16/03/2023
நேற்று காலை நரசிபட்ணம் என்ற கிராமத்தில் இருந்து காலை ஆச்சாரியார் அவர்கள் விஜயம் செய்து விட்டு, அன்னாவரம் வரும் பாதையில், பல மாணவ, மாணவியர்கள் கையில் ஹால் டிக்கெட் எடுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்து, ஆச்சாரியார் அவர்கள் வாகனத்தை நிறுத்தி, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆசி வழங்கி,நன்றாக எழுத வேண்டும், படிக்க வேண்டும் என்று அனுக்ரகம் செய்து, குங்குமம், விபூதி, பழங்கள் தந்தார்.
பல இடங்களில் நின்று குழந்தைகள் படிப்பு பற்றி வினவினார். குழந்தைகளின் பெற்றோர்களிடம் உரையாடி, குழந்தைகளுக்கும், அவர்களுக்கும் பிரசாதம் தந்தார்.
பின்னே இருந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு ஆதி சங்கரர் டாலர், விபூதி, குங்குமம் கொடுப்பது, குறிப்பாக ஒரு புதிய ஆன்மீக அனுபவம். கிராமத்தில் சனாதன மதம் இருப்பதற்கு முக்கிய பங்கை வகிக்கும் இந்த அனைத்துக் குடும்பங்களும் நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம் . ஆச்சாரியார் அவர்களின் கருணை விழி அவர்கள் மீது பதிந்த போது, அபிராமி பட்டர் பாடிய
"கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!"
பாடல் நினைவிற்கு வந்தது.
ஆச்சாரியார் அவர்கள் அந்த கிராமத்து பள்ளிச் செல்வங்களுக்கு அபிராமி பட்டர் வேண்டிய அனைத்தும் தன் கடைக்கண் மூலம், புன்சிரிப்பின் மூலமும் அருள்பாலித்தார்.
Comentarios