ஆரணியில் கும்பாபிஷேகம்
- Thanjavur Paramapara
- Jul 8
- 3 min read
ஶ்ரீகுருப்யோ நம:
இன்று (7-7-25)ஒரே நாளில் மூன்று கும்பாபிஷேகங்களை நடத்திக் கொடுத்து ஆசியுரை வழங்கிய ஶ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார்.
“பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்ற வாவியுள் நனி சிறந்தனவே” என்பது ஆன்றோர் வாக்கு. தாயை, தாய் மண்ணை நெஞ்சில் நிறுத்தி நேசிப்போர் இந்த வாக்கின் வலிமை அறிவர். “ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர” என ஆண்டாள் திருப்பாவையில் கூறுவது கோவிந்தன் கதை. நமது காஞ்சி சங்கராச்சாரியார் பூஜ்யஶ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி கிராமத்தில் அக்கிரஹாரத்தில் ஒரு சிறு வீட்டில் பிறந்தார்கள். ஆனால் வளர்ந்ததும் பள்ளிக் கல்வி கற்றதும் தந்தையிடம் வேதம் பயிலத் தொடங்கியதும் தண்டலம் கிராமத்தில்.
இரண்டு கிராமங்களுமே ஶ்ரீ ஸ்வாமிகளுக்கு சொந்த ஊர் போலத்தான். நேற்றோடு குரு மெளட்யம் முடிந்து, உத்திராயண புண்ணிய காலத்தில் இன்று குருபலம் கூடிய முதல் முகூர்த்தத்தில் மூன்று கோஙிலகளில் கும்பாபிசேஷங்கள் செய்து வைத்தார்கள்.
ஶ்ரீ சங்கராச்சாரியார் தம் பூர்வாஸ்ரம தாய் மண்ணான ஆரணிக்கு இன்று விஜயம் செய்தார்கள். அங்கு இவர்கள் பிறந்த இல்லத்தில் தற்போது ஶ்ரீமடத்தின் ஆரணி கிளை அமந்துள்ளது. மேலும் அந்த இல்லத்தின் நுழை வாயிலில் அமைந்துள்ள ஆதிசங்கரர் திரு உருவம் கொண்ட ஒரு சிறிய கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் இன்று காலையில் நடைபெற்றது. அதனை ஶ்ரீ குருவினது ஆக்ஞையை ஏற்று புதுப் பெரியவர்களான, 71 ஆவது பீடாதிபதிகள் தம்திருக் கரங்களால் செய்துவித்தார்கள். காமகோடி குரு பரம்பரையின் தொடக்க குருவரருக்கு முதல் கும்பாபிஷேகம். அடுத்து ஶ்ரீ ஸ்வாமிகள் சிறு பிராயம் தொடக்கம் பள்ளி நாட்களில் தாய் தந்தை உடன் பிறந்தோர்களோடு வளர்ந்த இடமான தண்டலத்தில் முதல் கும்பாபிஷேகத்தை பிள்ளையார் கோவில் நடத்திக் கொடுத்தார்கள். இரண்டாவதாக இதே ஊரில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஶ்ரீ காமாட்சி அம்பா சமேத ஶ்ரீ தரணீஸ்வரர் கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தினையும் ஶ்ரீ ஸ்வாமிகள் தம் புனிதமான பொற்கரங்ளால் செய்துவித்தார்கள். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் சமீபத்தில்தான் இதே ஊரில் ஶ்ரீ ஸ்வாமிகளின் பூர்வாஸ்ரம தந்தை முக்காமலா, ப்ரும்மஶ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் நூற்றாண்டு விழாவினை சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி, மாண்புமிகு நீதியரசர் உயர்திரு ஶ்ரீராம் அவர்கள் தொடங்கி வைத்தும் விழாவின் ஒரு பகுதியாக ஊரின் நடுவில் அமைந்துள்ளதும் ஶ்ரீஸ்வாமிகளின் கருணையால் புதுப்பிக்கப் பட்டதுமான பெரியதொரு குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
இன்றைக்கு ஶ்ரீ ஸ்வாமிகள் பங்கேற்ற ஆலய விழாக்கள் அமைந்த விதத்தினை உற்று நோக்கினால் “மாதா பிதா குரு தெய்வம்” எனும் சொல் வரிசையில் ஶ்ரீ ஸ்வாமிகளின் பூர்வாஸ்ரம தாய் தந்தை வாழ்ந்த மண்ணில் குருவுக்கும் தெய்வத்திற்கும் கும்பாபிஷேக விழா. இதைத்தான், “ தெய்வ சங்கல்பம் என்பதோ?”.
जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी" எனும் வால்மீகி இராமாயணத்தில் அரியதொரு வாக்கியம் உண்டு. தமிழில் இதற்கு ஈடாக உள்ள வாக கியம், “ பெற்றதாயும் பிறந்த பொன்னாடும்; நற்ற வாவியுள் நனி சிறந்தனவே” என்பதாம். அற்புதமானதும் உகந்ததொரு உண்மையான இவ்வாக்கியமே ஶ்ரீ ஸ்வாமிகளின் விழாவில் வழங்கிய அருள் உரையின் அடிநாதமாக ஒலித்தது. தண்டலம் கிராமத்தில் தனது பள்ளி நாட்களின் போது இருந்த சூழலை தனக்கே உரிய பாணியில் விவரித்தார்கள். “ பசுமையான சூழலை பசுமையான எண்ணங்களை” பகிர்ந்து கொண்டார்கள். மரம் செடி கொடிகள் பற்றியும் ஊரில் வற்றிய கிணறு பற்றியும் அருகில் ஓரிடத்திலிருந்த வற்றாத கிணறு பற்றியும் பயிர் பச்சை பற்றியும் கிராமத்தின் அப்போதைய வசதிகள்இன்மை பற்றியும் வரிசையாக ஒன்று விடாமல் வர்ணித்தார்கள். மேலும் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் பற்றியும் குறிப்பிட்டார்கள். ஆனால் இந்த கிராமத்தின் வளர்ச்சியில் பெரும் பங்குக்கு பூஜ்யஶ்ரீ ஸ்வாமிகளே முழு முதற் காரணம் என்பதை இவ் ஊரார் அறிவர். நவீன வசதிகள் கொண்ட முழு அளவிலான மருத்துவ மனை, தரமான தற்கால வசதிகள் கொண்ட உயர் கல்வி அளிக்கும் பள்ளி, படித்த இளைஞர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி திட்டங்கள் வாயிலாக வேலை வாய்ப்பு வசதிகள் என்று பலவாராக இங்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு ஶ்ரீ ஸ்வாமிகளே மூல காரணம். மிக உயரிய புனிதமான வேதம் கல்வி கேள்விகளில் உன்னத நிலை பெற்றும், உலகப் புகழ் பெற்ற, மிகப் பழமையான சமஸ்தானத்தின் பீடாதிபதியானாலும் ஶ்ரீ ஸ்வாமிகள்
தாம் பிறந்து வளர்ந்த மண்ணின் மீதும் இங்கு வாழும் எளிமையான மக்கள் மீதும் கொண்டுள்ள கருணையினை என்னென்று சொல்வது? ஶ்ரீ ஸ்வாமிகளின் பெருமைகளை சாதனைகளை அறிந்தோம் எனில், “ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்து” எனும் புகழ் பெற்ற வரிகள், ஶ்ரீ ஸ்வாமிகளைப் பொறுத்த வரையில் “ வேத பரம்பரையில் பிறந்து புகழ்மிக்க குரு பரம்பரையில் வளர்ந்து”, தாம் பிறந்து வளர்ந்த மண்ணுக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். பூர்வாஸ்ரம சங்கர நாராயணனின் காலடி பட்ட ஆரணி மண்ணில் ஆதி சங்கரர் கோவிலுக்கு கும்பாபிஷேக செய்து வைத்து அந்த ஆதிசங்கரரின் “ காலடி” யின் பெருமைகளுக்கு இணையாக்கினார் இன்று. எனவே, “மண்ணின் மைந்தன்” என்ற சொல்லை சாதாரணமான சொல்லாக்கும் வகையில், “ ஆரணி மண்ணின் அருந்தவப் புதல்வன்” என்று நிறைவான சொல்லானது, இன்று. எனவே இன்றைய கும்பாபிஷேக விழா பற்றி பூஜ்யஶ்ரீ சங்கராச்சாரியார் ஆசியுரையினை, அவரகளது வார்த்தைகளையேத் திரட்டாக எடுத்து சொல்வதெனில், பின் வருமாறு கூறலாம்:
“*ஆரணியில் கும்பாபிஷேகம்”.*
ஆரணியில் கும்பாபிஷேகம்,
ஓரணியில் திரண்டனர் பக்தர்கள் ஊரணியிலும் திருப்பணிகள்
பேரணியாய் மெய் அன்பர்கள்,
அணி அணியாய் ஆடவரும் பெண்டிரும்;
சந்தனத் பொட்டுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் சிறுவர் கூட்டம், பெருமைமிகு ஆரணியே
ஶ்ரீ தரணீஸவரரின் தயவன்றோ?





Comments