top of page

இந்து சமய கலை,கலாச்சார விழா

இந்து சமய கலை,கலாச்சார விழா

ஓமந்தூர் ஸ்ரீராம் பள்ளியில் மாவட்ட அளவிலான இந்து சமய கலை,கலாச்சார விழா 5.6 .2019 அன்று காலை வெகு சிறப்பாகத் தொடங்கியது.

தொடக்கவிழாவின் முதல் அங்கமாக காலை 9 மணி அளவில் 108 கன்றுகளுடன் கூடிய பசுக்களுக்கு கோபூஜை வெகு விமரிசையாகச் செய்து வைக்கப்பட்டது.அப்போது ஸ்ரீ சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் ஆற்றிய உரையாவது.

ஓமந்தூர் ஸ்ரீராம் பள்ளியின் தாளாளர் திரு.முரளி ரெட்டியாரின் பெரு முயற்சியின் காரணமாக வ்யாஸ பாரத ,வேத ஆகம சில்ப கலாதி ஸதஸ் என்கிற இந்து சமய கலை,கலாச்சார மாவட்ட அளவிலான பெருவிழா கோபூஜையுடன் தொடங்கியது நல்லதொரு சகுனமாகும் .ஆவினத்தை அதாவது பசுக்களைக் காப்பாற்றுவது நமது பாரம்பரியமான கடமை.கோக்களின் வளர்ச்சி நம் நாட்டின் வளர்ச்சியாகும்.

அனைத்துத் தெய்வங்களும் வாசம் செய்யும் பசுக்களை வணங்கினால் வறட்சி நீங்கி,நீர்வளம் மிகுந்து,நிலவளம் குறைவுபடாது,வளமாக நமது நாடு விளங்கும். எவ்வாறு வீடுகளில்,கோவில்களில் ,"தீபம்" ஏற்றுவது அவசியமோ,அவ்வாறே கோபூஜை செய்வதும் அவசியமாகும்.

Image source:https://mahaperiyavaa.files.wordpress.com/2016/07/bala-periyava-gho-matha-2.jpg

கோபூஜை அனைத்து ஐஸ்வர்யங்களையும் அளிக்க வல்லது. யானையின் முன் பக்கமும் ,பசுவின் பின்புறமும் வழிபட்டு வணங்கி நமது செயல்களைத் தொடங்குவது நல்ல தொடக்கமாகும்.

இத்தகைய இந்து சமய கலை மற்றும் கலாச்சாரத்தை கிராமந்தோறும் மீண்டும் புனரமைத்திட வேண்டும்.

எப்படி வாகன ஓட்டுநர்களுக்கு லைசென்ஸ்,ரெனீவல் முக்கியமோ,எப்படி ஆலைகளில் பழுதான மெஷின்களுக்கு ரெனீவல் முக்கியமோ ,அதுபோல நம் பழமையான கலாச்சாரம் பழுதாகி உள்ளதால் மீண்டும் அதற்கு புத்துயிர் கொடுப்பது அவசியமாகிறது.

பழமை விழுதுகளுடன் கூடியதாக ஆக்க வேண்டும்.கல்வியின் அவசியத்தை உணர்ந்து பெற்றோர்கள் குழந்தைகளை உயர்கல்வி வரைப் படிக்க வைக்கிறார்கள்.கல்வியோடு பக்தியையும், ஆன்மீகத்தையும் இணைத்துப் பழக்க வழக்கங்களைக் குழந்தைகளுக்கு இளமைக்காலம் முதற்கொண்டே ஊட்டவேண்டும் . ஆண்களும், பெண்களும் எப்படி நமஸ்கரிக்க வேண்டும் என்பதையும்,அதாவது பெண்களுக்கான பஞ்சாங்க நமஸ்காரத்தையும், ஆண்களுக்கான அட்டாங்க நமஸ்காரத்தையும் நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.அதுபோல பெற்றோர், மூத்தோர்களை வணங்குவது உட்பட பக்தி மார்க்கத்தில் குழந்தைகளை வளர்த்தால், எளிமையாக, இனிமையானதாக ,தமக்கும் ,வீட்டிற்கும்,நாட்டிற்கும்,சமுதாயத்திற்கும் பயன்தரத் தக்க வகையில் வாழ்க்கை அமையும்.

நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட காந்திஜி போன்றோர் கூறிவந்த கிராமராஜ்யம் என்பது விவசாய மேம்பாடு.கால்நடை வளர்ச்சி,நடவு , கிராமியக் கலைகள்,கடவுள் வழிபாடு என்பனவற்றை உள்ளடக்கியதாகும்.

இன்றைய நிகழ்ச்சியானது பிள்ளையார் பூஜை ,கணேச பஞ்சரத்தினம் என்று ஆரம்பித்து மிகப் பெரிய அளவிலான கோ பூஜையுடன் தொடங்கியது.

ஏற்கனவே கோபூஜை நடந்த இதே இடத்தில் இன்று கோ பூஜை நல்ல நாளில் புதன்கிழமையில் அதாவது "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது "என்பர் .அத்தகைய புதன்கிழமையான இன்று கோ பூஜை தொடங்கப்படுகிறது.

கோ பூஜை ஒன்றும் புதிதல்ல;வேத காலத்தில் இருந்தே இருந்து வருகிறது . கோ சூக்தம் என்பது பசுமாட்டின் சிறப்புக்களை கூறுவதாகும் பாரம்பரியமாக இதனைச் சொல்லி காரியங்களைச் செய்து வந்திருக்கிறோம்.

திலீபன் என்ற ரகுவம்சத்தில் வந்த ஒரு அரசன் தம் குலகுருவான வசிஷ்டரின் ஆசிரமத்திற்குச் சென்று தனக்கு சந்தான பாக்கியம் வேண்டினார்.

வசிஷ்டரும் "திலீபனும் அவரது மனைவி சுதக்ஷிணை ஆகிய இருவரும் சேர்ந்து நந்தினி என்ற பசுமாட்டை 7 *3 நாட்கள் அதாவது இருபத்தோரு நாட்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் " என்று சொன்னார் .

வழிபாடு என்பது நாள்தோறும் ஏதோ அரைமணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ செய்யும் வழிபாடல்ல.நந்தினி என்ற அப்பசுவை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று அப்பசு நடந்தால் நடக்கவும்;நின்றால் நிற்கவும் ;அமர்ந்தால் அமர்ந்தும் அதனோடு இடைவிடாது இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று பணித்தார்.

प्रस्थितायाम् प्रतिष्ठेथा:

स्थितायाम् स्थितिमाचरे: |

निषण्णायाम् निषीदास्याम्

पीताम्भसि पिबेरप: ||

இமயமலைச்சாரலுக்குச் சென்று அரசனும் அவ்வாறே செய்து வந்தார். ஒருநாள் இந்த வழிபாட்டிற்கு ஒரு சோதனை ஏற்பட்டது.மேய்ந்து கொண்டிருந்த பசுவின் மீது சிங்கம் ஒன்று பாய வந்து கொண்டு இருந்தது அப்போது அரசனும் அதைத் தடுத்து நிறுத்த முற்பட்டபோது சிங்கம் பேசியதாவது :- "பார்வதி தேவியினால் எப்படி முருகப்பெருமான் போஷிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறாரோ,அதைப்போல இங்குள்ள தேவதாரு என்கிற மரத்தினைப் பாதுகாக்க என்னை இங்கு வைத்து இருக்கிறார்கள்.

उतिष्ठ वत्सेत्यमृतायमानं वचं निशम्योत्थितमुत्थित:सन्

गुरोरपीदम् धनमाहिताग्ने:नश्यत्पुरस्तादनुपेतणीयत् ||

அதற்கு இடையூறாக வந்த பசுவினைக் கொல்லப் போகிறேன் என்று கூறியது இதற்கு பதில் சொன்ன திலீபன் தன்னுடைய

"குருவின் ஆணைக்கு ஏற்ப,இந்தப் பசுவினை நாங்கள் இருவரும் பூஜை செய்து,பாதுகாத்து வருகிறோம்.இந்த ராஜ்யத்தில் உள்ள உயிரினங்களின் சொத்துக்களையும் பாதுகாப்பது அரசரின் கடமையாகும்.உன் தர்மப்படிப் பசுவைக் கொல்ல முற்படுவதால்,என் தர்மப்படி பசுவைக் காப்பாற்றவும்,குருவிற்காகவும் தன உயிரைத் தருகிறேன்" என்று திலீபன் தன உயிரைத் தியாகம் செய்ய முற்பட்டு உருக்கமாகக் கூறினான்.சிங்கமும் திலீபன் மீது பாயத் தயாராயிற்று .

தன்னைக் கொடுத்து குருவின் பசுவைக் காப்பாற்றத் துணிந்த அரசனுக்கு அசரீரியாக வானத்திலிருந்து,ஆதுரமான,அனுகூலமான குரல் கேட்டது.

சிங்கம் போன்ற மாயையை உருவாக்கி,அரசனைச் சோதனை செய்ததாகவும்,சோதனையில் அரசன் தேர்ச்சிப் பெற்றதாகவும்,காமதேனுவின் பெண்ணான நந்தினி என்ற பசுவின் பாலையருந்தி சந்தான பாக்கியம் பெற அசரீரி வாழ்த்தியது.

ஆனால் அரசரான திலீபன் அவசரம்காட்டாது,குருவிடமே சென்று நடந்த விவரங்களை எடுத்துச் சொல்லி,பசுவின் பாலை அருந்த குருவின் அனுமதி கேட்டார்.இதன்மூலம் ராஜாவான திலீபன் எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல்,தனது தருமத்திலிருந்து தவறாது குருவின் ஆணைகளுக்கு இணங்க அரசாட்சி செய்து வந்தார் என்பது தெளிவாகிறது.

ஆசைகள் பற்பல: ஆனால் கடமையும்,பொறுப்பும்,மரியாதையும் நம்நாட்டில் அரசாட்சி செய்வதற்கு முக்கியமாகக் கருதப்பட்டு வந்துள்ளது.மனதை ஒருநிலைப்படுத்தி,ஒருமுகப்படுத்தி ராஜாவும்,ராணியும் ஸ்ரீராமனைப்போலவே ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள்.

சூரியன் காலை முதல் மாலை வரை அனைத்து உயிரினங்களுக்கும் வெளிச்சமும்,உணவும் அளித்து மாலையில் மறைகிறது.காலை ,மாலை பசுவை மேய்ப்பதால் பூமி புனிதம் அடைகிறது.இவ்வாறு பசுமாடுகள் பூமியில் வலம் வந்து,அவற்றின் கோமியம் முதலியவற்றை அளிக்கும்போது , சூரிய ஒளியும் சேர்ந்து ஆரோக்கியமும்,ஐஸ்வரியமும் பெருகுகிறது.

கோ கிராசம் என்பதற்குப் பசுவைப் பராமரித்து உணவளித்தல்.Grass என்பது புல்லைக் குறிக்கும் என்பர். கிராமப் புறங்களில் மேய்ச்சல் புறம்போக்கு என்று நிலம் ஒதுக்கப்பட்டது.அதுபோலவே மாடுகட்டுவதற்குத் துளை உள்ள கற்களையும்,தினவு எடுத்தால் சொரிந்து கொள்ள கற்களை நட்டு ஏற்பாடு செய்திருப்பார்கள்.

அதுபோல நீர்நிலைகளில் கால்நடைகள், தண்ணீர் பருகுவதற்கு வசதியாக சார்ப்பு [Ramp] செய்யப்பட்டு இருக்கும்.அனைத்து உயிரினங்களுக்கும் ஆதரவாக காலந்தோறும் நமது தர்மம் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

கிராமங்கள் தோறும் தற்போது Mike,Bike,Internet போன்ற அணைத்து வசதிகளும் ஏற்பட்டுள்ளன.அதே அளவிற்கு கிராமங்கள் தோறும் பாரம்பரியமான கலை,கலாச்சாரத்துடன் கூடிய தர்மம் மேம்பட வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மேலும் மூதாதையர்கள் செய்த அறப்பணிகள் தொடரவும்,இவை போன்ற நிகழ்ச்சிகளின் மூலமாகப் பொதுமக்களின் சக்தி பெறவும்,அனைவரின் ஒத்துழைப்பும், அன்பளிப்பும், பங்களிப்பும் அவசியம் வேண்டும்.

தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

"தர்மத்தை நாம் பாதுகாத்தால் தர்மம் நம்மைப் பாதுகாக்கும் "

ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !!

132 views0 comments
bottom of page