top of page

தியாகராசர் வழிபட்ட பட்டாபிராமர்

ஐந்து நதிகள் பாயும் திருவையாறு, வயல் வளத்திலும், இசைப் பெருக்கிலும், ஆன்மிக நலத்திலும் செழித்துள்ள பூமி. இத் திருத்தலத்தில் தான் இசையுலகின் அவதார புருஷரான சற்குரு தியாகராச சுவாமி வாழ்ந்து, பொன்னி நதியின் வடகரையில் சமாதியடைந்துள்ளார்.

திருவாரூரில் பிறந்திருந்தாலும் முக்தி தலமான இங்கே தான், அவருக்கு ஆண்டு தோறும் இசைப் பெருவிழா தை மாதத்தில் நடைபெற்று வருகிறது. உலகெங்கும் உள்ள இசை விற்பன்னர்கள் திருவையாறு வந்து, தங்கள் குருவுக்கு சங்கீத காணிக்கையாக ‘பஞ்சரத்ன கீர்த்தனை’ பாடுவது கண்ணுக்கும் காதுக்கும் இனிமையான ஒன்றாகும்.

தியாகராசர் தினமும் வழிபட்டு பாடிய பட்டாபிராமர் கோவில், காவிரியின் தென்கரையில் மோகனாம்பாள்புரம் என்னும் புது அக்ரகாரத்தில் இருக்கிறது. பசுமையான இச்சிற்றூருக்கு திருவையாறு சாலையில் இருந்து ½ கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்லலாம். அல்லது வாகனங்கள் மூலம் செல்லலாம்.

இந்த ஆலயம் கிழக்கு பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. தோரண வாசலில் இருபுறமும் அம்ருத கலச ஹஸ்த கருடாழ்வாரும், சஞ்சீவ பர்வத ஹஸ்த ஆஞ்சநேயரும் சுதை வடிவில் நிற்கின்றனர். உள்ளே பலிபீடம், கொடிமரம், மூன்று நிலை ராஜகோபுரம் இருக்கின்றன. மகா மண்டபத்தில் மூலவரைப் பார்த்தபடி பெரிய திருவடி கருடனும், அருகே சிறிய திருவடி ஆஞ்சநேயரும் சேர்ந்தே இருக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் தென்திசை நோக்கி ஆழ்வார்களின் சன்னிதி இருக்கிறது. அதைக் கடந்தால், கருவறையில் மூலவர் வீற்றிருக்கும் தோற்றம், எந்த ஆலயத்திலும் காண முடியாத கண்கொள்ளாக் காட்சியாக பார்ப்போரைப் பரவசப்படுத்துகிறது.

பொதுவாக வில்லேந்தியபடி சீதா மற்றும் லட்சுமணன், அனுமனுடன் நின்ற கோலம் காட்டும் சக்கரவர்த்தி திருமகனான ராமபிரான், இங்கு வித்தியாசமான கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். பட்டாபிஷேக ராமபிரானாக இடதுகாலை மடித்து வைத்து, வலது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில், இடது கை மடித்து முழங்காலை அணைத்தபடி இருக்க, வலது கரம் ஞான முத்திரையுடன் விளங்குகிறது. எந்த ஆயுதமும் ஏந்தாத பட்டாபிஷேகக் காட்சியாக அது உள்ளது. மூலவரின் பீடத்தில் அமர்ந்துள்ள அனுமன் ஒரு கரத்தால் அரியணையைத் தாங்க, மறு கரத்தால் வாய் மீது கை வைத்தபடி பவ்வியமாக சேவை சாதிக்கிறார்.

புன்னகை பூக்கும் புருஷோத்தமனின் இடப்புறம் சீதாப்பிராட்டி அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறார். சுவாமிக்கு வலது புறம் இளைய பெருமாள் லட்சுமணன் தனது வில்லும், தமையனது வில்லுமாக இரு வில்களை ஏந்தியபடி நிற்கிறார். அவருக்குப் பக்கத்தில் பரதன் வெண் கொற்றக்குடையுடன் நிற்கிறார். சீதைக்குப் பக்கத்தில் சத்துருக்ணன் கவரி வீசி நிற்கும் கோலம் காட்டுகிறார். அருகே ராமதூதனான ஆஞ்சநேயர் மண்டியிட்டு அமர்ந்து, ஒரு கையால் வீணையைத் தடவியபடி மறுகரத்தில் ராமாயணச் சுவடி ஏந்தி காட்சி தருவது சிறப்பம்சம்.

வைணவக் கோவில்களில் சாளக்கிராமக் கற்கள் அல்லது மாலை இருக்கும். ஆனால் இத்திருக்கோவிலின் கருவறையில் உள்ள அனைத்து மூர்த்தங்களுமே சாளக்கிராம கற்களால் உருவாக்கப்பட்டவை என்பது சிறப்பினும் சிறப்பானதாகும். இங்கே உள்ள அனைத்து உற்சவர் மூர்த்தங்களுமே மூலவர்கள் போலவே வடிவமைக்கப்பட்டு, அதே பெயரிலேயே இருப்பது கூடுதல் சிறப்பு.

ஆலயம் வலம் வரும் போது தெற்கு பிரகாரத்தில் வேம்பும் வில்வமும் இணைந்து எழுந்துள்ள அதிசய மரம் இருக்கிறது. ஆலயத்தின் தலவிருட்சமான இந்த மரம், பக்தியும் பசுமையும் பரப்பி வருகிறது. தலவிருட்சத்தின் அருகே சக்கரத்தாழ்வாருக்கு சிறிய சன்னிதி உள்ளது. பதினாறு கரங்களில் பதினாறு ஆயுதங்கள் தாங்கி, இடதுகாலை தூக்கி வைத்து ஓடிவரும் பாவனையில் சுதர்சனரும், அவருக்கு பின்புறமாக யோக நரசிம்மரும் தம்மை அடிபணியும் அன்பருக்கு அச்சம் அகற்றி அருள்புரிகின்றனர்.

தினந்தோறும் இத்திருக்கோவில் வந்து சேவித்த தியாகராசர், ராமபிரானை நினைத்து ஏராளமான கீர்த்தனைகள் பாடியிருந்தாலும், 90 கோடி ராமநாமம் ஜெபித்தது பெருமைக்குரியது.

சங்கீத மூவரில் மற்றொருவரான முத்துசாமி தீட்சிதர், தியாகராசரின் அழைப்பின் பேரில் இத்தலம் வந்து ‘மாமவ பட்டாபிராமா’ என்ற மணிரங்கு ராக கீர்த்தனையை இசைத்துள்ளார்.

இந்த ஆலயத்தில் ராமநவமி 10 நாள் திருவிழா, வைகுண்ட ஏகாதசி விழாக்கள் இங்கே விசேஷம். இசை பயில்பவர்களும், இல்லறத்தில் இனிமை நிலவ விரும்புபவர்களும், நல்ல பதவி வேண்டுபவர்களும் இத்தலத்துப் பட்டாபிராமர் சன்னிதி முன் நின்று தரிசித்தால் எண்ணியது நிறைவேறும் என்பது திண்ணம்.

தியாகராசர் ஆராதனைக்கு வரும் சங்கீத வித்வான்கள், இந்த சன்னிதி வந்து சேவிக்காமல் செல்லமாட்டார்கள் என்று பெருமையுடன் கூறுகிறார்கள். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

- டாக்டர் ச.தமிழரசன்

Source- Daily Thanthi.

43 views0 comments
bottom of page