ஆசை என்பது அனைவருக்கும் வருவதுதானே. உமாதேவிக்கு கயிலாயத்தில் பொழுது போகவில்லை. பந்து விளையாட ஆசைப்பட்டாள். அவள் தன் ஆசையை சிவபெருமானிடம் சொல்ல. அவர் நான்கு வேதங்களையும் ஒரு பந்தாக்கி உமாதேவியிடம் கொடுத்தார்.தன் தோழிகள் லட்சுமி, சரஸ்வதியுடன் பந்து விளையாடத் தொடங்கினாள், பார்வதி. நேரம் போனதே தெரியவில்லை.
அஸ்தமான நேரம் வந்தும் ‘அம்மையின் விளையாட்டிற்கு இடையூறு வந்து விடுமே’ என்றெண்ணிய சூரியன் மறையாது ஸ்தம்பித்து நின்றான்.
நிலைமையை உணர்ந்த சிவபெருமான் தேவி பந்தாடும் இடத்திற்கு வந்தார். அவர் வந்ததை கூட கவனிக்காமல் தேவி தன் தோழிகளுடன் பந்தாடிக் கொண்டிருந்தாள்.
சிவபெருமானுக்கு கோபம் ஏற்பட்டது. பந்தை எட்டி உதைத்தார். அது அந்தரத்தில் நின்றது. பார்வதியை பூலோகத்தில் பசுவாகப் பிறக்கக் கடவது என சபித்தார்.
சாபம் பெற்ற பார்வதி, பூலோகம் வந்து பசுவாக அவதரித்தாள். அங்குள்ள கொன்றைக் காட்டில் சரக்கொன்றை மர நிழலில் சுயம்புலிங்கமாக இருந்த புற்றின் மீது பாலைச் சொரிந்து வழிபட்டாள். ஒரு நாள் பசுவின் கால் குளம்பு புற்றின் மீதுபட பசுவாக இருந்த தேவி சாப விமோசனம் பெற்று சுய உருவம் அடைந்தாள்.
சிவபெருமான் உமாதேவியை தேவர்கள் புடை சூழ மணந்து கொண்டு பசுபதீஸ்வராய் காட்சி தந்தார்.
இந்தச் சம்பவம் நடந்த தலம் ‘பந்தநல்லூர்’ என தற்போது அழைக்கப்படும் ‘பந்தனை நல்லூர்’ ஆகும்.
இறைவனின் திருமணத்தைக் காணவேண்டும் என்று புறப்பட்ட இந்திரன், அவசரத்தில் ஆன்மார்ந்த மூர்த்தியை எடுத்துவர மறந்துவிட்டான். எனவே பந்தநல்லூருக்கு மேற்கே உள்ள கீழக்காட்டூர் என்ற பெயர் கொண்ட கருப்பஞ்சோலைக்கு சென்று தனது வஜ்ராயுதத்தை நட்டு அதில் சுவாமியை ஆவாஹனம் செய்து பூஜித்தான். அவனது பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் வெளிப்பட்டு அருளாசி வழங்கினார். இந்திரனின் வேண்டுகோளின்படி, எப்போதும் வஜ்ராயுதத்தில் எழுந்தருளிப்பதாக உறுதி தந்தார்.
அப்போது அருகே இருந்த கரும்பு ஒன்று முற்றி முதிர்ந்து அதன் சாறு தரையில் வடிந்தது. அந்தக் கரும்பு சாற்றில் இருந்து உமாதேவி தோன்றி இந்திரனுக்கு அருள்பாலித்தாள்.
இந்த சம்பவம் நடந்த இடம் தஞ்சை மாவட்டம் கீழக்காட்டூர். அன்று முதல் இத்தலத்து இறைவன் ‘வஜ்ரதம்பேஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். இறைவனின் மற்றொரு பெயர் ‘வைரநாதர்.’ இறைவி ‘இட்சுரநாயகி’ என அழைக்கப்படுகிறாள். இறைவியின் இன்னொரு பெயர் ‘கரும்பாயி.’
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நான்கு புறமும் திருமதில் சூழ கீழ்புறத்திலும் தென்புறத்திலும் வாசல் கதவுகள் உள்ளன. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் பலிபீடமும் நந்திதேவரை அடுத்து முன் மண்டபத்தில் இடதுபுறம் நால்வர் திருமேனிகள் உள்ளன. அடுத்து மகா மண்டபம் உள்ளது. மண்டபத்தின் வாசலில் விநாயகரும், பிரம்மாவும் அருள்பாலிக்க, அம்மன் இட்சுர நாயகி தென்புறம் நோக்கி அருள்பாலிக்கிறாள்.
தேவக்கோட்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தியும், வடக்கே துர்க்கை திருமேனிகளும் உள்ளன. உட்பிரகாரத்தில் கிழக்கே விநாயகர், சுப்ரமணியர், கஜலட்சுமி சன்னிதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். கோவிலின் தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் மண்ணியாறு.
இங்கு தினசரி நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன். விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, திருவாதிரை நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
தங்களது திருமணத்தைக் காணவந்த இந்திரனுக்கு அருள்புரிந்த இத்தலத்து இறைவனும் இறைவியும் தங்களை நாடி வந்து துதிப்போரின் திருமணத்தையும் அவர்தம் மக்களின் திருமணத்தையும் குறையின்றி நடத்தி வைக்கிறார்கள் என அனைவரும் நம்புகின்றனர்.
ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
தஞ்சை மாவட்டம் திருப்பணந்தாள் - வைத்தீஸ்வரன் கோவில் பேருந்து தடத்தில் திருப்பனந்தாளில் இருந்து 5 கி.மீ தொலைவில் கீழக்காட்டூர் உள்ளது.
Source: Daily Thanthi.