சோழிய விளாகம் சாமுண்டீஸ்வரர் திருக்கோவில்
கயிலையங்கிரியின் இரு சிவகணங்களான புஷ்பதந்தனும் மாலியவானும் சிவபக்தியில் தாமே சிறந்தவர் என்ற விவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டு வந்தனர். சண்டை ஒருநாள் முற்றிப் போய் ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டனர். இந்த சாபத்தின் விளைவாக மால்யவான் சிலந்தியாகவும், புஷ்பதந்தன் யானையாகவும் பூமியில் பிறந்தனர். வனத்தில் இருந்த சிவலிங்கத்தை சிலந்தியான மால்யவான் மரத்திலிருந்து சருகுகள் விழாதபடி தன் வாய் நூலினால் பந்தலிட்டு பூஜித்து வந்தது. யானையும் தினம் தன் துதிக்கையில் நீர் கொணர்ந்து, சிலந்திக்கூட்டை சுத்தம் செய்தபின் பூஜித்து வந்தது.
இதனால் கோபமுற்ற சிலந்தி புஷ்பதந்தனாகிய யானையின் துதிக்கையில் புகுந்து தொந்தரவு கொடுத்தது. யானை தன் துதிக்கையை கீழே அறைந்து கொண்டு இறந்தது. அதனுடனே உள்ளிருந்த சிலந்தியும் இறந்தது. உடன் சிவபெருமான் தோன்றி இருவருக்கும் சாப விமோசனமளித்து, யானையாகிய புஷ்பதந்தன் பூர்வத்திலிருந்தபடி கயிலையை அடைந்தும், சிலந்தியாகிய மால்யவான் மறு பிறப்பு எடுத்து பல சிவாலயங்கள் கட்டியபின் கயிலையை வந்தடையலாம் என்று அருளினார்.
மால்யவான் சோழ நாட்டில் கோச்செங்கணான் என்ற அரசனாகப்பிறந்து தன் பூர்வ ஜென்ம நினைவினால் யானை புகமுடியாத மாடக்கோவில்கள் பல அமைத்தான். யானை ஏறமுடியாதவண்ணம் உயரமான படிக்கட்டுக்கள் வைத்து கோச்செங்கணானால் காவிரிக்கரையோரம் கட்டப்பட்ட இம்மாடக்கோவில்கள் 78 என்று தெரியவருகிறது. அதில் ஒன்றுதான் தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் மணல்மேடு சாலையில் பந்தநல்லூர் அருகிலுள்ள சோழிய விளாகம் என்ற அழகிய சிற்றூரில் அமைந்துள்ள திருக்கோயிலாகும்.
இக்கோவிலில் இறைவன் சாமுண்டீஸ்வரர் என்ற திருப்பெயருடனும், அன்னை ப்ரஹந்நாயகி என்ற திருப்பெயருடனும் அருள் பாலிக்கிறார்கள். இங்கு அர்த்தமண்டப நுழைவு வாயிலில் இடப்புறத்தில் இரட்டை விநாயகர் இருப்பது சிறப்பாகும்.
1996ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்ட இக்கோவிலில் கோஷ்டத்திலுள்ள மூர்த்தங்கள் மிகவும் செம்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. குடமுழுக்கு சமயத்தில், சுவரில் காணப்படும் மிக அழகான ஓவியங்கள், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவில் தற்போது முறையான பராமரிப்பின்றி, பல இடங்களில் சிதிலமடைந்து காணப்படுகிறது. மிகப்பழமை வாய்ந்த இக்கோவிலை பராமரிப்பது நம் அனைவரின் கடமையாகும். 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பது போல் இத்திருக்கோவிலகள் பக்தர்கள் வருகையால் சிறப்புறும் என்பது திண்ணம். சோழிய விளாகம் சாமுண்டீஸ்வரரும் அன்பாக தம்மைத்தேடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குவார். வைத்தீஸ்வரன் கோவில், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு வருபவர்கள் இக்கோவிலையும் அவர்கள் பயணத்திட்டத்தில் சேர்த்துக்கொண்டால் கோவில் மீண்டும் பொலிவுறும் என்பது உறுதி. கும்பகோணத்திலிருந்து 44B என்ற நகரப் பேருந்து சோழிய விளாகம் செல்கிறது. அர்ச்சகர் இல்லம் கோவிலுக்கு அண்மையிலேயே உள்ளது. இக்கோவிலின் தற்போதைய நிலையை இக்காணொளியில் காணலாம்.