top of page

வேத பாஷ்ய ரத்னம் ப்ரஹ்மஶ்ரீ வேங்கடராம கனபாடிகள்

(ஶ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதிகளின் உத்தரவின்படி பலவேறு பக்தர்களின் உதவியுடன் தொகுக்கப்பட்டது)

கடந்த 2020 ஜூலை 10ம் தேதி சுமார் மாலை 6 மணிக்கு வேத பாஷ்ய ரத்னம் ப்ரஹ்மஶ்ரீ வேங்கடராம கனபாடிகள் சிவபதம் அடைந்தார். அவர் உருவாக்கிய வேத ஶிஷ்ய பரம்பரை நூற்றுக்கணக்கானவர்களை கொண்டது. ஆகவே அவரது மறைவு வேத ஸம்ரக்ஷணத்திற்கு ஏற்பட்ட ஒரு பெரிய இழப்பு என்பதில் ஐயமில்லை.

ப்ரஹ்மஶ்ரீ கனபாடிகள் நமது ஶ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடாதிபதிகளான இன்றைய ஶ்ரீ மஹாஸந்நிதானங்கள் ஶ்ரீமத் ஶங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீபாதர்கள் வரையிலான மூன்று குருமார்களின் பரிபூர்ண அனுக்ரஹத்திற்கும் பாத்ரமானவர்.

திருநெல்வேலி மாவட்டம் தளபதிசமுத்ரத்தைச் சேர்ந்த ஶ்ரீமான் ரங்கநாத ஐயர் ஶ்ரீமதி மீனாக்ஷி இவர்களுக்கு மகனாக 1946ல் பிறந்தார் ஶ்ரீ கனபாடிகள். ரங்கநாத ஐயரவர்கள் நமது ஶ்ரீமடத்தில் சந்த்ரமௌளீஶ்வர கைங்கர்யமும் ஶ்ரீ மஹாபெரியவர்களுக்கு பிக்ஷை கைங்கர்யமும் செய்து வந்தவர்.

ஒருமுறை அவருடன் ஶ்ரீ கனபாடிகள் தமது பாலியத்தில் 1960ம் ௵ திருச்சிராப்பள்ளி முகாமில் ஶ்ரீ பெரியவர்களை தரிசனம் செய்தார். அப்பொழுது ஶ்ரீ பெரியவர்கள் பிறப்பித்த ஆஜ்ஞையின்படி தமது ஸ்வஶாகையான க்ருஷ்ண யஜுர்வேதத்தை அத்யயனம் செய்வதற்காக நமது ஶ்ரீமடத்தின் திருவிடைமருதூர் பாடஶாலைக்கு அனுப்பப்பட்டார்.

இதற்கு முன்பு திருநெல்வேலி ஜில்லா தரிசனங்கோப்பு என்ற ஊரில் சில வேத பாகங்களை அத்யயனம் செய்திருந்தார். மீதமுள்ள வேத பாகங்களை திருவிடைமருதூரில் ப்ரஹ்மஶ்ரீ ஶ்ரீநிவாஸ ஶாஸ்த்ரிகள் அவர்களிடம் பூர்த்தி செய்தார். பிறகு காஞ்சீபுரத்தில் வேத லக்ஷணங்களுக்காக ஶ்ரீ பெரியவர்களால் துவக்கப்பட்டிருந்த பாடஶாலையில் ப்ரஹ்மஶ்ரீ ராமஸ்வாமி ஶர்மா அவர்களிடம் க்ரமம், ஜடை, கனம், லக்ஷணம் ஆகியவற்றைக் கற்றார்.

ப்ரஹ்மஶ்ரீ ராமஸ்வாமி ஶர்மா அவர்கள் தேனி மாவட்டம் மேல்மங்கலத்தை சேர்ந்தவர். அவருக்கே தமது வித்யையை பிறருக்கு அளிப்பதற்கான ஸௌகரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தது ஶ்ரீ மஹாபெரியவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஶ்ரீ புதுப்பெரியவர்கள் ஆஶ்ரமமான புதிதில் அவருடன் தர்மஶாஸ்த்ர சிந்தனம் செய்வதற்கு ஶ்ரீ மஹாபெரியவர்களால் நியமிக்கப்பட்டு ஶ்ரீ புதுப்பெரியவர்களுடன் கூட இருந்தவர் இவர்.

அத்தகையவரின் அனுக்ரஹத்துடன் அவரது சிஷ்யரான ப்ரஹ்மஶ்ரீ வேங்கடராம கனபாடிகள் நமது ஶ்ரீமடத்தின் வேத ரக்ஷண நிதி மூலம் நடத்தப்பட்ட வேத பரீக்ஷைகள், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வேத பரீக்ஷைகள், காளஹஸ்தியில் நடந்த வேத ஸதஸ் ஆகியவிடங்களில் க்ரமாந்தம் கனாந்தம் ஆகிய பரீக்ஷைகளில் முதன்மையுடன் தேர்ச்சி பெற்றார்.

பிறகு 1970ல் ஶ்ரீ பெரியவர்களால் வேத பாஷ்ய அத்யயனம் செய்வதற்காக சிகந்தராபாதிற்கு அனுப்பப்பட்டார். அங்கு ஸந்நிதானம் ப்ரஹ்மஶ்ரீ லக்ஷ்மீநாராயண மூர்த்தி அவதானிகள், டோங்க்ரே ப்ரஹ்மஶ்ரீ வீரேஶ்வர ஶாஸ்த்ரிகள் இவர்களிடம் வேத பாஷ்யம், மீமாம்ஸை மற்றும் வேதாந்தம் கற்றார்.

பிறகு ஶ்ரீ கனபாடிகள் தமது பத்னி ஶ்ரீமதி ராதாவுடன் 1980களில் தனது வீட்டிலேயே ஶ்ரீ ஶங்கர குருகுலம் என்ற பெயருடன் 3 வித்யார்த்திகளை வைத்துக்கொண்டு உணவிட்டு போஷித்து வேத வித்யையை கற்பிக்கத்தொடங்கினார். இது படிப்படியாக விருத்தியடைந்து அங்கே 20 வித்யார்த்திகள் வரை அத்யயனம் செய்தார்கள்.

இந்த சமயத்தில் ஶ்ரீ மஹாபெரியவர்கள் ஏற்படுத்திய வேத ரக்ஷண நிதி அறக்கட்டளையின் நிர்வாஹகரான ஶ்ரீ அண்ணாதுரை ஐயங்காருடன் சென்று அநேக பாடசாலைகளுக்கு வார்ஷிக பரீக்ஷை நடத்தியுள்ளார். பிற்காலத்தில் ஶ்ரீமடத்தின் வேத பாஷ்ய பரீக்ஷைகளிலும் பரீக்ஷாதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

முதலில் வீட்டில் நடந்து வந்த வேத ஸம்ரக்ஷணத்தை மேலும் வளர்க்க 1990களில் புதிய இடத்தில் வேதபவனம் என்ற பாடசாலை கட்டிடத்தை நிர்மாணித்தார். இதன்மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்து படிக்கக்கூடிய வசதிகளை அமைத்தார். முன்பு தொடங்கப்பட்ட க்ருஷ்ண யஜுர்வேதத்துடன் இங்கே ருக்வேதமும் ஸாமவேதமும் கூட சேர்க்கப்பட்டன.

1998ல் ஶ்ரீ புதுப்பெரியவர்கள் கைலாஸ யாத்ரை செய்து அங்கு ஶ்ரீ பகவத்பாதாள் விக்ரஹத்தை ப்ரதிஷ்டை செய்து வ்யாஸ பூர்ணிமையன்று வ்யாஸ பூஜையையும் செய்து உடனே திரும்பி வந்து ஹைதராபாத்தில் உள்ள ஸ்கந்தகிரியில் நமது ஶ்ரீமடத்தில் சாதுர்மாஸ்ய ஸங்கல்பம் செய்தார்கள். அச்சமயம் ஶ்ரீ கனபாடிகள் ஶ்ரீ பெரியவர்களிடம் ஒரு குறிப்பிட்ட ப்ரார்த்தனையுடன் வந்தார்.

பாடசாலையை ஒட்டி உள்ள இடத்தை பாடசாலையை விரிவாக்கம் செய்வதற்காக வாங்க முயற்சிப்பதாகவும் அதற்கு சில இடையூறுகள் ஏற்பட்டு வருவதாகவும் அவை நீங்க பெரியவர்களின் அனுக்ரஹம் வேண்டும் என்றும் ப்ரார்த்தித்தார். ஶ்ரீ பெரியவர்கள் சிரித்துக்கொண்டே “கவலைப்படாதே. அது வேதத்திற்கான இடம், கிடைத்துவிடும். அங்கே வந்து சந்த்ரமௌளீச்வர பூஜை செய்வேன்” என்றார்கள்.

அதன்படியே விரைவிலேயே அந்த இடம் எளிதில் கிடைத்து அடுத்த ஓரிரு வருடங்களில் கட்டிட வேலையும் நடந்தேறி ஶ்ரீ பெரியவர்கள் அங்கு வந்து சந்த்ரமௌளீச்வர பூஜை செய்தார்கள். இவ்விடம் தற்சமயம் வைதிக நிகழ்ச்சிகள், பாராயணங்கள் மற்றும் ஸதஸ்ஸுகள் நடக்கும் ஸபா மண்டபமாக விளங்குகிறது.

இவ்வாறு பலவிதத்திலும் ஶ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதிகளின் அனுக்ரஹத்திற்கு பாத்ரமான ஶ்ரீ கனபாடிகள், ஆசார்ய ஸ்வாமிகளின் அபிப்ராயப்படி பலவிடங்களில் தார்மிக காரியங்களை, வேத பாராயணங்களை நடத்திக்கொடுத்திருக்கிறார்.

அஸ்ஸாம் மாநில குவஹாத்தியில் பூர்வ திருப்பதி பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் முதல் அதன் ஸம்வத்ஸராபிஷேகங்களுக்கும் ப்ரஹ்மோத்ஸவங்களுக்கும் பொறுப்பேற்று தாமே முன்னின்று நடத்தி கொடுத்து வந்தார். ஸிக்கிம் மாநில காந்தோக் நகரத்தில் பஞ்சாயதன கோவில் கும்பாபிஷேகத்தையும் நடத்தி கொடுத்தார். இன்னும் அண்மையில் 2019ல் பரளி வைத்யநாத க்ஷேத்ர அதிருத்ரம் உள்பட பலவிடங்களிலும் இவ்வாறு நடத்திக்கொடுத்தார்.

மேலும் ஶ்ரீ கனபாடிகள் வருடாவருடம் ஶ்ரீமடத்திற்கு வந்து பிக்ஷாவந்தனம் செய்துவந்தார். பிறகு 2010 அளவில் தொடங்கப்பட்ட வைதிகாள் பிக்ஷாவந்தன ஸமிதியின் அத்யக்ஷராகவும் இருந்தார். இதன் மூலம் அமைக்கப்பட்ட நித்ய பிக்ஷாவந்தன கைங்கர்யத்திற்கு முதல் வருடம் முழுவதும் பொறுப்பு எடுத்து நடத்துவித்தார்.

தமது வேத பவனத்தில் வருடந்தோறும் ஶ்ரீ பகவத்பாதாள் ஜயந்திக்கு மஹாருத்ரம் மற்றும் ஶதசண்டி, ஶ்ரீ மஹாபெரியவாள் ஜயந்திக்கு ஶாஸ்த்ர ஸதஸ், ஶ்ரீ புதுப்பெரியவாள் ஜயந்தி மற்றும் ஶ்ரீ பெரியவாள் ஜயந்திக்கு ஆவஹந்தீ முதலிய ஹோமங்கள் ஆகிய நிகழ்ச்சிகளையும் ஶ்ரீ மஹாபெரியவாள் மற்றும் ஶ்ரீ புதுப்பெரியவாள் ஆராதனை நிகழ்ச்சிகளையும் விடாமல் நடத்தி வந்தார்.

ஶ்ரீ கனபாடிகள் தமது குமாரர்களான ஶ்ரீராமன், கண்ணன் ஆகியோர் இருவரையும் தமது பாதையிலேயே செலுத்தி ஸலக்ஷண கனபாடிகளாக ஆக்கினார். மேலும் தற்சமயம் அவர்களும் தந்தையைப் போல் வேத ஸம்ரக்ஷண கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஶ்ரீராம கனபாடிகளின் இரு குமாரர்கள் மற்றும் கண்ணன் கனபாடிகளின் குமாரன் ஆகிய மூன்று குழந்தைகளும் தமது பிதாமஹர் ஸ்தாபித்த வேத பவனத்திலேயே வேத அத்யயனம் செய்து வருகிறார்கள்.

2010ல் அகில இந்திய அளவில் கட்டாயக் கல்விச் சட்டம் என்பது வந்து அனைத்து சிறார்களுக்கும் லௌகிக கல்வியானது நிர்பந்தப்படுத்தப்பட்டதால் பாரம்பரிய வேத கல்விக்கு இடையூறு வரக்கூடிய தருணம் ஏற்பட்டது. அச்சமயம் ஶ்ரீ பெரியவர்கள் ஶ்ரீ கனபாடிகளின் தலைமையில் பாரதத்தின் பலவேறு ஸநாதன தர்ம ஸ்தாபனங்களின் ப்ரதிநிதிகளுடன் ஒரு குழுவை ஏற்படுத்தினார்கள். அரசாங்கத்தை முறைப்படி அணுகும்படி அனுக்ரஹித்தார்கள். அதன்படி இளம் சிறார்களுக்கு வேதக்கல்வி பெற இடையூறு ஏற்படாத வண்ணம் ஶ்ரீ கனபாடிகள் மூலம் ஆவன செய்தார்கள்.

2014ல் ஶ்ரீ கனபாடிகள் தமது வித்யாகுருவான ப்ரஹ்மஶ்ரீ ராமஸ்வாமி ஶர்மா அவர்களது நூற்றாண்டின்போது காஞ்சீபுரத்தில் ஶ்ரீ மஹாபெரியவர்களின் அதிஷ்டான வளாகத்தில் ஶ்ரீ புதுப்பெரியவர்களின் ஶ்ரீ பெரியவர்களின் முன்னிலையில் தலைமையேற்று அதற்கான முதல் வேத பாராயண நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தார். பிறகு மாதாமாதம் அன்னாரது நக்ஷத்ரத்தன்று வெவ்வேறு இடங்களில் ஶ்ரீ கனபாடிகள் தமது ஶிஷ்யர்கள் மூலம் பாராயணங்கள் நடத்துவித்தார். இதன் பூர்த்தி வேத பவனத்தில் நடந்தேறியது.

வேத அத்யயன பரம்பரையைக் காப்பாற்றுவதுடன் ஸம்ப்ரதாய தொடர்பான அநேக ஸத்-க்ரந்தங்களை தமது அறக்கட்டளையின் மூலம் வெளியிட்டுள்ளார். மேலும் தனிப்பட்ட முறையிலும் வேத தர்ம காரியங்களில் ஈடுபடுவோருக்கு பலவிதத்திலும் உதவியுள்ளார். தேசிய சுதந்திர தினம் போன்ற நிகழ்ச்சிகளை பாடசாலைகளில் நடத்தி மாணவர்களுக்கு தேசிய ப்ரஜ்ஞையை வளர்க்கும் அவசியத்தையும் காட்டினார்.

அண்மையில் மக்களது ஆரோக்ய விஷயத்தில் நிலவிவரும் இக்கட்டான தேச நிலையை போக்கவும் கடந்த மாதம் சீன தேசத்துடன் ஏற்பட்ட எல்லை ப்ரச்சனையில் நமது தேசத்திற்கு வெற்றி கிட்டவும் 1962 சீன யுத்தத்தின் போது ஶ்ரீ மஹாபெரியவாள் செய்த ஆதேஶங்களை ஞாபகம் வைத்துக்கொண்டு அதே வைதிக ஆசரணைகளை மறுபடியும் நடத்தினார்.

நமது இன்றைய ஶ்ரீ பெரியவர்களும் கடந்த மாதம் ஶ்ரீ கனபாடிகளது ஆரோக்யத்தை குறித்து விசாரித்தும், தற்சமயம் தேச சூழ்நிலை காரணமாக பாடஶாலை மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கையில் அவர்களது வித்யாப்யாஸத்தை பரிபாலிக்கும் முறை குறித்து வழிகாட்டுதல் தெரிவித்தும் தகவல் அனுப்பியிருந்தார்கள். இவ்வாறு ஶ்ரீ கனபாடிகள் இன்றைய ஶ்ரீ பெரியவாளின் அனுக்ரஹ சிந்தனைக்கும் பாத்ரமாகியிருந்தார்.

வேதமானது அதன் மூல பாரம்பரிய வடிவத்திலேயே என்றென்றும் பிரகாஶித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஸங்கல்பித்து அதற்காக காலம் காலமாக உழைத்து வருகிறார்கள் நம் ஶ்ரீ காமகோடி ஆசார்யர்கள். அத்தகைய அவர்களது கரங்களால் பலவேறு இடங்களிலும் தருணங்களிலும் பலவாறு கௌரவிக்கப்பட்டுள்ளார் ஶ்ரீ கனபாடிகள். அவர்களது அனுக்ரஹ சிந்தனைக்குப் பாத்திரமாகி அவர்களது வழிகாட்டுதலின்படி வேத ரக்ஷணம் செய்த ஒரு பெரும் ஸாதகராக வாழ்ந்தார். அவரது சரித்திரம் குரு பக்திக்கும் வேத மாதா கைங்கர்யத்திற்கும் தார்மிக சிந்தனைக்கும் எடுத்துக்காட்டாக அனைத்து வேத அத்யாபகர்கள் மற்றும் வித்யார்த்திகளுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது.

28 views0 comments
bottom of page