உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
___________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தொடர்:*
(எல்லோரும் தரிசிக்கச் செல்வதற்காக.........)
_____________________________________
*தேவாரம் பாடலுக்குள் அமைந்த வைப்புத் தல தொடர் எண்: 11*
*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*
*மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், அளப்பூர்.(தாரங்கம்பாடி)*
___________________________________
*இறைவன்:* மாசிலாமணீஸ்வரர்.
*இறைவி:* தர்மஸம்வர்த்தினி.
*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 10.00 மணி முதல், 11.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை.
*ஆலய அஞ்சல் முகவரி:* மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்,
தாரங்கம்பாடி அஞ்சல்,
தாரங்கம்பாடி வட்டம்,
நாகை மாவட்டம்.
609 313
*தொடர்புக்கு:* சிவாச்சாரியார் பொறையாறிலிருந்து வருவார்.
சிவக்குமார் குருக்கள்: 90952 48959
04364- 288428
*தேவார வைப்புத் தல பாடல் உரைத்தவர்:* அப்பர், சுந்தரர்.
அப்பர்.
ஆறாம் திருமுறையில், ஐம்பத்தொன்றாவது பதிகத்தில், மூன்றாவது பாடலிலும்,
ஆறாம் திருமுறையில், எழுபதாவது பதிகத்தில், நான்காவது பாடலிலும்,
ஆறாம் திருமுறையில், எழுபத்தொன்றாவது பதிகத்தில், நான்காவது பாடலிலும்,
சுந்தரர்.
ஏழாவது திருமுறையில், நாற்பத்தேழாவது பதிகத்தில், நான்காவது பாடலிலும் இத்தல உரைப்பது உள்ளது. ஆக மொத்தம் இத்தலத்திற்கு நான்கு பாடலுரைப்புகள்.
*இருப்பிடம்:*
மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி செல்ல நிறைய பேருந்து வசதிகள் இருக்கின்றன.
கடற்கரை அருகில் இக்கோவில் அமைந்துள்ளது.
தரங்கம்பாடியில் இருந்து சுமார் எட்டு கி.மீ. தொலைவில் திருக்கடவூர் பாடல் பெற்ற தலம் இருப்பதால், அங்கேயே தங்கும் வசதிகள் நிறைய இருப்பதால், தங்கி இவ்வாலயத்தில் தரிசனம் செய்ய இயலும்.
*தல அருமை:*
அளம் என்பது உப்பளத்தைக் குறிப்பதாகும்.
முன் காலத்தில், இக்கோயிலுக்குப் பல உப்பளங்கள் சொந்தமாக இருந்தன. இதனால் வந்த பெயர் அளப்பூர் ஆகும்.
*வரலாற்றுச் சிறப்புடைய தலம்:*
டேனிஷ்காரர் ஆட்சி புரிந்த இடம் இது. கடலோரத்தில் டேனிஷ் கோட்டையும் அருங்காட்சியகமும் உள்ளன.
ஒரு காலத்தில் இவ்வூர் துறைமுகமாக இருந்ததை நினைவூட்டும் வகையில் ஓரிரு சுவர்கள் மட்டும் கடலில் நின்று காட்சி தருகின்றன.
குல சேகர பாண்டிய மன்னன் சிறந்த சிவபக்தன். இவன் தன் 38வது ஆட்சியாண்டில் இவ்வூரைத் தோற்றுவித்துக் கோயிலையும் கட்டினான்.
வேதத்தின் ஆறு அங்கங்களுக்கும் மூலம் இறைவனே யாதலின் இவ்வூருக்கு (ஷட் - அங்கன் பாடி) "சடங்கன்பாடி" என்று பெயர் வைத்தான்.
சுவாமிக்கு மணிவண்ணீசுவரமுடையார் என்று திருநாமத்தையும் சூட்டினான்.
கடற்கரையை யொட்டிய நகர மாதலாலும், தோற்றுவித்தவன் குலசேகரபாண்டியன் என்பதாலும் இவ்வூருக்குக் குலசேகரன் பட்டினம் என்ற பெயரும் வழங்கலாயிற்று.
1354ல் ஆண்ட வீர பாண்டியன் ஆட்சிக் காலத்திலும் இப்பெயர்களே வழங்கி வந்தன.
இஸ்லாமியர்களால் தென்னிந்தியா தாக்கப்பட்ட பின்னர், விஜய நகர மன்னர்கள் தென்னிந்தியாவைக் காத்து ஆண்டனர்.
அக்காலத்தில் தஞ்சையிலிருந்து 1567ல் ஆட்சி செய்த அச்சுத்தப்ப நாய்க்க மன்னர் காலத்தில் ஊர்ப்பெயர் சடங்கண்பாடி என்றிருந்த போதிலும், சுவாமி பெயர் மாசிலாமணீஸ்வரர் என்று மாறியுள்ளது.
ஆங்கிலேயர்களால் ஷடங்கன் பாடி - சடங்கன்பாடி என்ற பெயர்களை சரியாக உச்சரிக்க வராமற் போகவே, தரங்கம்பாடி என்றானது.
(தரங்கம் - அலை. அலைகள் சூழ்ந்த நகரம் - தரங்கம்பாடி).
கோயிலின் முன் மண்டபத்திற்கு சுமார் இருபத்தைந்து அடியில் கொடிமரம் இருந்திருக்க வேண்டும்.
கடலில் மீன் பிடிப்பவர்கள் கடலில் நூற்றம்பது அடிக்குள் சுவர்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
*கவனத்திற்கு:*
கடல் அலைகள் மோதுவதனால் கோயிலின் முற்பகுதி முழுவதும் அழிந்து விட்டது. கற்களெல்லாம் கடல் நீரில் வீழ்ந்து கிடக்கின்றன. இக்கற்களின் மீது ஏறிச் சென்று, கடல் நோக்கி வீற்றிருக்கும் பெருமானைத் தரிசிக்க வேண்டியிருக்கிறது.
மூலவரும், விநாயகரும் மட்டுமே கோயிலில் உள்ளனர்.
மூர்த்தங்கள் எல்லாம் அகிலாண்டேஸ்வரி, பாலசுப்பிரமணியர், சண்டேசுவரர், துர்க்கை, மகாலட்சுமி, நவக் கிரகங்கள் - கோயிலுக்குப்பக்கத்தில் ஓரிடத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுப் பூசைகள் நடைபெற்று வருகின்றன.
கோயில் முற்பகுதி முழுவதும் கடல் அலைகள் மோதி அழிந்து போயிருக்க, பிற்பகுதி ஓரளவு காப்பாற்றப்பட்டுள்ளது.
1954ல் அம்பாள் விமானத்தை இடம் மாற்றி, சுவாமிக்குப் பக்கத்தில் தனியே கட்டி, காப்பாற்றியுள்ளனர்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வைப்புத் தலப் பாடல்களில் கூறப்பட்டுள்ள ஏமகூடம் , பேராவூர், எச்சில் இளமர், ஏமநல்லூர், இறையான்சேரி, ஆறை, கச்சிப்பலதளி, பேராவூர், நல்லாற்றூர், சேற்றூர், ஊற்றத்தூர், துவையூர், தோழூர், துடையூர், பேரூர் ஆகியவையும் வைப்புத் தலங்களாகும்.
பாரூர் என்பதும் வைப்புத்தலத்தின் பெயர் என்பார் உளர்.
அளப்பூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்.
அண்ணாமலை அமர்ந்தார் ஆரூர் உள்ளார் அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில் உண்ணாழிகையார் உமையாளோடும் இமையோர் பெருமானார் ஒற்றியூரார் பெண்ணாகடத்துப் பெருந் தூங்கானை மாடத்தார் கூடத்தார் பேராவூரார் விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே மேவினாரே.
இமையோர் பெருமானார் உமையாளோடும் தேவர்கள் எல்லோரும் விரும்பித் துதிக்க அண்ணாமலை, ஆரூர், அளப்பூர், அந்தணர்கள் மிக்க வைகல், மாடக் கோயிலின் மூலத்தானம், ஒற்றியூர், பெண்ணாகடத்துத் தூங்கானை மாடம், ஏமகூடம், பேராவூர் இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்து அடைந்தார். -------------------------------------------------------
எச்சிலிளமர் ஏமநல்லூர் இலம்பையங்கோட்டூர் இறையான்சேரி அச்சிறுபாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறை கைச்சினம் கற்குடி கச்சூர் ஆலக் கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி கச்சிப்பலதளியும் ஏகம்பத்துங் கயிலாய நாதனையே காணலாமே.
எச்சில் இளமர், ஏமநல்லூர், இலம்பையங் கோட்டூர், இறையான்சேரி, அச்சிறுபாக்கம், அளப்பூர், அம்பர், ஆவடுதுறை, அழுந்தூர், ஆறை, கைச்சினம், கற்குடி, கச்சூர் ஆலக் கோயில், கரவீரம், காட்டுப்பள்ளி, கச்சிப்பலதளி, ஏகம்பம். இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம். -------------------------------------------------------
பிறையூரும் சடைமுடி எம்பெருமான் ஆரூர் பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும் நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும் நாலூரும் சேற்றூரும் நாரையூரும் உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும் அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும் துறையூரும் துவையூரும் தோழூர் தானுந் துடையூரும் தொழ இடர்கள் தொடரா வன்றே.
பிறை தவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர், பெரும்பற்றப்புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர் என்னுமிவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா. --------------------------------------------------------
ஆரூர் அத்தா ஐயாற்றறு அமுதே அளப்பூர் அம்மானே காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகாவூரானே பேரூர் உறைவாய்பட்டிப் பெருமான் பிறவா நெறியானே பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூர் அம்மானே.
ஆரூர், அளப்பூர், பேரூர், கருகாவூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனே, அமுதம் போல்பவனே, பிறவாத நெறியை உடையவனே, நீயே இந்நிலவுலகில் நிறைந்துள்ள பலராலும் பரவப்படுபவன்.
கடலின் சீற்றத்தால் இக்கோவில் மேலும் மேலும் பழுதடைவதைத் தடுக்கும் பொருட்டு இந்து சமய அறநிலையத் துறை கோயிலை ஒட்டியும், கடலுக்குள் ஐம்பது மீட்டர் நீளத்திற்கு கருங்கல்கள் கொட்டும் பணியை செய்துள்ளது.
கோயிலின் பின்புறம் பல சன்னதிகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
மேலும், பழைய சந்நிதியை சீரமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கல்வெட்டுகளில் இத்தலம் குலசேகரன்பட்டிணம், சடகம்பாடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கந்தசஷ்டி தாளில் திருவிடைக்கழி கோயிலில் இருந்து முருகப்பெருமான் இவ்வூருக்கு எழுந்தருளி சம்ஹாரம் செய்வார்.
திருவிடைக்கழி கோயிலின் அம்மன் இக்கோவிலில் விளங்குகிறார்.
இரண்டாம் குலசேகர பாண்டியனால் 1306 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோயில் இது.
கடலில் மறைந்திருந்த தாருகாசுரனை முருகப் பெருமானை வதம் செய்ய வந்தபோது, அவன் பல மாயங்களை முருகப் பெருமான் முன்பு நிகழ்த்தினான்.
இதனால் தயக்கமாகி நின்ற முருகனுக்கு, பார்வதி தேவி முருகன் முன் தோன்றி, முருகனின் தயக்கத்தைப் போக்கினாள்.
இதனால் இத்தலம் தயக்கம்பாடி ஆனது. பிறகு இத்தலவூர் மருவி, தரங்கம்பாடியானது.
இந்நிகழ்வைக் கொண்டு, இத்தலத்தில் உற்சவம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
நாளுக்கு நாள் கடலலையின் சீற்றத்தில் குடியரசு ஈடுகொடுக்க முடியாத திருக்கோயில் பெரும் சேதத்தை சந்தித்துக் கொண்டே இருக்கிறது.
தற்சமயம் இத்தலம் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கீழ் பராமரிப்பில் இருந்து வருகிறது.
இத்தலத்திற்கு அருகில் திருவிடைக்கழி தலக்கோயில் இருக்கிறது.
இந்த வைப்புத் தலம் அப்பர், சுந்தரரின் வைப்புத் தல பதிகங்களை கொண்டவை.
திருச்சிற்றம்பலம்.
Reposting it from Amirtha vahini Google Groups.