top of page

Thiruthalaiyalangadu temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

*கோவை.கு.கருப்பசாமி.*

☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘

*பாடல் பெற்ற சிவ தலங்கள்.111.*

*சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*

*திருதலையாலங்காடு.*

☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘

*ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் கோவில், திருதலையாலங்காடு.*

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் தொன்னூற்று மூன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இறைவன்:* நர்த்தனபுரீஸ்வரர், ஆடல்வல்லநாதர்.

*இறைவி:* பாலாம்பிகை, திருமடந்தை அம்மை.

*திருமேனி:* சுயம்புவானவர்.

*தல விருட்சம்:* வில்வம், பலா.

*தீர்த்தம்:* சங்கு தீர்த்தம்.

*ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*பதிகம்:* திருநாவுக்கரசர்.

*இருப்பிடம்:*

கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் இருந்து கிழக்கே எட்டு கி.மி. தொலைவிலும் திருப்பெருவேளூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து ஆறு கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.

*அஞ்சல் முகவரி:*

அருள்மிகு ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில்,

தலையாலங்காடு,

செம்பங்குடி அஞ்சல்,

குடவாசல் வட்டம்,

திருவாரூர் மாவட்டம்.

PIN - 612 603

*தொடர்புக்கு:* 91 4366 269 335,. 94435 00235

*ஆலயத் திறப்பு காலம்:*

தினந்தோறும் காலை 8.00 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

அர்ச்சகரின் இல்லம் கோவிலருகிலேயே உள்ளதால் எப்போதும் தரிசிக்கலாம்.

முன் காலத்தில் தாருகாவன முனிவர்கள் செருக்கடைந்து அலைந்தனர்.

இறைவனின் பெருமையை உணராது, உதாசினப்படுத்தி அவரை அழித்திடத் தீர்மானித்து ஆபிசார வேள்வியை நடத்தினர்.

ஈசனோ, வேள்வியிலிருந்து புறப்பட்டு வந்த புலியைக் கிழித்து, அதன் தோலையுரித்து போர்த்து அணிந்து வீர நடனம் புரிந்தார்.

நாகங்களை ஆபரணமாகச் சூடியணிந்தார். மானைப் பிடித்து வைத்து ஏந்திக் கொண்டார். மழுவைத் தாங்கிக் கொண்டார்.

இப்படி வேள்வியிலிருந்து புறப்பட்டு வந்தவைகளையும் தாருகாவன முனிவர்களின் ஆணவத்தையும் ஒடுக்கி, இறைவன் ஒருவனே என்பதையும், ஈசனால் மட்டுமே சகல செயல்களும் நடக்கின்றன என்பதையும் உணர்த்தி அருள் புரிந்தார்.

தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய முயலகனை அடக்கி அவன் முதுகின் மீது இறைவன் நடனம் புரிந்த தலம் இதுவாகும்.

தேவாரப் பாடல் பெற்ற தலையாலங்காடு தென்னிந்திய வரலாற்றிலும் பெயர் பெற்ற ஊராகும். இவ்வூர் சங்க காலத்தில் *"தலையாலங்கானம்"* என்று போற்றப்பட்டுள்ளது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட கடும் போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றி பெற்றான்.

இந்தப் போர் நடந்த இடம் தலையாலங்கானம். எனவே இவனுக்கு தலையானங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. இதனைப் புறநானூறு விரிவாக எடுத்துரைக்கின்றது.

இவ்வளவு மகிமை மிக்க தலத்திலுள்ள இந்த ஆலயம் ஆரவாரமின்றி சூழலில் அமைதியாக இருப்பதை காணும்போது மனம் எதையோ இழந்தது போலிருந்தது நமக்கு.

*கோவில் அமைப்பு:*

இத்தலத்திற்கு நாம் சென்றிருக்கையில், உயர்ந்த கோபுரமோ ஓங்கிய மதில்களோ இல்லாமல் இவ்வாலயம் அமைந்திருந்தது.

கிழக்கு நோக்கிய ஆலயத்தைக் கண்டோம். இவ்வாலயத்திற்கு முன்பு, தலத்தின் திருக்குளமான *சங்கு தீர்த்தம்* இருப்பதைக் கண்டு அவ்விடம் அகழ்ந்து சென்று, தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து *'சிவ சிவ'* என மொழிந்து வணங்கிக் கொண்டோம்.

குளக்கரை படியைவிட்டு மேலே ஏறி வந்து ஆலய நுழைவு வாயிலுக்குள் சென்றோம்.

அங்கு, நமக்கு முதலில் அம்பாள் சந்நிதி தென்திசை நோக்கி காட்சியாகித் தெரிந்தது.

சிறியதான முன் மண்டபத்தோடு கூடிய தனிச் சந்நிதிக்குள் அம்மை ஸ்ரீபாலாம்பிகை கலையெழில் கொண்டு கருணையோடு அருளிக் காட்சி தந்தாள்.

இவ்வம்மையை

திருமடந்தை என்றும் நிறையபேர் அழைக்கப்படுகிறதை காணப்பெற்றோம்.

சண்டேஸ்வரி என்பவளின் சந்நிதி ஒன்றும் இங்கு இருப்பதைக் கண்டோம். வணங்கிக் கொண்டோம்.

அம்மை சந்நிதிக்கு வெளியே சனீஸ்வரர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

நந்தி தேவர் தனி மண்டபத்துள் அமர்ந்திருந்தார். இவருகில் சென்று வணங்கிக் கொண்டோம்.

பின் திறந்தவெளியில் நீண்ட பாதை இருக்க மெதுவாக நடக்கலானோம்.

நாம் நடந்து சென்ற திறந்த வெளியில் பாதையானது நம்மை, சுவாமி சந்நிதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்தியது.

சுவாமி சந்நதி, செங்கற்களால் ஆன கட்டிடமாக கட்டப்பட்டிருந்தது. எந்த சப்தமும் இல்லாது மிக அமைதியாக இருந்தது சுவாமியின் சந்நிதி.

எங்களுக்கு முன்னாலும் யாரும் சுவாமியைத் தரிசிக்க வந்த சுவடு தெரியவில்லை. எங்களுக்கு பின்னாலும் நாம் திரும்ப பார்க்க யாரும் வந்தமாதிரி இல்லை.

நாங்கள் மட்டுமே அங்கிருந்தோம். சுவாமியை நன்றாகப் பார்த்து வணங்கிக் கொண்டோம்.

அப்போதுதான் நம் மனதுள் ஒரு எண்ணம் பிரதிபலித்தது. இங்கு இந்த *"பரிகாரம் செய்யின் இவ்வினை ஒழியும்"* என இருந்தால்,....இந்த இடம் இப்படியா இருக்கும்?"

ஈசனிடமே ஈசனுக்காக பிரார்த்தனையாக................ *"எத்தனையோ திருவிளையாடல் புரியும் நீ, உன்னைக் காணவருவதற்கென்று ஒரு திருவிளையாடல் புரியவில்லையே?!"* என்றுதான் அவர்முன் நாங்கள் பிரார்த்தனை செய்து வணங்கினோம்.

இவ்வளவுக்கும் இடையில் அர்ச்சகரை காணக் கிடைக்கவில்லை. அங்கிருந்த சுவாமிசந்நிதி படிக்கட்டில் ஓரம் இருந்த வெள்ளிய விபூதியை எடுத்து நெற்றி நிறைய பூசிக் கொண்டோம்.

நெற்றிக்கு விபூதி தரித்துக் கொண்டதும், மனதுக்குள் ஒரு துடிப்பு தோன்றியது.

"ஆம்!, அவனுடைய விபூதி அவ்வளவு மதிப்புக்குரியது என்பதை உள்ளம் உணர்த்தி மனம் பூரிப்படைந்தது.

சபா மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை போன்ற செங்கல் கட்டிட அமைப்பானாலும் அழகுறத் தெரிந்தது.

நீண்ட பாணத்துடன் சதுர ஆவுடையார் மீது அற்புதமாய் காட்சி கிடைத்த சுவாமியின் தரிசனம் மனதில் நிழலாடிக் கொண்டிருந்த பணியே திரும்பி நடந்தோம்.

ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர். ஆடல்வல்லநாதர் என்பது இவரது தமிழ்ப் பெயராகும்.

இவரது தரிசனம் முடித்து, ஆலய வலம் வருகையில், வடக்கே தல விருட்சமான பலா மரத்தைக் கண்டு கொண்டோம். தலவிருட்சத்தை வலம் வர ஏதுவாக அமைந்திருக்க அனைவரும் வணங்க, நாமும் வலம் வந்து வணங்கிக் கொண்டோம்.

இவ்விருட்சத்நினருகே, தனியாக ஒரு லிங்கமும், அம்பாள் சந்நிதியும், விநாயகருக்கும் முருகனுக்கும் என தனித்தனி சந்நிதியும் அமைந்திருக்க கைதொழுது கொண்டோம்.

சுவாமி சந்நிதி முன்பு ஓலைச்சுவடி ஏந்திய சரஸ்வதியின் சிலை இருந்தது. வீணையில்லா சரஸ்வதியை இங்கேதான் கண்டோம்.

சரஸ்வதி தேவி இங்கு பரமனை வழிபடும்போது, ஜோதிர்லிங்க தரிசனத்தைத் தந்து அருள்புரிந்துள்ளாராம்.

பங்குனி 30, 31 மற்றும் சித்திரை மாதம் 1, 2, 3 ஆகிய தேதிகளில் சூரியக் கதிர்கள் சுவாமியின் மீது தழுகின்றன என்பதை அருகிலிருந்தோர் கூறினர்.

இத்தல தீர்த்தக் குளமான சங்கு தீர்த்தம் மிக சிறப்புடையது. இத்தீர்த்தத்தில் தொடர்ந்து நாற்பத்தைந்து நாட்கள் நீராடி, இறைவன், இறைவி முன்பு நெய் தீபமேற்றி வழிபட, சகல வியாதிகளும் தீருமாம். வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்களும் மறைவது கண்கூடு என்பதை அனுபவத்தில் கண்டோர் ஒருவர் கூறக் கேட்டோம்.

மேலும் இவரை வணங்கப்பெற முன்னோர்களது சாபங்கள் இருந்தாலும் அது நீங்கப்பெறுகிறதாம்.

இத்தல பைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபட எதிரி ஒழிவராம். இத்தல சுமிக்கும் அம்பிகைக்கும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வில்வ அர்ச்சனை செய்து வழிபட, தடைப்பட்ட காரியங்கள் விரைவில் சீராகப்பெறுகிறதாம்.

தேக்க நிலையிலுள்ள நீதிமன்ற வழக்குகள் விரைவில் சாதகமாகுமாம்.

பிள்ளைப் பேறு கிட்டுகிறதாம். இறைவன் நடனமாடிய அரிய தலங்களுள் இதுவும் ஒன்றென்பதால், நடனப் பயிற்சியாளர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறதைக் காணநேர்ந்தோம்.

திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான பதிகம் ஆறாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

திருநாவுக்கரசர் இத்திருத்தலத்தினை கால்களால் மிதிப்பதைப் பாவமாகக் கருதி, கரங்களால் ஊன்றி வந்து வழிபட்டு பதிகம் பாடித் துதித்துள்ளார்.

இறைவனும் தை அமாவாசை தினத்தில், ஆலயத்தின் வடபிராகாரத்தில் உள்ள பலா மரத்தடியில் அப்பருக்குக் காட்சி கொடுத்து அருள் புரிந்திருக்கிறார்.

அப்பர் இத்தலம் மீது பத்து பாடல்களைப் பாடிச் சிறப்பித்துள்ளது மட்டுமின்றி பிற திருத்தலப் பதிகங்களிலும் இத்தலத்தைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார் என்பதை நோக்கத் தக்கது.

*குறிப்புகள்:*

இந்த தலம் ஒரு சிறு கிராமத்தில் அமைந்து உள்ளது. கிராமத்தில் வசதிகள் குறைவு. கோவிலுக்கு வரும் கூட்டமும் குறைவு தான்.

பல கிராமத்து கோயில்களில் இருக்கும் நிலைமைதான இங்கிருக்கும் கோயிலுக்கும்.

அடியார்களுக்கு ஒரு வேண்டுகோள்; இத்தகைய ஆலயங்களுக்கு ஆதரவு தர வேண்டியது நம் தலையாயக் கடமை.

நகரங்களில் உள்ள ஆலயங்களுக்கு நல்ல கூட்டம் வருவது போல் இங்கும் வர வேண்டும். பல அடியார்களின், பக்தர்களின் எண்ணமும் அதுவே.

*சிறப்புகள்:*

காவிரி சோழசூடாமணி எனும் பெயரோடு கிளை நதியாக இங்கு பாய்கின்றது. இதனை கடுவாய் தீர்த்தம் என்றும் கூறுவர்.

ஊர்முழுவதும் சிவலிங்கம் கண்டு தலையால் திருநாவுக்கரசர் நடந்ததால் தலையாலங்காடு.

சண்டிகேஸ்வரர் சண்டிகேஸ்வரியுடன் இருப்பது சிறப்பு.

தருகாவனத்து முனிவர்கள் அனுப்பிய முயலகனை அடக்கி

முகிலன் மீது நின்று நடன மாடிய தலம்.

*தல அருமை:*

தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து ஏவிவிட்ட முயலகனை அடக்கிய சிவபெருமான், அம்முயலகன் மீது நடனம் ஆடிய தலம் இது. எனவேதான், சுவாமிக்கு நர்த்தனபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. கிருத யுகத்தில் கபில முனிவர் பூஜித்து, தை அமாவாசை தினத்தில் சிந்தாமணியைப் பெற்றுக்கொண்டார். சரஸ்வதி தேவி பூஜித்து ஜோதிர்லிங்க தரிசனம் பெற்றாள்.

இக்கலியுகத்திலும் சங்குதீர்த்ததில் நீராடுபவர்கள், குன்மம், முயலகநோய், சித்தப்ரமை, வெண்குஷ்டம் முதலிய மகா ரோகங்களிளிருந்து நிவர்த்தி பெறுகிறார்கள்.

*வழிபட்டோர்:*

கபில முனிவர், தாருகாவன முனிவர்கள், காளி, சனி பகவான், திருநாவுக்கரசு நாயனார் ஆகியோர். இத்தலத்திற்கு மிக அருகிலுள்ள குடவாயில், நாலூர் மயானம், பெருவேளூர், கரவீரம் ஆகிய தலங்கள் திருஞானசம்பந்தரின் தேவாரத் திருப்பதிகங்களைப் பெற்றுள்ளதால், சம்பந்தப்பெருமான் தலையாலங்காட்டிற்கும் எழுந்தருளி, பதிகங்கள் பாடியிருப்பார். அதுபோலவே, அருகிலுள்ள ஊர்களான திருவாஞ்சியத்தையும், திருவாரூரையும் பாடியுள்ள சுந்தரரும் இத்தலத்து இறைவரைப் பாடியிருப்பார்.

நமது தவக்குறைவால், நமக்கு அப்பதிகங்கள் கிடைக்கவில்லை என எண்ணவேண்டியுள்ளது.

*பிற செய்திகள்:*

ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் கடைசி இரு நாட்களும், தொடரும் சித்திரை மாதத்து முதல் இரு நாட்களும் விடியற்காலை சூரியோதயத்தின் போது, சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமியின் மீது விழும்போது சூரியபூஜை நடத்தப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலாம்பிகையின் மீது பாம்பு இருந்ததைப் பலரும் கண்டு புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்த போது, அப்பாம்பு, தனது சட்டையை உரித்து அம்பாள் திருமேனியின் மீதே விட்டுவிட்டு மறைந்து விட்டது.

இங்குள்ள பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி. தீராத பகைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பவர். எனவே, தேய்பிறை அஷ்டமியின்போது மக்கள் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, நலம் யாவும் பெறுகின்றனர்.

செவ்வாய்க்கிழமைகளில் காளி தேவியை வழிபட்டு, திருமண பாக்கியம், புத்திர பாக்கியம் ஆகிய கோரிய வரங்களைப் பெறுகின்றனர்.

*கல்வெட்டுக்கள்:*

தெற்கு ப்ராகாரச் சுவற்றிலும், வடபுறச் சுவற்றிலும் மகாமண்டப முகப்பிலும் உள்ள கல்வெட்டுக்கள் படி எடுக்கப் பட்டுள்ளன.

ராஜராஜனின் ஆறாவது ஆண்டு ஆண்டில் அளிக்கப்பட்ட தேவ தானங்களும் அருமை உடையார் குமாரன் செண்டானாதர் உடையார் மகாமண்டபம் கட்டித்தந்த செய்தியும், அம்பர் அருவந்தை அரயன் சிவதவனப் பெருமானான காளிங்க ராஜன் என்பவர் இக் கற்றளியைத் திருப்பணி செய்த தகவலும் இக்கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.

*பூஜைகளும் விழாக்களும்:*

இந்து அற நிலையத்துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் காலையும் மாலையும் பூஜைகள் நடைபெறுகின்றன.

பிரதோஷ பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. குளத்தங்கரை விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை நடக்கிறது.

தை அமாவாசையை முன்னிட்டு இரு தினங்கள் சுவாமி புறப்பாடாகி, சங்க தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

சித்திரை மாத பௌர்ணமி, சித்திரை சதயத்தன்று அப்பர் குரு பூஜை, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆடி-தை வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு விசேஷ அலங்காரம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, கந்த சஷ்டி, அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி விஷேசக் கால பூஜை, மகர சங்கராந்தி, மகாசிவராத்திரி, ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

*தேவாரம்:*

1. தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச் சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னை அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை ஆதிரைநா ளாதரித்த அம்மான் றன்னை முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற தண்டத்திற் றலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கினேனே.

2. அக்கிருந்த அரையானை அம்மான் றன்னை அவுணர்புர மொருநொடியி லெரிசெய் தானைக் கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் றன்னைக் குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை புக்கிருந்து போகாத புனிதன் றன்னைப் புண்ணியனை எண்ணருஞ்சீர்ப் போக மெல்லாந் தக்கிருந்த தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கினேனே.

3. மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் றன்னை எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை இடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப் பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப் புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கினேனே.

4. சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச் செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப் புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப் பொன்னாகி மணியாகி முத்து மாகிப் பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப் பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற தவனாய தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கினேனே.

5. கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் றன்னைக் காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் றன்னை அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை ஐயாறு மேயானை ஆரூ ரானைப் பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் றன்னைப் பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச் சங்கரனைத் தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கினேனே.

6. விடந்திகழும் அரவரைமேல் வீக்கி னானை விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை அடைந்தவரை அமருலக மாள்விப் பானை அம்பொன்னைக் கம்பமா களிறட் டானை மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல் வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த தடங்கடலைத் தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கினேனே.

7. விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை முடைநாறு முதுகாட்டி லாட லானை முன்னானைப் பின்னானை அந்நா ளானை உடையாடை யுரிதோலே உகந்தான் றன்னை உமையிருந்த பாகத்து ளொருவன் றன்னைச் சடையானைத் தலையாலங் காடன் றன்னை சாராதே சாலநாள் போக்கினேனே.

8. கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக் கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை இரும்பமர்ந்த மூவிலைவே லேந்தி னானை என்னானைத் தென்னானைக் காவான் றன்னைச் சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத் தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந் தரும்பொருளைத் தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கினேனே.

9. பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப் படுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக் கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான் றன்னைக் காரணனை நாரணனைக் கமலத் தோனை எண்டளவி லென்னெஞ்சத் துள்ளே நின்ற எம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந் தண்டரனைத் தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கினேனே.

10. கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான் கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி முடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப் பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப் பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாம தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கினேனே.

திருச்சிற்றம்பலம்.

திருநாவுக்கரசர் இத்தல பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் தலையாலங்காடு இறைவனை அடையாமல் வீணாய் நாட்களைப் போக்கினேனே என்று மனம் உருகிப் பாடியுள்ளார்.

சிவ தல அருமைகள் பெருமைகள் தொடரில் நாளைய பதிவு *திருக்குடவாயில் கோனேசுவரர்.* வ(ள)ரும்.

திருச்சிற்றம்பலம்.

Reposting it from Amirthavahini google group.

66 views0 comments
bottom of page