உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
பிரபஞ்ச நாதனே போற்றி!
பிறவாவரமருளு நாயகா போற்றி!
*பாடல் பெற்ற சிவ தல தொடர்.99.*
*சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*
*திருச்சாத்தமங்கை.*
*அயவந்தீஸ்வரர் கோவில், திருச்சாத்தமங்கை.*
(தற்போது சீயாத்தமங்கை என்று வழங்குகிறது)
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் என்பத்து ஒன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*இறைவன்:* அயவந்தீஸ்வரர்,
பிரம்மபுரீஸ்வர்.
*இறைவி:*
இருமலர்க்கண்ணம்மை,
உபய புஷ்ப விலோசனி.
*திருமேனி:* சுயம்பு உரு.
*தல விருட்சம்:* கொன்றை.
*தல தீர்த்தம்:* சந்திர தீர்த்தம். (ஒரே தீர்த்த தடாகத்தில் மேல்சாதி.)
சூரிய தீர்த்தம். (ஒரே தீர்த்த தடாகத்தில் மீதி கீழ்ப்பாதி.)
*பதிகம்:*
திருஞானசம்பந்தர்.
*ஆகமம்/பூஜை:* ருத்ர நியாயமா தந்திர ஆகமம்.
*ஆலயத் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.
*ஊர்:* சீயாத்தமங்கை.
*திருவிழாக்கள்:* ஆவனி மூலவிழா, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழித் திருவாதிரை.
*தொடர்புக்கு:*
91- 4366- 270 073
*இருப்பிடம்:*நன்னிலம் - திருப்புகலூர், திருமருகல் - நாகூர் சாலை வழியில் இத்தலம் அமைந்திருக்கிறது.
திருமருகல் தாண்டியவுடன் நாகூர் செல்லும் சாலையில் ஒரு கி.மி. சென்றவுடன் *"கோயில் சீயாத்தமங்கை"* என்ற வழிகாட்டி கல் இருக்கும். அவ்விடத்திலிருந்து ஒரு கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.
திருப்புகலூரில் இருந்து சுமார் எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது.
நாகப்பட்டினம் - நாகூர் - கும்பகோணம் சாலையில், நாகப்பட்டினத்துக்கும் சன்னாநல்லூருக்கும் நடுவே அமைந்துள்ளது சீயாத்தமங்கை.
பிரதான சாலையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவு பயணித்தும் ஸ்ரீஅயவந்தீஸ்வரர் ஆலயத்தை அடையலாம். நாகப்பட்டிணத்தில் இருந்து சுமார் பதின்மூன்று கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.
ஊருக்கு *"சாத்தமங்கை"* என்றும், கோயிலுக்கு *"அயவந்தி"* என்றும் பெயர்.
திருச்சாத்தமங்கையில் இருந்து அருகில் உள்ள திருமருகல், திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர், இராமனதீச்சரம் ஆகிய மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம்.
*அஞ்சல் முகவரி:* அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில்,
சீயாத்தமங்கை,
சீயாத்தமங்கை அஞ்சல்,
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்.
PIN - 609 702
*ஆலய திறப்பு காலம்:*
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*கோவில் அமைப்பு:*
இவ்வாலயத் திசைக்கு நாம் வந்ததும் உயர்ந்த சுற்றுமதிலைக் கொண்டிருந்தது.
கோபுரத் தரிசனமும் காட்சி தர, *சிவ சிவ* மொழிந்து வணங்கிக் கொண்டோம்.
கோவிலுக்கு வெளியே கோபுர வாயில் எதிரே ஆலயத்தின் திர்த்தக்குளம் அமைந்திருக்க அங்கு சென்றோம்.
அங்கிருந்த சித்திவிநாயகரை வழக்கம்போல வணங்கிக் கொண்டோம்.
முதல் முறையாக இவ்வாலயத்திற்கு நாம் தரிசனத்திற்குச் வந்திருந்ததால், தீர்த்த பெயர் மற்றும் விபரங்களும் எங்களுக்குத் தெரியாதன.
எனவே அருகிருந்தோரிடம் இத்தீர்த்தப் பெயரேன என் வினவினோம்.
அதற்கு அவர்......, இதிலிருந்து பாதி தீர்த்தம் *சந்திர தீர்த்தம்* என்றும், மற்றொரு மீதி பாதிதீர்த்தம் *சூரிய தீர்த்தம்* என்றும் கூறினார்.
இவ்வளவு விபரம் தெரிந்து கொண்டபிறகு நாம எப்படி இருப்போம்? விடுவோமா?.........
ஒருகரையிலிருந்து தீர்த்தத்தை (சந்திரதீர்த்தம்) அள்ளி சிரசிற்கு வார்த்து வானினை நோக்கி சிவ சிவ என வணங்கிக் கொண்டோம்.
மறுகரைக்கு வேகமெடுத்து விரைந்தோம். அங்கும் தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிலிட்டு வணங்கிக் கொண்டோம்.
இப்போது நமக்கு இரு தீர்த்தத்தையும் பெற்றுக் கொண்ட திருப்தி.
திரும்பி, ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரம் வழியாக கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தோம்.
அகலமான விசால முற்றவெளி பரந்து விரிந்து இருந்தன.
வெளிச்சுற்றில் வலம் வரும்போது சந்திரன், காகத்தின் மீது ஒரு காலூன்றிய அமைப்பில் உள்ள சனிபகவான், சப்தமாதர்கள், பைரவர், நவக்கிரகங்கள், மகாலிங்கம், விசுவநாதர், விசாலாட்சி, விநாயகர் முதலிய சந்நிதிகள் இருக்கக்க கண்டோம்.
பிராகாரத்திலுள்ள தலவிருட்சம் கொன்றை மரத்தின் அடியே விநாயகர், லிங்கத் திருமேனிகள் இருக்க வணங்கி ஆனந்தித்தோம்.
உள்வாயிலையும் கடந்து முன்மண்டபம் அடைந்து வலம் வரும்போது, வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர் சந்நிதிகள் இருக்க ஒவ்வொருவரையும் கைதொழுதோம்.
அடுத்து 63 நாயன்மார்களில் ஒருவரான திரு நீலநக்க நாயனார், அவருடைய மனைவி ஆகியோரின் உருவங்கள் இருக்க அவர்கள் குனிந்து பணிந்தெழுந்து தொழுது கொண்டோம்.
பின், சோமாஸ்கந்தர், மகாகணபதி சந்நிதிகளைத் தரிசித்துப் படிகளேறி உள்சுற்றில் நீலநக்கர், அவருடைய மனைவி, நடன சுந்தரர் முதலிய உற்சவத் திருமேனிகளைத் தரித்து ஆனந்தித்தோம்.
நடராச சபையில் அம்பலக்கூத்தர் அம்மை சிவகாமி மணிவாசகருடன் காட்சி தந்ததைத் தரிசித்தோம.
எந்தத் தலத்தில்தான் அவனாடலில் நமக்கு சக்திப் பாங்கு குறைவாகத் தெரிந்தது?..... இங்கும் அதுபோலதான். அவன் தூக்கிய திருவடியின் பாதகமலத்தைக் கண்டு பக்திசிரத்தையில் நம் விழிநீர் உருகின.
மூலவரைக் காண அவன் கருவறை முன் வணங்க நின்றோம். அந்நேரம் நைவேத்தியம் நடக்க, திரையிட்டிருந்ததால், தடுப்பின் மீது சரிந்தவாறு சிவபுராணம் மொழிந்து கொண்டிருந்தோம்.
"பல்லோரும் ஏத்தப்பணிந்து" என திருவாசக கடைசி வரி மொழிந்து நிறையவும், திரை விலக்கி ஈசன் காட்சியருள் புரிந்தார்.
கருவறையில் அயவந்தீசுவரர் கிழக்கு நோக்கிய வண்ணம் தரிசனம் தந்தார். இவர் சுயம்பு மூர்த்தியானர்.
இந்த அயவந்தீசுவரர் பாணம் முழுவதும் கொப்புளம் போல காட்சி தருகிறது.
இந்த லிங்கத்தின் அமைப்பு நீலநக்க நாயனார் வரலாற்றை நினைவுபடுத்துவாக அமைந்துள்ளது. அருமையான மூலவரின் தரிசனத்தை முடித்து வெள்ளிய விபூதியும் வெளிவந்தோம்.
கோஷ்ட மூர்த்தங்களுக்கு வரும்போது, தட்சிணாமூர்த்தியின் திருவுருவத்தைப் பார்த்தோம். இவ்வமைப்பு சிற்பக் கலைத்திறனை மெருகூட்டிக் காட்டியது.
கருவறை சுற்றுச் சுவர் வெளிப்புறத்தில் நர்த்தனகணபதி, அகத்தியர் இருவரையும் கண்டு கைகூப்பி தொழுதோம்.
நர்த்தண கணபதி அகத்தியர் இவர்கள் இருவருக்கும் இடையே கெளரி லீலை உருவத் திருமேனியைக் கண்டோம். இத்திருமேனியைப் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும்.
வெளி மண்டபத் தூண் ஒன்றிலுள்ள ஆஞ்சனேயர் வாலில் மணியுடன் காணப்படுகிறார்.
அருகிலுள்ள மற்றொரு தூண் அருகே உள்ள தவழும் கிருஷ்ணனின் திருமேனியும் இருக்கிறது.
அடுத்து அம்பாள் சந்நிதிக்குள் வந்து சேர்ந்தோம். அம்மையின் கருணைப்பொழிவு கலந்த பார்வையை வணங்கி அவளருள் பெற்று, அம்மையின் சந்நிதிப் பிரசாதத்துடன் வெளிவந்தோம்.
சூரியன் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் இருக்க இருவரையும் வணங்க சந்நிதியின் படிகளேறினோம்.
நந்தி சற்று உயரத்தில் உள்ளார். படிகளேறிச் சென்றால் கருவறை முன் மூஞ்சூறு வாகனத்தின் மீது அமர்ந்துள்ள விநாயகரையும், தண்டபாணியையும் துவாரமூர்த்திகளாக இருக்கக்கக் கண்டு தரிசித்துக் கொண்டோம்.
63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலம் இந்த திருசாத்தமங்கை.
சிவத்தொண்டாற்றிய திருநீலநக்க நாயனார், அவரது மனைவியின் உருவச்சிலைகள் மகா மண்டபத்தில் இருக்கக்கக் கண்டு வணங்கினோம்.
*திருநீலகண்டர்:*
திருநீலநக்கர் தன் மனைவி மங்கையர்க்கரசியுடன் அனுதினமும் அயவந்தீஸ்வரரை கொன்றை மலர்களால் வழிபடுவது வழக்கமாகக் கொண்டிருந்தார்.
திருநீலநக்கர் ஒருமுறை மனைவியோடு திருக்கோயிலுக்குச் சென்றிருந்தார். கருவறையில் லிங்கத் திருமேனி மீது ஒரு சிலந்திப் பூச்சியைக் கண்ட அவரது மனைவி, அதனைத் தன் வாயினால் ஊதி அகற்றிட, மனைவியின் எச்சில் இறைவன் திருமேனியில் பட்டுவிட்டதாகக் கருதிய நீலநக்கர் கடுஞ்சினங் கொண்டார்.
அதனை தகாத செயலாகக் கருதி, மனைவியைப் பிரிந்து வாழத் துவங்கினார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரது கனவில் இறைவன் தோன்றி, நாயனாரின் மனைவி வாயினால் ஊதிய பகுதி தவிர இதர பகுதிகள் முழுதும் லிங்கத் திருமேனியில் கொப்புளமாகக் காட்சியளிப்பதைச் சுட்டிக்காட்டி, அம்மங்கையின் பெருமையை உலகுக்கு வெளிப்படுத்தினார்.
விடிந்தும் ஆலயத்துக்கு ஓடிவந்த நீலநக்கர் இறைவனுக்கு நேர்ந்ததை எண்ணிக் கலங்கிய அதேநேரம் மனைவிக்காக அந்த இறைவனே பரிந்துரைத்ததை எண்ணி உள்ளம் பூரித்தார்.
மங்கையர்க்கரசியாரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
திருநள்ளாறு தலத்தில் இறைவனை வணங்கிய பிறகு திருஞானசம்பந்தர் திருசாத்தமங்கை எழுந்தருளினார்.
திருநீலநக்க நாயனார் நகரை அலங்கரித்து சம்பந்தரை எதிர்கொண்டு அழைத்து வணங்கினார்.
பின்னர் இருவரும் அயவந்தி ஆலயத்தை அடைந்து இறைவனை வழிபட்டு நீலநக்கர் இல்லம் திரும்பி திருவமுதுண்டு தங்கினர்.
மறுநாள் காலை ஆலயத்திற்குச் சென்ற சம்பந்தர் பதிகம் பாடினார். பதிகத்தின் இரண்டாவது மற்றும் பதினோறாவது திருக்கடைக் காப்பிலும் திருநீலதக்க நாயனாரை சிறப்பித்துப் பாடியுள்ளார்.
*தல சிறப்பு:*
திருநீலநக்க நாயனார் நாள் தோறும் திருச்சாத்த மங்கையில் உள்ள அயவந்தி என்ற கோவில் இறைவனை வழிபட்டு வந்தார்.
ஒரு திருவாதிரை நாளன்று மனைவியுடன் வழிபாடு செய்யக் கோவிலுக்குச் சென்றார்.
கருவறைக்குள் சென்று வழிபாடு செய்யத் தொடங்கினார். பக்கத்திலிருந்த மனைவியார் வழிபாட்டுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொடுத்தார்.
வழிபாட்டு நிறைவில் இறைவன் முன் அமர்ந்து ஐந்தெழுத்தை விதிப்படி உச்சரிக்கத் தொடங்கினார். மெய்ம்மறந்து ஐந்தெழுத்தை ஓதினார்.
அப்போது சிலந்திப் பூச்சியொன்று சிவலிங்கத்தின் மீது விழுந்தது. இதனைக் கண்ட மனைவியார் உடனே பக்கத்தில் சென்று, பச்சிளம் குழந்தை மீது சிலந்தி விழுந்தால் தாய் வாயால் ஊதி உமிழ்ந்து வெப்பக் கொடுமையை நீக்குவதைப் போலச் சிவலிங்கத்தின் மீது விழுந்த சிலந்தியை வாயால் ஊதி உமிழ்ந்தாள்.
வாயின் உமிழ் நீர் சிவலிங்கத்தின் மீது பட்டது. இதனைக் கண்ட திருநீலநக்கநாயனார் கண்களை மூடிக் கொண்டு மனைவியாரைப் பார்த்து.......
'அறிவற்றவளே! இச் செயலை ஏன் செய்தாய்? ’ என்று கேட்டார்.
சிவலிங்கத்தின் மீது வீழ்ந்த சிலந்தியை ஊதி உமிழ்ந்ததாக மனைவியார் கூறினார். ‘வேறு வகையில் போக்கியிருக்கலாம்; ஊதி உமிழ்ந்தது தவறு, அதனால் வழிபாடு தவறு உடையதாயிற்று என்று கூறி’ மனைவியைக் கோவிலிலேயே விட்டுச் சென்று விட்டார்.
அஞ்சிய மனைவியார் இரவு முழுவதும் கோவிலிலேயே தங்கி விட்டார்.
இரவிலே திருநீலநக்கநாயனார், கனவில் இறைவன் தோன்றி ‘உம்முடைய மனைவியார் தாயன்போடு எம்மை ஊதி உமிழ்ந்த இடம் தவிரப் பிற இடங்களிலெல்லாம் சிலந்தியால் உண்டான கொப்புளங்கள் தோன்றியுள்ளன. அவற்றைப் பார்’ எனக் காட்டினார்.
உடனே நாயனார் இறைவனைத் தொழுது வணங்கி விடிந்ததுதம் கோவிலுக்குச் சென்று கண்ணீர் சிந்தி அழுதார். பிறகு மனைவியாரை அழைத்துச் சென்றார்.
இச்செய்திகளைப் பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் பக்திச் சுவை ததும்பப் பாடியுள்ளார்.
நாயனாருடன் மனைவியாரும் கோவில் வழிபாட்டில் பங்குபெற்றதையும் கருவறைக்குள் மகளிர் சென்று வழிபட்டதையும் இதன் மூலம் அறிய முடிகிறது.
*சிறப்புகள்:*
இத்தலம் திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலமாகும். திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவியின் திருமேனிகள் திருக்கோயிலில் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் 'மங்கையர்க்கரசி' என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது.
*அவதாரத் தலம் :* சாத்தமங்கை (கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : ஆச்சாள்புரம் (நல்லூர்ப்பெருமணம்) குருபூசை நாள் : வைகாசி - மூலம்.
சோழர் காலக் கல்வெட்டில் இத்தலத்து இறைவன் *'அயவந்தி உடையார் '* என்று குறிக்கப்பட்டுள்ளார்.
*'ருத்ர வியாமள தந்திர '* ஆமக முறைப்படி நாடொறும் நான்கு கால பூசைகள் நடைபெறுகின்றன
*பதிகம்:*
திருமலர்க் கொன்றைமாலை திளைக் கும்மதி சென்னிவைத்தீர்
இருமலர்க் கண்ணிதன்னோ டுட னாவது மேற்பதொன்றே
பெருமலர்ச் சோலைமேக முரிஞ் சும்பெருஞ் சாத்தமங்கை
அருமல ராதிமூர்த்தீ யய வந்தி யமர்ந்தவனே.
🏾தெய்வத்தன்மை பொருந்திய கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும் , சந்திரனைத் தலையில் தரித்தவனும் , இரு தாமரை மலர் போன்ற கண்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு , நறுமணம் பெருகும் மலர்கள் நிறைந்த சோலைகளிலுள்ள மரங்கள் மேகத்தை உராயும்படி விளங்கும் திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில் , உலகிற்கு ஒப்பற்றவனாகி விளங்கும் ஆதிமூர்த்தியும் ஆகிய சிவபெருமான் அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் . இத்திருத்தலத்தின் அம்பிகையின் திருப்பெயரான இருமலர்க்கண்ணம்மை என்பது இப்பாடலில் உணர்த்தப்படுகின்றது .
பொடிதனைப் பூசுமார்பிற் புரி நூலொரு பாற்பொருந்தக்
கொடியன சாயலாளோ டுடனாவதுங் கூடுவதே
கடிமண மல்கிநாளுங் கம ழும்பொழிற் சாத்தமங்கை
அடிகணக் கன்பரவ வய வந்தி யமர்ந்தவனே.
🏾சிவபெருமான் திருவெண்ணீற்றினைப் பூசிய திருமார்பில் முப்புரிநூல் அணிந்து , பூங்கொடி போன்ற மெல்லிய சாயலுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான் . நறுமண மலர்கள் நாளும் பூத்து வாசனை வீசும் சோலைகளையுடைய திருச்சாத்தமங்கையில் சிவபெருமான் திருநீலநக்க நாயனார் போற்றி வழிபட அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .
நூனலந் தங்குமார்பி னுகர் நீறணிந் தேறதேறி
மானன நோக்கிதன்னோ டுட னாவது மாண்பதுவே
தானலங் கொண்டுமேகந் தவ ழும்பொழிற் சாத்தமங்கை
ஆனலந் தோய்ந்தவெம்மா னயவந்தி யமர்ந்தவனே.
🏾முப்புரிநூல் அணிந்த திருமார்பில் திருவெண்ணீற்றினைப் அணிந்து , இடப வாகனத்திலேறி , மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவன் சிவபெருமான் . மேகத்தைத் தொடும்படி உயர்ந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில் பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக் காட்டப்படும் சிவபெருமான் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .
மற்றவின் மால்வரையா மதி லெய்துவெண் ணீறுபூசிப்
புற்றர வல்குலாளோ டுட னாவதும் பொற்பதுவே
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச் செய்தபாவம்
அற்றவர் நாளுமேத்த வய வந்தி யமர்ந்தவனே.
🏾பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டு மும்மதில்களை எய்து அழித்து , திருவெண்ணீற்றினைப் பூசி , புற்றில் வாழ்கின்ற பாம்பு போன்ற அல்குலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான் சிவபெருமான் . வேதாகமங்களை நன்கு கற்றவர்கள் வாழ்கின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தைக் கைக்கூப்பித் தொழப் பாவம் நீங்கும் . உலகப் பற்றற்ற மெய்யடியார்கள் , தமக்குப் பற்றுக் கோடாக விளங்கும் சிவ பெருமானை நாள்தோறும் போற்றி வழிபட திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் அவன் வீற்றிருந்தருளுகின்றான் .
வெந்தவெண் ணீறுபூசி விடை யேறிய வேதகீதன்
பந்தண வும்விரலா ளுட னாவதும் பாங்கதுவே
சந்தமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ் சாத்தமங்கை
அந்தமா யாதியாகி யய வந்தி யமர்ந்தவனே.
🏾இறைவன் திருவெண்ணீற்றனைப் பூசியவன் . இடபவாகனத்தில் ஏறியமர்பவன் . வேதத்தை இசையோடு பாடியருளி , வேதப் பொருளாகவும் விளங்குபவன் . பந்து வந்தணைகின்ற விரல்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டவன் . வேதமும் , அதன் ஆறங்கமும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உலகத்திற்கு அந்தமும் , ஆதியுமாகிய சிவபெருமான் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .
வேதமாய் வேள்வியாகி விளங் கும்பொருள் வீடதாகிச்
சோதியாய் மங்கைபாகந் நிலை தான்சொல்ல லாவதொன்றே
சாதியான் மிக்கசீராற் றகு வார்தொழுஞ் சாத்தமங்கை
ஆதியாய் நின்றபெம்மா னய வந்தி யமர்ந்தவனே.
🏾இறைவன் வேதங்களை அருளி வேதப் பொருளாகவும் விளங்குபவன் . எரியோம்பிச் செய்யப்படும் வேத வேள்வியாகவும் , ஞானவேள்வியாகவும் திகழ்பவன் . ஒண் பொருளாகவும் , வீடுபேறாகவும் உள்ளவன் . சோதிவடிவானவன் . உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவன் .
இமயமெல் லாமிரிய மதி லெய்துவெண் ணீறுபூசி
உமையையொர் பாகம்வைத்த நிலை தானுன்ன லாவதொன்றே
சமயமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ் சாத்தமங்கை
அமையவே றோங்குசீரா னய வந்தி யமர்ந்தவனே.
🏾சிவபெருமான் இமயம் முதலான பெரிய மலைகளும் நிலைகலங்குமாறு , முப்புரங்களை எரித்து , திருவெண்ணீற்றினைப் பூசி உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக வைத்த தன்மை பாராட்டிப் பேசக் கூடிய அரிய செயலாகும் . அவன் சமயநூல்களையும் , வேதத்தையும் , அதன் அங்கங்களையும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் சிறப்புடன் ஓங்கித் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .
பண்ணுலாம் பாடல்வீணை பயில் வானோர் பரமயோகி
விண்ணுலா மால்வரையான் மகள் பாகமும் வேண்டினையே
தண்ணிலா வெண்மதியந் தவ ழும்பொழிற் சாத்தமங்கை
அண்ணலாய் நின்றவெம்மா னய வந்தி யமர்ந்தவனே.
🏾இறைவன் பண்ணிசையோடு கூடிய பாடலை வீணையில் மீட்டிப் பாடுவான் . பரமயோகி அவன் . மலையரசன் மகளாகிய பார்வதி தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . அப்பெருமான் குளிர்ச்சி பெருந்திய வெண்ணிற சந்திரனைத் தொடும்படி ஓங்கி உயர்ந்த சோலைகள் சூழ்ந்த திருசாத்தமங்கையில் தலைவனாய் விளங்கி , திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .
பேரெழிற் றோளரக்கன் வலி செற்றதும் பெண்ணோர்பாகம்
ஈரெழிற் கோலமாகி யுட னாவது மேற்பதொன்றே
காரெழில் வண்ணனோடு கன கம்மனை யானுங்காணா
ஆரழல் வண்ணமங்கை யய வந்தி யமர்ந்தவனே.
🏾மிகுந்த எழிலுடைய வலிமை வாய்ந்த தோள்களினால் மலையைப் பெயர்த்த இராவணனின் வலிமையை அடக்கிய சிவபெருமான் உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு அம்மையப்பனாகவும் , உடனாகக் கொண்டு அழகிய இரண்டு கோலமாகவும் , கார்மேகம் போன்ற அழகிய வண்ணனான திருமாலும் , பொன்போன்ற நிறமுடைய பிரமனும் , காண முடியாவண்ணம் நெருப்பு வண்ணமுமாகி , திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் , திரு அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .
கங்கையோர் வார்சடைமே லடை யப்புடை யேகமழும்
மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல லாவதொன்றே
சங்கையில் லாமறையோ ரவர் தாந்தொழு சாத்தமங்கை
அங்கையிற் சென்னிவைத்தா யயவந்தி யமர்ந்தவனே.
🏾சிவபெருமான் கங்கையை நீண்ட சடைமுடியில் தாங்கி , பக்கத்தில் உமாதேவியோடு ஒன்றி நின்ற அறிவுடைமை சொல்லக் கூடிய தொன்றா ? அவன் ஐயமில்லாமல் வேதங்களைக் கற்ற அந்தணர்கள் தொழுகின்ற திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உள்ளங்கையில் பிரமகபாலம் ஏந்தித் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .
மறையினார் மல்குகாழித் தமிழ் ஞானசம் பந்தன்மன்னும்
நிறையினார் நீலநக்க னெடு மாநக ரென்றுதொண்டர்
அறையுமூர் சாத்தமங்கை யய வந்திமே லாய்ந்தபத்தும்
முறைமையா லேத்தவல்லா ரிமை யோரிலு முந்துவரே.
🏾நான்மறைவல்ல அந்தணர்கள் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் , மனத்தைப் புறவழியோடாது நிறுத்தி , திருநீலநக்கருடைய நெடுமா நகர் என்று தொண்டர்களால் போற்றப்படும் திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்திலுள்ள திருஅயவந்தி என்னும் திருக்கோயிலைப் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் தேவர்களைவிட மேலானவர்கள் ஆவர் .
திருச்சிற்றம்பலம்.
Reposting it from Amirthavahini google group.