top of page

Manikavannar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

*கோவை.கு.கருப்பசாமி.*

--------------------------------------------------------------

*136*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்*

*திருநாட்டியத்தான்குடி,மாணிக்கவண்ணர் திருக்கோவில்.*

--------------------------------------------------------------

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் நூற்று பதினெட்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இறைவன்:*

மாணிக்கவண்ணர், ரத்னபுரீசுவரர்.

*இறைவி:*

மாமலர் மங்கை, ரத்னபுரீசுவரி.

*தல விருட்சம்:* மாவிலங்கை.

*தல தீர்த்தம்:* சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கரி தீர்த்தம்.

*ஆகமம்:* காமிக ஆகமம்.

*ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*புராணப் பெயர்கள்:* நாட்டியத்தான்குடி, பாலக்குறிச்சி.

*பதிகம்:* சுந்தரர்.

*இருப்பிடம்:*

திருவாரூரில் இருந்து தெற்கே பத்து கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.

திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடில் இறங்கி அங்கிருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம்.

சாலையோரத்தில் ஊர் உள்ளது.

*அஞ்சல் முகவரி:*

அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோவில்,

திருநாட்டியாத்தான்குடி,

திருநாட்டியாத்தான்குடி அஞ்சல்,

வழி மாவூர் S.O.

திருவாரூர் வட்டம்.

திருவாரூர் மாவட்டம்.

PIN - 610 202

*ஆலயத் திறப்பு காலம்:*

தினந்தோறும் காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*பங்கு பிரித்த ஈசனின் பாங்கு:*

இரத்தினேந்திர சோழனும், அவனது தம்பியும் தம் தந்தையார் அவர்களுக்கு விட்டுச் சென்ற இரத்தினங்களை மதிப்பீடு செய்து தமக்குள் பிரித்துக் கொள்வதற்கு இரத்தின வியாபாரி ஒருவரைத் தேடியழைந்தனர்.

இருவரும் இரத்தின வியாபாரி செய்த மதிப்பீடு சரியில்லை என்று எண்ணி இறைவனிடம் முறையிட்டனர்.

இவர்களது வேண்டுதலை ஏற்ற இறைவன், தானே ரத்தின வியாபாரியாக வந்து ரத்தினங்களை மதிப்பிட்டு, அதை பிரித்துக் கொடுத்ததால் இரத்தினபுரீசுவரர் என்று பெயர் பெற்றதாக தல வரலாறு.

மேலும் யானை ஒன்று இத்தலத்தில் தீர்த்தம் ஒன்று உருவாக்கி அதில் நீராடி இறைவனை வழிபட்டு முக்தி பெற்றது.

யானை உண்டாக்கிய தீர்த்தம் கரி தீர்த்தம் எனப்படுகிறது.

கரிக்கு (யானைக்கு) அருள் செய்ததால் இறைவனுக்கு *கரிநாதேஸ்வரர்* என்றொரு ஒரு பெயரும் உண்டு.

இத்தலத்திற்கு மற்றொரு தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் உண்டு.

*கோட்புலி நாயனார்:*

வேளாளர் குலத்தில் உதித்தாலும், இவரது தொழில் நாட்டை ஆளும் அரசனுடைய படைக்குத் தலைமை தாங்குவதாக அமைந்தது.

பல நாட்டு அரசர்களை வென்று சோழநாட்டுக்குப் பெருமை சேர்த்து வந்ததால், மன்னரிடம் அவருக்கு நற்பெயர் இருந்தது.

அதற்கு அடையாளமாக, அவ்வப்போது நிறைய பொன்னையும் மணியையும் அவருக்கு அளித்து வந்தார் மன்னர்.

போர்க்களத்தில் எதிரிகளுக்குப் புலிபோல விளங்கினாலும், உள்ளத்தில் ஆழ்ந்த சிவபக்தி கொண்டவர் கோட்புலியார்.

அதனால், மன்னன் வழங்கிய பொருள்களைக் கொண்டு நெல் மூட்டைகளாக வாங்கிக் குவித்து சேமித்து வைத்து வந்தார்.

அதை சிவபெருமான் திருக்கோயில்களில் இறைவழிபாட்டில் திருவமுது படைக்கப் பயன்படுத்துவது அவரது வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்த இறைப் பணியில் பேரின்பம் கண்டார் கோட்புலியார்.

இவர் அவ்வாறு வாழ்ந்து வரும் நாளில்... ஒருமுறை அரசன் கட்டளைப்படி வேறு நாட்டுக்குப் போருக்குச் செல்ல வேண்டியிருந்தது.

அப்படிப் புறப்படும் முன்பு, தாம் திரும்பிவரும் வரை தான் செய்துவரும் சிவபூஜை நைவேத்தியத்தில் எந்தக் குறைபாடும் வரக்கூடாது என்று நினைத்தார். அதனால், அதற்கு தேவையான நெல்லைச் சேமித்து வைத்துவிட்டு, தம் உறவினர் ஒருவரை அழைத்தார்.

''இந்த நெற்குவியல் சிவபெருமானின் திருவமுதுக்காகச் சேர்க்கப்பட்டது. இதைப் பாதுகாத்து அந்த சிவப்பணியைக் குறைவின்றி நடத்தி வாருங்கள் என கூறினார்.

இதிலிருந்து யாரும் தமக்கென்று சிறிது நெல்கூட எடுக்கக்கூடாது. இது சிவபெருமான் மீது ஆணை!'' என்று கூறிவிட்டுப் போருக்குப் புறப்பட்டுச் சென்றார் கோட்புலியார்.

அவர் போருக்குச் சென்றபின், மழையின்மையால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது.

கோட்புலியாரின் உறவினர்கள் உணவின்றி இறக்கும் நிலை ஏற்பட்டதால், அவர் சிவபெருமான் திருவமுதுக்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லை எடுத்து உபயோகித்தனர்.

இப்போதைய தேவைக்காகவே எடுக்கும் நெல்லை பிறகு அதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்றும் தீர்மானித்து எடுத்தனர்.

அதன்படி, சிவ நைவேத்தியத்துக்காக கோட்புலியார் சேமித்துவைத்த நெல்லை உணவாக்கி உண்டு, உயிர் பிழைத்தனர்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. கோட்புலியார் போரில் வெற்றி பெற்றுத் திரும்பினார். நடந்ததை எல்லாம் அறிந்தார்.

வெகு நாட்களுக்குப் பிறகு தம்மைக் காணவந்த உறவினர் அனைவரும் வந்து சேர்ந்தபின் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு, ''சிவபெருமான் ஆணையாகச் சொல்லிய கட்டளையையும் மீறி, உங்களிடம் நான் நம்பி விட்டுச்சென்ற நெல் முழுவதையும் எடுத்துச் செலவிட்டுவிட்டீர்கள். அந்தத் தவற்றுக்காக உங்கள் அனைவரையும் கொல்லாமல் விடமாட்டேன்!'' என்று கோபம் கொந்தளித்தவர்......

அப்படியரு பயங்கர காரியத்தைச் செய்யவும் செய்தார். ஆம்... அவர்கள் அனைவரையும் வாளால் வெட்டிக் கொன்றுவிட்டார்.

உறவினர் கூட்டத்தில் சிறு குழந்தை மட்டும் உயிருடன் இருந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்த பின்னரும், அவரது கோப வெறி அடங்கவில்லை.

அடங்கா கோபத்தோடு அதன் அருகில் சென்றார்.

''இந்தக் குழந்தை பால் குடிக்கும் பச்சைக் குழந்தை. இது அந்த நெல்லின் சோற்றை உண்ணவில்லை. மேலும், இந்தக் குடிக்கு இந்த ஒரு குழந்தையாவது மிஞ்சட்டும்'' என்று தடுத்தனர் அங்கிருந்த வேறார்.

அவர்கள் கருத்தை கோட்புலியார் ஏற்க தயாராக இல்லை. ''நீங்கள் சொல்வது போன்று இந்தக் குழந்தை சோறு உண்ணவில்லை என்றாலும், அதனை உண்ட தாயின் பாலைக் குடித்ததால் அதுவும் சிவ அபராதமே!'' என்று அந்தக் குழந்தையையும் தண்டித்தார்.

இப்படிச் சிவபக்தியில் அதிதீவிரமாக இருந்த கோட் புலியார் 63 நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப் பெறுகிறார்.

ஒருமுறை, திருவாரூரில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளது பெருமையையும் அற்புதங்களையும் கேட்டு மகிழ்ந்த கோட்புலியார் திருவாரூர் சென்று சுந்தரரை வணங்கி தமது ஊராகிய திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளுமாறு அழைப்பு விடுத்தார்.

சுந்தரரும் இசைந்து அவரது ஊருக்குச் சென்றார். கோட்புலியார்.

நகரை அலங்கரித்து பலவகையான மரியாதைகளுடன் அவரை எதிர்கொண்டு அழைத்தார்.

அவரைத் தம் இல்லத்துக்கு எழுந்தருளச் செய்து அர்ச்சித்து, மகேஸ்வர பூஜை செய்து பணிந்தார். அங்கே இருவரும் வெகுநேரம் அளவளாவி மகிழ்ந்தனர்.

கோட்புலியாருக்கு சிங்கடி, வனப்பகை என்ற பெயர் கொண்ட இரண்டு மகள்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடியைத் தொழச் செய்து தாமும் வணங்கினார்.

அந்த இரண்டு பெண்களையும் சுந்தரர் தமது பணிவிடையாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டினார்.

ஆனால், சுந்தரர் அந்தப் பெண்கள் இருவரையும் தம் குழந்தைகளாகப் பாவித்து, தமது மடியின் மீது அமர்த்தி வைத்துக்கொண்டு உச்சி மோந்து வாழ்த்தியருளினார்.

(இதுபற்றிக் கூறுகையில், தம்மைச் 'சிங்கடி அப்பன் திருவாரூரன்’ என்று திருநாட்டியத்தான்குடி பதிகத்தில் குறிப்பிடுகிறார் சுந்தரர்.

அத்துடன், தலப் பாடல்கள் பத்தில் வனப்பகையின் பெயரையும், எட்டு பாடல்களில் சிங்கடியின் பெயரையும் சுட்டி அவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது).

கோட்புலியார் இல்லத்து வைபவங்களில் கலந்துகொண்ட சுந்தரர், பிறகு அங்கிருந்த சிவாலயத்துக்குச் சென்றார்.

மலை மங்கை என்னும் மங்கலநாயகி உடனாய மாணிக்கவண்ணர் என்னும் ரத்னகிரீஸ்வரப் பெருமானைத் தரிசிக்க முயன்றார்.

ஆனால், அந்தக் கோயில் கருவறையில் ஈஸ்வரனையும் அம்பிகையையும் காணவில்லை.

உடனே அங்கிருந்த விநாயகரை நோக்கி, ''அம்மையும் அப்பனும் எங்கு சென்றார்கள்?'' என்று வினவினார்.

அதற்கு விநாயகப் பெருமான், அவர்கள் இருவரும் சென்றுள்ள ஈசான்ய திசையை நோக்கிக் கைகாட்டினார்.

சுந்தரர் உடனே விநாயகர் காட்டிய திசையில் சென்றார்.

அங்கே உமாதேவியும் சிவபெருமானும் வயலில் நடவு நட்டுக் கொண்டிருந் தனர். சுந்தரர் அந்தக் காட்சியைக் கண்டார்.

உடனே,

*''நட்ட நடாக்குறை நாளை நடலாம்*

*நாளை நடாக்குறை சேறு தங்கிடவே*

*நட்டது போதும் கரையேறி வாரும்*

*நாட்டியத்தான் குடி நம்பி''* என்று பாடினார்.

*''இதுவரை நாற்று நட்டது போதும்; மீதம் உள்ளதை நாளை நடலாம்; நாளை நட வேண்டி யதற்கும் சேறு தயாராக உள்ளது. எனவே, கரையேறி வாரும் நாட்டியத்தான்குடி இறைவரே!'' என்பது இதன் வெளிப்படைப் பொருள்.*

ஆனால், இப்பாடலுக்கு ஒரு மறைமுகப் பொருளும் உண்டு.

நட்டம் என்றால் நடனம். அதாவது நாட்டியம். ''இதுவரை நடனம் இட்டது போதும். நாளைக்கு உன் அருள் வைத்து மீண்டும் ஆடலாம் (சேறு-அருள்; இனிமை) இதுவரை ஆடிய அளவு போதும் (கரை-அளவு) திருநாட்டியத்தான்குடியில் வாழும் பெருமானே!'' (நம்பி-கடவுள்; ஆணிற்சிறந்தோன்) என்று பாடியவுடன் அங்கிருந்த அம்மையும் அப்பனும் மறைந்து திருக்கோயிலுக்கு எழுந்தருளினர் என்கிறது தலபுராணம்.

சுந்தரர் சிவபெருமானைத் தரிசிக்க மீண்டும் கோயிலினுள் நுழையும்போது, இறைவனின் ஆபரணமாகிய சர்ப்பம் அங்கு வாசலில் தோன்றி ரீங்காரமிட்டது.

அதைக் கண்ட சுந்தரர், *''பூணாள் ஆவதோர் அரவம் கண்டு அஞ்சேன்''* என்று பதிகம் பாடத் தொடங்கினார்.

''அடியவனைக் கடைக்கண்ணால் கண்டு அருளாவிடினும், நான் உன்னைக் கண்ணாரக் கண்டேன்; நீர் என்னை மறந்தாலும் கருதாவிட்டாலும், யான் உம்மை மனத்தால் நினைத்து பாடுவேன், நாட்டியத்தான்குடி நம்பி'' என்று போற்றுகிறார்.

இந்த வரலாற்றுச் சம்பவத்தை இன்றும் நினைவுகூரும் வகையில், இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் *'நடவு உத்ஸவம்’* ஐதீக விழாவாக நடைபெற்று வருகிறது.

இங்குள்ள ரத்னகிரிநாதர் திருக்கோயில் கிழக்கு கோபுரவாயிலுக்கு எதிரே மேற்கு நோக்கி நின்ற திருக் கோலத்தில் 'கைகாட்டி விநாயகர்’ காட்சியளிக்கிறார்.

சுந்தரருக்கு வழிகாட்டிய அந்த விநாயகரை நாம் சென்று வழிபட்டால் நாம் ஈடேற நமக்கும் கைகாட்டி விநாயகர் அருள் புரிவார்

*ஈசனின் சொத்து:*

அங்கே அவர் வாளுக்குத் தப்பிப் பிழைத்தது ஓர் ஆண்பிள்ளை அப்பிள்ளையைக் கண்ட காவலன் நாயனாரிடம், ஐயனே! பாலகன் நம் குடிக்கு ஒரே புதல்வனாகும். இப்பாலகன் இவ்வன்னத்தை உண்டதில்லை.

எனவே இக்குழந்தையைக் கொல்லாதருள் புரியும் என்று வேண்டினான்.

அவன் சொன்னதைக் கேட்ட நாயனார், இப்பாலகன் அன்னத்தை தான் உண்ணாவிடினும், அன்னத்தை உண்ட தாயின் முலைப்பாலை உண்டவன் என்று கூறி அக்குழந்தையையும் தமது வாளினால் இருதுண்டாக்கினார்.

அக்கணம் சடைமுடிப் பெருமானார் விடையின் மீது எழுந்தருளி அன்பனே! உன் கைவாளால் உயிர் மாண்ட அனைவரும் பாவத்தை விட்டு நீங்கினர் அவர்கள் பொன்னுலகம் புகுந்து இன்புற்று வாழ்வர். நீ இந்நிலையுடன் நமது சிவபதம் அணைவாய் என்று அருள் புரிந்தார்.

சிவபெருமான் மீது கோட்புலியார் காட்டிய பக்திஅனைவருக்கும் பிறவாப்பெருவாழ்வை பெற்றுக் கொடுத்தது.

இவ்வரலாறு படிக்கும் நாம் நினைக்கலாம் இது சிறிய தவறு என்று ஆனால் சிவனுக்கு என்று உரிய பொருளை எடுத்துக்கொள்வது மன்னிக்கமுடியாத சிவாபராதம் ஆகும்.

பாவங்களில் மிக கொடிய பாவம் என்பது சிவத்துரோகமாகும்.

இன்று பல சிவன் கோயில்களில் கோயில் சொத்தை அபகரித்தவர்களும் குத்தகை செலுத்தாதவர்களும் உள்ளனர் அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது நினைக்கவே முடியாத அளவு இருக்கும் என்பது திண்ணம் .

கோட்புலியார் அவதரித்து இந்த கோயில் சொத்துக்களை மீட்டுக் கொடுத்ததுபோல, ஒவ்வொரு ஆலயத்திலின் நிலுவைகளை வசூலித்து ஆலயத்தில் சேர்ப்பதில் தாவல், அனைத்து ஆலயங்களிலும் ஆறு கால பூசை தொய்வின்றி நடத்தலாம் திருப்பணி செய்யலாம் .ஈசன் அருள்புரிவாராக!

*தேவாரம்:*

பூணாண் ஆவதொ ரரவங்கண் டஞ்சேன்

புறங்காட் டாடல்கண் டிகழேன்

பேணா யாகிலும் பெருமையை உணர்வேன்

பிறவே னாகிலும் மறவேன்

காணா யாகிலுங் காண்பன்என் மனத்தால்

கருதா யாகிலுங் கருதி

நானேல் உன்னடி பாடுத லொழியேன்

நாட்டியத் தான்குடி நம்பீ.

🏾திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே. உனக்கு அணிகலமும், அரைநாணும் சிறுமையையுடைய பாம்பாதல் கண்டு அஞ்சேன்; நீ புறங்காட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன்; நீ எனது சிறுமையை யுணர்ந்து என்னை விரும்பாதொழியினும், யான் உனது பெருமையை உணர்ந்து உன்னை விரும்புவேன்; வேறோராற்றால் நான் பிறவி நீங்குவேனாயினும், உன்னை மறவேன்; நீ என்னைக் கடைக்கணியாதொழியினும், உன்னை கண்ணாரக் காண்பேன்; நீ என்னை உன் திருவுள்ளத்தில் நினைந்து ஏதும் அருள் பண்ணாதொழியினும், நானோ, என் மனத்தால் உன்னை நினைந்து பாடுதலை ஒழியமாட்டேன், இஃது என் அன்பிருந்தவாறு.

கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட்

டெல்லியி லாடலைக் கவர்வன்

துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை

சொல்லாய் திப்பிய மூர்த்தீ

வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல

மணியே மாணிக்க வண்ணா

நச்சேன் ஒருவரை நான்உனை யல்லால்

நாட்டியத் தான்குடி நம்பீ.

🏾உண்மையான தெய்வத் திருமேனியை உடையவனே, துன்பங்களை உளவாக்கவும் களையவும் வல்ல உயர்வுடையவனே, மாணிக்கம் போலும் நிறத்தை உடையவனே, திரு நாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, நான் உன்னையன்றி வேறொருவரையும் விரும்பேன்; உயர எழுகின்ற பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி நின்று இடுகாட்டில் இரவில் ஆடுகின்ற உன் கோலத்தையே மனத்தில் விரும்பியிருத்துவேன்; இழிபுடையேனாகிய என் மனத்தில் நீ இவ்வாறு புகுந்து நிற்றற்குரிய காரணத்தைச்சொல்லியருளாய்!

அஞ்சா தேஉனக் காட்செய வல்லேன்

யாதினுக் காசைப் படுகேன்

பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை

பங்கா எம்பர மேட்டீ

மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த

மணியே மாணிக்க வண்ணா

நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ

நாட்டியத் தான்குடி நம்பீ.

🏾பஞ்சு ஊட்டிய அழகிய மெல்லிய பாதங்களையுடைய, பெரிய மலைக்கு மகளாகிய உமையை ஒருபாகத்தில் உடையவனே, மேலான இடத்தில் உள்ள, எங்கள் பெருமானே, மேகங்களின் மேற் செல்லுகின்ற வெள்ளிய திங்களைச் செவ்விய சடையின் கண் வைத்த உயர்வுடையவனே, மாணிக்கம் போலும் நிறத்தை யுடையவனே, நஞ்சு தோன்றுகின்ற கண்டத்தையுடையவனே, வெள்ளிய தலையை ஏந்தியவனே, திருநாட்டியத் தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, அஞ்சாமலே உனக்கு நான் தொண்டுபுரிய வல்லேன்; அதன் பயனாக எதற்கு ஆசைப்படுவேன்? ஒன்றிற்கும் ஆசைப்படேன்; இஃது என் அன்பிருந்தவாறு.

கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை

கல்லா தேபல கற்றேன்

நில்லே னல்லேன் நின்வழி நின்றார்

தம்முடை நீதியை நினைய

வல்லே னல்லேன் பொன்னடி பரவ

மாட்டேன் மறுமையை நினைய

நல்லே னல்லேன் நானுனக் கல்லால்

நாட்டியத் தான்குடி நம்பீ.

🏾திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, நான் உனது புகழைக் கல்லாதேனல்லேன்; அடிமைச் செயல்களைப் பிறரிடம் கல்லாமலே நீ உள்நின்று உணர்த்த அவை எல்லாவற்றையும் கற்றேன்; அங்ஙனங் கற்றதற்குத்தக நினது வழியில் நில்லாதவனல்லேன்; அங்ஙனம் நின்றாரது வரலாறுகளை நினைய மாட்டாதவனல்லேன்; உனது பொன் போலும் திருவடிகளைப் பரவுமிடத்து அதற்குப் பயனாக மறுமையின்பத்தை நினைய மாட்டேன்; உனக்கு அல்லது வேறு ஒருவற்கு நான் உறவினன் அல்லேன்; இஃது என் அன்பிருந்தவாறு.

மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக்

கருதா தார்தமைக் கருதேன்

ஒட்டா யாகிலும் ஒட்டுவன் அடியேன்

உன்னடி அடைந்தவர்க் கடிமைப்

பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன்

பாடியும் நாடியும் அறிய

நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன்

நாட்டியத் தான்குடி நம்பீ.

🏾திருநாட்டியத்தான் குடியில் எழுந்தளியிருக்கும் நம்பியே, தேன் நிறைந்த பூவை யணிந்த கூந்தலையுடைய மலைமகளுக்குக் கணவனாகிய உன்னை நினையாதவரை நான் நினையேன்; நீ எனக்குத் தலைவனாய் என்னொடு ஒட்டாதே போவாயாயினும், நான் உனக்கு அடியவனாய், உன்னோடு ஒட்டியே நிற்பேன்; உன் திருவடியையே பற்றாக அடைந்த அடியார்க்கு அடியவனாகிய பெருமையை நான் பெற்றுடையேனாயினும், உன்னைப் பாடுதலை விடமாட்டேன்; உன் புகழைப் பாடியும், உனது பெருமைகளை ஆராய்ந்தும் யாவருமறிய உன்னொடு நட்புக் கொண்டேனாதலின் உன்னை நான் மறக்கமாட்டேன்; இஃது என் அன்பிருந்தவாறு.

படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம்

படுத்தாய் என்றல்லல் பறையேன்

குடப்பாச் சில்லுறை கோக்குளிர் வானே

கோனே கூற்றுதைத் தானே

மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடு

மறையோ தீமங்கை பங்கா

நடப்பா யாகிலும் நடப்பனுன் னடிக்கே

நாட்டியத் தான்குடி நம்பீ.

🏾மேற்கிலுள்ள திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும், நீரைப் பொழிகின்ற குளிர்ந்த மேகம் போல்பவனே, யாவர்க்கும், தலைவனே, இயமனை உதைத்தவனே, அடியவர் அகங்களில் பால் தயிர் நெய் இவைகளை மகிழ்ச்சியோடு ஆடுகின்ற, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, திரு நாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, துன்பங்கள் படுமாறு அமைந்த ஊழினது தன்மையால், நாள்பட்ட துன்பங்களை எல்லாம் நீ படுத்தினாய் என்று சொல்லி நான் முறையிடமாட்டேன். நீ என்னை விட்டு நீங்குவாயாயினும், நான் உன் திருவடியைப் பெறுதற்கே முயல்வேன்; இஃது என் அன்பிருந்தவாறு.

ஐவாய் அரவினை மதியுடன் வைத்த

அழகா அமரர்கள் தலைவா

எய்வான் வைத்ததொர் இலக்கினை அணைதர

நினைந்தேன் உள்ளம்உள் ளளவும்

உய்வான் எண்ணிவந் துன்னடி யடைந்தேன்

உகவா யாகிலும் உகப்பன்

நைவா னன்றுனக் காட்பட்ட தடியேன்

நாட்டியத் தான்குடி நம்பீ.

🏾ஐந்து தலைப் பாம்கினைச் சந்திரனோடு முடியில் வைத்துள்ள அழகனே, தேவர்கட்டுத் தலைவனே, திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, நான் அன்று உனக்கு ஆட்பட்டது, துன்பத்தால் வருந்துதற்கு அன்று; துன்பத்தினின்றும் உய்ந்து, இன்பம் உற எண்ணிவந்தே உன் திருவடியை அடைந்தேன்; அதனால், நீ என்னை விரும்பாதொழியினும், நான் உன்னை விரும்பியே நிற்பேன்; ஆதலின், நான் எய்தற்கு வைத்த குறியினை உயிருள்ள அளவும் எவ்வாற்றாலேனும் அடையவே நினைத்தேன்; இஃது என் அன்பிருந்தவாறு.

கலியேன் மானுட வாழ்க்கைஒன் றாகக்

கருதிடிற் கண்கள்நீர் மல்கும்

பலிதேர்ந் துண்பதொர் பண்புகண் டிகழேன்

பசுவே ஏறினும் பழியேன்

வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன்

மாட்டேன் மறுமையை நினைய

நலியேன் ஒருவரை நான்உனை யல்லால்

நாட்டியத் தான்குடி நம்பீ.

🏾 திருநாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே, யான் இம்மானுட வாழக்கையை ஒருபொருளாக நினைத்துச் செருக்கேன்; இதன் நிலையாமை முதலியவற்றை நினைத்தால், கண்களில் நீர் பெருகும், ஆதலின் பிச்சை எடுத்து உண்ணும் உனது இயல்பைக் கண்டும், அதுபற்றி உன்னை இகழேன்; நீ எருதையே ஏறினாலும் அதுபற்றி உன்னைப்பழியேன்; எனக்கு மெலிவு நீங்க வலியே மிகினும், உன்னை வணங்குதலைத் தவிரேன்; மறுமை இன்பத்தையும் நினைக்கமாட்டேன்; உன்னையன்றி வேறொருவரை நீங்காது நின்று இரக்கமாட்டேன்; இஃது என் அன்பிருந்தவாறு.

குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்

கொண்டா ராகிலுங் கொள்ளக்

கண்டா லுங்கரு தேன்எரு தேறுங்

கண்ணா நின்னல தறியேன்

தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு

தொழுதேன் என்வினை போக

நண்டா டும்வயல் தண்டலை வேலி

நாட்டியத் தான்குடி நம்பீ.

🏾

எருதினை ஏறுகின்ற, எனக்குக் கண்போலச் சிறந்தவனே, நண்டுகள் விளையாடும் வயல்களையும், சோலையாகிய வேலியையும் உடைய திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியே, சமணரும், சாக்கியரும் ஆகிய பேய்கள் மூர்க்கத் தன்மையை மேற்கொண்டு தாங்கள் பிடித்தது சாதித்தார் என்பது கேள்வியால் அறியப்பட்டாலும், அதனை நேரே கண்டாலும் அதனை யான் ஒரு பொருளாக நினையேன்; உன்னையன்றி பிறிதொரு கடவுளை நான் அறியேன்; உனது தொண்டினை மேற்கொண்டு உன்னைத் தொழுகின்ற பெரியோர்கள் அங்ஙனம் தொழும்பொழுது கண்டு, அதுவே நெறியாக என் வினைகள் ஒழியுமாறு உன்னை யான் தொழத் தொடங்கினேன். இஃது என் அன்பிருந்தவாறு.

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற

கொடிறன் கோட்புலி சென்னி

நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி

நம்பியை நாளும் மறவாச்

சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்

திருவா ரூரன் உரைத்த

பாடீ ராகிலும் பாடுமின் தொண்டீர்

பாடநும் பாவம்பற் றறுமே.

🏾அடியவர்களே, பிற பாடல்களை நீ பாட மறந்தாலும், பகையரசரை அவர் எதிர்ப்பட்ட ஞான்று தப்பிப் போக விடாது வென்ற கொடிறு போல்பவராகிய கோட்புலி நாயனார்க்கு இடமாயதும், சோழனது நாட்டில் உள்ளதும், பழமையான புகழை யுடையதும், ஆகிய திருநாட்டியத்தான்குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியை, அவனை ஒரு நாளும் மறவாத, திரட்சியமைந்த, பூவை யணிந்த கூந்தலையுடைய, 'சிங்கடி' என்பவளுக்குத் தந்தையாகிய, திருவுடைய நம்பியாரூரன் பாடிய பாடல்களைப் பாடுங்கள். பாடின், உங்கள் பாவங்கள் எல்லாம் பற்றற்று ஒழியும்.

திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*

ஆடி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் கோட்புலி நாயனார் குருபூஜையும், மற்றும் சிவனுக்குரிய அனைத்து திருவிழாக்களும்.

*தொடர்புக்கு:*

91- 4367 237 707

94438 06496.

Reposting it from sathvishayam google group.

Courtesy:K.N.RAMESH

128 views0 comments

Recent Posts

See All

தெய்வத்தின் குரலைத் தொகுத்த - ரா. கணபதி அண்ணா படைப்புகள்

அன்புடையீர், நமஸ்காரம் பூஜ்ய மகா பெரியவாளின் தெய்வத்தின் குரலைத் தொகுத்தவர் ரா. கணபதி அண்ணா என்பதை அனைவரும் அறிவோம். காஞ்சி மடத்தின்...

bottom of page