top of page

தன்னடைந்தார்க்கு இனியன் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயம்

தீபாவளி என்றவுடனேயே, சிறியவர்-பெரியவர் என்ற பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தந்துவிடுகிறது சிந்தனைக்கும், கண்ணுக்கும் மட்டுமல்லாமல் நாவுக்கும் இனிப்பை, அதாவது தித்திப்பைத் தந்துவிடுகிறது. எத்தனையோ கவலைகள் இருந்தபோதிலும் அவற்றை மறந்து மக்கள் இந்தப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். சில வாரங்கள் முன்னரே அதைக் கொண்டாடுவதற்கான ஆயத்தங்கள் துவங்கி, தீபாவளித் திருநாளன்று இந்த உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் இந்த இனிமையும் மகிழ்ச்சியும் நிரந்தரமாக இருப்பதில்லை. பண்டிகை முடிந்தவுடன் அவை நம்மிடம் விடை பெற்றுக் கொள்கின்றன.

நாக்கால் சுவைக்கப்பெற்றவை தொண்டைக்குள் இறங்கியவுடன் தித்திப்பும் கூடவே மறைந்து விடுகிறது. நிரந்தரமாகத் தித்திப்பை எது நமக்குக் கொடுக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா? உலகியலில் பார்த்தால் இந்த இனிமையைத் தரவல்லவை ஏராளம் உண்டுதான்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் இனிமையைத் தரக்கூடும்.

கோடைக் காலங்களில் எத்தனை வகை வகையாக மாம்பழங்கள் விற்பனைக்கு வந்தாலும், அவற்றிலும் அதிக சுவையான வகையைக் கூடுதல் விலை கொடுத்தாவது வாங்கிச் சாப்பிடுகிறோம். மாங்கனியைச் சுவைத்த மாத்திரத்தில் அதன் சுவையைப் புகழ ஆரம்பித்து விடுகிறோம். அதை விட இனிய ஒன்று இல்லை என்று கூட சொல்கிறோம்.

பொங்கல் பண்டிகை வந்தால் கரும்பின் சுவையில் மெய் மறந்து போகிறோம். அதன் சாற்றிலும், ஆலையில் அதை இட்டு வெல்லக் கட்டிகளாக்கி சுவைப்பதில்தான் எத்தனை ஆனந்தம்! சிலர் நீண்ட குழலுடைய மங்கையர்களைக் கண்டு மயங்குவர். மற்றும் சிலர் அரசாங்க ஆதரவு கிடைத்தவுடன் மகிழ்ச்சிக் கடலில் மிதப்பார்கள். அம்முடிசூடிய மன்னர்களின் பார்வை நம் மேல் படாதா என்று ஏங்குவர். அப்பார்வை ஒன்றே நம் வாழ்க்கையை வளப்படுத்தி விடும் என்று நம்புவோரும் இருக்கிறார்கள்.

அருளாளர்களோ இறைவனது அருளே கரும்பாகவும், கனியாகவும், தேனாகவும் பாலாகவும் தித்திக்க வல்லது என்பார்கள். " தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்" எனப் பாடுகிறார் மாணிக்க வாசகர். கனியைச் சுவை உடையது என்று நாம் சொல்கிறோம். ஆனால் அப்பர் பெருமானோ, " ஈசன் எனும் கனி இனிது " எனப் பாடுகிறார். ஏன் என்றால் பழமாகவும் பழத்தின் சுவையாகவும் பெருமான் விளங்குவதால் " பழத்தினில் இன் சுவை" அந்தக் கனி தானே ! அதுவன்றோ நெஞ்சைக் கனிய வைக்க வல்லது! " நெஞ்சம் கனிய மாட்டேன், நின்னை உள் வைக்க மாட்டேன் " என்று கரைந்து உருகுவார் அவர். மெய்ப்பொருளாகிய இறைவனை கனிக்கும் , பாலுக்கும், தேனுக்கும் உவமை கூற முடியுமா? எனவேதான் தனது ஞானம் உண்ட வாயால் சம்பந்தர், " தேனினும் இனியர்" என்று பெருமானை வருணிக்கிறார்.

இவ்வாறு ஆலைக் கரும்பின் சாற்றையும் , பாலில் திகழும் பைங்கனியாகவும் பரம்பொருளை உவமித்தாலும், உண்மையான இனிமை எதில் பெறப் படுகிறது என்பதைத் திருமுறைகள் நமக்கு இனிதே காட்டுகின்றன. இறைவனது அஞ்செழுத்தை உச்சரித்தால் அதுவே கரும்பின் சுவையை மிஞ்சுகிறது. அவனது திருநாமத்தை இராவணன் போற்றியதை " ஆர்வமாக அழைத்தவன்" என்று வான்மியூர் ஈசனைப் பரவும்போது குறிப்பிடுகிறார் திருநாவுக்கரசர். " சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என் உள்ளம் குளிருமே" என்பார் ஞான சம்பந்தர். " எட்டான மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனியவாறே." என்பது சுந்தரர் வாக்கு.

இவ்வாறு உலகியலில் புலன்களுக்குத் தற்காலிகமாக இனிமையத் தர வல்லவற்றைக் காட்டிலும் நிரந்தரமாக இனிமையைத்தரவல்ல ஈசனை நாம் நாட வேண்டும். இதுவே நமக்காகத் திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமானிடம் அப்பர் சுவாமிகள் பாடிய அந்த அற்புதமான பாடல்.

கனியினும் கட்டி பட்ட கரும்பினும்

பனி மலர்க் குழல் பாவை நல்லாரினும்

தனி முடி கவித்து ஆளும் அரசினும்

இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே.

நன்றி

http://deivathamizh.blogspot.in/

Courtesy:

Sri Sekar Venkatraman

66 views0 comments

Recent Posts

See All
bottom of page