உ
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*157*
*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
*ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில், கீழை திருக்காட்டுப்பள்ளி.*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து மூன்று தலங்களில் இத்தலம் பன்னிரண்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*இறைவன்:* ஆரண்ய சுந்தரேஸ்வரர், இரண்டே ஸ்வரம்.
*இறைவி:* அகிலாண்ட நாயகி.
*தல விருட்சம்:* பன்னீர் புஷ்பம்.
*தல தீர்த்தம்:* அமிர்த தீர்த்தம்.
*ஆகமம்:* காமிக ஆகமம்.
*பதிகம்:* திருஞானசம்பந்தர். ஒரே ஒரு பதிகம்.
*இருப்பிடம்:*
சீர்காழியில் இருந்து சுமார் பத்து கி.மி. தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து இளைய முதுகுளபுரம் செல்லும் சாலையில் சுமார் ஒரு கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.
சீர்காழி - தரங்கம்பாடி சாலையில் அல்லி விளாகம் என்னுமிடத்தில் வந்து, அங்கு திருவெண்காட்டிற்குப் பிரியும் சாலையில் வந்து இலையமுதுகுளபுரம் தாண்டி கீழைத்திருக்காட்டுப்பள்ளிதலத்தை அடையலாம்.
ஊர் சாலையில் இருந்து சற்றுத் தள்ளி வலதுபுறம் உட்புறமாகக் கோயில் உள்ளது.
*அஞ்சல் முகவரி:* அருள்மிகு ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில்,
கீழைத்திருக்காட்டுப்பள்ளி,
திருவெண்காடு அஞ்சல்,
சீர்காழி வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்,
PIN - 609 114
*ஆலயப் பூஜை காலம்:*
நாள்தோறும் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*கோவில் அமைப்பு:*
இவ்வாலயத்திற்கு சென்று ஆலயத்துக்குள் நுழையிகையில்தான் தெரிந்தது, இராஜகோபுரம் கிடையாது என்பது.
ஒரு முகப்பு வாயில் மட்டுமே காட்சியாய் இருக்க உள் புகுந்தோம்.
முகப்பு வாயில் வழியே உள் புகுந்ததும், இடதுபுறத்தில் பிரம்மேசர், முனியீசர் என்ற திருநாமங்களைத் தாங்கி இரு சிவலிங்கங்கள் இருந்தன. வணங்கிக் கொண்டோம்.
இதையடுத்து, சுப்பிரமணியர், பைரவர், சூரியன் சந்நிதிகள் இருக்க தொடர்ச்சியாக தொடர்ந்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
கருவறைச் சுவரை நோக்கிய போது, வெளிப்புறத்தில் ஓரிடத்தில் மன்னன் ஒருவன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற சிற்பம் இருந்ததைக் கண்டோம்.
பிரகார வலத்தை பூர்த்தி செய்து வாயிலினுள் நுழைந்தோம்.
அங்கிருக்கும் மண்டபத்தில் மேற்கு நோக்கிய வண்ணம் இருந்த சுவாமி சந்நிதிக்குவந்து கைகுவித்து நின்றோம்.
மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டோம். கண்குளிர தீபாராதனை ஆராதனையை கண்டு வணங்கினோம்.
மனநிறைவான இறைவனருளைப் பெற்றுக் கொண்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
இறைவன் சந்நிதியின் இடதுபுறத்தில் அம்பாள் சந்நிதியும் இருக்க, இங்கேயும் மனக்குறைகள் அகல, மனநிறைவுடன் வணங்கிக் கொண்டோம்.
பின்பு, அர்ச்சகர் தந்த குங்குமப் பிரசாதம் பெற்று வெளிவந்தோம்.
இங்கு, ஒரே நேரத்தில் இந்த இடத்தில் இருந்தவாறே இறைவனையும் இறைவியையும் ஒருசேர தரிசிக்கும் தருவாயுடன் சந்நிதிகள் அமையப் பெற்றிருந்தன
திரும்பவும், கூப்பிய கைகளுடன், இருவரையும் ஒரு சேரத் தரிசித்துக் கொண்டு வெளி வந்தோம்.
பிரகாரத்தில் *"தசலிங்கம்"* சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருந்தது. கைதொழுது கொண்டோம்.
இதில் ஒரே லிங்கத்தில் மட்டும் இரண்டு பாணங்கள் இருப்பதைக் கண்டோம். வித்தியாசமான திருஅமைப்பைக் கண்டு வியந்தோம்.
தரிசனத்திற்கு வந்தோர் சிலரிடம், இத்திரு அமைப்பைப் பற்றி வினவிவோம்.
யாவருக்கும் தெரியவில்லை. வணங்கி நகர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.
இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் இத்தலத்தில் நவக்கிரக ஆதிக்கம் கிடையாது. ஆதலால் சந்நிதி இல்லை.
*சிறப்பு:*
ததீசி முனிவரின் முதுகுத் தண்டை ஆயுதமாகப் பெற்று இந்திரன் விருத்திராசுரன் என்ற அசுரனை அழித்தான்.
இந்தப் பழியும் பாவமும் நீங்க தேவேந்திரன் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டதாகப் புராணம் சொல்கிறது.
இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீபிரம்மேஸ்வர லிங்கத்தை வழி படுவோர் நூறு அஸ்வமேத யாகங்கள் செய்த பலனைப் பெறுவார்கள் என்பது ஐதீகமாம்.
சுவாமி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். வணங்கித் தொடர்ந்தோம்.
பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நால்வருடன் மட்டும் காட்சி தருகின்ற தட்சிணாமூர்த்தி, இங்கு இத்தலத்தில் ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷமாகத் தெரிகிறது.
பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோரும் பிரகாரத்தில் இருக்க ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வன் இவரை வழிபட்டதால், இவர் *நண்டு விநாயகர்* என்று அழைக்கப்படுகிறார்.
இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருக்கும் வித்தியாசமான அமைப்பைக் காணப்பெற்றோம்.
பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூசிக வாகனம் இங்கு இல்லை. அதற்குப் பதிலாக நண்டு இவருக்கு வாகனமாக இருக்கிறது. அதனால் மூசிக வாகனம் இல்லை.
ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது.
கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது.
*சம்பந்தர் தேவாரம்:*
1.செய்யரு கேபுனல் பாயவோங்கிச் செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்
கையரு கேகனி வாழையீன்று கானலெல் லாங்கமழ் காட்டுப்பள்ளிப்
பையரு கேயழல் வாயவைவாய்ப் பாம்பணை யான்பணைத் தோளிபாகம்
மெய்யரு கேயுடை யானையுள்கி விண்டவ ரேறுவர் மேலுலகே.
🏾வயலின்கண் நீர்பாய, அதனால் களித்த செங்கயல் மீன்கள் துள்ள, அதனால் சில மலர்களிலிருந்து தேன் சிந்துதலானும், கைக்கெட்டும் தூரத்தில் வாழை மரங்கள் கனிகளை ஈன்று முதிர்ந்ததனானும், காடெல்லாம் தேன் மணமும் வாழைப்பழமணமும் கமழும் திருக்காட்டுப்பள்ளியுள், நச்சுப்பையினருகே அழலும் தன்மை உடைய ஐந்து வாயையும் கூரிய நச்சுப் பற்களையும் உடைய ஆதிசேடனை அணையாகக் கொண்ட திருமாலையும் உமையம்மையையும் தனது மெய்யின் இடப்பாகமாகக் கொண்டு (அரியர்த்தர், அர்த்த நாரீசுரர்) விளங்கும் இறைவன் மீது பற்றுக்கொண்டு ஏனைய பற்றுக்களை விட்டவர், வீட்டுலகை அடைவர்.
2.🏾இப்பாடல் சிதையுற்றுப் போகும்படி நமக்கருளியதால், இரண்டாம் பாடல் இல்லை.
3.திரைகளெல் லாமல ருஞ்சுமந்து செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்
கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக் காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி
உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல வுத்தம ராயுயர்ந் தாருலகில்
அரவமெல் லாமரை யார்த்தசெல்வர்க் காட்செய வல்ல லறுக்கலாமே.
🏾காவிரியின் வாய்க்கால்கள் எல்லா மலர்களையும் சுமந்தும், செழுமையான மணிகள் முத்துக்கள் பொன் ஆகியவற்றை வாரிக் கொண்டும் வந்து இருகரைகளிலும் அழகு பொருந்த உராய்ந்து வளம் சேர்க்கும் திருக்காட்டுப்பள்ளியுள் பாம்புகளை இடையில் கட்டிய செல்வராய் எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு, வேதம் முதலான மேம்பட்ட உரைகள் யாவற்றையும் உணர்ந்த நல்ல உத்தமராய்த் தொண்டு செய்யின் அல்லல் அறுக்கலாம்.
4.தோலுடை யான்வண்ணப் போர்வையினான் சுண்ண வெண்ணீறு துதைந்திலங்கு
நூலுடை யானிமை யோர்பெருமான் நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங்
காலுடை யான்கரி தாயகண்டன் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
மேலுடை யானிமை யாதமுக்கண் மின்னிடை யாளொடும் வேண்டினானே.
🏾புலித்தோலை ஆடையாக உடுத்தவன். யானைத்தோலை அழகிய போர்வையாகப் போர்த்தவன். திருவெண்ணீறாகிய சுண்ணத்தில் செறிந்து விளங்கும் பூணூலை மார்பகத்தே உடையவன். தேவர்கட்குத் தலைவன். பதிஞானத்தாலே அன்பர்கள் வழிபாடு செய்யும் திருவடிகளை உடையவன். கரிய கண்டத்தை உடையவன். பலராலும் விரும்பப் பெறும் திருக்காட்டுப்பள்ளியில் இமையாத மூன்றாவது கண்ணை நெற்றியில் உடைய அவ்விறைவன் மின்னல் போன்ற இடையினை உடைய உமையம்மையோடு விரும்பி எழுந்தருளியுள்ளான்.
5.சலசல சந்தகி லோடுமுந்திச் சந்தன மேகரை சார்த்தியெங்கும்
பலபல வாய்த்தலை யார்த்துமண்டிப் பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்க்
கலகல நின்றதி ருங்கழலான் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்
சொலவல தொண்டர்க ளேத்தநின்ற சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே.
🏾சலசல என்னும் ஒலிக் குறிப்போடு சந்தனம் அகில் முதலியவற்றை அடித்துவந்து, சந்தனத்தைக் கரையில் சேர்த்துப் பற்பல வாய்க்கால்களின் தலைப்பில் ஆரவாரித்து ஓடிப் பாய்ந்து வயல்களில் இழிந்து வளம் சேர்க்கும் காவிரியின் தென்பாங்கரில் சலசல என்னும் ஓசையோடு அதிரும் கழல்களை அணிந்த இறைவனால் விரும்பப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து இறைவனது பொருள்சேர் புகழ் பேசும் தொண்டர்களால் துதிக்கப்படும் அச் சூலபாணியின் திருவடிப் பெருமையை நாமும் கூறித் தோத்திரிப்போம்.
6.தளையவிழ் தண்ணிற நீலநெய்தல் தாமரை செங்கழு நீருமெல்லாங்
களையவி ழுங்குழ லார்கடியக் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித்
துளைபயி லுங்குழ லியாழ்முரலத் துன்னிய வின்னிசை யாற்றுதைந்த
அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க் காட்செய வல்ல லறுக்கலாமே.
🏾கட்டவிழ்ந்த குளிர்ந்த நிறத்துடன்கூடிய நீலோற்பலம், நெய்தல், தாமரை, செங்கழுநீர் ஆகிய எல்லா மலர்களையும், அவிழ்ந்து விழும் கூந்தலை உடைய உழத்தியர்களைகளாய்ப் பிடுங்கி எறியும் வளம் உடையதும், பலராலும் விரும்பப்படுவதும் ஆகிய திருக்காட்டுப்பள்ளியில் துளைகளால் ஓசை பயிலப்பெறும் புல்லாங்குழல் யாழ் ஆகியன இடைவிடாமல் ஒலிக்கும் இன்னிசை முழக்கோடு வளையினின்றும் பிரியாத பாம்புகளை இடையிற் கட்டி எழுந்தருளிய செல்வராகிய பெருமானுக்கு ஆளாய்த் தொண்டு செய்யின் அல்லல் அறுக்கலாம்.
7.முடிகையி னாற்றொடு மோட்டுழவர் முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டி
கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி காதல்செய் தான்கரி தாயகண்டன்
பொடியணி மேனியி னானையுள்கிப் போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின்
றடிகையினாற்றொழ வல்லதொண்ட ரருவினை யைத்துரந் தாட்செய்வாரே.
🏾நாற்று முடியைக் கையால் பறிக்கும் வலிய உழவர்கள் தங்கள் முன்கைத்தினவை வெல்லக் கட்டியை உடைப்பதால் போக்கிக் கொள்கின்ற திருக்காட்டுப்பள்ளியை விரும்பி உறைபவனும், கரிதான கண்டமுடையவனும், திருநீறணிந்த மேனியனும் ஆகிய பெருமானை நினைந்து அபிடேக நீர், மலர்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று துதித்து முன்நின்று அவன் திருவடிகளைக் கையால் தொழவல்ல தொண்டர்கள் நீக்குதற்கு அரிய வினைகளினின்றும் நீங்கி அவ்விறைவனுக்கு ஆட்செய்வர்.
8.பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் பெய்கழ னாடொறும் பேணியேத்த
மறையுடை யான்மழு வாளுடையான் வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடை யான்கன லாடுகண்ணாற் காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறையுடை யான்குறட் பூதச்செல்வன் குரைகழ லேகைகள் கூப்பினோமே.
🏾தலையில் பிறையை அணிந்தவனும், பெரியோர்கள் தலைவனும், வேதங்களை அருளியவனும், மழுவாகிய வாளை உடையவனும், நீண்ட கரிய கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்ட கறைக் கண்டனும், கனல் சேர்ந்த நுதல்விழியால் காமனைக் காய்ந்தவனும், அன்பர்களின் குறைகளைக் கேட்டறிபவனும், குறட்பூதச் செல்வனுமாகிய, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள இறைவன் திருவடிகளை நாள்தோறும் விரும்பி ஏத்தி அத்திருவடிகளையே கை கூப்பினோம்.
9.செற்றவர் தம்மர ணம்மவற்றைச் செவ்வழல் வாயெரி யூட்டிநின்றுங்
கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
உற்றவர் தாமுணர் வெய்திநல்ல வும்பருள் ளார்தொழு தேத்தநின்ற
பெற்றம ரும்பெரு மானையல்லாற் பேசுவதும் மற்றொர் பேச்சிலோமே.
🏾தேவர்க்குப் பகைவராய திரிபுரத்து அசுரர்தம் அரணங்களைச் செவ்வழலால் எரியூட்டி அழித்துப் பெருவீரத்தோடு கற்றவர்கள் தொழுதேத்த மேம்பட்டு, விளங்கும் இறைவனால் காதலிக்கப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து, மெய்யுணர்வு பெற்ற தேவர்கள் பலரும் தொழுது ஏத்தும், விடை மீது ஏறி அமரும் அப்பெருமான் புகழல்லால் மற்றோர் பேச்சைப் பேசுவதிலோம்.
10.ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த் துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்
குண்டர்க ளோடரைக் கூறையில்லார் கூறுவதாங்குண மல்லகண்டீர்
அண்டம றையவன் மாலுங்காணா ஆதியி னானுறை காட்டுப்பள்ளி
வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே.
🏾நிறம் பொருந்திய காவியாடையை மேனியில் போர்த்து, உச்சி வேளையில் வயிறு கொள்ளாத அளவில் தின்று பொய் கூறும் உடல்பருத்த புத்தர், இடையில் உடையில்லாத திகம்பர சமணர் கூறுவன நற்பயனைத்தாராதன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உலகைப் படைத்த வேதாசாரியனான பிரமனும், மாலுங் காணாத முதல்வன் உறையும் திருக்காட்டுப்பள்ளிக்குச் சென்று வண்டு அமரும் மலர்க் கொன்றை புனைந்த வார்சடையோன் கழல்களை ஏத்தி வாழ்த்துவோம்.
11.பொன்னியல் தாமரை நீலநெய்தல் போதுக ளாற்பொலி வெய்துபொய்கைக்
கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக் காதல னைக்கடற் காழியர்கோன்
துன்னிய வின்னிசை யாற்றுதைந்து சொல்லிய ஞானசம் பந்தனல்ல
தன்னிசை யாற்சொன்ன மாலைபத்துந் தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே.
🏾திருமகள் வாழும் தாமரை, நீலம், நெய்தல் ஆகிய மலர்களால் பகலும் இரவும் பொலிவெய்தும் பொய்கைகளில் கன்னிப்பெண்கள் குடைந்தாடும் திருக்காட்டுப்பள்ளியை விரும்பும் இறைவனைக் கடல் சூழ்ந்த காழி மாநகர்த்தலைவனாகிய ஞானசம்பந்தன் பொருந்திய இன்னிசைகூட்டிச் சொன்னதும், தானே தன்னிச்சையால் பாடியவும் ஆகிய இத்திருப்பதிகப் பாடல் மாலை பத்தையும் மனத்திடைத் தரிக்க வல்லவர் புகழ் எய்துவர்.
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
கந்த சஷ்டி, ஆருத்ரா தரிசனம், விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி மற்றும் மாதாந்திர,பட்ச விசேஷங்கள் சிறப்பூடன் நடைபெறுகின்றன.
*தொடர்புக்கு:*
ராஜா சுந்தரேச குருக்கள்.
04364 256273,
94439 85770,
98425 93244.
Reposting it from Amirthavahini google group.