உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை கு. கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*பாடல் பெற்ற சிவ தல தொடர். 90.*
*சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*
பிரபஞ்ச நாதனே போற்றி!
பிறவாவரமருளுநாயகா போற்றி!
*திருக்கொண்டீச்சரம்.*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல...........)
திருக்கொண்டீச்சரம். (மக்கள் வழக்கில் திருக்கண்டீஸ்வரம் என்று வழங்கி வருகிறார்கள்.)
தேவாரம் பாடல் பெற்ற தலங்களுள் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் எழுபத்து இரண்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*இறைவன்:* பசுபதீஸ்வரர்.
*இறைவி:* சாந்தநாயகி.
*தல விருட்சம்:* வில்வம், இலவம்.
*தல தீர்த்தம்:* க்ஷீரபுஷ்கரிணி.
*ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.
*இருப்பிடம்:*
நன்னிலத்தில் இருந்து கிழக்கே சுமார் மூன்று கி.மி. தொலைவில் முடிகொன்டான் ஆற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது.
நாகப்பட்டினம் - நன்னிலம், மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி (வழி நன்னிலம்), நாகப்பட்டினம் - கும்பகோணம் (வழி நன்னிலம்) முதலிய பாதைகளில் வருவோர், நன்னிலம் ஊருக்குள் நுழைவதற்கு முன்னால் "தூத்துகுடி நிறுத்தம்"” என்னுமிடத்தில் பிரியும் பாதையில் உள்ளே சென்றால் வெகு அருகாமையிலுள்ள கோயிலை அடையலாம்.
*அஞ்சல் முகவரி:*
நிர்வாக அதிகாரி,
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்,
திருக்கண்டீஸ்வரம்,
தூத்துக்குடி அஞ்சல்,
வழி சன்னாநல்லூர்,
நன்னிலம் R.M.S.
திருவாரூர் மாவட்டம்,
PIN - 609 504
*ஆலய பூஜை காலம்:*
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*ஆலய தொடர்புக்கு:*
T.K.வெங்கடேச குருக்கள், கைபேசி: 94430 38854 ,
91-4366 228 033.
*கோவில் அமைப்பு:* இவ்வாலயத்திற்கு சென்று ஆலயத்துக்கு பிரவேசித்தபோது, இராஜகோபுரமில்லாது கண்டு மனசுக்கு என்னவோ போலிருந்தது.
ஏனென்றால் ஒவ்வொரு ஆலயத்துக்கும் சென்று நுழையும்போது, முதலில் நம் கண்கள் கோபுயத்தைத் தேடும், சிரம்மேல் கைகுவிக்க மனம் சொல்லும்.
கோபுரத் தரிசனம் இல்லாதது எதையோ ஒரு சுமையை இழந்து விட்டது போன்ற ஒரு உணர்வு தெரிந்தது அவ்வளவுதான்.
உள் புதுகையில், ஆலயத்தைச் சுற்றி மூன்று புறமும் நீர் நிறைந்த அகழியால் சூழப்பட்டிருந்தது.
இந்த அகழியே க்ஷீரதீர்த்தம் எனப்படுகிறது.
அடுத்து ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள் நுழைந்தோம். முகப்பு வாயிலின் மேலாக பசு ஒன்று சிவலிங்கத்தின் மீது பால் சொரிவது போன்ற சுதைச்சிற்பம் ஒன்றை உருவாக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.
வாயிலைக் கடந்து உள்ளே சென்றோம். முதலாவதாக கொடிமரத்து விநாயகரைக் கண்டு விட்டோம். விடுவோமா?...வழக்கமான காதைத் திருத்துதல், தோப்புக்கரணமிடுதல் போன்றவைகளை அவரிடம் செலுத்தி, மேலும் உள் சென்று ஆலயத் தொழுகை செய்து கொள்ள அனுமதி வேண்டிக் கொண்டோம்.
விநாயகருக்கு அடுத்ததாக இருந்த பலிபீடத்தருகே வந்து அதன் முன்பு நின்று இதற்கும் வழக்கம்போல நம் ஆணவத்தை, பலியிடுதலை செய்வித்து நகர்ந்தோம்.
போன தடவை ஆலயமொன்றுக்கு சென்று பலிபீடத்தில் ஆவணமலத்தை பலியிட்டு விட்டு வந்த பிறகு, இப்போது இந்த ஆலயம் வரும் வரை, நம் எண்ணத்துள் எந்த ஒரு ஆணவமலமும் எழுந்ததாய் எண்ணமில்லை.
இருந்ததோ!" இல்லையோ?" பலிபீடத்தில் ஆணவத்தை பலியிடுவதென்பது வழக்கமாகக் கொண்டுவிட்டோம்.
ஆணவமலம் இல்லையென்பதற்காக, பலிபீடத்தை பிரிந்தொதுங்கிப் போய்விடக் கூடாதே! எனவேதான் பலிபீடத்தில் மும் நம் சரணாகதியை செலுத்தி நகர்ந்தோம்.
அடுத்து நந்தி மண்டபம் இருந்தது...... *(என்ன நந்தி வணக்கத்தையும் சரணமாகச் சொல்லப் போகிறீர்களா? எனக்கு கேட்கத் தோனுமே?)*
தோண்டும்! இதில் தவறென்ன இருக்கிறது!. ஒவ்வொரு முறையும் ஆலயம் சென்று எல்லாத் திக்கிலும், எல்லாரையும் வணங்கி வருவதில்லையா? ...
போனதடவை இவ்வாலத்திற்கு வந்திருந்தபோது எல்லாவற்றையும் வணங்கினோமே!" ..... ஆதலால் இந்தத் தடவை மூலவரை மட்டும் பார்த்து விட்டு வந்திரலாம் என்றா செய்கிறோம்.. அனைத்தையும் திரும்ப வணங்கித்தானே வருகிறோம்.
அதுபோலதான் இந்த ஆலயப் பிரவேச சரணத்தை ஓயாமல் எழுதுகிறேன். கொஞ்சம் எரிச்சல் போலதானிருக்கும் உங்களுக்கு. அப்படி ஏதாவது எரிச்சல் இருப்பின் அடியார்கள் மன்னிக்கவும்!
சிவ சிவ திருச்சிற்றம்பலம்.
அடுத்தான இரண்டாம் வாயிலைக் கடந்து உள்ளே சென்றோம்.
வெளிப் பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, சுப்பிரமணியர், கஜலட்சமி சந்நிதிகள் இருக்க தொடர்ச்சியாக அனைவரையும் வணங்கிப் பணிந்தெழுந்தோம்.
பொதுவாக பாடல் பெற்ற அனேக தலங்களில் சிவன் சுயம்பு மூர்த்தியாகத்தான் அருள்பாலிப்பார்.
அதேபோன்றுதான் இத்தலத்திலும் ஈசன் சுயம்புவாக எழுந்தருளி கருணைகளை நம்மிடம் வழங்குவதற்கு இருபத்து நான்கு மணிநேரமும் எதிர்பார்த்து அமர்ந்திருக்கிறார்.
கருணையை கொடுப்பதற்கு அவர் கருவறையில் எந்நேரமும் காத்திருக்கிறார்.
நமக்குத்தான் நிறைய வேலை இருக்கிறது, நிறைய சம்பாதிக்க ஆசை இருக்கிறது, அவர் கருணையை பெற்றுச் செல்ல மெனக்கிடுவதில்லை.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னெல்லாம் ஆலயம் வெறுமனே இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலபேர்கள் சென்று வருவார்கள்.
இப்பொதெல்லாம் அப்படியில்லை. வழிபாட்டுக்கு கூட்டம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
அடி, வலி, வந்திருக்கும் போல....ஓடு...ஓடு...என்று கோயிலுக்கு ஓடி ஓடி வருகிறோம். நானும் ஒரு சமயம் அப்படித்தான் இருந்தேன்.
*அடி-க்கும், வலி-க்கும் விலையில்லா மருந்து நமக்கு அவன்தானே!*
எனக்கொரு ஈசியான ஒரு பிரிவுபகாரம் இருக்கிறது. என்னுடைய பணி கட்டிட பெயிண்டிங் வேலை செய்வது. ஊர் ஊராகச் செல்ல இறைவன் எனக்கு ஏற்படுவான்.
எந்த ஊரில் வேலை செய்கிறோமோ, அந்த ஊர் இறைவனை, பணிமுடித்தோ, அல்லது பணிக்கிடையிலோ அவனைத் தொழும் வசதி எனக்கு வாய்த்திருக்கிறது.
அப்போது, பெரும்பாலும் ஆலயத்தைப் பற்றிய குறிப்பெடுக்கப்பட்டவை சிலதான் அடியேன் பதிவுக்கு முதுகெலும்பு. இத்துடன் மேலும் பல வகையான நூல்கள், தேடல்கள், ஆதாரப்பூர்வமானவைகள் சேர்ந்துதான் இந்த *பதியும் பணியே பணியாய் அருள்வாய்* சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.
இருப்பினும் கொஞ்சம் மாற்றம் மானிடத்திடம் விழித்திருக்கிறது.
மூலவர் சந்நிதியிலிருந்த நாம் அவரை நினைந்து நெக்குருகி பிரார்த்தனை செய்து கொண்டோம்.
ஈசன் சுயம்புவானவர், சிறு பாணத்துடனான திருமேனியுடன், ஆழமான வடு ஒன்றுடன் இரு பிளவுபோல கருணையாகத் தெரிந்தார்.
நெஞ்சுருக நினைந்து நெக்குருகி வணங்கினோம். நம் விழியோரத்தை ஈரப்படுத்தி நம்முள் உள் புகுந்தார்.
நல்ல தரிசனத்திற்குப் பிறகு அர்ச்சகர் தந்த வெள்ளிய விபூதியை பெற்றுக் கொண்டு, நம் நெற்றியில் நீறு குறையிலாதிருக்க, அர்ச்சகரிடம் பெறப்பட்ட விபூதியை, அங்கிருக்கும் தூணிலும் சந்திடையிலும் தூவாது, மீண்டும் நம் நெற்றினிலே திரித்திட்டுக் கொண்டோம். சிவ. சிவ. திருச்சிற்றம்பலம்.
மூலவர் தரிசனம் நன்கு அமைந்தது. சிறிது ஓய்வுக்காகவும், மூலவரைத் தரிசனத்திற்குப் பின், சற்று அங்கே அமர வேண்டும், அதை கடைபிடித்தோம்.
சிறு ஓய்வுக்குப்பின் எழுந்து வருகையில், கருவறை முன் லிங்கவடிவ மூர்த்திக்கு காமதேனு பால் சொரியும் காட்சியைக் கண்டோம். அற்புதக் காட்சி அது.
கருவறைப் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர், நம் பெருமானார் திருநாவுக்கரசர் போன்றோர்களின் சன்னதிகளுக்குச் சென்று தொடர்ச்சியாக ஒவ்வோருத்தரையும் வணங்கிக் கொண்டோம்.
சுவாமி மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் மூன்று தலைகள், மூன்று கால்களுடன் ஜுரஹரேஸ்வரர் இருக்கிறார். நீங்கள் செல்லும் போது அங்கு அந்தத் தூணைப் பாருங்கள்.
ஏனென்றால், நாம் தேடுமிடத்திலெல்லாம் ஜூரஹரேஸ்வரர் இருப்பதற்கில்லை. அவர் இருக்குமிடத்தில் அவரை பார்த்துக் கொள்வது சரி.
அகத்தியர் ஒருமுறை இத்தலத்திற்கு சுவாமியை வழிபட வந்தபோது கடுமையான காய்ச்சலால் அவதியுற்றார். இறைவன் ஜுரதேவராக வந்து அகத்தியரின் காய்ச்சலைப் போக்கினார் என்று சொல்லப்படுகிறது.
ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, அன்னத்துடன் மிளகுரசம் வைத்து வழிபட்டால் பரிபூரண குணமாகிவிடுகிறது என்பது இங்கு தோண்டும் நம்பிக்கை.
மற்றத் தூண்களை நோக்கினோம். அத்தூண்களில் காமதேனு, அம்பாள் வடிவம் போன்ற சிற்பங்கள் இருந்தன.
தொடர்ந்து வருகையில் வெளவால் நெத்தி மண்டபத்தின் வலதுபுறமாக அம்பாள் சாந்தநாயகியின் சந்நிதி தனிக்கோவிலாக இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.
ஈசனிடம் வேண்டி நின்று வணங்கிக் கொண்டது போல, அம்மையையும் வணங்கி, அவளருட் கருணைப் பார்வையையும், குங்குமப் பிரசாதத்துடனும் வெளிவந்தோம்.
இம் மண்டபத்தில் ஆபத்சகாய மகரிஷியின் உருவமும் உள்ளது.
*தேவாரம் பாடியவர்கள்:*
இத்தலத்திற்கு 4-ம் திருமுறையில் ஒரு பதிகமும், 5-ம் திருமுறையில் ஒரு பதிகமும் ஆக திருநாவுக்கரசரின் இரண்டு பதிகங்கள் உள்ளன.
*தல அருமை:*
ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார்.
அதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக பிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். தேவியும் கயிலையில் இருந்து பூலோகத்திற்கு வந்தாள்.
பசுவாக மாறிய அன்னை வில்வவனத்தில் இறைவனைத் தேடி வரும்போது தனது கூர்மையான கொம்புகளால் பூமியை ஆழத் தோண்டுகிறாள்.
அவ்வாறு அன்னை பூமியைத் தோண்டிய போது, பூமியில் லிங்க உருவில் மறைந்திருந்த சுவாமியின் சிரசை கொம்பு இரு பாகமாகக் கிழித்து விட்டது.
பாணமாக உள்ள லிங்கத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. பசு வடிவம் கொண்ட அம்பிகை பாலைச் சொரிந்து ரத்தம் வருவதை நிறுத்த முற்பட்டாள்.
பால் லிங்கத்தின் மீது பட்டவுடன் அம்பிகை தன் சுயவுரு பெற்றாள். லிங்கத்தினிலிருந்து இன்னும் ரத்தம் வடிவதைக் கண்ட அம்பிகை தனது கரத்தினால் லிங்கத்தின் சிரசைப் பற்ற, ரத்தம் வருவது நின்று இறைவன் வெளிப்பட்டு அம்பிகைக்கு சாபவிமோசனம் அருளினார்.
இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம். ஆலய குருக்களிடம் காண்பிக்கச் சொன்னால், சிவலிங்கத்தின் பாணத்தில் உள்ள வெட்டுப் பகுதியைக் காட்டுவார்.
*தல பெருமை:*
காமதேனு வழிபட்ட தலம். "கொண்டி' என்றால் *"துஷ்ட மாடு'* என்று பொருள்.
கொண்டி வழிபட்டதால் இத்தலம் *"கொண்டீஸ்வரம்'* என அழைக்கப்படுகிறது. தற்போது மக்களால் திருக்கண்டீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.
உமை, பசுவின் வடிவில், தன்கொம்பால் பூமியைக் கிளறியவாறே இறைவனைத் தேடிவந்தபோது, கொம்புப்பட்டுக் குருதி பெருகி இறைவன் வெளிப்பட்டார்.
உமை (பசு) தன் பாலையே பெருமான்மீது (சிவலிங்க மூர்த்தம்) சொரிந்து புண்ணை ஆற்றினாள் என்பது தல பெருமை.
*தேவாரம்:*
கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால்
மண்டி யேச்சுணும் மாதரைச் சேராதே
சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தஅக்
கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே.
நெஞ்சமே ! இழிந்த தன்மையுடைய காமத்தில் வயப்பட்டு நிந்தைக்கு உரியவர்களாகிக் காலத்தை வீணாகக் கழிக்காதே. சிவபெருமான், சண்டேஸ்வர நாயனாருக்கு அருள் செய்த பரமர், அவர் கொண்டீச்சரத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமானுடைய திருக்கழலை ஏத்தி மகிழ்க.
சுற்றமும் துணை நன்மட வாளொடு
பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர்
குற்ற மில்புகழ்க் கொண்டீச் சுரவனார்
பற்ற லால்ஒரு பற்றுமற்று இல்லையே.
உறுதுணையாய் விளங்கும் சுற்றத்தினரும், மனைவி, மக்கள் ஆகியோரும் அந்திமக் காலத்தில் உற்ற துணையாக இருந்து பேணுதலைத் தவிர்த்தனர். நெஞ்சமே ! குற்றமில்லாத புகழுடைய கொண்டீச் சுரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானைப் பற்றுவதைத் தவிர வேறு எதனைப் பற்றினாலும் பயனில்லை.
மாடு தானது இல்லெனில் மாநுடர்
பாடு தான் செல்வார் இல்லைபன் மாலையாற்
கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப்
பாடு மின்பர லோகத்து இருத்துமே.
செல்வம் இல்லை என்றால், மானுடர் நெருங்கிச் சார்ந்து இருக்க மாட்டார்கள். தோத்திரப் பாமாலை கொண்டு திருக்கொண்டீச்சரத்துள் மேவும் சிவபெருமானைப் பாடுவீராக. அப்பரமன், உம்மைத் தனது உலகில் இருத்தி மகிழுமாறு செய்வார்.
தந்தை தாயொடு தாரம் என்னும் தளைப்
பந்தம் ஆங்குஅறுத் துப்பயில் வெய்திய
கொந்த விழ் பொழிற் கொண்டீசர் சுரவனைச்
சிந்தை செய்மின் அவனடி சேரவே.
தந்தை, தாய், தாரம் என்று பந்தப்படுத்துகின்ற தளையை அறுத்துப் பூங்கொத்துகள் விளங்கும் பொழில் உடைய கொண்டீச்சரத்தில் மேவும் சிவபெருமானைச் சிந்தை செய்வீராக. அது, அப்பரமனுடைய திருவடியைச் சென்றடைவதற்குரிய வழியாகும்.
கேளுமின்இள மைய்யது கேடுவந்து
ஈளை யோடுஇரு மல்லது எய்தன்முன்
கோர ராஅணி கொண்டீச் சுரவனை
நாளும் ஏத்தித் தொழுமின் நன்காகுமே.
மாந்தர்காள் ! கேட்பீர்களாக ! இளமையானது ஒரு கால கட்டத்தில் அழியக்கூடியது. உடலானது, கேட்டினை அடைந்து ஈளையும் இருமலும் கொள்ளும். அத்தகைய இடர் நேருவதன் முன்பாக, பாம்பினை அணிகலனாகக் கொண்டு விளங்குகின்ற கொண்டீச்சரத்தில் வீற்றிருக்கும் சிவ பெருமானை நாள்தோறும் ஏத்தித் தொழுவீராக. அதுவே நற்கதியைத் தந்து எழில்பெறச் செய்யும்.
வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்ப மும்துய ரும்எனும் சூழ்வினை
கொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை
எம்பி ரான்என வல்லவர்க்கு இல்லையே.
பூங்கொம்பு அனைய மங்கையர்கள் இறைத் தொண்டு ஆற்றும் கொண்டீச்சுரத்தில் மேவும் எம் சிவபெருமானை ஏத்தி வணங்கும் அன்பர்களுக்கு வெம்பும் தன்மையில் உள்ள பிணி, இடர், பயனற்ற தன்மை, உடல் துன்பம், மனத்துயர் முதலானவை சேர்க்கும் தீய வினையானது இல்லை.
அல்ல லோடுஅரு நோயில் அழுந்திநீர்
செல்லு மாநினை யாதே கனைகுரல்
கொல்லை யேறுடைக் கொண்டீச்சுரவனை
வல்ல வாறு தொழவினை மாயுமே.
நெஞ்சமே ! இப் பிறவியில் உற்ற அல்லல்களும் பிணிகளும் நீங்குவதற்கு உரிய வழி யாது என்று தேவி நினைத்துக்கொண்டு இருக்க வேண்டாம். இடப வாகனத்தையுடைய சிவபெருமான் கொண்டீச்சுரத்தில் வீற்றிருக்க, அப் பரமனை வல்லவாறு தொழுமின், வினை யாவும் தீரும்.
நாறு சாந்தணி நன்முலை மென்மொழி
மாறிலா மலை மங்கையொர் பாகமாக்
கூற னார்உறை கொண்டீச் சுரநினைத்து
ஊறு வார்தமக்கு ஊனம்ஒன்று இல்லையே.
நறுமணம் கமழும் திருமேனியுடைய மென்மையான மொழிகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, கொண்டீச்சுரத்தில் மேவும் சிவபெருமானை நினைந்து, ஏத்திக் கசிந்துருகிப் போற்றும் அன்பர்களுக்கு, எத்தகைய குறைபாடும் இல்லை.
இத் திருத்தலத்தில் மேவும் தேவியின் திருப்பெயரானது, மென் மொழி மாறிலா மலை மங்கை எனக் குறிப்பால் உணர்த்துவதாயிற்று. தேவியின் பெயர் சாந்தநாயகி என்பதனைக் காண்க.
அயிலார் அம்பெரி மேருவில் லாகவே
எயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன்
குயிலா ரும்பொழிற் கொண்டீச் சுரவனைப்
பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே.
சிவபெருமான், மேருமலையை வில்லாக ஏந்தி, அக்கினித் தேவனை கூர்மையுடைய அம்பாகக் கொண்டு முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர். அவர் குயில்கள் மகிழ்ந்து பாடும் பொழில் விளங்கும் கொண்டீச்சரத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமானை ஏத்தி வணங்குபவர்கள் பெருமை மிக்கவர்களாவர். இது, இறைவனை ஏத்தும் அடியவர்கள் புகழ் பெற்று விளங்கும் தன்மையினர் ஆவர் என, உணர்த்துதலாயிற்று.
நிலையி னார்வரை நின்றெடுத் தான்றனை
மலையி னால்அடர்த் துவிறல் வாட்டினான்
குலையி னார்பொழில் கொண்டீச் சுரவனைத்
தலையி னால்வணங் கத்தவம் ஆகுமே.
கயிலையைப் பெயர்த்தெடுத்த இராவணனுடைய வலிமையை அழித்த சிவபெருமான், பொழில் விளங்கும் கொண்டீச்சரத்தில் வீற்றிருப்பவர். அப்பரமனைத் தலையால் வணங்கத் தவப்பயன் ஆகும்.
திருச்சிற்றம்பலம்.
Reposting it from Amritha Vahini Google group.