Thirupanaiyur temple
- Thanjavur Paramapara
- Sep 14, 2017
- 6 min read
உ.
சிவாயநம.
திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*பாடல் பெற்றசிவ தல தலங்கள் தொடர். 91.*
*சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*
பிரபஞ்ச நாதனே போற்றி!
பிறவாவரமளு நாயகாபோற்றி!!
*திருப்பனையூர்*
சௌந்தர்யநாதர் கோவில், திருப்பனையூர்*
பாடல் பெற்ற தலங்களுள் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் எழுபத்து மூன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*இறைவன்:* செளந்தரேஸ்வரர், அழகியநாதர். தாலவனைஸ்வரர்.
*இறைவி:* பிரஹந் நாயகி, பெரியநாயகி.
*தல விருட்சம்:* பனை மரம்.
*தல தீர்த்தம்:* பராசர தீர்த்தம், அமிர்த புஷ்கரணி, திருமகள்.
*ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.
*தேவாரபதிகம்:*
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
*இருப்பிடம்:*
திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பனையூர்.
நன்னிலத்தில் இருந்தும் சுமார் மூன்று கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம்.
பேரளம் - திருவாரூர் பேருந்து சாலை வழியில் சன்னாநல்லூரைக் கடந்து தொடர்ந்து சென்றால் *"பனையூர்"* என்று கைகாட்டி வரும்.
குறுகலாக பிரியும் அப் பாதையில் ஒரு கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். இவ்வழியில் பேருந்து செல்லாது. கார், வேன் செல்லும்.
*ஆலய அஞ்சல் முகவரி:*
நிர்வாக அதிகாரி,
அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில்,
பனையூர்,
சன்னாநால்லூர் அஞ்சல்,
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்.
PIN - 609 504
*ஆலயம் திறந்திருக்கும் காலம்:*
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*ஆலய தொடர்புக்கு:* கல்யாணசுந்தர குருக்கள், அர்ச்சகர், கைபேசி: 9942281758
*கோவில் அமைப்பு:*
இவ்வாலயத்திற்கும் இராஜகோபுரமில்லை.
கிழக்கு நோக்கியுள்ள ஒரு முகப்பு வாயில் மட்டுமே இருக்க உள் நுழைந்தோம்.
முகப்பு வாயில் மேல் ரிஷபாரூடர் சிற்பம் சுதையால் ஆக்கப்பட்டுள்ளதைக் காணப் பெற்றோம்.
முதலில் கண்களுக்குத் தெரியும் ராஜகோபுரம் இவ்வாலயத்தில் இல்லா நிலையினை எண்ணி, நுழைவாயிலிருந்த ரிஷபாரூடராக அமையப்பட்டிருந்த சுதையாலான ஈசனின் கோலத்தை வணங்கிக் கொண்டோம்.
வாயில் வழியே உள்ளே நுழைந்ததோம். வலதுபுறம் தெற்கு நோக்கிய நிலையில் பெரியநாயகி அம்பாள் சந்நிதியைக் கண்டோம்.
அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருளாட்சியுடன் எழுந்தருளியுள்ளாள். சிரம் மேல் கைகுவித்து வணங்கிக் கொண்டோம்.
அம்பாள் சந்நிதியை விட்டு வெளி வந்தபோது, அம்மாள் சந்நிதிக்குச் முன்பாக கரிகாலனைக் காப்பாற்றிய துணை இருந்த விநாயகர் சந்நிதி கொண்டிருந்தார்.
அவரை மனருக அவர் தாழ்பணிந்தெழுந்தோம்.
தொடர்ந்து இரண்டாவது நுழைவாயிலுக்குள் வந்து உள்ளே சென்றோம்.
இறைவன் வீற்றிருக்கும் கருவறையும், சுற்றுக் பிராகாரமும் அருமையாக உள்ளது. கருவறையில் சுவாமி சுயம்புவாக லிங்கத்திருமேனியுடன் காட்சி தந்தார்.
நன்றாக பிரார்த்தனை செய்தவாறு தொழுது கொண்டோம். நெஞ்சில் வணக்கத்திற்கு கூப்பிய கைகளை விலக்காது, சுவாமியின் கருவறையையும் பிரகாரத்தையும் வலம் செய்து முடித்தோம்.
கோஷ்டத்திலிருந்த மூர்த்தங்களான தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் சந்நிதியிலிருக்க தத்தம் சந்நிதிகளுக்கு முன்வந்து ஒவ்வொருவரையும் தொடர்ந்து வணங்கி நகர்ந்தோம்.
அடுத்திருந்த சண்டேசுவரர் சந்நிதி முன் நின்றோம். அவரிடம் நம் வரவு செலவுகளை மனத்தால் எழுதிக் காட்டினோம்.
அவர் தியானத்தை சப்தம் செய்து கலைத்து விடக்கூடாது என்பதற்காக, நாம் கவணத்துடன் வணங்கிக் கையாண்டு கைதொழுதோம்.
தியாணத்திலிருக்கும் அவரை நாம் உற்று நோக்க, அவர் தியாணத்திலிருந்தாலும், அவர் இதழோரத்தில் ஒரு சிறு புண்ணகையைக் கண்டோம்.
அந்தப் புண்ணகையில்,...... "நீ காட்டிய வரவு செலவு கணக்கு சரி!"-என அவர்உத்தரவிட்டு கையெழுத்திட்டது எங்களுக்கு புரிந்தது.
இவரின் தரிசனம் முடித்துத் திரும்ப எத்தனிக்கையில். எங்களுக்குப் பின் சண்டிகேசுவரரை வணங்க ஒருவர் நின்றிருந்தார்.
படீரென அவர் உள்ளங்கைகளைத் தட்சிணாமூர்த்தி முன் தட்டி சப்தத்தை ஏற்படுத்தினார்.
சண்டேசுவரரின் தியாணம் கலைந்ததோ இல்லையோ?. இச்செயலைப் பார்த்து நாங்கள் கவலை கொண்டோம்.
நாங்கள் அந்தப் பக்தரிடம், இவரை இப்படித்தான் வணங்க வேண்டும் என்ற முறையையும் மரபையும் எடுத்து விளக்கிக் காட்டினோம்.
அவரும் நன்றாகப் புரிந்து கொண்டு, சண்டிகேசுவரரின் முன் உள்ளங்கையினைத் திறந்து காட்டி வணங்கிவிட்டு, நம்மிடமும் போய் வருகிறேனென சைகை மூலம் தெரிவித்துச் சென்றார்.
சடுதியில் புரிந்து கொண்டு தன் நிலையை மாற்றிக் கொண்டு வழிபட்ட அந்த பக்தரை, குறைவிலா நீடுழி வாழ்க!!" என வாழ்த்தினோம்.
நாம் வந்து இறைவனை வணங்கினோம் திரும்பினோம் என இருத்தல் கூடாது. தெரியாமல் செய்யும் தவறானவைகளை நாம் சுட்டிக் காட்டுவது நன்று, மேன்மை.
பிரகாரத்தில் பராசர முனிவர் உருவம் உள்ளது. பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி மேற்கு நோக்கி இருக்கிறார்.
இவர் தாலவனேஸ்வரர் என்ற பெயருடன் சதுர ஆவுடையார் மீது எழுந்தருளியுள்ளார்.
பனைமரங்களை மிகுதியாக உடைய ஊரானதால் *தாலவனம்* என்று இத்தலத்திற்கு பெயருண்டு. தாலம் என்பது பனை மரத்தைக் குறிக்கும்
*தல அருமை:*
முற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்றவன் கரிகாலச் சோழன். இவன் சிறியவனாக இருக்கும் போது தாயாதிகளின் சூழ்ச்சியால் அவனது தந்தை கொல்லப்பட்டார்.
தந்தையை கொன்ற தாயாதிகள் கரிகாலனையும் கொன்று சோழ நாட்டைக் கைப்பற்ற முனைந்த போது, அவனது தாய்மாமன் *"இரும்பிடர்த்தலையார்"* என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார்.
அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இவ்விநாயகரிடம் முறையிட்டாராம்.
விநாயகரின் துணையால் கரிகாலன் எட்டு ஆண்டுகள் இத்தலத்தில் பாதுகாப்பாக இருந்தான். கரிகாலச் சோழனுக்குத் துணையிருந்ததனால் இத்தல விநாயகர் *"துணையிருந்த விநாயகர்"* என்னும் பெயர் பெற்றார்.
சுந்தரர் திருவாரூர்ப் பங்குனி உத்திரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுகோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பதிகம் பாடி வணங்கி உறங்கும் போது தலைக்கு வைத்துக் கொண்ட செங்கல் செம்பொன்னாக மாறப்பெற்று, அடுத்து திருப்பனையூர் தலத்திற்கு வந்தார்.
அப்போது ஊரின் எல்லையில் இறைவன் சுந்தரருக்கு நடனக் காட்சி காட்டியருள, சுந்தரர் எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி பதிகம் பாடி அருள் பெற்றார்.
.
*தல பெருமை:*
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று திரும்பி வரும்போது ஓர் ஊரில் இறைவன் அவருக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்தத் தலம் திருப்பனையூர்.
அப்பரும் ஞானசம்பந்தரும் கூட இந்த ஈசனைப்பற்றி பாடியுள்ளனர். ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம்.
ஓர் ஆண் பனைமரமும் ஒரு பெண் பனைமரமும் இந்த ஆலயத்துள் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது ஒரு பனைமரம் வயது முதிர்ந்து சாயும் காலத்தில் அதன் அடிக்குருத்திலிருந்து புதிய பனை தோன்றி வளர்ந்து விடுகிறது.
வாழையடி வாழைபோல, ஆனால் இங்குள்ள பனைமரமோ பல வருடங்களாக ஒரே உயரத்தில் இருக்கிறது. என்கிறார்கள். தல விருட்சமும் அதுவே.
தொன்மையான கிராமம் கோயிலைச் சுற்றி மூன்று தெருக்களில்தான் வீடுகள்.
பெரிய குளமான அமிர்த புஷ்கரணி. இத்தலத்திற்கு வடமொழியில் தாலவனம் எனப் பெயர். தாலம் என்றால் பனைமரம்.
ஆலயத்துள் தனிச் சன்னதி கொண்டுள்ள பிள்ளையாருக்கு கரிகால் சோழனுக்குத் துணையிருந்த பிள்ளையார் என்று பெயர்.
இதென்ன வினோத பெயர் எங்கிறீகளா விஷயம் இல்லாமலா? கரிகால் சோழன் கர்ப்பத்தில் இருந்த போது அவனது தந்தை இளஞ்சேட் சென்னி இறந்தார். பகைவர்கள் அவரது குடும்பத்தையும் பூண்டோடு அழிக்க தீவிரமாயினர். இந் நிலையில் கரிகாலனும் பிறந்து விட்டார். எதிரிகள் கண் படாமல் அவரை வளர்த்து எதிர்காலத்தில் இழந்த அரசை மீட்டு மீண்டும் மகுடாதிபதி ஆக்க திட்டமிட்டார் தாய்மாமன் இருப்பிடத்தலையார்.
உலகினரின் பார்வையில் படாமல் எங்கோ தனித்தீவுபோல் இருந்த இந்த பனையூருக்குக் கொண்டு வந்து விட்டார். காட்டுக்குள் ஒரு பிள்ளையார் கோயில் மறைவில் வைத்து வளர்க்கப்பட்டார். கரிகாலன் வளர்ந்தார். தன் மக்களைப் படைதிரட்டினார். இழந்த நாட்டை மீட்டார். எல்லாம் பிள்ளையார் அருள் என்று எண்ணி நெகிழ்ந்தார்.
பிள்ளையாரைக் கொண்டு வந்து பெரிய கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்து தனிச்சன்னதி அமைத்தார். பெயரும் கரிகாற் சோழனுக்கு துணையிருந்த பிள்ளையார் ஆயிற்று.
ஆலயத்தில் உள்ளே நுழைந்தால் இரண்டு பிராகாரங்கள். முதல் வாயிலைத் தாண்டியவுடன் உள்ள வாசலில் மாற்றுரைத்த பிள்ளையார் அமர்ந்திருக்கிறார்.
சுந்தரர் திருப்புகலூரில் ஈசனிடம் பொன் பெற்றுக்கொண்டு இங்கு வந்தபோது இந்தப் பிள்ளையார்தான் அந்தப் பொன்னை மாற்று குறையாத பொன் என உரசிப் பார்த்து உறுதி அளித்தாராம்.
பழமையான கோயில், சிறிய ஊர். கரிகாற் சோழன் வளர்ந்த ஊர். பனைமரங்களை மிகுதியாக உடைய மணற்பாங்கான ஊர்.
*சப்தரிஷிகள்:*
1) கௌசிகர், 2) காசிபர்,
3) பரத்வாஜர், 4) கௌதமர், 5) அகத்தியர், 6) அத்ரி
7) பிருகு.
(கல்வெட்டில் இறைவன் திருப்யெர் 'பனையடியப்பன்' பனங்காட்டிறைவன்' என்று குறிக்கப்பெறுகின்றது) .
சுந்தரர், திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுக்கோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று "தம்மையே புகழ்ந்து" என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திரப்பனையூர் நினைத்துவரலானார். அப்போது ஊரின் புறத்தே இறைவன் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி, 'அரங்காடவல்லார் அழகியர்' என்று பதிகம் பாடி, அருள் பெற்றார். இந்நகிழ்ச்சியின் நினைவாக இன்றும், ஊர்க்கு வடகிழக்கில் உள்ள மாணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் *'சந்தித்த தீர்த்தம்'* என்னும் பெயருடன் திகழ்கின்றது.
சம்பந்தர், சுந்தரர், பாடிய தலம்.
அடுத்து தலமரங்களாகிய இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. வளர்ந்தள்ளவை முதிர்ச்சியுறுங் காலத்தில், வித்திட்டு முளைக்காததாக, இரண்டின் அடியிலும் முறையே பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன.
பிராகாரத்தில் முதலில் பராசர முனிவர் உருவம் உள்ளது. அடுத்து விநாயகர் சந்நிதி உள்ளது. சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில் உள்ள மாற்றுரைத்த பிள்ளை £யர் நினைவாக இவ்விநாயகரும் 'மாற்றுரைத்த விநாயகர்' என்றழைக்கப்படுகின்றார். அடுத்து சுப்பிரமணியர் சந்நிதி.
கோஷ்ட மூர்த்தமாக, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. சப்தரிஷிகள் வழிபட்ட ஏழு சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. திருமகள் கோயில் உள்ளது.
பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி - தாலவனேஸ்வரர் - மேற்கு நோக்கியது - சதுர ஆவுடையார் - இப்பெருமானே தலத்
மூலவர் சந்நிதி மண்டபத்துள் நால்வர் பிரதிஷ்டை - நடராஜர்.
சந்நிதிகள் உள்ளன. அழகுடன் சற்று உயரமாக அருட்பொலிவுடன் விளங்குகிறது. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான அமைப்புடையது - இடக்கையில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணமுள்ளது.
*கல்வெட்டு:*
கல்வெட்டில் இறைவன் 'பனையடியப்பன்', 'பனங்காட்டிறைவன் ' என்று குறித்தல் உள்ளன.
இக்கோயில் கி. பி. பதனோறாம்- நூற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல் திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும்; கல்வெட்டில் இக்கோயில் *"இராசேந்திர சோழப் பனையூர்"* என்றும் சொல்கிறது.
*தேவாரம் பாடியவர்கள்:*
மாட மாளிகை கோபு ரததொடு
மண்ட பம்வள ரும்வ ளர்பொழில்
பாடல் வண்டறையும் பழ னத்திருப் பனையூர்த்
தோடு பெய்தொரு காதி னிற்குழை
தூங்கத் தொண்டர்கள் துள்ளிப் பாடநின்
றாடு மாறுவல்லா ரவ ரேய ழகியரே.
உயர்ந்த மேல்மாடங்களும், சிறந்த மாளிகைகளும், கோபுரங்களும், மண்டபங்களும் நாளும் நாளும் பெருகுகின்ற, ஓங்கி வளர்கின்ற சோலைகளில் இசைபாடுதலை யுடைய வண்டுகள் ஒலிக்கின்ற, நல்ல வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, ஒருகாதிற் குழை தூங்க, மறறொரு காதினில் தோட்டினை இட்டு, அடியார்கள் ஆடிப்பாட நின்று ஆடுமாறு வல்லவராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையவர்.
நாறு செங்கழு நீர்ம லர்
நல்ல மல்லிகை சண்ப கத்தொடு
சேறுசெய் கழனிப் பழ னத்தி ருப்பனையூ
நீறு பூசிநெய் யாடித் தம்மை
நினைப்பவர் தம்ம னத்த ராகிநின்
றாறு சூடவல்லா ரவ ரேய ழகியரே.
மணம் வீசுகின்ற செங்கழுநீர் மலரையும், நல்ல மல்லிகை மலரையும், சண்பக மலரையும், சேறு செய்யப்பட்ட கழனியாகிய வயல்களையும் உடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, நீற்றைப் பூசி நெய்யில் மூழ்கி, தம்மை நினைப்பவரது மனத்தில் உறைபவராய் நிற்பவரும், நீரை முடியில் தாங்குகின்றவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.
செங்கண் மேதிகள் சேடெ றிந்து
தடம்ப டிதலிற் சேலி னத்தொடு
பைங்காண் வாளைகள்பாய் பழ னத்தி ருப்பனையூர்த்
திங்கள் சூடிய செல்வ னாரடி
யார்தம் மேல்வினை தீர்ப்ப ராய்விடில்
அங்கிருந் துறைவா ரவ ரேய ழகியரே.
சிவந்த கண்களையுடைய எருமைகள், வயலைச் சேறாக்கிக் குளங்களில் சென்று வீழ்தலினால், அங்குள்ள கயல்மீனின் கூட்டமும், பசிய கண்களையுடைய வாளை மீன்களும் துள்ளி வீழ்கின்ற வயல்களை யுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, சந்திரனைச் சூடிய செல்வனார், தம் அடியார் மேல் வருகின்ற வினையைத் தீர்க்கின்றவராகிவிடுவாராயின், அத்தலத்தில் நீங்காது தங்கி வாழ்கின்ற அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.'
வாளை பாய மலங்கி ளங்கயல்
வரிவ ராலுக ளுங்க ழனியுள்
பாளை ஒண்கமுகம் புடை சூழ்தி ருப்பனையூர்த்
தோளும் ஆகமும் தோன்ற நட்டமிட்
டாடு வாரடித் தொண்டர் தங்களை
ஆளு மாறுவல்லா ரவ ரேய ழகியரே.
வாளை மீன்கள் துள்ள, மலங்கும், இளமையான கயலும், வரிகளையுடைய வராலும் ஆகிய மீன்கள் பிறழ்கின்ற கழனிகளில் பக்கம் எங்கும், பாளையையுடைய கமுக மரங்கள் சூழ்ந்துள்ள திருப்பனையூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற, திரண்ட தோள்களும், அகன்ற மார்பும் பொலிவுற நடனத்தை அமைத்து ஆடுபவரும், தம் அடிக்குத் தொண்டராயுள்ளாரை ஆளுமாறு வல்லவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.
கொங்கை யார்பல ருங்கு டைந்ந்
தாட நீர்க்குவ ளைம லர்தரப்
பங்க யம்மலரும் பழ னத்தி ருப்பனையூர்
மங்கை பாகமும் மாலொர் பாகமுந்
தாமுடையவர் மான்ம ழுவினொ
டங்கைத் தீயுகப்பா ரவ ரேய ழகியரே.
மகளிர் பலரும் மூழ்கி விளையாடுதலினால், குளத்து நீரில் குவளைப் பூக்கள் மலர, அவற்றிற்கு எதிராகத் தாமரை மலர்கள் மலர்கின்ற வயல்களையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற , உமையையுடைய ஒரு பாகத்தையும், திருமாலை உடைய ஒரு பாகத்தையும் உடையவரும், அகங்கையில், 'மான், மழு, தீ' என்னும் இவற்றை விரும்பி ஏந்துபவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.
காவி ரிபுடை சூழ்சோ ணாட்டவர்
தாம்ப ரவிய கருணை யங்கடற்
பாவி ரிபுலவர் பயி லுந்தி ருப்பனையூர்
மாவிரிமட நோக்கி அஞ்ச
மதக ரியுரி போர்த்து கந்தவர்
ஆவி லைந்துகப்பா ரவ ரேய ழகியரே.
பக்கம் எங்கும் காவிரி நதி சூழ்ந்த சோழநாட்டில் உள்ளவர்கள் துதிக்கின்ற கருணைக் கடலாய், பாக்களை விரித்துப் பாடுகின்ற புலவர்கள் பலகாலும் சொல்லும் திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, மான் தோல்வியுறுகின்ற பார்வையை யுடையவளாகிய உமாதேவி அஞ்சுமாறு, மதம் பொருந்திய யானை யினது தோலை விரும்பிப் போர்த்தவரும், பசுவிற் றோன்றுகின்ற ஐந்தினை விரும்பி மூழ்குகின்றவரும் ஆகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையார்.
மரங்கள் மேல்மயி லால மண்டப
மாடமா ளிகை கோபு ரத்தின்மேல்
திரங்கல் வன்முகவன் புகப் பாய்தி ருப்பனையூர்த்
துரங்கன் வாள்பிளந் தானுந் தூமலர்த்
தோன்ற லும்மறி யாமை தோன்றிநின்
றரங்கி லாடவல்லா ரவ ரேய ழகியரே.
மரக்கிளைகளின்மேல் நின்று மயில்கள் ஆட, மண்டபம், மாடம், மாளிகை, கோபுரம் இவைகளின்மேல், தோல் சுருங்கிய முகத்தையுடைய குரங்குகள் தாவுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, குதிரை உருவங்கொண்டு வந்த, 'கேசி' என்னும் அசுரனது வாயைப் பிளந்து அழித்த திருமாலும், தூய மலரின்கண் இருக்கும் தலைவனாகிய பிரமனும் அறியாதபடி விளங்கி நின்று, மன்றில் நடனம் ஆட வல்லாராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.
மண்ணி லாமுழ வம்ம திர்தர
மாட மாளிகை கோபு ரத்தின்மேல்
பண்ணி யாழ்முரலும் பழ னத்திரு ருப்பனையூர்
வெண்ணி லாச்சடை மேவிய
விண்ண வரொடு மண்ண வர்தொழ
அண்ண லாகிநின்றா ரவ ரேய ழகியரே.
மாடம், மாளிகை, கோபுரம் இவைகளில், மண் பொருந்திய மத்தளம் அதிர, யாழ்கள் பண்களை இசைக்கின்ற, நல்ல வயல்கள் சூழந்த திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற வெண்மையான சந்திரன் சடைமேல் பொருந்தப்பட்ட, விண்ணவரும்
குரக்கி னங்குதி கொள்ளத் தேனுகக்
குண்டு தன்னயற் கெண்டை பாய்தரப்
பரக்குந் தண்கழனிப் பழ னத்தி ருப்பனையூர்
இரக்கம் இல்லவர் ஐந்தொ டைந்தலை
தோளி ருபது தான்நெ ரிதர
அரக்கனை யடர்த்தா ரவ ரேய ழகியரே.
குளத்தினுள் பூக்களில் உள்ள தேன் சிந்தும்படி குரங்கின் கூட்டம் குதிக்க, அவற்றின் அருகில் கெண்டை மீன் துள்ளும் படி பரந்திருக்கின்ற, குளிர்ந்த வயல்களாகிய பழனத்தையுடைய திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, இரக்கமில்லாதவராய், அரக்கனாகிய இராவணன், அவனுடைய பத்துத் தலைகளும், இருபது தோள்களும் நொயும்படி, தமது காலால் நெருக்கியவராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.
வஞ்சி நுண்ணிடை மங்கை பங்கினர்
மாத வர்வள ரும்வ ளர்பொழில்
பஞ்சின் மெல்லடியார் பயி லுந்திருப் பனையூர்
வஞ்சி யும்வளர் நாவ லூரன்
வனப்ப கையவ ளப்பன் வன்றொண்டன்
செஞ்சொற் கேட்டுகப்பா ரவ ரேய ழகியரே.
வஞ்சிக் கொடிபோலும் நுண்ணிய இடையினை யுடைய உமையது பங்கை உடையவராய், பெரிய தவத்தவர்க்ள மிகுகின்ற, வளர்கின்ற சோலைகளையுடைய செம்பஞ்சு ஊட்டிய மெல்லிய அடிகளை யுடையவராகிய மகளிர், ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருப்பனையூரில் எழுந்தருளியிருக்கின்ற, நொச்சியே யன்றி வஞ்சியும் வளர்கின்ற திருநாவலூரில் தோன்றியவனும் வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன்றொண்டனது செவ்விய சொற்களாகிய பாடல்களைக் கேட்டு மகிழ்கின்றவராகிய அவரே, யாவரினும் மிக்க அழகுடையர்.
திருச்சிற்றம்பலம்.
Reposting it from Amritha Vahini Google group.
תגובות