார்.

அருமையான தரிசனத்தை ஈசன் காட்டியருளினார். மனமுருகப் பிரார்த்தனை செய்து, அர்ச்சகர் தந்த விளக்குஜோதியை ஆராதாதித்து வணங்கிக் கொண்டு வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் காட்சி தர தொடர்ச்சியாக ஒவ்வொருவரையும் வணங்கிக் கொண்டோம்.

அடுத்து அம்பாள் கோவிலுக்குள் நுழைந்தோம். தெற்கு நோக்கிய வண்ணம் அருட்பார்வைகளை வழங்கிக் கொண்டிருக்க, வணங்கி குங்குமப் பிரசாதத்துடன் வெளிவந்தோம்.

அடுத்ததாக ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ள சப்தமாதர்கள் சிற்பங்களைகண்டு பிரமித்துப் போனோம்.

நவக்கிரக சந்நிதியும் இருந்தது.

இங்குள்ள தட்சிணாமூர்த்தியைக் காண்கின்றபோது, சிற்பம் சற்று வித்தியாசமாக தெரிந்தன.

இவர் வலது மேற்கையில் ருத்ராட்ச மாலையும் இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும், தலைமுடி சூரியபிரபை போலவும் அமைப்புடையதாக காட்சியாக அருளிய வண்ணமிருந்தார்.

இடது காலை மடித்து வைத்துக் கோண்டு வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சியுடன் இருந்தார்.

இவருக்கும் டான் தரிசன விதிப்படி வணங்கி நகர்ந்தோம்.

இங்குள்ள லிங்கோத்பவர் சிற்பம் எதோவொரு ஈர்ப்பு நிலையுடன் காணப்படுகிறதே எதனால் என்று அருகிலிருந்தோரிடம் கேட்டோம்.

இவர் பச்சை மரகதக் கல்லால் ஆனவர் என்று சொன்னார்கள். நன்றாகப் பார்த்து வணங்கிக் கொண்டோம்.

அடுத்து, தபஸ்வியம்மனின் புடைப்புச்சிற்பம் மிகவும் அழகானது. வலக்கால் தரையில் ஊன்றி, இடக்காலை வலது தொடையில் பொருந்த மடக்கி மேல் நோக்கிய நின்ற நிலையில் வைத்து, வலக்கரம் உச்சிமீது உள்ளங்கை கவித்துவைத்து, இடக்கரம் வயிற்றின்கீழ் அங்கைமேல் நோக்கி வைத்துத் தவம் செய்கின்ற கோலத்தில் அமைந்துள்ளதைக் காணப்பெற்று பக்திப்பாங்கால் உரோமக்கால்கள் சிலிர்த்திட்டன. சிரந்தாழ்ந்து வணங்கி நகர்ந்தோம்.

அடுத்து, இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் புடைப்புச் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று. அவ்வளவு அழகு! அவ்வளவு நேர்த்தி!.

நாங்கள் இவ்வாலயத்தகற்கு சென்றிருந்த சமயம் பலர் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி மற்றும் சதாபிஷேகம் போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன.

இந்நிகழ்வுகளை இங்கு வந்து செய்து கொள்ள, இத்தலம் ஒரு சிறந்த தலமாக விளங்குகிறது என்பதை தெரிந்து கொண்டோம்.

*பொது தகவல்:*

நாய்க்கர் காலச் செங்கல் மண்டபம் உள்ளது.

மகாமண்டப வாயிலில் வடபால் சிறிய தண்டபாணியும் தென்பால் நர்த்தன விநாயகரும் உள்ளனர்.

*நேர்த்திக்கடன்:* சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

*தலபெருமை:*

உலகம் அழியும் காலத்தில் உயிர்கள் அடங்கிய கலசம் இங்கு தங்கியது என்றும், அதனால் இத்தலம் கலயநல்லூர் ஆனது என்றும் தலபுராணம் கூறுகிறது.

பிரம்மா இத்தல இறைவனை வழிபட்டுள்ளார். அம்மனின் தவத்தை மெச்சிய இறைவன், அவளுக்கு வரம் கொடுத்து திருமணம் செய்து கொண்ட தலம்.

அம்மன் தவம் செய்யும் காட்சி புடைப்புச்சிற்பமாக உள்ளது. விசேஷமான தெட்சிணாமூர்த்தி உள்ளார்.

லிங்கோத்பவர் பச்சைக்கல்லால் ஆனவர். அர்த்தநாரீஸ்வரர் தன் வலது காலை ஓய்வாக நிறுத்தியுள்ளார்.

*தேவாரம் பாடியவர்கள்:*

*சுந்தரர்:*

1.குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவூர் வினவில் அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின் கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக் கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே.

2. செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி இருள்மேவும் அந்தகன்மேற் றிரிசூலம் பாய்ச்சி இந்திரனைத் தோள்முரித்த இறையவனூர் வினவிற் பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும் பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருக கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங் களிவண்டின் கணமிரியுங் கலயநல்லூர் காணே.

3. இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது வியற்றி இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள் துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத் தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கனதூர் வினவில் மண்டபமுங் கோபுரமும் மாளிகைசூ ளிகையும் மறையொலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக் கண்டவர்கண் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக் காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே.

4. மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான் மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா உலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர் வினவில் அலையடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறி அகிலொடுசந் துந்திவரும் அரிசிலின்றென் கரைமேற் கலையடைந்து கலிகடியந் தணர்ஓமப் புகையாற் கணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் காணே.

5. நிற்பானுங் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய் வெற்பார்வில் அரவுநாண் எரியம்பால் விரவார் புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவிற் சொற்பால பொருட்பால சுருதியொரு நான்குந் தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் றிறத்தே கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார் கலைபயிலந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே.

6. பெற்றிமையொன் றறியாத தக்கனது வேள்விப் பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கண்பீ டழியச் செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலாற் றேய்வித் தருள்பெருகு சிவபெருமான் சேர்தருமூர் வினவில் தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமுந் திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்றென் கரைமேற் கற்றினநன் கரும்பின்முளை கறிகற்கக் கறவை கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே.

7. இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் டோ ளும் இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மே லூன்றி நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாச மாகி நிற்பனவும் நடப்பனவாம் நின்மலனூர் வினவிற் பலங்கள்பல திரையுந்திப் பருமணிபொன் கொழித்துப் பாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக் கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்றென் கரைமேற் கயலுகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே.

8. மாலயனுங் காண்பரிய மாலெரியாய் நிமிர்ந்தோன் வன்னிமதி சென்னிமிசை வைத்தவன்மொய்த் தெழுந்த வேலைவிட முண்டமணி கண்டன்விடை யூரும் விமலனுமை யவளோடு மேவியஊர் வினவிற் சோலைமலி குயில்கூவக் கோலமயி லாலச் சுரும்பொடுவண் டிசைமுரலப் பசுங்கிளிசொற் றுதிக்கக் காலையிலும் மாலையிலுங் கடவுளடி பணிந்து கசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே.

9. பொரும்பலம துடையசுரன் தாரகனைப் பொருது பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன் கரும்புவிலின் மலர்வாளிக் காமனுடல் வேவக் கனல்விழித்த கண்ணுதலோன் கருதுமூர் வினவில் இரும்புனல்வெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம் இருகரையும் பொருதலைக்கும் அரிசிலின்றென் கரைமேற் கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக் கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே.

10. தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்திற் றடங்கொள்பெருங் கோயில்தனிற் றக்கவகை யாலே வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில் வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின் விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்றென் கரைமேற் கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே.

11. தண்புனலும் வெண்மதியுந் தாங்கியசெஞ் சடையன் தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி உண்பலிகொண் டுழல்பரமன் உறையுமூர் நிறைநீர் ஒழுகுபுனல் அரிசிலின்றென் கலயநல்லூர் அதனை நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன் நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய் பண்பயிலும் பத்துமிவை பத்திசெய்து நித்தம் பாடவல்லா ரல்லலொடு பாவமிலர் தாமே.

சுந்தரர் பதிகத்தின் 10-வது பாடலின் படி இத்தலம் சுந்தரர் காலத்தில், அதாவது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இக்கோயில் பெருங்கோயில் அமைப்புடையதாய் இருந்தது என்பதும், குளிர்ச்சியை உடைய தாமரைக் குளங்கள் நான்கு புறத்திலும் சூழப்பெற்று அமைந்திருந்தது என்பதும் புலனாகிறது. மேலும் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தின் இயற்கை வளத்தையும் தனது ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார்.

சிறுவர் கூட்டம் துள்ளி விளையாடுதலின் காரணமாக ஓசை எழுந்தத்தால், கரிய எருமைகள் மிரண்டு அரிசலாற்றின் நீரில் புக, அதனால் துள்ளி எழுந்த கயல் மீன்கள் தாமரை மலரின்மேல் நெருங்கி விழ, தாமரை மலரைச் சூழ்ந்திருந்த களிப்புடைய வண்டுகளின் கூட்டம் அஞ்சி ஓடுகின்ற திருக்கலயநல்லூர் என்றும்,

தாமரைப் பொய்கைகளில் மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருக்கலயநல்லூர் என்றும்,

பின்னிக்கிடக்கின்ற முல்லைக் கொடியோடு, மல்லிகைக் கொடி, சண்பகமரம் என்னும் இவைகளும் அலைகளால் உந்தப்பட்டு வருகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில், கன்றுக்கூட்டம் நல்ல கரும்பின் முளையில் கறித்தலைப் பழக, பசுக் கூட்டம் மணம் வீசுகின்ற செங்கழுநீர்க் கொடியை மேய்கின்ற வயல் களையுடைய திருக்கலயநல்லூர் என்றும்,

நீரில் அலைகள் மேல் எழுந்து சென்று, ஏலம், இலவங்கம் என்னும் மரங்களோடே இருகரைகளையும் மோதியழிக்கின்ற அரிசிலாற்றின் தென் கரையில், பசிய புன்னை மரங்கள் வெள்ளிய முத்துக்களை அரும்பி, பொன்னை மலர்ந்து, பவளத்தினது அழகைக் காட்டுகின்ற நறுமணச் சோலைகள் சூழ்ந்த திருக்கலயநல்லூர் என்றும்,

வெண்மையான கவரி மயிரும், நீலமான மயில் இறகும், வேங்கை மரம், கோங்கமரம் இவற்றினது வாசனை பொருந்திய மலர்களும் கலந்து வருகின்ற நீரையுடைய அரிசிலாற்றின் தென்கரையில், கணுக்களையுடைய கமுக மரத்தின் அழகிய பாளையில் வண்டுகள் சேர்த்த தேனின் வாசனையோடு கலந்த பல மணங்களை வீசும் தென்றல் காற்றுப் புகுந்து உலாவுகின்ற திருக்கலயநல்லூர் என்றும்,

பலவாறு கலயநல்லூர் தலத்தின் இயற்கை வளத்தை வர்ணிக்கிறார்.

திருச்சிற்றம்பலம்.

Reposting it from Amritha Vahini Google group.

51 views0 comments
bottom of page