top of page

Siyathamangai Temple

மேற்கு பார்த்த சிவலாயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர். அப்படி மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு அற்புத ஆலயம்தான், நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ள சீயாத்த மங்கை சிவன் ஆலயமாகும். இங்கு சிவனுக்கும் அன்னைக்கும் தனித்தனி சன்னிதி உள்ளது. சிவனுக்கு 5 அடுக்கு கோபுரமும், அன்னைக்கு இரண்டு அடுக்கு கோபுரமும் காணப்படுகிறது.

ஒரு காலத்தில், சரக்கொன்றை மலர்கள் சூழ்ந்த வனமாக இருந்தது சீயாத்தமங்கை. மலர்களின் நறுமணத்தை அறிந்து மகிழ்ச்சியுடன் இந்த தலத்துக்கு வந்தார் சிவபெருமான். அதன் பிறகு இங்கேயே தங்கியிருந்து அருளாசி வழங்க ஆரம்பித்தார். இன்றைக்கும் இவ்விடத்தில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரும், அவரின் மனைவி மங்கையர்கரசியாரும் அவ தரித்தது இந்த தலத்தில்தான். இந்த தம்பதிகள் அனுதினமும், ஸ்ரீ அயவந்தீஸ்வரரை கொன்றை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். ஒருநாள், சிவபூஜையின் போது, சிவலிங்கத் திருமேனியில் சிலந்தி ஒன்று ஊர்வதைக் கவனித்தார் மங்கையர்கரசியார்.

‘எம்பெருமான் உடலில் சிலந்தியா?. அதை அகற்ற வேண்டும்’ என்ற எண்ணம் கொண்டார். ஆனால் அதை எப்படி அகற்றுவது என அவருக்கு புரியவில்லை. எனவே வாயால் ஊதினார். சிலந்தி அங்கிருந்து செல்லவில்லை. எனவே மீண்டும் மீண்டும் பலங்கொண்ட படி முயற்சி செய்தார். அதைக் கண்ட திருநீலநக்கருக்கு கோபம் வந்தது.

“உன்னுடைய எச்சிலை இறைவன் மீது தெறிக்க விட்டுவிட்டாய். உன் எச்சில் இறைவன் மீது பட்டுவிட்டது. இந்த செயல் ஆகம விதிகளை மீறியது. நீ ஆண்டவனை மதிக்காமல் விதிகளை மீறிவிட்டாய்” என்று மனைவியைக் கண்டித்தார். மனைவியை கோபத்தோடு அங்கேயே விட்டு விட்டு, தான் மட்டும் இல்லம் திரும்பினார். மங்கையர்கரசியோ, இறைவனை பணிந்து அங்கேயே அமர்ந்து கொண்டார்.

“இறைவா நான் செய்தது தவறு என்றால், என்னை மன்னித்து விடு. என் அய்யன் என்னை விட்டு பிரியும்படி செய்து விடாதே” என சிவபெருமானே கதி என இருந்தார். அன்றிரவு திருநீலநக்கர் கனவில் தோன்றினார் இறைவன்.

“திருநீலநக்கரே உம் மனைவி என்னிடம் தாயுள்ளத்துடன், நடந்து கொண்டார். விடிந்ததும் ஆலயத்துக்கு வந்து என் திருமேனியை வந்து பாரும்” என்றார்.

விழித்தெழுந்தார் திருநீலநக்கர். விடிந்ததும், விடியாததுமாக விழுந்தடித்துக் கொண்டு ஆலயத்துக்கு ஓடினார். கரு வறையில் இருந்த சிவபெருமானின் லிங்கத்திருமேனியைக் கண்டார். அதிர்ந்தே போய் விட்டார். லிங்கத் திருமேனியில் மங்கையர்கரசியாரின் எச்சில்பட்ட இடத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் சிலந்திக் கடித்துப் புண்ணாகியிருந்தது. சீழ் வடிந்து கொண்டிருந்தது. இறைவனுக்கு நேர்ந்ததை எண்ணிக் கலங்கினார்.

“சிவபெருமானே என்னை மன்னித்து விடுங்கள்” என இறைவனை வணங்கி நின்றார். அதன் பின் சிவபெருமான் பழைய ரூபத்துக்கு வந்தார். இருவரும் அவர் முன்னே விழுந்து வணங்கினர். தன் மனைவி மங்கையர்கரசியை தனது அன்னையாக அந்த இறைவனே பரிந்துரைத்ததை எண்ணி உள்ளம் பூரித்தார். மங்கையர்கரசியாரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு சென்றார். இந்த சம்பவத்திற்கு பிறகு சிவபெருமான் மேலும் போற்றி வணங்கப்பட்டார்.

இத்திருத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் வந்தார். வீதி தோறும் தோரணங்கள் கட்டி, கோலமிட்டு, திருநீலநக்கரும், மங்கையர்கரசியாரும் அவரை அன்புடன் மலர்தூவி வரவேற்றனர். தங்களது வீட்டிலேயே ஞானசம்பந்தரைத் தங்க வைத்து வணங்கினர்.

திருஞானசம்பந்தர் இங்கிருக்கும் போது வெளுத்த வானமும், சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்த வெயிலும் திடீரென மறைந்து, மேகங்கள் கறுக்கத் தொடங்கின. லேசாக மழை பெய்து, சட்டென்று மழை நின்று, வெளுக்கத் தொடங்கி விடுகிறது. இப்படி ஆகாயத்தால் அடிக்கடி அதிசயம் நடந்து கொண்டிருக்கும் சீயாத்தமங்கை தலத்தை பார்த்த அவர், ‘மேகம் உறிஞ்சும் பெருஞ்சாத்த மங்கை’ எனப்பாடினார். இத் தலத்து சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

கோவிலுக்கு கிழக்கே சூரிய தீர்த்தமும், மேற்கே சந்திர தீர்த்தமும் உள்ளது. இந்த குளத்தில் குளித்து அருகில் உள்ள அரச மரத்தினை சுற்றி வந்தால் திருமண தடை நீங்குகிறது. இந்த ஆலயம் ருத்ர வியாமளா தந்தரம் ஆகமத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் திருநீலநக்க நாயனார், மங்கையர் கரசி ஆகியோர் உள்ளனர். மறுபுறம் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் உள்ளனர். மூலஸ்தானத்துக்கு செல்லும் முன்பு துவார பாலகரையும் விநாயகர், தண்டாயுத பாணியையும் தரிசிக்கலாம். அர்த்தநாரீஸ்வரர், துர்க்கையம்மன், பிட்சாடனர், பிரம்மன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன கணபதி, கவுரி, அகத்தியர், மகாவிஷ்ணு, அனுமன் ஆகியோரது திருமேனிகளும் உள்ளன.

தனியாக இருக்கும் அன்னை சன்னிதிக்குள் நுழைந்தால், அங்கு விநாயகர், முருகன், நந்தி, பைரவர், சண்டீகேஸ்வரி, துவாரக பாலகிகள் உள்ளனர்.

வைகாசி மூல நட்சத்திர நன்னாளில், திருநீலநக்க நாயனாருக்கு குருபூஜை மிக விமரிசையாக நடக்கிறது. இறைவனின் திருமேனியில் சிலந்தி ஊர்ந்ததும் மூல நட்சத்திர நன்னாளில்தான். ஆகவே, மூல நட்சத்திரக்காரர்கள் வணங்கி நலம்பெற வேண்டிய திருத்தலம் இதுவாகும். ஆவணி மாத மூல நட்சத்திர நாளில், இருமலர்கண்ணியம்மை சமேத அயவந்தீஸ்வரருக்கு நடைபெறும் திருமண வைபவத்தை தரிசித்து, அந்த நாளில் நடைபெறும் ருத்ர வியாமளா தந்திர பூஜையில் பங்கேற்றால் திருமணத் தடை நீங்கும்.

கோவிலில் தினமும் 4 கால பூஜை நடைபெறுகிறது. குழந்தை பாக்கியம், கல்வி, திருமணம் வேண்டுவோர், 5 பவுர்ணமிகளில் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கிறது. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

நாகப்பட்டினம்- கும்பகோணம் சாலையில், திருபுகலூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சீயாத்தமங்கை. நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் இந்த ஆலயத்தை அடையலாம்.

பயணிகளுக்கு வழிகாட்டிய அம்மன்

இந்தத் தலத்தில் ஆலயம் மிகப் பிரமாண்டமாக உருவாக காரணம், இங்கு அருள்பாலிக்கும் அம்பிகை தான். அதற்கும் ஒரு சிறப்பான வரலாறு உண்டு.

செட்டிநாடு எனப்படும் காரைக்குடியில் இருந்து, தொழில் நிமித்தமாக நாகப்பட்டினம் நோக்கி ஒரு கூட்டத்தினர் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது மெல்ல இருள் படர்வதும், வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக இருந்தது. இதனால் அந்தப் பயணிகள் வழி தெரியாமல் அவதிப்பட்டனர். அந்த வேளையில் அங்கு சிறுமி ஒருத்தி வந்தாள். பயணிகள் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவரின் கையைப்பிடித்தாள்.

“என்னுடன் வாருங்கள். நீங்கள் செல்லும் இடத்துக்கு வழி காட்டுகிறேன்” என்று அழைத்துச் சென்றாள். அவளுடைய கண்களில் மின்னிய பிரகாசத்தைக் கண்டு சிலிர்த்தனர் பயணிகள்.

‘யார் இந்த சிறுமி. நம்மை எங்கே கூட்டிச்செல்கிறாள்’ என்று நினைத்தாலும், அந்த சிறுமி நமக்கு உதவத்தான் வந்திருக் கிறாள் என்பதை உணர்ந்தனர். மொத்தக் கூட்டமும் அவளைப் பின் தொடர்ந்தது. சற்று தூரத்தில் அமைந்திருந்த ஆலயத்தை அந்த கூட்டத்தினர் நெருங்கினர். அதன் பின் பெரியவர் கையை விடுவித்துக் கொண்ட அந்தச் சிறுமி சட்டென மறைந்து போனாள். அனைவரும் அதிர்ந்தனர். சிறுமியாக வந்தது, அந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் அம்பாளான இருமலர்க்கண்ணி அம்மையே என்பதை அறிந்து வியந்தனர். இயல்பாகவே கோவில் திருப்பணிகளில் ஆர்வம் கொண்ட அந்த அன்பர்கள், அம்பிகை வழி காட்டிய கோவிலுக்கும் திருப்பணிகள் செய்து முடித்து பிரமாண்டமான ஆலயமாக எழுப்பினர்.

அம்பிகை இருமலர்கண்ணியம்மைக்கு, உபயபுஷ்ப விலோசினி என்றொரு திருநாமமும் உண்டு. சிவசொரூபமாக ருத்ராட்சம், சிரசில் கங்கை மற்றும் நெற்றிக்கண்ணுடன் சிவபாகத்தைக் கொண்டவளாக காட்சி தரும் இந்த அம்பிகையின் தரிசனம் அபூர்வமானது. அம்பாள், அக்னி வடிவமாகத் திகழ்கிறாள். எனவே, அவளைக் குளிர்விக்கும் வகையில், பவுர்ணமி தினங்களில் அபிஷேகங்கள் செய்வித்துப் பிரார்த்தித்தால், உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், பவுர்ணமியில், இங்கேயுள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி, அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால், விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும்.

Source: Dailythanthi

32 views0 comments

Recent Posts

See All

கத்ரா வைஷ்ணவதேவி தரிசனம்

Travelogue by Sri. Venkateswaran (Pattukottai) -இந்த கட்டுரை அமரர் சா.விஸ்வநாதஐயர் நினைத்து எழுதியது அவருக்கு சமர்பணம் - சாவி ஜம்மு காஷ்மீரில் ஜம்முவில் உள்ள கத்ரா என்ற ஊரில் உள்ளது வைஷ்ணவாதேவி ஆலயம்

bottom of page