பிதுர்தோஷத்தை நீக்கும் பஞ்ச பைரவர் தலம், கொடிய தோஷங்களை தீர்க்கும் அபூர்வ ஆலயங்கள்.
தமிழகத்தில் உள்ள அத்தனை மாவட்டங்களிலும் பெரும்பாலும் கோவில்கள், பாடல்பெற்ற ஸ்தலங்கள், தோஷநிவர்த்தி ஸ்தலங்கள் போன்ற அரிய திருக்கோயில்களால் சூழப்பட்டதாகவே இருக்கும். அந்த வகையில் ஒரு சில ஊர்களை கோயில் நகரம் என்றே நமது முன்னோர் அழைப்பார்கள். அதில் பிரசித்தி பெற்றது கும்பகோணம்.
கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!
*பிதுர் தோஷம் நீக்கும் " ஆவூர் பஞ்ச பைரவர்கள் "*
கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. (ஆ என்றால் பசு ). இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது. இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த "பிதுர் தோஷ நிவர்த்தியாகும்". பிதுர் சம்பந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த பைரவரை வணங்கி பூஜையில் ஈடுபட்டால் உடனடி பலன் கிடைக்கும். சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர். ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் "பிதுர் தோஷமே ". பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.
*இழந்த செல்வம் மீட்டு தரும் " தென்குரங்காடுதுறை "*
சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.
*செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை"*
கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.
*கடன், சங்கடங்கள் போக்கும் " திருபுவனம் சரபேஸ்வரர்"*
*தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற,* கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் அமைந்துள்ள "திருபுவனம் " சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் "சரபேஸ்வரரை" வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம். வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். ஞாயிற்று கிழமைகளின் ராகு கால வேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரம்.
*வறுமை நீக்கும் கடன் நிவர்த்தி தலமாம் "திருச்சேறை"*
ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது தனி சிறப்பு
பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர "ஸ்ரீவாஞ்சியம்"
மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.
*மரண கண்டம் நீக்கும் " திருநீலக்குடி "*
*ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள*் தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக் கோயில், கும்பகோணம் - காரைக்கால் சாலயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் "திருநீலக்குடியாகும்". மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும். ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத் தலத்தில் தானம் செய்ய வேண்டும். எம, மரண பயங்கள் நீங்க இத் தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.
*மாங்கல்ய தோஷம் நீக்கும் " பஞ்சமங்கள ஷேத்திரம் திருமங்கலக்குடி"*
நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.
இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி. இதனால் இவள் "மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர் " எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் " பஞ்ச மங்கள ஷேத்திரம்" எனப்படுகிறது.
*கிரக தோஷங்கள் விலக்கும் " சக்கரபாணி "*
ஆயுதமேந்திய எட்டு திருக்கரங்களுடன், சக்கர வடிவ தாமரை பூவுடன் கூடிய அறுகோண யந்திரத்தில், நின்ற திருக் கோலத்தில் காட்சி தரும் " சக்ககரபாணி " வழிபாடு கிரக தோஷங்கள் நீக்கும். நவக்கிரக நாயகனான சூரிய தேவனே வழிபட்டு தன் தோஷம் நீக்கியதால், இத் தலம் கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை கேது புத்தி போன்ற நவக்கிரக தோஷங்களால் அவதிப்படுபவர்கள் இத் தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும். சக்கரபாணி, ருத்ராம்சம் கொண்டு விளங்குவதால், வன்னி மற்றும் வில்வ இலைகள் அர்ச்சனையும் சிறப்பே.
*பெண் பாவம் தீர்க்கும் " திருவிசநல்லூர் "*
திருவியலூர் எனப்படும் " திருவிசநல்லூரில் "சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார். இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப் பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும். பெண்களின் பாவதிற்க்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் *" மரண பயம் "* நீக்கும் திருத் தலமாகும்.
Reposting it from Amritha Vahini Google group.