top of page

Thirupugazhoor temple

உ.

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.

*கோவை.கு.கருப்பசாமி.*

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

பிரபஞ்ச நாதனே போற்றி!

பிறவாவரமருளு நாயகா போற்றி!

*பாடல் பெற்ற சிவ தல தொடர்.93.*

*சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*

*திருப்புகழூர்.*

(நேரில் சென்று தரிசித்ததைப் போல...........)

*அக்னீஸ்வரர் கோவில், திருப்புகலூர்*

*இறைவன்:* அக்னீஸ்வரர்,, கோணப்பிரான்.

*இறைவி:*

கருந்தாழ் குழலி.

*திருமேனி:* சுயம்பு உருவம்.

*தல விருட்சம்:* புன்னை மரம்.

*தல தீர்த்தம்:*அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்.

பாடல் பெற்ற தேவாரத் தலங்களுள் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் எழுபத்து ஐந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*தொடர்புக்கு:*

91- 4366 237198,

94431 13025,

94435 88339

*தேவாரம் பாடியவர்கள்:*

திருநாவுக்கரசர் - 5

திருஞானசம்பந்தர் - 2

சுந்தரர் - 1

*இருப்பிடம்:* நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலையடையலாம். நன்னிலத்தில் இருந்து சுமார் பத்து கி.மி. தொலைவில் திருப்புகலூர் தலம் இருக்கிறது.

*(இறைவன் அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே கோணப்பிரான் சந்நிதியின் அருகே திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலமும் அமைந்திருக்கிறது.)*

நன்னிலம், சன்னாநல்லூர், நாகப்பட்டிணத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. திருப்புகலூருக்கு அருகில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் மற்றும் இராமனதீச்சுரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளன.

*அஞ்சல் முகவரி:*

நிர்வாக அதிகாரி,

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்,

திருப்புகலூர்,

திருப்புகலூர் அஞ்சல்,

வழி திருக்கண்ணபுரம்,

நாகப்பட்டிணம் வட்டம்,

நாகப்பட்டிணம் மாவட்டம்.

PIN - 609 704

*ஆலய தரிசன காலம்:*

தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*கோவில் அமைப்பு:*

மூவர் பாடல் பெற்ற தலம் என்ற பெருமையுடைய திருப்புகலூர் அக்னீசுவரர் ஆலயம் ஒரு பெரிய கோவில்.

கோவிலின் பரப்பளவு சுமார் 73000 சதுர அடி. கிழக்கு-மேற்கு மதில் சுவர் நீளம் முன்னூறாறு இருபத்தைந்து அடி நீளத்தையும், வடக்கு-தெற்கு மதில் சுவர் நீலம் இருநூற்று இருபத்தைந்து அடி அகலத்தையும் கொண்டு அமைந்தவை.

கோவில் மதில் சுவரை ஒட்டி வெளிப்புறத்தில் நான்கு பக்கமும் அகழி இருக்கின்றது.

மூலவர் அக்னீசுவரர் சந்நிதிக்கு நாம் சென்ற போது, உள்ள நுழைவு வாயிலின் கோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி கிடைக்கவும், *சிவ சிவ* என மொழிந்து கோபுரத் தரிசனம் செய்து கொண்டோம்.

இக்கோப்பு ரத்தினம் உயரம் சுமார் தொன்னூறு அடி உயரத்துடன் இருந்தது.

உள்ளே நுழைந்ததும் நாம் முதலில் பார்த்தது இறைவி கருந்தாழ்குழலியின் தெற்கு நோக்கிய சந்நிதியைத்தான்.

அம்பாளின் சந்நிதியின் பக்தர் கூட்டம் குறைவாக இருக்க தரிசனம் செய்ய​ இலகுவாக இருந்தது.

அம்மையை வணங்கி தீபராதனையை எடுத்துக் கொண்டு, அம்மையின் அருட்பார்வைகளை அள்ளிக்கொண்டு, குங்குமப் பிரசாதத்துடன் வெளிவந்தோம்.

இந்த சந்நிதியை ஒட்டியே மூலவர் அக்னீசுவரர்இருக்க, அங்கு சென்று மனமுருக பிரார்த்தித்துக் கொண்டோம்.

மூலவரான ஈசன் சுயம்புவாக காட்சியளித்தார். சுயம்புலிங்கமான மூலவருக்கு *கோணப்பிரான்* என்ற பெயரையும் உச்சரிக்கிறார்கள்.

மூலவருக்குப் பக்கத்தில் சந்திரசேகரர் தனிச்சந்நிதி இருக்க இவரையும் வணங்கிக் கொண்டோம். இங்கு இவரே பிரதானமாவார்.

கோஷ்டத்தில் வலம் வரும்போது, மூர்த்தங்களாக விநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர் ஆலிங்கனகல்யாண சுந்தரர் முதலிய மூர்த்தங்கள் இருக்கிறார்கள்.

ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டே வலம் வந்தோம்.

மூலவர் சந்நிதிக்கு வடக்கே வர்த்தமானீசுவரர், அவர் துணைவி மனோண்மனிக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன. அங்கும் சென்று கைதொழுது கொண்டோம்.

இந்த வர்த்தமானீசுவரரைப் பாராட்டி சம்பந்தர் தனியாக ஒரு பதிகம் பாடி இருக்கிறார்.

மூலவரைச் சுற்றி உள்ள உட்பிரகாரத்தில் சந்திரசேகரர், திரிபுராந்தகர், அக்னி, பிரம்மா ஆகியோரின் செப்புச் சிலை வடிவங்களைக் காணப் பேறு கிடைத்தது.

நவக்கிரகங்கள் இங்கு மற்ற கோவில்களில் இருப்பதைப் போல் இல்லாமல் "ட" என்ற அமைப்பில் இருக்கிறார்கள். அனுக்கிரக சனீஸ்வர பகவானும், நளச்சக்கரவத்தியும் ஒரு சன்னதியில் உள்ளனர்.

*சிறப்பு:*

இத்தலத்தில் அக்னி பகவான் இறைவனை நோக்கி தவம் செய்து பேறு பெற்றிருக்கிறார். அக்னி பூஜித்த தலமாதலால் இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருநாமம்.

அக்னி தவம் செய்யும் போது தன்னைச் சுற்றி ஒரு தீர்த்தம் அமைத்துக் கொள்கிறார். அதுவே கோவில் வெளிப்புறத்தில் அகழியாக, அக்னி தீர்த்தமாக விளங்கிறது.

இத்தலத்து இறைவன் கோணப்பிரான் என்று அழைக்கபடுவதற்கும் காரணம் உண்டு. பாணாசுரன் என்ற அசுரனின் தாயார் சிவபூஜை செய்பவள்.

தாயாரின் பூஜைக்காக சுயம்பு லிங்கங்களைப் பெயர்த்து எடுத்து வருகிறான் பாணாசுரன். ஆணால் திருப்புகலூர் அக்னீசுவரரை பெயர்த்து எடுக்க முடியாமல் போகவே தன்னையே பலி கொடுக்க முயர்ச்சி செய்யும் போது இறைவன் அவனை தடுத்து ஆட்கொள்கிறார்.

பாணாசூரன் தோண்டிய அகழியே நாற்புறமும் தீர்த்தமாக உள்ளது. அவன் தாயாரின் பூஜையை இருந்த இடத்தில் இருந்தே ஏற்றுக் கொண்டதின் அடையாளமாக தலை சாய்த்து காட்சி அளிக்கிறார்.

அதனாலேயே இறைவன் கோணப்பிரான் என்றும் கூறப்படுகிறார்.

இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும் அக்னி பகவான் பாபவிமோசனம் பெற்றதாலும் புதியதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கமாம்.

*செங்கற்கள் பொற்கட்டிகளாக மாறியது:*

திருவாரூரில் பங்குனி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும். ஒரு சமயம் அவ்வாறு பங்குனி விழாவின் போது தனது மனைவி பரவையார் செலவிற்குப் பொன் பெற விரும்பி சுந்தரர் திருப்புகலூர் வந்தார்.

திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி தனது கருத்தைப் பதிகத்தில் வைத்துப் பாடினார். பிறகு மற்ற அடியார்களுடன் கோவிலில் சிறிது நேரம் இளைப்பாறினார்.

தூங்குவதற்காக அங்கிருக்கும் செங்கற்களை தலைக்கு உயரமாக வைத்துத் தம் மேலாடையாகிய வெண்பட்டை விரித்துப் படுத்தார்.

துயில் நீங்கி சுந்தரர் எழுந்தபோது தம் தலையணையாக வைத்திருந்த செங்கற்களெல்லாம் பொற்கட்டிகளாக மாறி இருக்கக் கண்டு வியப்படைந்தார்.

இறைவனை *'தம்மையே புகழ்ந்து'* என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி வணங்கினார்.

அப்பர் (திருநாவுக்கரசர்) தனது என்பத்தொன்பதாம் வயதில் இத்தலத்தில் உழவாரப் பணி செய்த போது, இறைவன் சித்திரை சதய நட்சத்திர நாளில் அவருக்கு முக்தி கொடுத்தார்.

எனவே, இது சதய நட்சத்திர தலமாக விளங்குகிறது. இவருக்கு இக்கோவிலில் தனி சந்நிதியும் இருக்கிறது.

சித்திரை சதயத்தை ஒட்டி இவ்வாலயத்தில் பத்து நாள் திருவிழா நடக்கிறது. அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக கலக்கும் நிகழ்ச்சி இப்போது ஐதீகமாக நடத்தப்பட்டு வருகின்றது.

*"எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ? எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன், மற்றோர் களைகண் இல்லேன், சுழல் அடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுள்ளே ஒன்பது வாசல் வைத்தாய், ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன், புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே"*

என்று தொடங்கும் பதிகம் பாடிக்கொண்டே அப்பர் இறைவனுடன் ஒரு சித்திரைச் சதய நாளில் இரண்டறக் கலந்து விட்ட சிவஸ்தலம் திருப்புகலூர்.

அறுபத்து மூவர் நாயன்மார்களில் ஒருவரான முருக நாயனாருடைய அவதார தலம் திருப்புகலூர். முருக நாயனாருக்கு இத்தலத்தில் சந்நிதி உள்ளது. இத்தலத்திலிருந்த முருகநாயனார் திருமடத்தில் சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலியோர் கூடியிருந்து மகிழ்ந்த செய்தி பெரிய புராணத்தில் உள்ளன.

குறிகலந்தவிசை பாடலினான்நசை

யாலிவ்வுலகெல்லாம்

நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு

தேறிப்பலிபேணி

முறிகலந்ததொரு தோலரைமேலுடை

யானிடமொய்ம்மலரின்

பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய

லாரும்புகலூரே.

சுரத்தானங்களைக் குறிக்கும் இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவன். உயிர்கள் மீது கொண்ட பெருவிருப்பால் இவ்வுலகம் முழுவதும் வாழும் அவ்வுயிர்கள் தம்மை உணரும் நெறிகளை வகுத்து அவற்றுள் கலந்து நிற்பவன். எருதின்மிசை ஏறி வந்து மக்கள் இடும்பிச்சையை விரும்பி ஏற்பவன். இடையில் மான் தோலாடையை உடுத்துபவன். அவன் விரும்பி உறையும் இடம் செறிந்த மலர்கள்மீது புள்ளிகளை உடைய வண்டுகள் மொய்த்துத் தேனுண்ணும் வானளாவிய பொழில் சூழ்ந்த புகலூராகும்.

காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு

மார்பனனொருபாகம்

மாதிலங்குதிரு மேனியினான்கரு

மானின்னுரியாடை

மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ

மேவும்மிடஞ்சோலைப்

போதிலங்குநசை யால்வரிவண்டிசை

பாடும்புகலூரே.

காதில் விளங்கும் குழையை அணிந்தவன். பூணூல் அணிந்த அழகிய மார்பினன். இடப்பாகமாக உமையம்மை விளங்கும் திருமேனியன். யானையினது தோலை உரித்து மேல் ஆடையாக அணிந்தவன். அத்தகையோன் இமையவர் தொழமேவும் இடம், சோலைகளில் தேனுண்ணும் விருப்பினால் வரிவண்டுகள் இசைபாடும் புகலூராகும்.

பண்ணிலாவும்மறை பாடலினான்இறை

சேரும்வளையங்கைப்

பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழல்

என்றுந்தொழுதேத்த

உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா

வொருவன்னிடமென்பர்

மண்ணிலாவும்மடி யார்குடிமைத்தொழின்

மல்கும்புகலூரே.

இசையமைதி விளங்கும் வேத கீதங்களைப் பாடுபவன் - முன்கைகளில் வளையல்கள் விளங்கும் அழகிய கைகளை உடைய உமையம்மையைத் தனது தேவியாக உடையவன். தன் திருவடிகளை என்றும் தொழுது ஏத்தும் பெரியவர்களின் உள்ளத்தே விளங்குவதோடு அவர்களின் அடிமனத்தில் என்றும் நீங்காதிருப்பவன். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் நிலவுலகில் வாழும் அடியவர்கள் குடும்பத்துடன் வந்து பணி செய்யும் புகலூராகும்.

நீரின்மல்குசடை யன்விடையன்அடை

யார்தம்மரண்மூன்றுஞ்

சீரின்மல்குமலை யேசிலையாகமு

னிந்தானுலகுய்யக்

காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட

கடவுள்ளிடமென்பர்

ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர்

வெய்தும்புகலூரே.

கங்கை நீரால் நிறைவுற்ற சடைமுடியை உடையவன். விடையூர்தியன். முப்புரங்களையும் சிறப்புமிக்க மேருமலையை வில்லாகக் கொண்டு முனிந்தவன். உலக உயிர்கள் உய்யக் கருநிறமுடைய கடலிடையே தோன்றிய நஞ்சை அமுதமாக உண்ட கடவுள். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் ஒழுக்கத்தால் உயர்ந்த மக்கள் வாழ்ந்து சிறப்பெய்தும் புகலூராகும்.

செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர்

சேரும்மடியார்மேல்

பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத்

தென்றும்பணிவாரை

மெய்யநின்றபெரு மானுறையும்மிட

மென்பரருள்பேணிப்

பொய்யிலாதமனத் தார்பிரியாது

பொருந்தும்புகலூரே.

சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றைப் பூசுபவர். தம்மை வந்தடையும் அடியவர்களைத் தாக்க வரும் வினைகளை நீக்குபவர். என்றும் தம்மைப் பாடிப் பணிவார்க்கு உண்மையானவர். அவர் விரும்பி உறையும் இடம், அருளையே விரும்பிப் பொய்யில்லாத மனத்தவர் நீங்காது வாழும் புகலூர் என்பர்.

கழலினோசைசிலம் பின்னொலியோசை

கலிக்கப்பயில்கானில்

குழலினோசைகுறட் பாரிடம்போற்றக்

குனித்தாரிடமென்பர்

விழவினோசையடி யார்மிடைவுற்று

விரும்பிப்பொலிந்தெங்கும்

முழவினோசைமுந் நீரயர்வெய்த

முழங்கும்புகலூரே.

இரண்டு திருவடிகளிலும், விளங்கும் வீரக் கழல் சிலம்பு ஆகியன ஒலிக்கவும், குழல் முதலிய இசைக்கருவிகள் முழங்கவும், குள்ளமான பூதகணங்கள் போற்றவும், பலகாலும் பழகிய இடமாக இடுகாட்டில் முற்றழிப்பு நடனம் புரியும் இறைவனுடைய இடம், திருவிழாக்களின் ஓசையும், அடியவர் மனமகிழ்வோடு எங்கும் முழக்கும் முழவோசையும் கடலோசையைத் தளரச் செய்யும் ஒலியைத் தரும் புகலூர் என்பர்.

வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல்

விளங்கும்மதிசூடி

உள்ளமார்ந்தவடி யார்தொழுதேத்த

வுகக்கும்அருள்தந்தெம்

கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த

கடவுள்ளிடமென்பர்

புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம்

மல்கும்புகலூரே.

கங்கைநீர் அடங்கி விளங்கும் செஞ்சடைமேல் விளக்கமான பிறைமதியைச் சூடி, தம்மிடம் மனம் ஒன்றிய அடியவர் தொழுது ஏத்த அவர்கள் மனம் மகிழும் அருளைப் புரிந்து என்னைப் பற்றிய வினையையும் பழியையும் தீர்த்தருளிய கடவுள் உறையும் இடம், மீன் கொத்தி முதலிய பறவை இனங்கள் மீன்களைக் கவர வந்து தங்கும் வயல்களின் விளைவால் வளம் மல்கிய புகலூராகும்.

தென்னிலங்கையரை யன்வரைபற்றி

யெடுத்தான்முடிதிண்டோள்

தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை

கேட்டன்றருள்செய்த

மின்னிலங்குசடை யான்மடமாதொடு

மேவும்மிடமென்பர்

பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி

தோயும்புகலூரே.

அழகிய இலங்கை அரசனாகிய இராவணன் கயிலை மலையை இரு கரங்களாலும் பற்றி எடுத்தபோது அவனுடைய தலைகள், திண்ணிய தோள்கள் ஆகியவற்றைத் தன் கால் விரலால் நெரித்துப் பின் அவன் சாமகானம் பாடக்கேட்டு அன்று அவனுக்கு அருள் செய்தவனாகிய தாழ்ந்த சடைமுடி உடைய பெருமான் தன் தேவியோடு மேவும் இடம், மதி தோயும் அழகிய மாளிகைகள் நிறைந்த புகலூராகும்.

நாகம்வைத்தமுடி யானடிகைதொழு

தேத்தும்மடியார்கள்

ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு

மாலுந்தொழுதேத்த

ஏகம்வைத்தவெரி யாய்மிகவோங்கிய

எம்மானிடம்போலும்

போகம்வைத்தபொழி லின்னிழலான்மது

வாரும்புகலூரே.

பாம்பை முடிமிசை வைத்துள்ளவனும், தன் திருவடிகளைப் போற்றும் அடியார்கள், தம் மனத்தின்கண் வைத்துப் போற்றும் தலைவனும், பிரமனும், திருமாலும் தொழுதேத்த ஏகனாய் எரி வடிவில் மிக ஓங்கிய எம்மானுமாகிய இறைவனுக்கு மிக உகந்த இடம், பல்வகைப் பயன்களையும் தருவதோடு நிழலாற் சிறந்ததாய்த் தேன் நிறைந்து விளங்கும் பொழில் சூழ்ந்த புகலூராகும்.

செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர்

செப்பிற்பொருளல்லாக்

கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள்

கடவுள்ளிடம்போலும்

கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு

தூவித்துதிசெய்து

மெய்தவத்தின்முயல் வாருயர்வானக

மெய்தும்புகலூரே.

எண்ணிக்கையில் மிக்கதேரர், சாக்கியர் சமணர்கள் ஆகியவர்களின் உண்மையல்லாத வஞ்சகம் நிறைந்த மொழிகளைக் கேளாதவராய், மிகுதியான தவத்தைச் செய்யும் மெய்யடியார் களின் தலைவராகிய சிவபிரானுக்கு மிக உகந்த இடம், அடியவர்கள் மலர் கொய்து வந்து தூவிப் புனலாட்டித் துதி செய்து தவநெறியில் முயன்று உயர் வானகத்தை எய்துதற்குரிய வழிபாடுகளை ஆற்றும் புகலூராகும்.

புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன்

மேவும்புகலூரைக்

கற்றுநல்லவவர் காழியுண்ஞானசம்

பந்தன்றமிழ்மாலை

பற்றியென்றும்இசை பாடியமாந்தர்

பரமன்னடிசேர்ந்து

குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக

ழோங்கிப் பொலிவாரே.

புற்றில் வாழும் பாம்புகளை இடையிலே கட்டியவனாகிய சிவபிரான் எழுந்தருளிய புகலூர்மீது இறைவனது பொருள் சேர் புகழைக் கற்று வல்லவர்கள் வாழும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை, என்றும் இசையோடு பாடி வழிபடும் மாந்தர்கள் இறைவன் திருவடி நீழலை அடைந்து குற்றம் குறைபாடு அகன்று புகழோங்கிப் பொலிவெய்துவார்கள்.

*பொது தகவல்:*

பாணாசுரன் வெட்டிய அகழியே இப்போது ஆலத்துக்கு வெளியே காணப்படுகிறது.

*தல விநாயகர்:*

ஞான விநாயகராக அருள்பாலிக்கிறார்.

*வியப்புரியது:*

இங்கு அக்னிக்கு, இரண்டு முகம், ஏழு கை, ஏழு ஜுவாலை, நான்கு கொம்புகள், மூன்று பாதங்களைக் கொண்ட உருவம் உள்ளன.

திருச்சிற்றம்பலம்.

Reposting it from Amritha Vahini Google group.

241 views0 comments
bottom of page