சென்னை பம்மலில் உள்ள, 'சுற்றுச்சூழல் குரு' என்று அழைக்கப்படும், Home Exnora அமைப்பின் தலைவரான, திரு இந்திரகுமார் அவர்கள் இல்லத்தில் நுழையும்போதே, வெளியில் அடிக்கும் வெயிலுக்கு தொடர்பில்லாத, குளிர்ந்த காற்றும், குருவிகளின் கீச்சொலியும், மலர்களின் நறுமணமும் நம்மை வரவேற்கின்றன.
அவர் பருகக் கொடுக்கும் நீர், இதுதான் தேவர்கள் அருந்திய அமிர்தமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
அவருடைய ஆலோசனையைக் கழிவு மேலாண்மை, நீர் மறு சுழற்சி போன்றவற்றில் கேட்கவும், அதை செயல்படுத்தும் விதத்தை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் குழு அவரது இல்லத்துக்கு வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள், குடியிருப்பாளர்கள் சங்கக் கூட்டங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்புக்களிலும் சென்று உரையாற்றுகிறார்.
கரிமக் கழிவுகளின் வளங்களை பயன்படுத்த ஆலோசனைகள் வழங்குகிறார்.
கரிமக் கழிவுகளின் வளங்களைப் பற்றிய அறியாமையால் நாம் இழக்கப்போகும் இயற்கை வளங்கள் ஈடு செய்யமுடியாதவை என்று எச்சரிக்கும் இவர் 'மாடிக்குப் பச்சைத் தொப்பி அணிவியுங்கள்' என்கிறார். 'பட்ட மரம் பறவைகளின் கூடு' என்றுரைக்கும் இவர் தன் வீட்டிற்கு அருகில் உள்ள, இடி விழுந்து பட்டுப்போன மரத்தில் பறவைகள் செய்த கிரகப்ரவேசத்தை அழகாக வருணிக்கிறார். அவருடன் செலவிடும் ஒவ்வொரு நொடியிலும் நம் சுற்றுச்சூழலப் பாதுகாக்க, பல தகவல்கள் அறிகிறோம். திரு இந்திர குமார் அளிக்கும் பல அரிய தகவல்கள் இக்காணொளியில் இதோ உங்களுக்காக!
இப்பதிவின் அடுத்த பகுதியில் அவரின் பசுமை இல்லத்தில் உலா வருவோம்.
Courtesy:Smt. Malathi Jayaraman,Kumbakonam.