top of page

Anugraha Bhashanam of Sri Periyava- Thiruvanamalai

திருவண்ணாமலையில் 25-7-26 அன்று “ இளம்தளிர் தடம் பதிக்கும்” விழாவில் உலகம் முழுதும் திருவாசகம் எழுதும் விழாவில் ஶ்ரீகாஞ்சி சங்கராச்சாரியார் ஆற்றிய தேன்மாரி உறையிலிருந்து சேகரித்த சில தேன் துளிகள்.


1. உருகுதல், உருக்குதல் உலுக்குதல் எனப் பலவாறாக சொல்கிறோம். உருகுதல் என்பது மேம்பட்ட, உயர்நிலை பாசத்தினால் அன்பினால் தன்நிலை மறந்து, தாய் தந்தையரை உற்றார் உறவினரை, தெய்வத் திருமேனிகளைக் கண்டு நிற்றல், அவரது நிலை கண்டு உருகுதல்.

2. ⁠உருக்குதல் என்பது ஒன்றிலிருந்து மாசுமரு அற்ற மேம்பட்ட ஒன்றை உருவாக்குதல். தேர்ந்த சிற்பி கல்லிலிருந்து, உற்சவ மூர்த்தங்களை உருவாக்குதல் போல், தெய்வத் திருமேனிகளை உலோகத்தில் வார்த்தல் போல்; பக்தியில், இறை வழிபாட்டில் நம் மனது உருகி உருகி மேம்பட்டு உயர்நிலை அடைந்திட முயற்சிக்க வேண்டும்.

3. மண்ணில் ஒன்றை நிலைக்கச் செய்ய, அதனை உலுக்கி உலுக்கி உள்ளே இறுக்கி அதன் உறுதியான நிலைப்பாட்டை உறுதி செய்வதே போல் திருவாசகத்தை உருகி உருகி வாசித்து வாசித்து மனதை இறைவனில் நிலைக்கச் செய்து மனிதப் பிறவியின் பயனைப் பெறவேண்டும்.

3. “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்”, என்பதை உற்று நோக்கினால் இவை நமக்கு விளங்கும். அசைக்க இயலாத அன்பு கொண்டு, காணும் உயிர்கள் அனைத்திலும் இறைவனை கண்டு, அவரது காரண, காரியமற்ற கருணயை, நினைந்து நினைந்து உருகி உருகி செய்திடும் பக்தி செய்யும் தொடர் முயற்சி, விடா முயற்சியின் விளைவாக ஞானம் பிறக்கிறது. “புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்திருவடி என்மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும் என்றவாறு முயற்சித்தால் முடியாதது ஏதும் இல்லை.

4. வார்தைகளுக்கு வலிமை உண்டு. திரும்பத் திரும்ப இறைவனின் நாமத்தை ஜபித்து ஜபித்து மன வலிமை பெற வேண்டும். அதன் அடிப்படையில் திருவாசகம் முற்றோதல் அமைகிறது. நன்மை பயக்கும் தமிழ் மொழியின் தொன்மை கண்டு, பிற உயிர்கள் அனைத்திலும் அன்பு கொண்டு அர்ப்பணிப்புடன் செய்திடும் அறச் செயல்கள் யாவும் நம் மனத்தை உயர் நிலைக்கு கொண்டு செல்வனவாகும்.

5. அடையாளம்; அபிமானம்; ஆசைகள். : இளைஞர்களுக்கு நமது அடையாளம் என்ன என்பதை சுட்டிக் காட்டி, திருவாசகம் போன்ற நன் நூல்களின் மீது அபிமானம் கொள்ளச் செய்து, அவர்களது நேர்மையான ஆசைகள் நிறைவேறிட, நல்வழிப்படுத்த வேண்டும்.

6. வஜ்ரம் வைடூரியம் மாணிக்கம் மிக உயர்ந்த மகாநீலம் போன்ற வாசகங்களைத் தன்னகத்தே கொண்டது, திருவாசகம்.

7. தமிழை நாம் வளர்க்க வேண்டும், தமிழ் வரலாற்றை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் திருவாசகம் போன்ற தமிழ் நூல்களை முழுமையாக ஓதி உணர வேண்டும்.

8. இது போன்ற கற்றோர் அமர்ந்திருக்கும் மேடையில், அனைவரையும் உள்ளடக்கிய இளைஞர்களை ஏற்றி மேஜையிட்டு அமர்த்தி இலக்கியங்களை பேசச் செய்து அவர்களை மேதைகளாக ஆக்க வேண்டும்.

9. வறுமை, வறட்சி, வன்மை முதலியன நீக்கும் நேர்மறை வாசகங்களை மனதில் நிறுத்தி மணிவாசகர் அருணகிரியார், திருமூலர் போன்ற மகான்கள் தந்த நல்லுரைகளை, மந்திரச் சொற்களை நாம் பயன் படுத்தி இல்லங்களில் தெய்வீகச் சூழலை ஏற்படுத்துவோம். மாறாக, அவ் வாசகங்களை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தாவிட்டால், காலப் போக்கில் அவை அருகிவிடும் என்பதை அனைவரும் உணர்வோம்.

10. இலக்கியங்களை வாசிப்போம், இயற்கையை நேசிப்போம், இறைவனை பூசிப்போம்.

தென்நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

 
 
 

Comments


bottom of page