top of page

Masi Magam


19-2-2019 (இன்று) மாசி மகம்.மாசி மாதத்தில் பவுர்ணமியோடு கூடிய மகம் நட்சத்திரம் வரும் தினத்தை ‘மாசி மகம்’ என்று வழிபாடு செய்வார்கள். இந்த புண்ணிய நாளில், புண்ணிய தீர்த்தங்களில் வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

சிவபெருமான் எழுந்தருளும் தீர்த்தம்.

முன்காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவன் பல கொடிய செயல்களைச் செய்து, மக்களை துன்புறுத்தி வந்தான். அவனைக் கொல்வதற்கான வழியை, அவனது குலகுரு அறிந்திருந்தார். அதை வருண பகவானிடம் சொல்வதற்காக அவர், இருள் சூழ்ந்த நேரத்தில் சென்றார். இருட்டில் குருவை பகைவன் என்று நினைத்த வருணன், அவர் மீது தனது பாசத்தை வீசினான். இதில் அந்த குரு இறந்தார்.

அவன் செய்த பாவத்தினால் அங்கு ஒரு பெரிய ராட்சசன் தோன்றினான். அவன், வருணனை இரண்டு கால்கள் மற்றும் கைகள், கழுத்தோடு இணையும்படி கட்டி, கடலுக்குள் தூக்கி வீசினான். அந்த துன்பத்தில் இருந்து விடுபட முடியாமல் பலகாலமாக கடலுக்குள்ளேயே கிடந்தான் வருணன். இதையடுத்து தேவர்கள், முனிவர்கள் பலரும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தனர். வருணனை விடுவிக்கும்படி வேண்டுதல் வைத்தனர். இதையடுத்து சிவபெருமான், வருணன் ஆழ்ந்து கிடந்த சமுத்திரத்தில் எழுந்தருளி, அவனது கட்டுகளை விடுவித்து அருளினார். இது நிகழ்ந்ததாக சொல்லப்படுவது சிதம்பரம் திருத்தலம் ஆகும். துன்பத்தில் இருந்து மீண்ட வருணன், சிவபெருமானை வணங்கி “இறைவா! மாசி மகமாகிய இந்த தினத்தில், இத்தலத்தில் நீராடு பவர்களுடைய துன்பங்களை போக்கி அருள வேண்டும். அதுபோன்ற தருணங்களில் இறைவனாகிய நீங்கள், புண்ணிய நதிகளில் எழுந்தருளி மக்களை காத்தருள வேண்டும்” என்று வேண்டி வரம் பெற்றான். இந்த கதையை வியாக்ரபாத முனிவர், இரணியவர்மன் என்ற மன்னனுக்கு கூறினார். அவன் மாசி மகத்தன்று, சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு கொடியேற்றி வைத்தான். அப்போது தேவர்கள், முனிவர்கள் பலரும் அங்கு வந்து விழாவை கண்டுகளித்தனர். மேலும் “இறைவா! கனகசபைக்குத் தலைவரே. எங்களுக்கு அருள் செய்யுங்கள்” என்று வேண்டினர். பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமான் சமுத்திரத்திற்கு எழுந்தருளும் வழியை அலங்காரம் செய்தனர். சிவபெருமான் கடற் கரைக்கு எழுந்தருளினார். இதனை வருணன் கண்டு, எதிர் கொண்டு ஈசனை வணங்கினான். சிவபெருமான் வருணனின் துன்பத்தை நீக்கிய துறையிலேயே நீராடி, அடியார்களுக்கு அனுக்கிரகம் செய்து கனக சபைக்குள் புகுந்தார். சிதம்பரத்தில் உள்ள பத்து தீர்த்தங்களில் ‘பாசமறுத்த துறை’யும் ஒன்று. இது சிதம்பரத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மாசி மக நாளில் அந்த தீர்த்தத்தில், தீர்த்த உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். அம்பாள் அவதரித்த நாள் திருக்கயிலாயத்தில் சிவபெருமானுடன், பார்வதி தேவி இருந்தாள். அப்போது பார்வதி ஈசனிடம், “சுவாமி! உங்களுடைய உண்மை நிலையை எனக்கு உரைக்க வேண்டும்” என்றாள். அதற்கு இறைவன், “உயிர்கள் நலம் பெற ஐந்தொழில் செய்வேன். நீக்கமற எங்கும் நிறைந்திருப்பேன். எனக்கென ஒரு உருவமும் இல்லை. அருளே எனது உருவமாகும்” என்றார். அதற்கு பார்வதி, “அருள் தான் உங்களுடைய உருவம் என்றால், அந்த அருள் நான்தானே” என்று சற்று கர்வத்தோடு கேட்டாள். அப்போது இறைவனின் கண்ணசைவில் உலகத்தின் அசைவுகள் அனைத்தும் நின்றுபோனது. இதனால் பதறிப்போன பார்வதி, “இறைவா! உண்மையை உணர்ந்து கொண்டேன். உங்களுக்கு சில நொடி என்பது, உயிர்கள் பல யுகங்கள் ஆகும். எனவே இந்த அசைவற்ற நிலையை மாற்றுங்கள்” என்று வேண்டினாள். இதையடுத்து இறைவன் உலகை சமநிலைக்கு கொண்டு வந்தார். தான் செய்த பாவத்திற்காக பூமியில் பிறந்து சிவபூஜை செய்ய பார்வதி எண்ணினாள். அந்த நேரத்தில் தக்கனும் தனது மகளாக பார்வதி பிறக்க வேண்டும் என்று சிவனை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தான். அம்பிகை காளிந்தி நதியில், ஒரு தாமரைப் பூவில் வலம்புரி சங்கு வடிவமாக தோன்றினாள். மாசி மகத்தில் தக்கன், தன் மனைவி வேதவல்லியோடு அந்த நதியில் நீராட வந்தான். அப்போது அங்கிருந்த வலம்புரி சங்கை கையில் எடுத்தான். அது அழகிய பெண் குழந்தையாக வடிவம் கொண்டது. அன்னை அவதரித்த அந்த தினம் ‘மாசி மகம்’ ஆகும்.

Source : Dailythanthi

16 views0 comments

Recent Posts

See All

கத்ரா வைஷ்ணவதேவி தரிசனம்

Travelogue by Sri. Venkateswaran (Pattukottai) -இந்த கட்டுரை அமரர் சா.விஸ்வநாதஐயர் நினைத்து எழுதியது அவருக்கு சமர்பணம் - சாவி ஜம்மு காஷ்மீரில் ஜம்முவில் உள்ள கத்ரா என்ற ஊரில் உள்ளது வைஷ்ணவாதேவி ஆலயம்

bottom of page