top of page

Mantrapureesvarar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

*கோவை. கு.கருப்பசாமி.*

******************************************

*125*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*

(நேரில் சென்று தரிசித்ததைப் போல,)

*மந்திர புரீசுவரர் கோவில், திருவுசத்தானம்.*

*****************************************

திருவுசத்தானத்தை (கோயிலூர் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது.)

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள இத்தலம் நூற்றி ஏழாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இறைவன்:*

மந்திர புரீசுவரர்.

*இறைவி:* பெரியநாயகி, பிருகந்நாயகி.

*திருமேனி:* சுயம்புவானவர்.

*தல விருட்சம்:* மா மரம்.

*தல தீர்த்தம்:* மார்க்கண்டேயர் தீர்த்தம், அனுமன் தீர்த்தம், குஞ்சித தீர்த்தம், கவுதமர் தீர்த்தம், நெல்லித் தீர்த்தம்.

*ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*தேவார பதிகம்:*

திருஞானசம்பந்தர்.

*இருப்பிடம்:*

திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துபேட்டையிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலை வழியில் ஒரு கி.மி. தொலைவில் சாலையிலேயே கோயிலின் வளைவு ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர் தேவஸ்தானம் என்று உள்ளது.

இவ்வளைவினுள் நுழைந்து சென்றால் கோயிலை அடையலாம். முத்துபேட்டையிலிருந்து சுமார் மூன்று கி.மி. தொலைவு.

தஞ்சை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை முதலிய பல ஊர்களிலிருந்து முத்துப்பேட்டை செல்ல பேருந்து வசதிகள் உண்டு.

*அஞ்சல் முகவரி:*

அருள்மிகு மந்திரபுரீசுவரர் திருக்கோவில்,

கோவிலூர்,

முத்துப்பேட்டை அஞ்சல்,

திருத்துறைப்பூண்டி வட்டம்.

திருவாரூர் மாவட்டம்.

PIN - 614 704

*ஆலயத் திறப்பு காலம்:*

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6. 30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*ஆலய தொடர்புக்கு:* சிவபாத சுந்தரம், அர்ச்சகர் தொலைபேசி: 04369

*கோவில் அமைப்பு:*

நீண்ட நெடிய நாளைய நினைப்பு நமக்கு, இவ்வாலயத்திற்குச் செல்ல வேண்டுமென்பது.

இது கனிந்து, அவன் அருள் கூடி நம்மை அழைப்பதற்கு எட்டு வருடமாகிவிட்டது. 'ஆம், இவ்வாலயம் செல்ல எட்டு வருடத்திற்குப் பிறகு அந்த பாக்கியம் கிடைத்தது.

சும்மாவா சொன்னார்கள்? அவனைத் தரிசிப்பதற்கும் அவன் அருள் வேண்டுமென்று!....அது பூரண உண்மை.

கிழக்கு நோக்கிய ஆலயத்தின் ஐந்து நிலைகளைக் கொண்டு இராஜகோபுரத்தை முதலில் கண்டோம்.

*"சிவ சிவ"* என மொழிந்து கோபூரத்தை வணங்கிக் கொண்டோம்.

இராஜகோபுரத்திற்கு எதிரே ஆலயத்தின் திருக்குளம் இருந்ததது. அங்கு சென்றோம்.

குளக்கரையிலிருக்கும் விநாயகரை தோப்புக்கரணமிட்டு வணங்கிக் கொண்டோம். குளத் தீர்த்தத்தை அள்ளி சிரசிற்கு வார்த்து "சிவ. சிவ" என வணங்கிக் கொண்டோம்.

திரும்பி, இராஜகோபுரம் வழியாக உள்ளே செல்ல, உட்புறத்தில் இடதுபுறமாக மற்றொரு சிறிய தீர்த்தத் திடலைக் காணப்பெற்றோம். இத்தீர்த்த்தினையும் அள்ளி சிரசிலிட்டு வானை நோக்கி "சிவ. சிவ" என வணங்கிக் கொண்டோம்.

இத்தீர்த்தத்தின் வலதுபுறமாக அம்பாள் கோயிலும் அமைந்திருந்தது.

கவசமிட்ட கொடிமரத்து முன்பு நின்று "சிவ.சிவ" வணங்கியெழுந்தோம்.

பலிபீடத்தருகே வந்து வழக்கம்போல நம் ஆணவமலம் ஒழிய வேண்டிக் கொண்டதோடு, மீண்டும் அவ்வாணவமலம் தோன்றாதிருக்க துணை செய்யுமாறும் "சிவ.சிவ" வணங்கிக்​ கொண்டோம்.

நந்தியின் அருகில் நின்று, ஆலயத்தொழுகைக்கு வரவழைத்த ஈசனைத் காட்டுவதற்கு அனுமதி பெற்றுக் கொண்டோம்.

அம்மையின் சந்நிதியின் வெளிப் பிரகாரத்தில் கொடிமர, பலிபீட, நந்தி ஆகியோர்களை "சிவ.சிவ" எனக்கூறி வணங்கி பின் நகர்ந்தோம்.

அடுத்து இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளையுடன் காட்சி கிடைக்க. "சிவ.சிவ" என மொழிந்து வணங்கிக் கொண்டோம்.

அங்கிருந்த துவார கணபதியை குணிய பணிந்து வணங்கினோம். அதனருகாக இருந்த சுப்பிரமணியரையும் தொழுது வணங்கிக் கொண்டோம்.

மேலும் உள்புகும்போது, வாயிலில் இடதுபுறமாக அதிகார நந்தி காட்சி தருவதைக் கண்டோம். அவரூக்குணாடான பணிவான வணக்கத்தை ங் செலுத்திக் கொண்டோம்.

உட்பிரகாரத்தில் வலம் வரும்போது சூரியன், தலப்பதிகக் கல்வெட்டுக்கள், அறுபத்துமூவரையும் கண்டு வணங்கி, அனைத்து நாயன்மாரின் பெயருடன் அடியார்க்கு அடியேனானோம் என்று கூறி பக்திப்பாங்குடன் நகர்ந்தோம்.

நேர் எதிரில் கருவறைச் சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகங்களுடனும் மூன்று கால்களுடனும் காட்சி தந்துகொண்டிருந்தார். அழகான உருவம். அரிதான கண்டிரப்பெறாத வடிவம், பிரமிப்புடன் தரிசித்து மகிழ்ந்தோம்.

கருவறை சுற்றுப் பிராகாரத்தில், சப்த மாதர்கள், வீரபத்திரர், காளி, காசிவிசுவநாதர், சூதவன விநாயகர், சோமாஸ்கந்தர், வருணன் ஆகியோர்களால் வழிபட்ட லிங்கத்திருமேனிகளைக் கண்டு "சிவ.சிவ", "சிவ.சிவ" என கூறி கூறி தொடர்ந்தோம்.

இராமர் அவர் வழிபட்ட லிங்கம், மார்க்கண்டேயர் வழிபட்ட லிங்கத்திருமேனிகளையும் வணங்கிக் கொண்டோம்.

அன்னபூரணி, சுப்பிரமணியர், வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி நவகன்னியர், சனிபகவான், பைரவர், சூரியன், சந்திரன் முதலிய சந்நிதிகளுக்கும் சென்று கைதொழுது கொண்டோம்.

நடராஜ சபைக்கருகாக வரும்போதே, அவன் ஆடற்கலை நளினம் நம் மனதில் நிழலாட, அவனை ஆனந்தத்துடன் வணங்கி, கண்ணீருடன் அன்பை செலுத்திக் கொண்டோம்.

சிறிது நேரம் அவனை நோக்கியபடியே அருகிருந்த திட்டில் சிறிது நேரம் தாமதித்து அமர்ந்திருந்தோம்.

பின் எழுந்து, மீண்டும் ஒருமுறை நடராஜப் பெருமானின் திருவடியை நோக்கிவிட்டு "சிவ.சிவ" திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என கூறி நகரத் தொடங்கினோம்.

உட்பிரகாரத்தை அடுத்துள்ள முன்மண்டபத்தில் தல வரலாற்று அருமைகளை வண்ண ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளதைக் கண்டு மெய்மறந்து நின்றோம்.

கருவறை வாயிலின் இருபுறங்களிலும் சங்கநிதி, பதுமநிதி மூர்த்தங்கள் இருக்கிறார்கள், வணங்கி உட்புகும் அனுமதியும் வேண்டி, வரிசையில் பயணித்தோம்.

நேரே மூலவர் மந்திரபுரீசுவரர் அருமையாக அருள் காட்சியை வழங்கிக் கொண்டிருந்தார்.

சதுரமான பீடத்தில் சுயம்பு லிங்க வடிவுடன் இடதுபுறமாக சற்று சாய்ந்த நிலையில் குனிந்து ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் காட்சியளிக்கொண்டிருந்தார்.

"சிவ.சிவ", "சிவ.சிவ" என மொழிந்த வண்ணமே வணங்கினோம்.

மேலும் ஈசன் வெண்மை நிறத்துடன் காட்சியாய் இருந்தார். அதற்கான காரணத்தை அருகிருந்தோரிடம் வினவினோம்.

அதற்கு அவர்கள்.......... கருட பகவான் வானவெளியில் அமுத கலசத்தை ஏந்திச் செல்லும்போது, கலசத்திலிருந்து அலம்பிச் சிந்திய அமுதம் இறைவன் திருமேனி மீது பட்டதால் இறைவன் வெண்மை நிறமாக காட்சி அளிக்கிறார் என்றார்கள். "சிவ.சிவ" என்றவாறு வெளியேறி மகிழ்ந்தோம்.

*தல அருமை:*

இந்திரன், விசுவாமித்திரர், இராமர், இலட்சுமனன், ஜாம்பவான், சுக்ரீவன், அநுமன் ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டுள்ளனர்.

விசுவாமித்திரருக்கு நடனக் காட்சி காட்டியருளிய தலம்.

இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் பெற்ற தலம்.

ஆகவே இறைவன் திருப்பெயர் மந்திரிபுரீஸ்வரர் என்று வழங்குகிறது.

மற்றும் கடலில் அணை கட்டுவதற்குரிய வழிமுறைகளை இராமபிரான் இப்பெருமானிடம் உசாவிய (கேட்டறிந்து) காரணத்தால் இத்தலம் *உசாத்தானம்* என்று பெயர் பெற்றது.

இவ்வரலாற்றுக்கு ஆதரவாக இவ்வூருக்கு அருகில் இராமன் கோயில், ஜாம்பவான் ஒடை, அநுமான் காடு, சுக்ரீவன்பேட்டை, தம்பிக்கு நல்லான் பட்டினம் முதலிய ஊர்கள் உள்ளன.

இறைவன் மாமரத்தினடியில் திகழ்வதால் இத்தலம் *சூதவனம்* என்றும் சொல்லப்படுகிறது.

சூதவனம் என்றால் மாங்காடு என்பதாகும்.

இதற்கேற்ப தலவிநாயகரும் *சூதவன விநாயகர்* என்ற பெயருடன் *மாவிலை*யைக் கரத்தில் ஏந்தியபடி காட்சி தருகிறார்.

இவ்வாலயத்தின் தலமரமாக மாமரமும், தீர்த்தங்களாக அநும தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், நெல்லி தீர்த்தம், குஞ்சித தீர்த்தம், ஆதிசேஷ தீர்த்தம் ஆகியவையும் விளங்குகின்றன.

*தல சிறப்பு:*

ஸ்ரீராமர் இலங்கை செல்ல இராமேஸ்வரம் அருகில் கடலில் அணை கட்டுவதற்கு முன்பு இத்தலத்தை தரிசித்து சிவபெருமானிடம் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது.

இராமருக்கு மந்திர உபதேசம் செய்யும் நிலையில் சிவபெருமான் சற்று வடபுறமாக சாய்ந்து காணப்படுகிறார்.

மார்க்கண்டேயன் மீது எமன் வீசிய பாசக்கயிற்றினால் உண்டான வடுக்கள் நீங்க இத்தலத்தில் தன் பெயரால் தீர்த்தம் உண்டாக்கி அதில் நீராடி, இத்தலத்து இறைவனை வழிபட்டு வடுக்கள் நீங்கப் பெற்றார்.

இத்தலத்தில் நடராஜப் பெருமான் விஸ்வாமித்திரருக்கு நடனக் காட்சி தந்துள்ளார்.

*கல்வெட்டுகள்:*

ராமபிரான், அவன் தம்பி இலக்குவன், ஜாம்பவான், சுக்ரீவன், அநுமன் ஆகிேயார் வழிபட்டதும், சேது அணை கட்ட இராமபிரானுக்கு மந்திரோபதேசம் செய்த மந்திரபுரீசர் கோயில் கொண்டதுமான திருத்தலம் திருவுசாத்தானம் எனப்பெறும் முத்துப்பேட்டை கோயிலூராகும்.

இத்தலத்தின் பெருமையினை திருஞானசம்பந்தப்பெருமானார்,..........

*‘‘நீரிடைத் துயின்றவன், தம்பி, நீள் சாம்புவான்

போருடைச் சுக்ரீவன் அநுமன் தொழக்

காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்த எம்

சீருடைச் சேடர் வாழ் திருவுசாத்தானமே’’*

- என்று பாடிப் பரவியுள்ளார்.

இத்தலம் அமைந்துள்ள பகுதி ராமகாதையோடு தொடர்புடையது என்பதால்தான் திருவுசாத்தானத்தைச் சுற்றி இராமன் கோயில், சாம்பவான் ஓடை, அனுமான் காடு, சுக்ரீவன் பேட்டை, தம்பிக்கு நல்லான் பட்டிணம், முதலிய திருவூர்கள் திகழ்வதை இன்றும் நாம் காணலாம்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் கோயிலூர் என்ற பெயரில் திருவுசாத்தானம் உள்ளது.

இரண்டாம் நந்திவர்மன் என அழைக்கப்பெற்ற பல்லவப் பேரரசன் இளைஞனாக இருந்தபோது அவனை சோழ நாட்டு நந்திபுரத்தில் வைத்து சித்திரமாய பல்லவன் என்பவனும், பாண்டியன் ஒருவனும் முற்றுகையிட்டு சிறைப்படுத்தினார்கள்.

அப்போது பல்லவ தளபதி உதயேந்திரன் என்பான் பெரும்படையுடன் வந்து பாண்டியனையும், சித்திரமாயனையும் துரத்தி நிம்பவனம், சூதவனம், சங்கர கிராமம், நெல்வேலி, சூராவழுந்தூர் ஆகிய இடங்களில் தொடர்ந்து போரிட்டு வெற்றிவாகை சூடினான் என்பதை உதயேந்திரம் செப்பேட்டுத் தொகுதி எடுத்துரைக்கின்றது.

அப்பெரும் போர் நிகழ்ந்த சூதவனம்தான் திருவுசாத்தானம் என்றும் கோயிலூராகியுள்ளது.

இப்போர் நிகழ்ச்சிகள் காஞ்சிபுரம் வைகுந்தநாதர் ஆலயத்து திருச்சாற்றுச் சுவர் சிற்ப காட்சிகளில் கல்வெட்டுக் குறிப்புகளுடன் இடம் பெற்றுள்ளதை நேரில் சென்று காணலாம்.

இவ்வாலயத்தின் சுவர்களில் விக்கிரம சோழன் காலம் தொட்டு (கி.பி. 1123) பதிவு செய்யப் பெற்ற நாற்பத்தைந்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுச் சாசனங்கள் இடம் பெற்றுள்ளன.

அவை இவ்வூரினை *உசாத்தானம்*என்றும், *சாத்தானம்*என்றும் குறிப்பிடுவதோடு ஈசனின் திருநாமங்களாக *உசாத்தானமுடைய நாயனார்,* *உசாத்தானமுடையார்* என்றும் குறிப்பிடுகின்றன.

சோழப் பெருவேந்தர்கள் காலத்தில் இவ்வூரினை *கேரளகுலாசனி* *சதுர்வேதிமங்கலம்* என்ற மற்றொரு பெயராலும் அழைத்தனர் என்பதை மேற்குறித்த கல்வெட்டுகளில் காண இயலும்.

அசனி என்றால் இடி என்று பொருள். கேரள அரசர்களுக்கு சோழர் இடியாக விளங்கினர் என்பதை இப்பெயர் சுட்டுவதோடு, இவ்வூர் நான்கு வேதங்களும் கற்ற அந்தணர்கள் வாழ்ந்த திருவூர் என்பதால் *கேரள குலாசனி சதுர்வேதி மங்கலம்* என அழைக்கப் பெற்றது என்பதையுமீ அறியலாம்.

இராஜேந்திர சோழ வளநாட்டு புறங்கரம்பை நாட்டுப் பிரமதேயம் என இவ்வூர் குறிக்கப் பெறுவதால் இத்திருவூர் உசாத்தான முடையார்க்கே உரிய ஊராக விளங்கி இருந்திருக்கிறது.

அதனால்தான் கோயிலூர் என்ற பெயர் பண்டு முதல் இன்றுவரை வழக்கில் உள்ளது.

மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தில் மன்னனின் நலத்திற்காகவும், அவன் பெற்ற வெற்றிக்காகவும் பெரு வாழ்வு தந்த பெருமான் சதுர்வேதி மங்கலத்து சபையோர் திருக்காமகோட்டமுடைய பெரியநாச்சியாரின் சிறப்பு வழிபாடுகளுக்காக நிலக்கொடை அளித்தனர் என்பதை ஒரு சாசனம் கூறுகின்றது.

அக்கல்வெட்டு சாசனம் புரோசைக் குடியார் என்பவரே அந்த அம்மன் ஆலயத்தை எடுப்பித்தவர் என்ற தகவலையும் கூறுகின்றது.

இதே பெருவாழ்வு தந்த பெருமாள் சதுர்வேதி மங்கலத்து சபையினரே இவ்வாலயத்து சுப்பிரமணியர் கோயில் வழிபாட்டுக்காக நிலக்கொடை அளித்ததை மற்றொரு சாசனம் விவரிக்கின்றது.

தற்போது கோயிலூருக்கு அருகே திகழும் *பெருக வாழ்ந்தான்* எனும் பேரூர் சோழப் பேரரசர்கள் காலத்தில் பெருவாழ்வு தந்த பெருமாள் சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பெற்ற அரிய தகவல் இவ்விரண்டு சாசனங்களால் அறிய முடிகிறது.

ஊர்ப் பெயர்கள் காலப்போக்கில் எவ்வாறு மறுவி விடுகின்றன என்பதற்கு இக்கல்வெட்டுகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

இதுபோன்றே இவ்வாலயத்திலுள்ள மூன்றாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டுச் சாசனம் கோயிலூருக்கு அணியத் திகழும் *சுத்தமல்லி* என்ற கிராமத்தினை *சுத்தவல்லி சதுர்வேதிமங்கலம்* என்று குறிப்பிடுகின்றது.

சுத்தவல்லி என்பது சோழப் பேரரசனின் தேவியின் பெயராகும்.

சோழப் பேரரசர்களின் மகத்தான சாதனை என்று குறிக்கப் பெறுவது சோழமண்டலம் முழுவதையும் துல்லியமாக நில அளவை செய்து ஆவணப்படுத்தியதாகும்.

முதல் ராஜராஜ சோழன், முதற் குலோத்துங்கன் என்ற இரு பேரரசர்களும், சோழ நாட்டை அளந்து பதிவு செய்ததைப் பல ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன.

திரிபுவனவீர தேவன் எனும் மூன்றாம் குலோத்துங்கனும் அம்மணியைச் செய்தான் என்பதை கோயிலூர் கோயிலில் உள்ள மூன்று கல்வெட்டுகள் எடுத்துக் கூறுவது அபூர்வ தகவலாகும்.

இருமுடி சோழ பல்லவரையன் என்ற பொன்னம்பலக் கூத்தன் என்பான் இவ்வாலயத்தில் புவனபதி நாச்சியாருக்காக ஆலயம் எழுப்பித்தான் என்ற தகவல் கல்வெட்டொன்றில் கூறப் பெற்றுள்ளது.

பிக்சன் பல்லவராயன் என்பான் பல்வனீச்சரம் உடைய நாயனார் திருமேனியை எழுப்பித்தான் என்ற செய்தி மற்றொரு சாசனத்தால் அறிய முடிகிறது.

திருநாவுக்கரசருக்கும் ஞானசம்பந்தருக்கும் சுந்தரருக்கும் பூஜைகள் செய்ய நிலக்கொடை அளிக்கப்பெற்றது என்பதும், இவ்வாலயத்தில் திருப்பதிகங்களைப் பாட (தேவாரம் பாட) திருக்கைக் தொட்டி என்ற மண்டபம் திகழ்ந்தது என்பதும் சாசனங்கள் பகரும் செய்திகளாகும்.

திருஞானசம்பந்தரை திருஞானம் பெற்ற பிள்ளையார் என்றும், கூத்தாடு நாயனார் என்றும் இவ்வாலயத்துக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

ராமபிரானுக்கு மந்திரோபதேசம் செய்த மந்திரபுரீஸ்வரரை ஒரு முறை சென்று வணங்கி அவனருள் பெற்றுய்யுங்கள்.

*பெருமை:*

ஆயிரத்து என்பத்தொன்று ஏக்கர் நன்செய் நிலங்களும், ஆயிரத்து பதினெட்டு ஏக்கர் புன்செய் நிலங்களும் தென்னந்தோப்புக்களும், முப்பத்தாறு கபடிடஸ்களும், இருநூற்று இருபத்தொன்பது மனைக்கட்டுக்களும் இக்கோயிலுக்குச் சொந்தமானவை.

(இக்கோயில் நிர்வாகத்தில் முத்துப்பேட்டையில் அருள்மிகு பெரியநாயகி மகளிர் மேல்நிலைப்பள்ளி நடைபெறுகிறது.)

(ஆதாரம் - தலவரலாறு.)

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகத்தில் உள்ள பதினோறு பாடல்களில் 5-ம், 6-ம் பாடல்கள் சிதைந்து போயின.

மீதியுள்ள ஒன்பது பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்தின.

*அதி அற்புதம்:*

சிதம்பரத்தில் சாயரட்சை நேரத்தில் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை காணமுடியாமல் வருந்தினார் விஸ்வாமித்திரர்.

இத்தலத்திற்கு ஒருமுறை விசுவாமித்திரர் வர, இவரது வருத்தத்தை போக்க எண்ணிய ஈசன், இங்கு நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது, சிதம்பரத்தில் ஆடிய தாண்டவத்தை விஸ்வாமித்திரருக்கு இறைவன் இங்கு ஆடிகாட்டுகினார்.

எனவே இத்தலம் சிதம்பரத்திற்கு இணையாக கோயில் ஆனதால், *ஆதிசிதம்பரம்* என்றும் கோவிலூர் எனவும் அழைக்கப்படுகிறது.

*திருஞானசம்பந்தர் தேவாரம்:*

1நீரிடைத் துயின்றவன் றம்பிநீள் சாம்புவான்

போருடைச் சுக்கிரீ வன்அநு மான்றொழக்

காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம்

சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே

பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலின் அவதாரமான இராமனும், இலக்குமணனும், சாம்பவான், சுக்கிரீவன், அனுமன் ஆகியோரும் தொழுது வணங்கக் கருநிற நஞ்சை உண்டு காத்தருள் செய்த எம் பெருமைக்குரிய, எங்களை ஏவல்கொள்ளும் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.

2கொல்லையே றுடையவன் கோவண ஆடையன்

பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார்

முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ்

தில்லையா னுறைவிடந் திருவுசாத் தானமே.

🏾முல்லைநிலம் சார்ந்த எருதை (திருமாலை) இறைவன் வாகனமாக உடையவன். கோவண ஆடை உடையவன். குறிதரு கோலநற் குணத்தினா ரடிதொழ முன்பல்லிருந்த உலர்ந்த பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்கும் பரமன். முல்லைக்கொடிகளையுடைய முல்லை நிலத்தில், தேன் துளிக்கும் சோலைகளையுடைய அழகிய பழம்பதியான தில்லையில் விளங்குபவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.