உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி*
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்:176.*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
*துயரந்தீர்த்தநாதர் திருக்கோவில், திருஓமாம்புலியூர்.*
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து நான்கு தலங்களில் இத்தலம் முப்பதத்தொன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*இறைவன்:* துயரந்தீர்த்தநாதர், பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்.
*இறைவி:* பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை.
*தல தீர்த்தம்:* கொள்ளிடம், கெளரி தீர்த்தம்.
*தல விருட்சம்:* வதரி மரம். (இலந்தை)
*ஆகமம்:* காமீக ஆகமம்.
*தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர். ஆறாம்ம் திருமுறையில் ஒரு பதிகம்.
சம்பந்தர் - மூன்றாம் திருமுறையில் ஒரு பதிகம். ஆக இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள்.
*இருப்பிடம்:*
சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் பேருந்து வசதியுள்ளது.
சிதம்பரத்தில் இருந்து சுமார் முப்பத்தொன்று கி.மீ. தொலைவு.
காட்டுமன்னார்குடியிலிருந்தசுமார் ஏழு கி.மீ.தொலைவு.
சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி, மோவூர் வழியாக அணைக்கரை செல்லும் நகரப் பேருந்து எண் 41 இத்தலம் வழியாகவும் சென்று கோவில் வாயிலில் இறங்கிக் கொள்ளலாம்.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்,
ஓமாம்புலியூர்,
ஓமாம்புலியூர் அஞ்சல்,
காட்டுமன்னார்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம்,
PIN - 608 306
*ஆலயப் பூஜை காலம்:*
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும.
*கோவில் அமைப்பு:*
கிழக்கு நோக்கிய மூன்று நிலைகளைத் தாங்கிய இராஜகோபுரம், இக்கோயில் மதிற்சுவருடன் கூடிய ஒரு வாயிலுடன் அமைந்திருந்தது.
*சிவ சிவ,சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை தரிசித்துக் கொண்டோம்.
வாயிலுக்கு எதிரில் கௌரிதீர்த்தம் இருக்க இங்கு சென்று தீர்த்தத்தை வாரி சிரசிலிட்டு இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டோம்..
கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றோம். அங்கு முதலாவதாக இருக்கும் பலிபீடத்தருகே வந்து நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டோம்.
அடுத்து நந்திபெருமான் மண்டபத்தில் நந்தியாரைக் கண்டு வணங்கிவிட்டு, ஆலயத் தொழுகைக்கைக்கு அருள்புரிய அனுமதிக்குமாறு வேண்டிக் கொண்டு மேலும் நகர்ந்தோம்..
பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமான் சந்நிதி இருக்க இவரையும் வணங்கிக் கொண்டோம்.
வலமுடித்து உள் செல்லவும் நேரே சுவாமி சந்நிதி இருந்தது.
சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் சுயம்புமூர்த்தியாக இறைவன் அருளாட்சி தந்து கொண்டிருந்தார்.
இவர் சந்நிதியின் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பம் இருந்தது.
மறுபுறத்தில் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டிருந்தனன.
இங்கிருந்து நின்றவாரே நெஞ்சுக்கு நேராக கைகளை கூப்பி வணங்கிக் கொணடோம்.
மூலவருக்கு ஆணாதிக்கப் பட்ட தீபாரதனையைக் கண்டு வணங்கி, மனமுருகி பிரார்த்தித்து வணங்கி, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.
இறைவன் சந்நிதியில் வலதுபுறத்தில் தெற்கு நோக்கி உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சி தந்தார். சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டோம்
இத்தலத்தில் சிவாகம ரீதியாக கருவறை தெற்கு கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தியும்,
இறைவன் சந்நிதிக்கும், அம்பாஈள் சந்நிதிக்கும் இடையில் மகாமண்டபத்தில் தனி மூலஸ்தானத்தில் ஞானகுருவாக இன்னொரு தட்சிணாமூர்த்தியும் அருள் பாலிப்பதைக் கண்டு பவ்யபயத்துடன் வணங்கித் தொழுது கொண்டோம்.
இங்கே இரண்டு தட்சிணாமூர்த்தி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.
இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் கருவறை கோஷ்டத்தில் காணப்படும் நடராசரின் சிலாரூபம்தான்.
ஆடவல்லானின் இந்நளினக் கோலம் மிக மிக சிறப்பாக இருந்தது.
இது வியாக்ர பாதருக்குக் காட்சி தந்த வடிவம் என்று அங்கிருந்த சிவாச்சாரியார் கூறினார்.
மேலும் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை முதலியோர்களைக் கண்டு, தொடர்ச்சியாக ஒவ்வொருத்தரையும் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
அடுத்திருந்த அம்பாள் சந்நிதி மிக மிக அழகாக இருந்தது.
அம்பாளின் முன் நின்று, தியாணித்து நினைந்து, ஆராதித்ததீபாரதனையை ஒற்றிக் கொண்டு, அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலமாதலால், மற்ற நவக்கிரகங்கள் கிடையாது.
பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று. மற்றவையாவன: பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), கானாட்டம்புலியூர், எருக்கத்தம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர். இவற்றில் கானாட்டம்புலியூர் இத்தலத்திலிருந்து அருகில் உள்ளது.
எருக்கத்தம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய இரண்டும் நடுநாட்டுத் தலங்களில் இருப்பவை.
பெரும்பற்றப்புலியூர், ஓமாம்புலியூர், கானாட்டம்புலியூர் ஆகிய மூன்றும் காவிரி வடகரைத் தலங்களில் இருப்பவை.
இந்த ஐந்து தலங்களிலும் வியாக்ரபாத முனிவர் ஈஸ்வரனை வழிபட்டுள்ளார்.
ஞானசம்பந்தர் தம் பதிகத்தில் இத்தலம் *"ஓமமாம்புலியூர்"* என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறார்.
ஆனால், அப்பர் அவர் பாடலில் *"ஓமாம்புலியூர்"* என்று மருவி கூறி இருக்கிறது.
ஆனால், இருவரும் தங்கள் பதிகங்களில் இத்தலத்தை வடதளி என்றே குறிப்பிட்டுள்ளனர்.
ஆலய முகப்பு வாயிலுக்கு எதிரிலுள்ள கெளரி தீர்த்தத்தின் அக்கரையில் வடதளி என்று ஓர் சிறிய ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தின் இறைவன் பெயர் நாகவல்லி சமேத வடதளீஸ்வரர் ஆவார்.
*தல அருமை:*
உமாதேவி ஒரு முறை கைலாயத்தில் "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார்.
சிவபெருமான் அதற்குரிய விளக்கத்தை உமையம்மைக்கு சொல்லிக் கொண்டிருக்கும்போது உமையின் கவனம் திசை திரும்பியது.
சிவபெருமான் உமாதேவியின் மீது கோபம் கொண்டு அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி தண்டனை கொடுத்து விட்டார்.
அதன்படி பூமிக்கு வந்த பார்வதிதேவி ஓமாப்புலியூரில் தங்கியிருந்து இத்தலத்து சரஸ்வதி தேவியை வணங்கி சிவனை நினைத்து இலந்தை மரத்தின் அடியில் கடுந்தவம் மேற்கொண்டாள்.
அம்பாளின் தவத்தினை மெச்சிய இறைவன் தேவி விரும்பியபடி இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி வடிவில் உமாதேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்ததார்.
உபதேசம் செய்யும்போது இடையூறு வரக்கூடாது என்பதற்காக நந்திகேஸ்வரரை வாசலில் காவலுக்கு வைக்கிறார்.
அப்போது முருகப் பெருமான் அங்குவர நந்தி தடுக்கிறார்.
முருகப் பெருமான் வண்டு உருவம் எடுத்து அபிஷேக தீர்த்தம் வரும் கோமுகம் வழியாக உள்ளே சென்று, அம்பாள் தலையில் சூடியிருக்கும் பூவில் உட்கார்ந்து குரு தட்சிணாமூர்த்தியாக இறைவன் அம்பாளுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுக் கொண்டார்.
(சுவாமிமலையில் முருகப் பெருமான் தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தது ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு உபதேசம் செய்யும் போது ஒட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டதால் தான்).
இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்த தலமாதலால் *ஓமாம்புலியூர்* என்று பெயர் பெற்றது.
ஓமம் என்ற சொல் வேள்வியைக் குறிக்கும். வேள்விச்சிறப்புடைய ஊர் எனபதாலும் இத்தலம் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்து வந்தது என்றும், ஹோமப் புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார்.
*தல சிறப்பு:*
இத்தலத்தில் நடராஜர் இருக்குமிடத்தில் தட்சிணாமூர்த்தி இருக்கிறார்.
தட்சிணாமூர்த்தி இருக்குமிடத்தில் நடராஜர் இருக்கிறார்.
தில்லையில் நடராஜரின் நடத்தைக் காணும் முன்பு வியாக்ரபாதர் ஓமாம்புலியூர் வந்தார்.
சிதம்பரத்தில் நடராஜரின் நடனத்தைக் காண தனக்கு அருள் தர வேண்டுமென்று வேண்டினார்.
வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்டதால் இறைவன் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார்.
பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த சதானந்தன் எனும் அரசன் தொழுநோயால் பீடிக்கப்பட்டான்.
இவன் சீரிய சிவபக்தனான இவனுக்கு அசரீரியாக..... இத்தல கெளரி தீர்த்தத்தில் தீர்த்தமாடு என வாக்கு ஒலிக்க.......
அதுபோல் தீர்த்தத்தில் நீராட நோய் நீங்கப் பெற்றான்.
*தல பெருமை:*
புலி ஒன்று துரத்த, இதற்கு அஞ்சி ஓடிய வேடன், வில்வமரத்தின் மீதேறி புலிக்குப் பயந்து பதுங்கினான்.
தூங்கி கீழே விழுந்து விடக்கூடாதென்பதற்காக வில்வமரத்தின் இலைகளை ஒவ்வொன்றாய் பறித்து கீழே போட்டான்.
கீழே இருந்த லிங்கத்தின் மீது வில்வ இலைகள் பட்டவண்ணமிருந்தன.
மறுநாள் காலை புலி நீங்கிப் போயிருப்பதைக் கண்டு, கீழே இறங்க, லிங்கத்திலிருந்து ஈசன் வெளிப்பட்டு, அவனின் மனம் விரும்பி அவனுக்கு அருள்புரிந்த தலம்.
*சம்பந்தர் தேவாரம்:*
1.பூங்கொடி மடவா ளுமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிரு ணட்ட மாடுமெம் விகிர்தர் விருப்பொடு முறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
🏾இறைவன் பூங்கொடி போன்ற உமாதேவியை ஒரு பாகமாக உடையவர். முறுக்குண்ட சடைமுடியையுடைய அடிகள். உலகம் சங்கரிக்கப்பட்டு ஒடுங்கிய ஊழிக்காலத்தில் நடனமாடும் விகிர்தர். அப்பெருமான் விருப்பத்துடன் வீற்றிருந்தருள்கின்ற இடம் எது என வினவில், தேன்மணம் கமழும் சோலைகளிலுள்ள செழுமையான மலர்களைக் குடைந்து நெருங்கிக் கூட்டமாயமைந்த வண்டுகள் இசைபாடுகின்ற, ஓங்கிய புகழையுடைய அந்தணர்கள் வாழ்கின்ற ஓமமாம்புலியூரில் அப்பெருமானுக்குரிய உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.
2.சம்பரற் கருளிச் சலந்தரன் வீயத் தழலுமிழ் சக்கரம் படைத்த
எம்பெரு மானா ரிமையவ ரேத்த வினிதினங் குறைவிடம் வினவில்
அம்பர மாகி யழலுமிழ் புகையி னாகுதி யான்மழை பொழியும்
உம்பர்க ளேத்து மோமமாம் புலியூ ருடையவர் வடதளியதுவே.
🏾சம்பரன் என்னும் அசுரனுக்கு அருள்செய்தவரும், சலந்தரன் என்னும் அசுரன் அழியும்படி நெருப்பினை உமிழ்கின்ற சக்கரத்தைப் படைத்தவருமான எம் சிவபெருமானார் தேவர்களெல்லாம் வணங்கிப் போற்ற இனிதாக வீற்றிருந்தருளும் இடம், வேள்வி ஆற்ற அதன் புகைமண்டலமானது ஆகாயத்தினை அடைந்து மழைபொழிவதும், தேவர்களால் போற்றப்படுகின்றதுமான திரு ஓமமாம்புலியூரில் உள்ள உடையவர் வடதளி என்னும் திருக் கோயிலாகும்.
3.பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப் படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குத றவிர்த்துத் தராதலத் திழித்த தத்துவ னுறைவிடம் வினவில்
ஆங்கெரி மூன்று மமர்ந்துட னிருந்த வங்கையா லாகுதி வேட்கும்
ஓங்கிய மறையோ ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
🏾சிறந்த குணமுடைய பகீரதனுடைய தவத்திற்கு அருள்செய்து, தனது படர்ந்த சடையில் மறைத்தருளிய கங்கை நதியினைத் தாங்குதலைத் தவிர்த்துப் பூமியில் சிறிதளவு பாயும்படி செய்த தத்துவனாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற இடம், மூன்று எரி வளர்த்துத் தம் அழகிய கைகளால் நெய், சமித்து போன்றவைகளை வார்த்து வேள்விகள் செய்கின்ற, ஓங்கிய புகழையுடைய அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உள்ள உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.
4.புற்றர வணிந்து நீறுமெய் பூசிப் பூதங்கள் சூழ்தர வூரூர்
பெற்றமொன் றேறிப் பெய்பலி கொள்ளும் பிரானவ னுறைவிடம் வினவில்
கற்றநால் வேத மங்கமோ ராறுங் கருத்தினா ரருத்தியாற் றெரியும்
உற்றபல் புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
🏾சிவபெருமான் புற்றில் வசிக்கும் இயல்புடைய பாம்பை அணிந்தவர். திருநீற்றினைத் தன்மேனி முழுவதும் பூசியவர். பூதகணங்கள் சூழ்ந்து வர, இடபத்தின் மேலேறி ஊரூராகச் சென்று பிச்சையேற்பவர். அப்பெருமான் இனிதாக வீற்றிருந்தருளும் இடம், தாங்கள் கற்ற நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் இவற்றின் கருத்தை உணர்ந்தவர்களாய், அன்பும், புகழுமுடைய அந்தணர்கள் வாழும் திருஓமமாம்புலியூர் உடையவர் வடதளியே.
5.நிலத்தவர் வான மாள்பவர் கீழோர் துயர்கெட நெடியமாற் கருளால்
அலைத்தவல் லசுர ராசற வாழி யளித்தவ னுறைவிடம் வினவில்
சலத்தினாற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையான் மிக்க
உலப்பில்பல் புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
🏾மண்ணுலகத்தவர்கள், வானுலகை ஆள்பவர்கள், பாதாள உலகத்தினர் ஆகியோரது துன்பம் கெடக் கொடிய அசுரர்கள் புரியும் தீமைகளை அழிக்குமாறு, நெடிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்த சிவபெருமான் இனிதாக வீற்றிருந்தருளும் இடம், தீய செயல்களால் பொருள் சேர்த்தலைச் செய்யாத நல்லொழுக்க சீலர்களும், பெரும்புகழ் மிக்க செயல் செய்யும் சான்றோர்களும் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரிலுள்ள உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.
6.மணந்திகழ் திசைக ளெட்டுமே ழிசையு மலியுமா றங்கமை வேள்வி
இணைந்தநால் வேத மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையா லுணரும்
குணங்களு மவற்றின் கொள்பொருள் குற்ற மற்றவை யுற்றது மெல்லாம்
உணர்ந்தவர் வாழு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
🏾எட்டுத் திசைகளும் புகழ்மணங் கமழ்கின்றதும், ஏழிசைகள் மலிந்துள்ளதும், ஆறங்கங்கள், ஐந்து வேள்விகள், நான்கு வேதங்கள், மூன்று எரிகள், இரண்டு பிறப்புக்கள் என இவற்றை ஒருமை மனத்தால் உணரும் குணங்களும், அவற்றின் பொருளும், குற்றமற்றவை, குற்றமுள்ளவை இவற்றை உணர்ந்து தெளிந்தவர்களும் ஆன அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவரான சிவபெருமான் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.
7.
🏾
8.தலையொரு பத்துந் தடக்கைய திரட்டி தானுடை யரக்கனொண் கயிலை
அலைவது செய்த வவன்றிறல் கெடுத்த வாதியா ருறைவிடம் வினவில்
மலையென வோங்கு மாளிகை நிலவு மாமதின் மாற்றல ரென்றும்
உலவுபல் புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
🏾பத்துத் தலைகளும், நீண்ட இருபது கைகளும் உடைய அரக்கனான இராவணன் ஒளிபொருந்திய திருக்கயிலை மலையினை அசைக்கத் தொடங்க, அவனது வலிமையைக் கெடுத்த ஆதியாராகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் எதுவென வினவில், மலைபோல் ஓங்கியுயர்ந்த மாளிகையும், அதனுடன் விளங்கும் பெரிய மதிலும் கூடிய, செல்வநிலை என்றும் மாறாதவராய் விளங்குகின்ற பல்வகையான புகழ்களையுடைய அந்தணர்கள் வசிக்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.
9.கள்ளவிழ் மலர்மே லிருந்தவன் கரியோ னென்றிவர் காண்பரி தாய
ஒள்ளெரி யுருவ ருமையவ ளோடு முகந்தினி துறைவிடம் வினவில்
பள்ளநீர் வாளை பாய்தரு கழனிப் பனிமலர்ச் சோலைசூ ழாலை
ஒள்ளிய புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
🏾தேனுடைய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும், கருநிறமுடைய திருமாலும் இருவரும் காண்பதற்கு அரியவனாய் நெருப்புப் பிழம்பாய் நின்ற சிவபெருமான் உமா தேவியோடு இனிது வீற்றிருந்தருளும் இடம் , பள்ளத்தை நோக்கிப் பாயும் நீரோடு வாளை மீன்கள் பாயும் வயல்களும், குளிர்ச்சி பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்த கரும்பு ஆலைகளும் உடைய, மிக்க புகழுடைய அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.
10.தெள்ளிய ரல்லாத் தேரரோ டமணர் தடுக்கொடு சீவர முடுக்கும்
கள்ளமார் மனத்துக் கலதிகட் கருளாக் கடவுளா ருறைவிடம் வினவில்
நள்ளிருள் யாம நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்றெரி யோம்பும்
ஒள்ளியார் வாழு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.
🏾தெளிந்த அறிவில்லாத காவியாடை போர்த்திய புத்தர்களும், தடுக்கினை உடுக்கும் சமணர்களும் ஆகிய கள்ள உள்ளத்துடன் விளங்கும் கீழ் மக்கட்கு அருள்புரியாத கடவுளாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் , நள்ளிருள், யாமம் முதலிய அவ்வக் காலங்கட்கு ஏற்ப, நான்கு வேதங்களிலும் கூறியபடி தெய்வமந்திரங்களை ஓதி, நன்மை தரும் மூன்று அக்கினிகளை வளர்த்து வேள்வி செய்யும் மாசற்ற அறிவுடைய அந்தணர்கள் வாழும் திருஓமமாம் புலியூர் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.
11.விளைதரு வயலுள் வெயில்செறி பவள மேதிகண் மேய்புலத் திடறி
ஒளிதர மல்கு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யரனைக்
களிதரு நிவப்பிற் காண்டகு செல்வக் காழியுண் ஞானசம் பந்தன்
அளிதரு பாடல் பத்தும்வல் லார்க ளமரலோ கத்திருப் பாரே.
🏾நல்ல விளைச்சலைத் தருகின்ற வயல்களில் ஒளிமிக்க பவளங்கள், எருமைகள் மேய்கின்ற இடங்களில் அவைகளால் இடறப்பட்டு மேலும் ஒளியைத் தருகின்ற திருஓமமாம் புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை, களிப்பை உண்டாக்கும் உயர்ந்த காணத்தக்க செல்வத்தையுடைய சீகாழிப்பதியில் அவதரித்த திருஞானசம்பந்தர் போற்றிய, அருளை விளைவிக்கும் இத்திருப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் சிவலோகத்தில் வீற்றிருப்பர்.
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
மாசி மகத்தில் பெருவிழா,
நவராத்திரி,
சிவராத்திரி,
கார்த்திகை சோமவாரங்கள்,
குருபெயர்ச்சி முதலியன நடைபெறுகின்றன.
*தொடர்புக்கு:*
ஜெகதீச குருக்கள்.
04144- 264845,
99426 34949
Reposting it from Amirthavahini Google Group.