top of page

Thiruchitremam

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

*கோவை.கு. கருப்பசாமி.*

¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶

*124*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*பாடல் பெற்ற சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*

*திருச்சிற்றேமம்.*

¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் நூற்றி ஆறாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இறைவன்:*

சுவர்ணஸ்தாபனேஸ்வரர், பொன்வைத்தநாதர்.

*இறைவி:* அகிலாண்டேஸ்வரி.

*திருமேனி:* சுயம்புவானவர்.

*புராணப் பெயர்கள்:*

சிற்றாம்பூர், சிற்றாய்மூர், எழிலூர் நேயம்.

*தல விருட்சம்:* ஆத்தி.

*தீர்த்தம்:* சுவர்ண தீர்த்தம், புஷ்கரணி.

*தல விநாயகர்:* ஆத்திமர விநாயகர்.

*ஆலயப் பழமை:*

ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*வழிபட்டோர்:* பிரமரிஷி, சித்தர்கள் முதலியோர்.

*தேவாரப் பாடல்கள் பாடியவர்கள்:*

அப்பர், சம்பந்தர்.

*அஞ்சல் முகவரி:*

அருள்மிகு சுவர்ணஸ்தாபனேஸ்வரர் திருக்கோயில்,

சித்தாய்மூர்,

சித்தாய்மூர் அஞ்சல்.

பொன்னிறை - S.O.

திருவாரூர் வட்டம்.

திருவாரூர் மாவட்டம்

PIN - 610 203

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9-30 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*இருப்பிடம்:*

திருவாரூர் திருத்துறைப் பூண்டி சாலையில் ஆலத்தம்பாடி வந்து, அங்கிருந்து சித்தாமூர் செல்லும் பாதையில் 3AE பேருந்து பாதையில் நடந்து செல்ல வேண்டும்.

இத்தலத்திற்கு வருவோர் கூட்டமாகத் தனிப் பேருந்தில் வந்து தரிசிப்பதே சிறந்தது.

அரிச்சந்திர நதியின் வடபால் உள்ளதலம். ஊர் அருகில் செண்பகநதி உள்ளது. பிரமரிஷி, சித்தர்கள் வழிபட்டது தலம் இத்தலம்.

*தலவிநாயகர்:* ஆத்திமர விநாயகராக இருக்கிறார்.

எப்போதும் நடராஜர் வடிவம் சிறப்பானது. அதுவும் இத்தல நடராஜர் வடிவம் அழகான வடிவம்.

பிராகாரத்தில் கன்னிவிநாயகர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் உள. பிரமரிஷி. ஐயனார், பைரவர், சனிபகவான், சூரியன், விசுவநாதர் சந்நிதிகள் தரிசிக்கத்தக்கவை.

தலப்பதிகம் அம்பாள் சந்நிதி முன்பு பதிக்கபட்டுள்ளது.

வேலவர், சோமாஸ்கந்தர், ஆடிப்பூர அம்மன், பிரதோஷநாயகர், சந்திரசகேரர், மற்றும் தலவரலாற்றுடன் தொடர்புடைய செட்டியார், அவர் மனைவி ஆகியோர், சம்பந்தர் முதலியோரின் உற்சவத் திருமேனிகள் உள்ளன.

*கோவில் அமைப்பு:*

இராஜகோபுரத்தை வணங்கி,

ஆலயத்துக்குள் செல்லவும் உள்ளே பெரிய ஆத்தி மரமும் ஆத்தி மர விநாயகரும் இருந்தனர். முதல்வருக்கு முதல் வணக்கத்தை செலுத்திக் கொண்டோம்.

அடுத்தாக நந்தியாரை உருகி வணங்கி வேண்டிக் நகர்ந்தோம்.

பலிபீடத்து முன் நின்று, இருக்கும் ஆணவமலம் முழுமையும் ஒழிய வேண்டிக் கொண்டும், திரும்ப ஆணவமலம் ஏற்படாதிருக்க நிலையாகுமாறும் வேண்டிக் கொண்டோம்.

இறைவன் திருச்சிற்றேமத்து மகாதேவர் கிழக்கு நோக்கி சந்நிதியில் அருளாட்சித்தர தாரளமயமாக அமர்ந்திருந்தார்.

அவர்முன் பிரசன்னமாகி மனமுருக வேண்டிக் கொண்டோம். வெகுநேரமாக அவன் முன் நின்று ஈசனையே பார்த்து, பார்த்து பரவசப்பட்டுக் கொண்டிருந்தோம்.

அதற்கு தோதுவாக ஆலயத்தினுள் பக்தர் கூட்டம் குறைவாக இருந்தது.

கூட்டக்குறைவால் தரிசிக்க வசதியாக இருந்திடினும், ஆலயத்தில் கூட்டம் இல்லாதிருந்தது மனதுக்கு சிறிது வருத்தமாகத்தான் இருந்தது.

மீண்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்று, வெளிவந்தோம்.

கருவறை அர்த்தமண்டபத்தில் உள்ள சன்னலில் தேனீக்கள் கூட்டுடன் இருப்பதைக் காணமுடிந்தது.

அடுத்ததாக அம்பிகை சந்நிதிக்குள் நுழைந்தோம். அம்மை தெற்கு நோக்கிய வண்ணம் அருளிக்கொண்டிருந்தாள்.

இவளின் முன்பும் பிரசன்னமாகி வணங்கி நின்றோம். தீபாரதனை ஜோதியை தரிசித்து அம்பாளின் அருட்பிரசாதாமான குங்குமத்தை பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

பிரகாரத்தில் வலம் செல்கையில், விநாயகர், அடுத்து மகாலட்சுமி, அடுத்து முருகர் இருக்க ஒவ்வொருவரையும், தொடர்ச்சியாக தரிசித்து நகர்ந்தோம்.

கோமுகத்தின் அருகில் ஒரு லிங்கம் இருக்க, பார்த்து கைதொழுது கொண்டோம்.

சண்டேசர் சன்னதியில் சிறிய உருவில் மகாலட்சுமி சிலை ஒன்றுமிருக்க வணங்கிக் கொண்டோம்.

வடகிழக்கு மண்டபத்தில் எண்கர பைரவர், பிரம்மரிஷி, சனைச்சரன், ஐயனார், மாணிக்கவாசகர், குமரன் சூரியன் சிலைகளைக் கண்டு கையுர்த்தி வணங்கிக் கொண்டோம்.

ஆலயத்திற்கு வெளியே வந்தபோது, தலவிருட்சம் ஆத்தி மரம், நந்தி, பலிபீடம் இருந்தன. கண்டு வணங்கிக் கொண்டோம்.

தல வரலாற்றின் படி நந்தி பலிபீடத்திற்கு பின்புறமே இருந்தது.

ஆத்தி மரத்தடியில் ஆத்திமர விநாயகரும் இருந்தார்.

*கல்வெட்டு கூறும் செய்தி:*

இவ்வூர்க் கோயிலில் சோழ மன்னர்களில் மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், இராஜகேசரிவர்மன், இராஜேந்திர சோழ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழதேவன் இவர்கள் காலங்களிலும்,

பாண்டியர்களில் வரகுண மகாராசன், வல்லப தேவனாகிய தெய்வ வீர பாண்டியன், மாறவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவன் இவர்கள் காலங்களிலும்,

விசயநகர வேந்தர்களில் வேங்கட பதி ராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இக்கோயிலில் உள்ள மதுரைகொண்ட கோப்பரகேரி வர்மர், வரகுணமகாராசர், முதலானோர் கல்வெட்டுக்களில் இவ்வூரின் பெயரை திருச்சிற்றேமம் என்றும், சகம் 1381 அதாவது 1459 இல் ஏற்பட்ட கல்வெட்டில் இவ்வூரின் பெயர் திருச்சிற்றம்பலம் என்றும்; இறைவரின் திருப்பெயர் திருச்சிற்றேமத்து மகாதேவர், திருச்சிற்றேம முடையார், பழையவனத் தம்பிரானார், பழையவனப்பெருமாள் எனவும் கூறப்பெற்றுள்ளது

*தல அருமை:*

பேச்சு வழக்கில் மக்கள் *'சித்தாய்மூர்'* என்று இத்தலவூரை அழைக்கின்றனர்.

திருச்சிற்றேமத்திற்கு வடபுறத்திலிருக்கும் முத்தரசபுரத்தை ஆண்டு வந்த மன்னனுக்கு நாள்தோறும் இவ்வூர் வழியாகப் பாற்குடம் செல்வது வழக்கம்.

சில நாள்களாக அப்பாற்குடம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழுந்து, மீண்டும் விழுந்து உடையலாயிற்று.

அரசன் அவ்விடத்திற்குச் சென்று, அவ்விடத்தை வெட்டிப் பார்த்தான். பூமியிலிருந்து சிவலிங்கத் திருமேனி கிளர்த்தெழுந்நிருப்பதைக் கண்டான்.

உடனடியாக அவ்விடத்தில் கோயில் எழுப்பினான் என்பது வரலாறு.

இதன் அடையாளமாக சிவலிங்கத்தின் மீது அரசன் அரிவாளால் வெட்டிய வடுவான வெட்டுக்காயம் லிங்கத்திருமேனியில் இருக்கிறது.

*மற்றொரு தல அருமை:*

இவ்வூரி வாழ்ந்த சங்கரன் செட்டியார், மனைவி கருவுற்ற மிக்க அண்மைக் காலத்தே பொருளீட்டும் முயற்சி மேற்கொண்டு வெளியூர் சென்றார்.

சிவப்பற்று கொண்டு, சிவத் தொண்டு செய்து வாழ்ந்து வந்த அம்மங்கைக்கு இறைவன் நாள்தோறும் ஒரு பொன் காசு வைத்து உதவி வந்தார்.

அவள், அந்த பொற்காசை விற்று வாழ்வு நடத்தி வந்தாள். பிரசவ காலம் நெருங்கியது. இறைவனை நோக்கி அழுது வேண்ட, அகிலாண்டேஸ்வரியே தாயாக வந்து பிரசவ உதவி செய்ய, மகவினைப் பெற்றெடுத்தாள்.

செட்டியார் ஊர் திரும்பினார். புல்லறிவினர் சிலர் அம்மாதின் மேல் பொய் ஒழுங்கீனக் குற்றச் சாட்டுக்களைச் செட்டியாரிடம் கூறினர்.

அம்மங்கை இறைவனிடம் சென்று பல்லோர் முன்னிலையிலும் வேண்டி, தன் கற்பை வெளிப்படுத்துமாறு கலங்கி வேண்டினாள்.

இறைவன் கோயிற் கதவைத் தானே திறக்கச் செய்தும், ஆத்திமரத்தை இடம் பெயர்ந்து முன்புறம் வரச்செய்தும், நந்திதேவரைப் பலிபீடத்தின் பின் போகச் செய்தும் பல அற்புதங்களை நிகழ்த்தி அப்பெண்ணின் கற்புத்திறத்தை ஊரறியச் செய்தார் என்கிறார்கள்.

(இவ்வூரின் மேற்கே ஆறு கி. மீ. தொலைவிலுள்ள இடம் செட்டிப் பெண்ணிற்கு இறைவன் அன்றாடம் பொன் நிறுத்துத்தந்த இடமாகும். தற்போது, [பொன் + நிறை] - *'பொன்னிறை'* என்னும் பெயருடன் அழைக்கப் பெறுகிறது.

*வியப்பான அதிசயம்:*

இக்கோயிலில் உள்ள தேன் கூடு வியப்பானது.

நாள்தோறும் அர்த்த சாமத்தில் வழிபட்டு வந்தார் பிரமரிஷி.

ஒருநாள் காலம் தாழ்ந்து வர, ஆலயக்கதவு காப்பிடப்பட்டுவிட்டது. அப்போது அவர் தேனி உருக்கொண்டு கதவுத்திறவுகோல் துவாரத்தின் வழியாக உள்ளே சென்று பெருமானை வழிபட்டு அங்கேயே வசிக்கத் தொடங்கினார் என்கிறார்கள்.

*சிறப்புகள்:*

இத்தலத்தின் தென்புறத்தில் அரிச்சந்திர நதியும், அருகில் செண்பக நதியும் பாய்ந்தௌடுகின்றன.

*தேன்கூடு வரலாறு:*

முன்னொரு காலத்தில் பிரம்மரிஷி தினந்தோறும் இத்தல இறைவனை வழிபட்டு வந்தார்.

ஒரு சமயம் அவர் திருக்கோவிலுக்கு வர வஜ்ஜிராயுதத்தைக் நேரமாகி வட்டது. கோவில் திருக்கதவுகள் காப்பிடப்பட்டு விட்டன.

பிரம்மரிஷி முனிவர் தேனீ உருவெடுத்து சாளரத்தின் வழியே உள்ளே சென்று இறைவனை வழிபட்டு அங்கேயே தங்கத் தொடங்கினார்.

சித்தர்களும் இத்தலத்தில் தேனீ உருவில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.

சுவாமி சந்நிதியின் தென்பக்கத்தில் உள்ள தேன்கூடு, சித்தர்கள் தேனீக்களாக உருமாறி இறைவனை பூஜித்து தேன்கூட்டைக் கட்டினர் என்பது ஐதீகம்.

இத்தேன் கூட்டிற்கு தினமும் பூஜை நடைபெறுகிறது.

*தேவாரம்:*

☘1நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்

குறைவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்

சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்

இறைவனென்றே யுலகெலா மேத்தநின்ற பெருமானே.

வெண்மையான முழுநிலவு போன்று ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடி, நடனம் புரிகின்ற இயல் புடையவராய், சிறகுகளையுடைய வண்டுகள் யாழ் போன்று ஒலிக்கும் பசுமையான சோலைகளும், வயல்களும் சூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவர் உலகமெல்லாம் ஏத்திப் போற்றுகின்ற சிவபெருமானே ஆவர்.

☘2.மாகத்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைப்

பாகத்திங்கள் சூடியோ ராடன்மேய பண்டங்கன்

மேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேம மேவினான்

ஆகத்தேர்கொ ளாமையைப் பூண்டவண்ண லல்லனே.

ஆகாயத்தில் விளங்கும் சந்திரன் போன்று ஒளியுடைய முகத்தையுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடையில் பிறைச்சந்திரனைச் சூடிப் பண்டரங்கம் என்னும் கூத்தாடும் இறைவர், மேகம் திகழும் சோலைசூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந் தருளுகின்றார். அப்பெருமான் திருமார்பில் ஆமை ஓட்டினை ஆபரணமாகப் பூண்ட அண்ணலான சிவபெருமான் அல்லரோ?

☘3. நெடுவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்

கொடுவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்

படுவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்

கடுவெங்கூற்றைக் காலினாற் காய்ந்தகடவு ளல்லனே.

வெண்ணிறப் பூரண சந்திரன் போன்ற ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவி இன்னிசையோடு பாட, நீண்ட சடையில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி நடனம் செய்கின்ற பெருமானாய், வண்டுகள் யாழ்போன்று ஒலி செய்யப் பசுமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவன் கொடிய காலனைக் காலால் உதைத்து அழித்த கடவுளான சிவபெருமான் அல்லனோ?

☘4. கதிரார் திங்கள் வாண்முக மாதர்பாடக் கண்ணுதல்

முதிரார்திங்கள் சூடியோ ராடன்மேய முக்கணன்

எதிரார்புனலம் புன்சடை எழிலாருஞ்சிற் றேமத்தான்

அதிரார்பைங்க ணேறுடை யாதிமூர்த்தி யல்லனே.

கதிர்வீசும் சந்திரனைப் போன்ற ஒளிபொருந்திய முகம்கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட, நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் இளம்பிறைச் சந்திரனைச் சூடி, ஆடுகின்ற முக்கண்ணர் ஆவார். அவர் கங்கையும், சடைமுடியும் கொண்டவராய் அழகுடைய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர், கழுத்தில் கட்டிய சதங்கைமணி ஒலிக்கும், பசிய கண்களையுடைய இடபத்தை வாகனமாகக் கொண்ட ஆதிமூர்த்தி அல்லரோ?

☘5. வானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைக்

கூனார்திங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்

தேனார்வண்டு பண்செயுந் திருவாருஞ்சிற் றேமத்தான்

மானார்விழிநன் மாதொடும் மகிழ்ந்தமைந்த னல்லனே.

வானில் விளங்கும் சந்திரனைப் போன்று ஒளிபொருந்திய முகமுடைய உமாதேவியார் பண்ணோடு பாட, நீண்ட சடைமுடியில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்பவனாய்ப் பூக்களிலுள்ள தேனை அருந்திய வண்டு இசைபாடுகின்ற அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளும் இறைவன், மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமாதேவியோடு மகிழ்ந்திருக்கும் வீரமுடைய சிவபெருமான் அல்லரோ?

☘6. பனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடப் பல்சடைக்

குனிவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்

தனிவெள்விடையன் புள்ளினத் தாமம்சூழ்சிற் றேமத்தான்

முனிவு மூப்புநீக்கிய முக்கண்மூர்த்தி யல்லனே.

குளிர்ந்த வெண்ணிலவைப் போன்ற ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப் பாட, சடைமுடியில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி ஆடல்புரிகின்றவர் இறைவர். அவர் ஒற்றை வெள் இடபத்தை வாகனமாகக் கொண்டு, பறவை இனங்களும் நறுமண மலர்களும் சூழ்ந்து விளங்கும் திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர் விருப்பு வெறுப்பு அற்றவராய், மூப்பினை அடையப்பெறாதவரான முக்கண் மூர்த்தியான சிவபெருமான் அல்லரோ?

☘7. கிளருந்திங்கள் வாண்முக மாதர்பாடக் கேடிலா

வளருந்திங்கள் சூடியோ ராடன்மேய மாதவன்

தளிருங்கொம்பு மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்

ஒளிரும்வெண்ணூன் மார்பனென் உள்ளத்துள்ளான் அல்லனே.

கிளர்ந்து எழுந்த பூரண சந்திரனைப் போன்று ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட, குறைவிலாது வளரும் தன்மையுடைய பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் இறைவர், தளிரும், கொம்புகளும், தேன் துளிக்கும் மலர்மாலைகளும் சூழ விளங்கும் திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அப்பெருமான் ஒளிரும் முப்புரிநூலை அணிந்த திருமார்பினராய் என் உள்ளத்திலுள்ளவர் அல்லரோ?

☘8. சூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாடச் சூழ்சடைப்

போழ்ந்ததிங்கள் சூடியோ ராடன்மேய புண்ணியன்

தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் றடவரையைத்தன் றாளினால்

ஆழ்ந்தவரக்க னொல்கவன் றடர்த்தவண்ண லல்லனே.

சந்திரனைப் போன்று ஒளியுடைய முகம் கொண்ட உமாதேவியார் பண் இசைத்துப்பாட, சடைமுடியில் பிறைச் சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் புண்ணிய மூர்த்தியாகிய சிவபெருமான், வயல்வளமிக்க திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் தம்காற்பெருவிரலை ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அரக்கனான இராவணன் நெருக்குண்ணும்படி அன்று அடர்த்த அண்ணல் அல்லரோ?

☘9. தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத்

துணிவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய தொன்மையான்

அணிவண்ணச்சிற் றேமத்தா னலர்மேலந்த ணாளனும்

மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வ னல்லனே.

ஒப்பற்ற வெண்ணிறச் சந்திரன் போன்று ஒளிரும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசையோடு பாட, தாழ்ந்த சடையில் இளம்பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்கின்ற மிகப் பழமையான இறைவன், அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், நீலரத்தினம் போன்ற நிறமுடைய திருமாலும் காணமுடியாதவாறு மழுப்படை ஏந்தி விளங்குகின்ற செல்வர் அல்லரோ?

☘10. வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்

பிள்ளைத்திங்கள் சூடியோ ராடன்மேய பிஞ்ஞகன்

உள்ளத்தார்சிற் றேமத்தா னுருவார்புத்த ரொப்பிலாக்

கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே.

வெண்ணிறச் சந்திரன் போன்ற ஒளி திகழும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப்பாட, சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடி, திருநடனம் செய்யும் இறைவன் விரும்பி வீற்றிருந்தருளுவது திருச்சிற்றேமம் என்ற தலமாகும். அப்பெருமான் புத்தர், சமணர் ஆகியோர்களைப் படைத்தும், அவர்கட்குத் தோன்றாதவாறு மறைந்தும் விளங்குபவர்.

☘11. கல்லிலோத மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்

நல்லவாய வின்றமிழ் நவிலுஞான சம்பந்தன்

செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்

வல்லராகி வாழ்த்துவா ரல்லலின்றி வாழ்வரே.

கற்களால் ஆகிய மதிலில் கடல்அலைகள் மல்கும், குளிர்ந்த கடற்கரைச் சோலைசூழ்ந்த சீகாழியில் அவதரித்த ஞான சம்பந்தன், செல்வனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருச்சிற்றேமத்தைப் போற்றி நல்ல இன்தமிழில் அருளிய சிறப்புடைய இப்பாடல்களை நாவினால் ஓதவல்லவர்கள் துன்பம் அற்று வாழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*

வைகாசி விசாகம் மற்றும், சிவபெருமானுக்குரிய அத்தனை விசேஷங்களும்.

*தொடர்புக்கு:*

04366 247 846

94427 67565

Reposting it from Amirthavahini Google group.

40 views0 comments
bottom of page