top of page

Thiruvilamar temple

உ.

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

பிரபஞ்ச நாதனே போற்றி!

பிறவாவரமருளு நாயகா போற்றி!

*தலம்.118.*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*

*திருவிளமர்.*

*பதஞ்சலி மனோகரர் கோவில், திருவிளமர்.*

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் தொன்னூறாவது தலமாகப் போற்றப் படுகிறது.

திருவிளமர் (தற்போது விளமல் என்று வழங்கப்ழடுகிறது)

*இறைவன்:*

பதஞ்சலி மனோகரர்.

*இறைவி:*

யாழினும் மென்மொழியம்மை, மதுரபாஷினி.

*தல விருட்சம்:* வில்வம், கிளுவை.

*தல தீர்த்தம்:* அக்னித் தீர்த்தம்.

*புராணப் பெயர்:* திருவிளமர், திருவராகம்.

*ஊர்:* விளமல்.

*திருமேனி:* சுயம்புவானவர்.

*பதிகம்:*

திருஞானசம்பந்தர்.

*இருப்பிடம்:*

திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில் திருவாரூரில் இருந்து மூன்று கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.

விளமல் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே கோவில் உள்ளது.

*அஞ்சல் முகவரி:*

அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில்,

விளமல்,

விளமல் அஞ்சல்,

திருவாரூர் (வடக்கு),

திருவாரூர் வட்டம்

திருவாரூர் மாவட்டம்.

PIN - 610 002

*ஆலயத் திறப்பு காலம்:*

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*திருவிழாக்கள்:*

சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி ஆடிய தலமாதலால், மார்கழி, திருவாதிரை சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

சிவனுக்குரிய அனைத்து விசேஷ திருவிழாக்களும் நடைபெறும்.

அம்மைக்கு, ஆடிப்பூரம், நவராத்திரி, நாளில் விசேஷமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

புரட்டாசி அமாவாசையில் அன்னாபிஷேகம் நடைபெறும்.

*தொடர்புக்கு:*

94894 79896. 99428 81778

*கோவில் அமைப்பு:*

ஆலயத்தினுள் உள்புகும்போது, சிறிய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்திருந்தது.

கோயில் எதிரில் உள்ள தீர்த்தமான அக்னி தீர்த்தத்திற்குச் சென்று சிரசிற்கு தீர்த்தத்தை அள்ளித் தெளித்து வணங்கிக் கொண்டோம்.

கோபுர வாயிலின் இருபுறமும் விநாயகரும் முருகனும் வீற்றிருக்க இருவரையும் வணங்கிக் கொண்டோம்.

ஆலயத்துள் உள்ளே புக நந்தியைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.

பலிபீடத்தருகே நின்று, இருந்த வேண்டாத ஆணவமலத்தை அழித்துவிடும்படி வணங்கிக் கொண்டு தொடர்ந்தோம்.

கோவில் முன் மண்டபத்தில் பதஞ்சலி முனிவரின் திரு உருவம் இருந்ததைக் கண்டு கைதொழுது கொண்டோம்.

வியாக்ரபாத முனிவர், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டிருக்கின்றனர்.

அவர்களின் சந்நிதியும் இக்கோவிலில் இருக்க, அவ்விடம் அகழ்ந்து சென்று கைதொழுது வணங்கிக் கொண்டோம்.

இறைவனைக் காணும் ஆவலில் அவன் சந்நிதி முன்பு வந்து நின்றோம். ஈசன் கிழக்கு நோக்கி மணலால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.

இவருக்கு அர்ச்சகர் மூலவரின் முன்பு தீப வழிபாடு காட்டிய போது, அந்த ஒளி லிங்கத்தில் பட்டு ஜோதி எதிரொலி காட்சியானது.

லிங்கமானது தீபஜோதியாக தெரிவதை மறுபடியும் மறுபடியும் தரிசிக்க வேண்டும் போலிருந்தது.

மனமுருகப் பிரார்த்தனை செய்து வணங்கியபின், அர்ச்சகர் தந்த வெள்ளிய விபூதியை பெற்று வெற்றி முழுமைக்கும் மூவிரலால் திரித்துத் தரித்துக் கொண்டோம்.

கோஷ்டங்களில் வலம் செய்தோம். இங்கு தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்னு, துர்க்கை ஆகியோர் சந்நிதிகள் இருக்க, ஒவ்வொருத்தரையும் தொடர்ச்சியாக வணங்கி நகர்ந்தோம்.

பைரவர் தனி சந்நிதி கொண்டிருந்தார். இவர் தனிச்சந்நிதி கொண்டிருப்பது மிகவும் சிறப்பானது என அருகிருந்தோர் கூறினர். மனமுருகி பல் பிரார்த்தித்துக் கொண்டோம்.

நாங்கள் இவ்வாலயத்திற்குச் சென்றிருந்த சமயம் தேய்பிறை நாளில்.

இது எங்களுக்கே தன் தெரியாது; அங்கு சென்றபோதுதான் எங்களுக்கு தெரிய வந்தது.

எனவே, பைரவரை தேய்பிறை நாளன்று கைதொழுது கொண்டோம். மேலும் இவரை அஷ்டமி நாட்களில் வந்து வழிபடுவதுவும் மிகவும் விசேஷமானதுதான் என்றும் மற்றொருவருக்கு கூறினார்.

பைரவர் இத்தலத்தில் நவகோள்களின் அதிபதியாக க்ஷேத்ரபாலகராக இருப்பதால் இங்கு நவகிரக சன்னதி கிடையாது.

விநாயகரின் கையில் மத்தக மணி கொண்டு அருள்பாலிக்கிறதைக் கண்டு வணங்கித் தலையில் குட்டிக் கொண்டோம்.

விஷ்ணுவின் தலையில் சிவனின் திருவடி இருப்பதும், எம சண்டிகேஸ்வரர் வித்தியாசமாக அமர்ந்திருப்பதும் இத்தலத்தல் கண்டோம். இது மிக சிறப்பம்சம்.

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், திருமண தடையைச் சந்தித்தே வந்திருபவர்கள், கல்வியில் மேன்மையடைய பெற முடியாதவர்கள், தீராத நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அன்னம் சாத்தி வழிபட்டதை நாம் பார்க்க நேர்ந்தது.

தொழில் சிறக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. சக்தி பீடங்களில் இத்தலம் வித்யாபீடமாக இருப்பதால் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் முன்பு இங்குள்ள அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை இங்கு உள்ளது. வாய் பேச முடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் இறைவி மதுரபாஷினி அம்மனை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். மேலும் புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை நாளில் முன்னோர்க்கு தர்ப்பணம் செய்து, விளம்பல் பதஞ்சலி, மனோகரரை வழிபடுவது மிக சிறப்பாக கருதப்படுகிறது.

*தல பெருமை:*

மூன்று தரிசனம்: மூலஸ்தானத்தில் லிங்கம், அதற்கு பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் என ஒரே சன்னதி யில் சிவனின் மூன்று வடிவங்களைத் தரிசிக்கலாம்.

திருவாரூரில் தியாகராஜரின் முகத்தையும், இங்கு சிவபாதத்தையும் ஒரே நாளில் தரிசித்தால்

பிறவாநிலை கிடைக்கும் என்பது ஐதீகம்.

மூலவர் சிவன் மணல் லிங்கமாக காட்சி தந்தாலும், அவருக்கு தீபாராதனை காட்டும்போது, லிங்கம் ஜோதி சொரூபமாகக் காட்சியளிக்கிறது.

*மதுரபாஷினி:*

சிவனுக்கு வெப்பமான நெற்றிக்கண் இருப்பதைப்போல், இத்தல அம்மன் மதுரபாஷினிக்கு சந்திரனைப் போல் குளிர்ச்சியான நெற்றிக்கண் இருக்கிறது.

பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தேமாதரம் தேசபக்திப்பாடலில் வரும் மதுரபாஷிநீம் என்ற வரிக்கு அடிப்படையான இவள், மனிதனுக்கு தேவையான முப்பத்து நான்கு செளபாக்கியங்களையும் தரும் சடாட்சர தேவியாக, ராஜராஜேஸ்வரியாக, கல்விக்கு அரசியாக அருளுகிறாள்.

இதனால் இத்தலம் வித்யாபீடமாகக் கருதப்படுகிறது. அகத்தியர் இவளை, ஸ்ரீர தாரிணி, ராஜசிம்மாசனேஸ்வரி, ஸ்ரீலலிதாம்பிகையே என புகழ்ந்து போற்றியுள்ளார்.

குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் மதுரபாஷினிக்கு தேன் அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை செய்து, அந்த தேனை குழந்தையின் நாவில் தடவி வேண்டிக்கொண்டு, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை இங்கு உள்ளது.

இதனால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் பிரச்னை உள்ளவர்களும் இந்த அம்மனை வேண்டினால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

*அமாவாசை அன்னாபிஷேகம்:* பொதுவாக சிவன் கோயில்களில் ஐப்பசி பெளர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வர். இங்கு எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், இங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர். புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பு.

விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

இத்தல விநாயகராக சித்தி விநாயகர் காட்சி தருகிறார். இங்குள்ள ராஜதுர்க்கை எட்டு கைகளுடன் வீற்றிருக்கிறாள். வலது கையில் சூலமும், இடது கையில் கிளியும் தாங்கி சிம்ம வாகனத்தில் இருப்பது சிறப்பு.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்த துர்க்கையை வழிபாடு செய்தால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

தசரதர் புத்திர பாக்கியம் வேண்டி வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று. சிவனின் பாத தரிசனம் காட்டிய தலமாதலால் இங்கு நவகிரகங்கள் கிடையாது. இத்தலத்தில் நந்தி, சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்து ஆடிய வடகிழக்கு திசையை நோக்கி தலை திருப்பி இருப்பதை இன்றும் காணலாம்.

பைரவர் இத்தலத்தில் நவகோள்களின் அதிபதியாக க்ஷேத்ரபாலகராக இருப்பதால் இங்கு நவகிரக சன்னதி கிடையாது.

விநாயகரின் கையில் மத்தக மணியுடன் அருள்பாலிக்கிறார். விஷ்ணுவின் தலையில் சிவனின் திருவடி இருப்பதும், எம சண்டிகேஸ்வரர் வித்தியாசமாக அமர்ந்திருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றினால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இரண்டு பக்கமும் ஐராவதம் நிற்க, மகாலட்சுமி வித்தியாசமான கோலத்தில் அமர்ந்திருக்கிறாள்.

*தல அருமை:*

பதஞ்சலி முனிவர் ஈசனின் நடனக்கோலம் காண தவமிருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த ஈசன் தில்லையில் தனது திருநடனத்தை காண்பித்தார்.

இந்த நடனத்தை வியாக்ர பாதரும் கண்டு மகிழ்ந்தார். அத்துடன் இரு முனிவர்களும் சிவனிடம், ஐயனே! உனது நடனம் கண்டோம். இந்த ஆனந்த நடனத்துடன் தங்களின் அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண விரும்புகிறோம்.

மேலும் உன் பக்தர்களுக்கும் உனது திருவடி தரிசனத்தை காண்பித்து அருள வேண்டும், என வேண்டினர். அதற்கு ஈசன், நீங்கள் இருவரும் ஸ்ரீபுரம் என்று அழைக்கப்படும் திருவாரூர் செல்லுங்கள். அங்கே எனது நடனத்தையும், திருவடி தரிசனத்தையும் காண்பீர்கள் என்றார்.

அதன்படி இருவரும் திருவாரூர் வந்தனர். அங்கே எங்கு பார்த்தாலும் சிவலிங்கமே காட்சியளித்தது. எனவே பதஞ்சலி தன் உடலை பாம்பாகவும், வியாக்ரபாதர் தன் காலை புலிக்காலாகவும் மாற்றி திருவாரூர் கமலாம்பாளை வணங்கினர்.

அவள் கூறியபடி விளமல் என்ற இடத்தில் விமலாக்க வைரம் என்ற தேவலோக மண்ணில் பதஞ்சலி முனிவர் லிங்கம் பிடித்து வழிபட்டார். இந்த வழிபாட்டின் பலனாக சிவன் தோன்றி, அஜபாவன நர்த்தனம் ஆடி தன் பாதத்தை காட்டி அருளினார். இந்த சிவன் ப தஞ்சலி மனோகரர் என்று அழைக்கப்பட்டார்.

சிவபெருமான் நடன மாடிய போது காட்டிய திருவடி ருத்ரபாதம் எனப்பட்டது. அவர் நட னமாடிய இடம் விளமல் எனப்பட்டது. இதற்கு திருவடி எனப் பொருள்படும்.

இந்த தரிசனத்தை விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள் கண்டு களித்தனர்.

சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்திற்கு இன்றளவும், தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம் திருவடி க்ஷேத்திரம், திருவிளமல், சிவபாத ஸ்தலம் என போற்றப்படுகிறது.

*சிறப்பம்சம்:*

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலிக்கும்., லிங்கத்தில் தீபஜோதி தெரிவதை நன்கு காண முடியும்.

*சிறப்பம்சம்:*

சிவாலயங்களில் பாத தரிசனம் என்பது பக்தர்கள் இறைவனின் திருவடியைக் கண்டு வணங்கி அருள் பெற வேண்டும் என்பதற்காக ஏற்பட்டதாகும்.

இந்தப் பாத தரிசனம் பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகிய இரு ரிஷிகளுக்குத்தான் முதன் முதலில் கிடைத்தது.

அப்படிக் கிடைத்த சிறப்புமிக்க ஆதி முதல் தலம்தான் விளமல் என்றழைக்கப்படும் திருவிளமல்.

இத்தலத்தை பதஞ்சலி மனோகரர் ஆலயம் என்பர். திருவாரூர் புராணத்தில் திருஞானசம்பந்தர் இக்கோயிலின் லிங்கத்தை வியந்து பாடியுள்ளார்.

தேவாரத்தில் திருநாவுக்கரசர் கயிலாயநாதரை எங்கெங்கு காணலாம் என குறிப்பிடும் பாடலில் விளமலைப் பற்றி குறிப்பு உள்ளது.

மாணிக்கவாசகரும் தம் சிவபுராணத்தின் பல இடங்களில் விளமல் புகழ் பாடுகிறார்.

பரந்தாமனை எப்பொழுதும் தாங்கிக் கொண்டிருந்த ஆதிசேஷனுக்கு அன்றென்னவோ மகாவிஷ்ணு மிகுந்த பாரத்துடன் இருந்தார். மகா விஷ்ணுவிடமே ஆதிசேஷன் விளக்கம் கேட்க, *‘‘கலி பிறப்பதற்கு முன்னால் சிவத்தின் மகிமையை ரிஷிகள் அனைவரும் உணர வேண்டும்.* அவர்களால் தான் உலகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக சிவபெருமான் பிச்சாண்டியாகவும், மகாவிஷ்ணுவாகிய நான் மோகினிப் பெண்ணாகவும் வேடமிட்டோம்.

ரிஷிகளை நான் மயக்கி அவர்கள் என் பின்னால் வந்தபோது பிச்சாண்டியான சிவபெருமான் ஆனந்த நர்த்தனம் ஆடினார். அதைக் கண்டு நானும், முனிவர்களும், யோகிகளும் மெய்மறந்து நின்றுவிட்டோம். அந்தக் காட்சியை நினைத்துக் கொண்டிருந்ததால் நான் உனக்கு பாரமாகத் தோன்றுகிறேன்‘‘ என பதில் அளித்தார்.

உடனே, ஆதிசேஷன், தானும் சிவனின் நர்த்தனத்தைக் காண விரும்பித் தவம் இயற்றினார். சிவபெருமானும் அவர்முன் தோன்றி, அளித்த வரத்தின்படி அத்திரி முனிவர்-அனுசுயா தேவிக்கு பிள்ளையாக பதஞ்சலி என்ற பெயருடன் வியாக்ரபுரத்தில் பிறந்தார் ஆதிசேஷன்.

இது தவிர, செவிவழிச் செய்தியும் ஒன்று உண்டு. ஆனந்த நர்த்தனம் ஆடிய சிவபெருமான் தன்னுடைய சிவதனுசை மகாவிஷ்ணுவிடம் தந்தார். அதைப் பெற்றுக்கொண்ட விஷ்ணு ஆணவத்தில் திளைக்க, சிவபெருமான் அவரிடம் தன்னை முழுவதுமாகக் காணுமாறு கூறி விஸ்வரூபம் எடுத்தார்.

விஷ்ணு எவ்வளவு உயரம் பறந்தும் சிவனின் முடியைக் காணவே முடியவில்லை. பிறகு அவருடைய திருவடியைக் காண முயன்றார். அதுவும் எளிதில் முடியாமல் போகவே, வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து சென்றும் திருவடியைக் காண இயலவில்லை. தவறை உணர்ந்த மகாவிஷ்ணுவுக்கு சிவபெருமான் தன் திருவடியைக் காட்டிய இடம்தான் விளமல். அதனால்தான் இது ஆதிமுதல் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

ராஜநாகம் மிக அதிக விஷம் உடையது. சாதாரணமாக நாம் அதைக்கண்டு அஞ்சி ஓடுவோம். ஆனால் சிவனின் கழுத்தில் ஆபரணமாக இருக்கும்போது யாரும் அதற்கு அஞ்சுவது இல்லை.

ஒருவர் இயல்பில் கொடூரமானவராகவே இருந்தாலும் சேரும் இடம் மதிப்புடையதாக இருந்தால் குணாதிசயம் மாறலாம் என்ற கருத்து இதனால் வலியுறுத்தப்படுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தும் வகையில் பதஞ்சலி முனிவரின் உருவம் இடுப்புக்கு கீழ்பகுதியில் பாம்பு சுற்றிக் கொண்டிருப்பது போலவும் அது முதுகுப்புறமாக ஏறி தலைக்கு மேலே தன் ஐந்து தலைகளையும் விரித்தபடியும் காட்சியளிக்கும்.

பதஞ்சலி, தேவர்களின் தலைவன் இந்திரனுக்கே குரு. சிவபெருமானின் ஒரு அம்சமான முருகனுக்கு ஆறாவது நெற்றிக் கண்ணாக இருப்பவர்.

இவரை புலிக்கால் முனிவர் என்றும் சொல்வார்கள். இவரின் உடல் இடுப்புக்கு கீழே புலியைப்போல் இருக்கும். புலி, விலங்குகளில் கொடூரமானது. தனக்குப் பசியில்லாவிட்டாலும் பிற மிருகத்தை அடித்துக் கொல்லும். அதைப்போல மனிதன் இயல்பில் முதலில் எவ்வளவுதான் கெட்டவனாக இருந்தாலும், பின்னர் மனம் திருந்தி பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, செய்த தவறுகளுக்கு வருந்துவான் என்றால் இறைவனின் அருள் கிட்டும் என்ற தத்துவத்தை இவரது உருவம் அறிவிக்கிறது.

இத்தகைய சிறப்பு மிக்க ஆலயத்தில் பாத தரிசனம் முடிந்தபிறகுதான், ஆழித்தேர் உற்சவத்துக்கு உரிய தியாகராஜரின் திருவாரூர் பெரிய கோயிலில் பாத தரிசன நிகழ்ச்சி நடைபெறும்.

இங்கேயுள்ள உற்சவர் முன்னிலையில்தான், ஆழித் தேரோட்டத்துக்கு, திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் கொடியேற்றம் நடைபெறும்.

ஆலய முகப்பிலேயே அக்னி தீர்த்தத்தை காணலாம். திங்கட்கிழமை, அமாவாசை அல்லது சஷ்டி தினங்களில் தம்பதி சமேதராய் வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானுக்கு நெய்யிட்டு அன்னம் சாத்தி வழிபட்டால், புத்திர பாக்கியம் கிட்டும்.

ஒரு பிடி அன்னதானம் செய்தால் பல அசுவமேத யாகம் செய்த பலனைப் பெற முடியும். இந்த ஆலயம் சோழ மண்டலத்தில் அன்னதானக் கட்டளையாக தொன்று தொட்டு விளங்கி வந்துள்ளது.

இங்கேயுள்ள நந்தி வடகிழக்காக திரும்பி, அம்பாளின் விமான கலசத்தை நோக்கி இருப்பதால் நாமும் அதைக் கண்டு தரிசனம் செய்யலாம்.

இத்தலத்திற்கு வந்து வழிபடுபவர்களின் நோய்கள், துயரங்கள் நீங்குவதால் எமனுக்கு வேலை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் எமசண்டிகேஸ்வரர், கையில் ஆயுதம் எதுவுமின்றி, மலர்களுடன் பூஜை செய்யும் கோலத்தில் வீற்றிருக்கிறார்.

ஆலய மகா மண்டபத்தில் அமைந்துள்ள திருச்சபையில் பதினோராம் நூற்றாண்டு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் தவம் இயற்றிய பிறகு இறைவன் தில்லையில் காட்சி கொடுத்தது, அம்பாள் ஞான தேவதையாகி கமலாம்பாளாக யோக நிலையில் இறைவனை எதிர்நோக்கி இருக்கிற காட்சி பிறகு அம்பாள் வித்யா தேவதையாகி விளமலில் எழுந்து நிற்கும் பரவசக் காட்சி ஆகியவை ஓவியங்களாக ஒளிர்கின்றன.

வேறு சில ஓவியங்களில் தியாகராஜரின் திருவடிகளை பதஞ்சலியும், வியாக்ரபாதரும் தரிசனம் செய்கிறார்கள். அந்த கண்கொள்ளாக் காட்சியை விஷ்ணு, பிரம்மா, தேவேந்திரன், முசுகுந்தச் சக்ரவர்த்தி ஆகியோர் பார்த்து வணங்குகிறார்கள்.

*தேவாரம்:*

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

மத்தக மணிபெற மலர்வதோர் மதிபுரை நுதல்கரம் ஒத்தக நகமணி மிளிர்வதோர் அரவினர் ஒளிகிளர் அத்தக வடிதொழ அருள்பெறு கண்ணொடும் உமையவள் வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே.

பட்டில கியமுலை அரிவையர் உலகினில் இடுபலி ஒட்டில கிணைமர வடியினர் உமையுறு வடிவினர் சிட்டில கழகிய பொடியினர் விடைமிசை சேர்வதோர் விட்டில கழகொளி பெயரவர் உறைவது விளமரே.

அங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதோர் அரவொடு செங்கதி ரெனநிற மனையதோர் செழுமணி மார்பினர் சங்கதிர் பறைகுழல் முழவினொ டிசைதரு சரிதையர் வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே.

மாடம தெனவளர் மதிலவை யெரிசெய்வர் விரவுசீர்ப் பீடென வருமறை யுரைசெய்வர் பெரியபல் சரிதைகள் பாடலர் ஆடிய சுடலையில் இடமுற நடம்நவில் வேடம துடையவர் வியன்நக ரதுசொலில் விளமரே.

பண்டலை மழலைசெய் யாழென மொழியுமை பாகமாக் கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினை குறுகிலர் விண்டலை யமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர் வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர் விளமரே.

மனைகள்தோ றிடுபலி யதுகொள்வர் மதிபொதி சடையினர் கனைகடல் அடுவிடம் அமுதுசெய் கறையணி மிடறினர் முனைகெட வருமதில் எரிசெய்த அவர்கழல் பரவுவார் வினைகெட அருள்புரி தொழிலினர் செழுநகர் விளமரே.

நெறிகமழ் தருமுரை யுணர்வினர் புணர்வுறு மடவரல் செறிகமழ் தருமுரு வுடையவர் படைபல பயில்பவர் பொறிகமழ் தருபட அரவினர் விரவிய சடைமிசை வெறிகமழ் தருமலர் அடைபவர் இடமெனில் விளமரே.

தெண்கடல் புடையணி நெடுமதில் இலங்கையர் தலைவனைப் பண்பட வரைதனில் அடர்செய்த பைங்கழல் வடிவினர் திண்கட லடைபுனல் திகழ்சடை புகுவதோர் சேர்வினார் விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர் விளமரே.

தொண்டசை யுறவரு துயருறு காலனை மாள்வுற அண்டல்செய் திருவரை வெருவுற ஆரழ லாயினார் கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனில் அளியினம் விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில் விளமரே.

ஒள்ளியர் தொழுதெழ வுலகினில் உரைசெயு மொழிபல கொள்ளிய களவினர் குண்டிகை யவர்தவம் அறிகிலார் பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடு பேணுவீர் வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே.

வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள் விகிர்தரைச் சிந்தையுள் இடைபெற வுரைசெய்த தமிழிவை செழுவிய அந்தணர் புகலியுள் அழகமர் அருமறை ஞானசம் பந்தன மொழியிவை உரைசெயு மவர்வினை பறையுமே.

திருச்சிற்றம்பலம்.

Reposting it from Amirthavahini Google Group.

82 views0 comments
bottom of page