top of page

குருவெழு கூற்றிருக்கை

ஆதி சங்கரரின் அருளாலே அவருக்காக அமைக்கப் பட்ட சொற்றேர். சிவனே குருவாகி உபதேசித்தது தக்ஷிணா மூர்த்தி வடிவில். கடவுள் ரிஷிகளுக்கு உபதேசம். சிவனுக்குக் குருவாகி உபதேசித்தது முருகன். கடவுளே கடவுளுக்கு உபதேசம். க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்று, விஷ்ணு அவதாரமாக வந்து உபதேசித்தது கீதை. கடவுள் மனிதனுக்கு உபதேசம்.

ஜகத்குருவாக தெய்வாம்ச வடிவமாய் மனிதருக்கு உபதேசித்தவர் ஆதி சங்கரர். இந்த நான்கு மகா குருக்களையும் இந்தத் தேரின் தட்டுகளில், ஆதி சங்கரடன் தொடர்பு படுத்தி அமைத்துள்ளோம். எழு கூற்றிருக்கைக்கு மேலும் அணியூட்டும் வகையில், தேரின் மற்ற பாகங்களான 4 தேர்க்கால்கள், 2 அச்சுகள், 4 அச்சாணிகள், ஒரு வடம், ஒரு கொடி, 8 தொம்பைத் தொங்கல்கள், தனிப் பாடல்களால் அமைக்கப் பட்டுள்ளன. தேர், சக்கரம் தவிர மற்ற பாகங்களுக்கு அடியேனின் மனத்து எழுந்த அமைப்புகளில் எழுத்துகளைக் கட்டியுள்ளேன். திருவெழு கூற்றிருக்கை என்று இறைவன் மீது திருஞன சம்பந்தர், திருமங்கை ஆழ்வார், அருணகிரி நாதர், வண்ணச் சரபம் தண்டபாணி ஸ்வாமிகள் போன்ற அநுபூதி பெற்ற அடியார்கள் இயற்றியுள்ளனர். இப்பாடல் வகையில் 1 முதல் 7 வரை உள்ள எண்கள் ஏறு/இறங்கு வரிசைகளில் பல தட்டுகளில் இடம் பெறும். 0000001000000 0000012100000 0000123210000 0001234321000 0012345432100 0123456543210 1234567654321 1234567654321 0123456543210 0012343210000 0001232100000 0000121000000 0000010000000 மேற்கண்டவாறு எண்கள் பாட்டில் கிரமமாக இடம்பெறும். பூச்சியம் இடம் பெறாது. மேல் பக்கம் 7 தட்டுகள், கீழ்ப்பக்கம் 7 தட்டுகள். இது ஒரு கணித மாயம். 1 = 1^2 (^ என்பது வர்க்கம்) 121 = 11^2 12321 = 111^2 1234321 = 1111^2 இதேபோல் மற்ற தட்டில் உள்ள எண்களும். 1 = 1^ 2 1+2+1 = 4 = 2^2 1+2+3+2+1 = 9 = 3^2 1+2+3+4+3+2+1 = 16 = 4^2 இதேபோல் மற்ற தட்டில் உள்ள எண்களும். தேரின் மேலே இருக்கும் கொடி குறள் வெண்பா. உலகம் புரந்திடும் ஒண்கோல் நுனியில் துலங்கிடுதே காவித் துணி. துணி - கொடி. குருவின் தண்டமே கொடிக் காம்பு; அதன் நுனியில் இருக்கும் காஷாயத் துணியே கொடி. தேர் நேரிசை ஆசிரியப்பா. தேரின் மேல் தட்டு ஒருகோல் ஏந்திய உத்தம குருவே! (1) ---- ஒரு தண்டம் ஏந்தியவர் (1-2-1) ஒன்றே அதுவாம் இரண்டிலை என்றனை; ஒன்றே அரியரன் என்பதும் உணர்த்தினை; (1-2-3-2-1) ஒருதனி எதியாய் இருபதம் சிவக்கப் பழம்பெரும் பாரதம் மும்முறை சுற்றினை; இருக்கெசுர் சாமம் அதர்வம் எல்லாம் ஒருமுறை கேட்டே கிரகித்துக் கொண்டனை; -- ஏக சந்தக் கிராஹி (1-2-3-4-3-2-1) ஓரிரு முந்நான் மும்மதம் ஓட்டினை; --- (1 x 2 x 3 x 4 x 3 = 72 துர்மதங்கள்) ஈருடல் தனிலே ஓருயிர் புகுத்தினை; ---- கூடு விட்டுக் கூடு பாய்ந்தமை (1-2-3-4-5-4-3-2-1) ஓரெழுத் துண்மையை இருவகைக் குணத்தில் --- சகுணம், நிர்க்குணம் சீருற விளக்கினை; மும்மலம் களைந்த நாற்பெருஞ் சீடர்க்கு ஞானம் கொடுத்தனை; --- ஆதி சங்கரரின் 4 சீடர்கள் ஐம்பொறி அடக்கி நான்மறை விளக்கி முக்கால் அறிந்தனை; இருவரும் தேடி அறியொணா அடியினை ஒருவனாய்ச் சென்றே கயிலையில் கண்டனை; ஆதியில் சிவனாய், (1-2-3-4-5-6-5-4-3-2-1) --- இத்தட்டில் சிவனின் பெருமை சொல்லப் படுகிறது. ஓரழலாய் உயர்ந்தனை; ஈருரி போர்த்தனை; முப்புரம் நகையால் சுட்டனை; நால்வர்க் -- சைவ சமயக் குரவர்கள் நால்வர் குணர்த்தினை; ஐந்தக் கரத்துள் ஒடுங்கினை; அறுமுகன் தன்னை அனலால் பயந்தனை; ஐங்கணை எய்தவன் அங்கம் காய்ந்தனை; நான்முகன் செருக்கை நறுக்கி முத்தலைச் சூலம் தாங்கிக் காத்து-இரு கூறினில் இடத்தைக் கொடுத்தனை; ஒருபதம் தூக்கி ஊர்த்துவம் ஆடினை; பிற்கால் குருவாய், (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1) ஒருவரிச் சூத்திரம் பெருக்கி விரித்தே --- ப்ரம்ம சூத்திர பாஷ்யம் இருடிகள் போற்ற ஆயுள் நீள --- 8 வயது 16 ஆகி, பின் 32 ஆனது முக்குரு வாகிக் காஞ்சியில் உலவி நான்மறை வகுத்த வியாதனைக் கண்டே இலிங்கம் ஐந்தினை இறக்கிக் கொடுத்தே அறுவகை வழிபா டழகாய் அமைத்தே எழுந்திடு புயங்கம் இனிதாய் இயற்றி --- சுப்ரமணிய புஜங்கம் அறுமுகன் கனிவால் உரோகம் நீங்கி ---- செந்தூர் , குட்ட நோய் தீர்ந்தமை ஐம்பெரும் பீடம் தாபித் தாங்கு ---- காசி, பூரி, துவாரகா, சிருங்கேரி, காஞ்சி நாலாம் நிலையை மூவாப் பருவத்(து) ---- 4ஆம் நிலை சன்னியாசம் இருநிலை தாவி இன்புறக் கொண்டே --- க்ரஹஸ்தம், வானப்ரஸ்தம் இல்லை ஒருபெரு சருவக் கியனாய் உயர்ந்தனை; -- ஸ்ர்வஞ்ய பீடம் தேரின் கீழ்த் தட்டு (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1) ஒருகனி பெற்றுப் பொன்மழை வருவித்(து) இருபெரு உருவை அடிமுடி கண்டே --- சிவ/விஷ்ணு பாதாதி கேச ஸ்தோத்ரம் மூவெளம் கட்டி நாற்றிசைப் புறத்தும் --- வெளம்-வெள்ளம்-லஹரி. சௌந்தர்ய, ஆனந்த, சிவானந்த லஹரி அஞ்சா நெஞ்சுடன் ஆற நடந்தே ---- காபாலிகர்களின் அசசுறுத்தலுக்கு அஞ்சாமை எழுமையும் தொடரும் வினையைக் கரைக்கும் ஆறுகள் மீதும் பாடல் புனைந்தே --- கங்கா, யமுனா, நர்மதா, மணிகர்ணிகா அஷ்டகங்கள் ஐயனின் பெருமையை நால்வகை மக்களின் --- வேதம் பயிலாவிடினும் ஸ்தோத்ரம் சொல்லலாம் முத்தியைக் கருதி இருக்கினும் அழகாய்த் --- ரிக் வேதத்தை விட அழகிய சந்தம் துதிகளைத் தொடுத்த ஒருமுனி வோனே! (1-2-3-4-5-6-5-4-3-2-1) --- துதிகள் சொல்லப் படுகின்றன ஏக தந்தனை ஏற்றிப் பாடி --- (விநாயக ஸ்தோத்ரம்) ஈருரு இணைந்த அரியைப் பாடி --- (ந்ருஸிம்ம ஸ்தோத்ரம்) முப்புர சுந்தரி மொய்ம்பு பாடி --- (த்ரிபுர சுந்தரி ஸ்தோத்ரம்) நால்வர்க் குணர்த்தும் நம்பனைப் பாடி -- (தக்ஷிணா மூர்த்தி/ 4 சீடர்கள் ஸ்தோத்ரம்) அஞ்சக் கரத்து மாலை பாடி ---- (சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ர மாலா) அறுபத அன்னையை அழகாய்ப் பாடி ------- (ப்ரமராம்பாஷ்டகம், ஷட்பதீ) பிராதக் காலப் பஞ்சகம் பாடி ----- (லலிதா ப்ராத ஸ்மரணம்) நான்மூ இலிங்கச் சேத்திரம் பாடி ---- (த்வாதச லிங்க க்ஷேத்ர ஸ்தோத்ரம்) ஈருரு இணைந்த ஈசனைப் பாடி ----- (அர்த்த நாரி ஸ்தோத்ரம்) ஒன்று மில்லாக் குணத்தையும் பாடி --- (நிர்குண மானஸ பூஜா) (1-2-3-4-5-4-3-2-1) --- ஜகத்குரு கிருஷ்ணன் ஒற்றைத் துணியை உருவிடத் துணிந்த இரும்புமனங் கொண்ட துட்டனை எதிர்த்து மூத்தோர் சபையில் நியாயம் கேட்ட நாண்மிகக் கொண்ட கற்புடைத் தையலின் --- தையல் - திரௌபதி மானம் காத்த ஐம்படை வரதனின் --- க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் நாற்றிசை நடுங்கும் விராட்டுரு கண்ட மூன்றாம் பாண்டவன் இருசெவி மடுத்தே -- அருச்சுனன் ஒன்றிய மனத்துடன் உருகிக் கேட்டதை ---- கீதை (1-2-3-4-3-2-1) ----- ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி விரித்தே உரைத்தனை ஒருமரத் தின்கீழ் இருவிரல் வளைய மூவிரல் நீட்டி --- சின் முத்திரை நால்வர்க்கு ஞானம் காட்டி யார்க்கும் ---முத்திரை காட்டுதலே/பிடித்தலே ஞானம் முந்திய குருவாய்த் தக்கிணம் நோக்கி இருளை அகற்றும் ஒற்றை எழுத்தின் (1-2-3-2-1) ஒலியும் ஓர்ந்திட அமர்ந்தனை மேனிமேல் -- பிரணவமும் இவரை ஆராய்ந்து கொண்டே இருக்கிறது இருகரம் குழைக்க மூவிரல் தடவ ---- த்ரிபுண்ட்ரம் நீறு தரித்தே ஈர்க்கும் தேசுடன் ஒருதனி அரியாய் உலவி வந்தனை - பர சமய கோளரி (1-2-1) ---- சுவாமி நாத சுவாமி; சிவனுக்குக் குரு ஓர்வதற் கரிய ஓம்கா ரத்தை அப்பன் மடியே இருக்கையாக் கொண்டே ஒருசிறு வேலன் உபதே சித்ததைப் பிறவியி லேயே பெற்று விட்டனை; (1) காஞ்சித் தாயின் மடியில் ஒன்றினை; --- காஞ்சியில் மோக்ஷம் தட்டுகளுக்குப் பலம் கொடுக்கும் இதர பாகங்கள் செம்மலே போற்றிநின் சேவடி போற்றி சம்புவாய் அமரும் சங்கரா போற்றி எங்கும் எவர்க்கும் என்றென்றும் மங்களம் தருவாய் மாசறு குருவே! படத்தில் உள்ள தேரினைப் பெரிதாக்கிப் பார்க்கவும். நான்கு தேர்க்கால்கள் சிவனின் நாமங்களும் வசி எனும் மந்திரமும் 4 தேர்க்கால்களாக அமைகின்றன. நான்காரைச் சக்கர பந்தம். இதில் மத்தியில் தொடங்கி ஆரம் (radius) வழியாக மேல் சென்று, வலப்புறம் வந்து, மீண்டும் ஆரம் வழியாக வந்தால் ஒரு அடி. மறுபடி மத்தியில் தொடங்கி, ஆரம் வழியாக், வலப்புறமாகக் கீழ் சென்று மீண்டும் ஆரம் வழி மத்திக்கு வரின் அடுத்த அடி. இப்படியே பிற அடிகளும். சிவனே ஈச னேவசி சிவனே நேச னேவசி சிவனே தேச னேவசி சிவனே பாச னேவசி.....(1) சிவனே கோட னேவசி --- கோடு - மலை சிவனே மாட னேவசி சிவனே காட னேவசி சிவனே வேட னேவசி.....(2) சிவனே பாக னேவசி சிவனே நாக னேவசி சிவனே ஏக னேவசி சிவனே யோக னேவசி.....(3) சிவனே தூத னேவசி சிவனே தாத னேவசி சிவனே போத னேவசி சிவனே நாத னேவசி.....(4) சிவ என்பது போல், வசி என்பதும் மந்திரம். (ராம/மரா என்பது போல்) இரண்டு அச்சுகள் ஓம் என்பது நீங்க, குறட்பா அமையும். ஓம் சிவசரு வேசா சிவகயி லாசா சிவதக ரேசா வசி ஓம். ஓம் சிவசெக தீசா சிவநட ராசா சிவபர மேசா வசி ஓம். தகரேசா - தகரம் என்பது இதயத்தின் மத்தி. அச்சுகள் சக்கரங்களின் மத்தியையுடன் தொடர்புடையன. சி என்னும் எழுத்தே அச்சின் இரு புறமும் அமையுமாறு இயற்றப்பட்டுள்ளது. சக்கரத்துக்கு சிறிது வெளிப்புறம், நீட்டிக் கொண்டிருக்கும் அச்சின் முனையில், ஓம் என்பது அமையும். 4 அச்சாணிகள் சிவனின் திரிசூலமே அச்சாணிகள். இவை மேல்கீழாக இறங்குவதாலும், அச்சு சக்கரத்துக்கு வெளியே நீண்டிருக்கும் பகுதியில் இருப்பதானும், அச்சின் முதலெழுத்தை சூலத்தின் நடு எழுத்துடன் கோக்காமல், ஓம் என்னும் அச்சின் துளைவழி .எழுத்தைக் கோத்தோம். சிவசிவ ஓம் சிவசிவ என்பவையே சூலத்தின் தண்டு இலைகளில் பொறிக்கப் பட்டுள்ளன. மேலேறும் போது சிவசிவ எனவும் கீழிறங்கும் போது வசிவசி எனவும் வரும். ஓம் என்பதை ஓரெழுத்தாகக் கொள்க. தேரின் நான்கு பக்கங்களிலும் இரண்டிரண்டு (மொத்தம் 8) தொம்பைகள் தேரிழுக்கும் அடியார் கூட்டம் செய்யும் கோஷமே தொம்பையின் எழுத்துகள். ஜயஜய சங்கர ஹரஹர சங்கர சிவசிவ சங்கர சிவகுரு சங்கர காமகோடி சங்கர காமாட்சி சங்கர தற்பர சங்கர சற்குரு சங்கர சின்மய சங்கர சிற்பர சங்கர பயஹர சங்கர பவஹர சங்கர அற்புத சங்கர அதிபல சங்கர மஞ்சுள சங்கர மங்கள சங்கர முப்பரிமாணத்தில் தொம்பை உருளையாய் இருப்பினும், இரு பரிமாணத்தில் மேலே ஒரு கூம்பு, நடுவில் செவ்வகம் போலும் இருக்கும். கூம்பில் ஓம் அமையும். தொம்பையின் செவ்வகப் பகுதி இரண்டிரண்டாக மொத்தம் 16 கட்டங்கள் பெற, கோஷ எழுத்துகள் அவற்றில் இடம் பெறும். தேர் இழுக்கும் வடம் இன்னிசை வெண்பா. மாசில்லா வண்குருவும் மாண்புடனே வீற்றிருக்கத் தேசுமிகு ஆழித்தேர் தென்னாட்டைச் சுற்றிவரக் காசியபர் மைந்தர் கருத்தொன்றித் தேரிழுக்க, வாசுகிப் பாம்பே வடம். தேவர்களும் அசுரர்களும் தேரிழுக்கிறார்கள். வாசுகியே தேர் வடம். வடத்தின் தடிமன் அதிகம் என்பதால், முடிச்சுப் போட முடியாது. வடத்தால் தேரின் அடிப் பாகத்தை வலமாகச் சுற்றி (முக்கால் சுற்று), இரு பக்கங்களிலும் நுனிகளை விட்டு விடுவார்கள். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர. - சங்கர தாஸ்

Courtesy : Sri Sankaradass Nagoji,Thedhiyur.

Thanks to Smt. Malathi Jayaraman,Kumbakonam.

187 views0 comments
bottom of page