Kadu-Sarkara-Yogam-The Ancient Technique of Vigharha Making
- Thanjavur Paramapara
- 4 days ago
- 2 min read
An article about kadu-sarkara-yogam of the Adikesava Perumal Temple is a Perumal temple located in Thiruvattar, Kanyakumari district, Tamil Nadu.

மருள் ஒழிக்கும் கடுசர்க்கரை யோகம்
ஒரு யுகம் முடியும் போது இந்தப் பெருமாள் புரண்டு படுப்பார்" என்று நள்ளிரவில் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு வெளியே இருவர் பேசிக்கொண்டதைக் கேட்டதே தனக்கு விஷ்ணுபுரத்தை எழுதத் தூண்டியதாக ஜெயமோகன் தெரிவித்திருக்கிறார்.
திருவட்டாறு கோயிலின் கருவறையின் முன்னால் நின்று, 22-அடி நீளமான பெருமாள் புரண்டு படுக்கும் காட்சியைக் கற்பனை செய்து கொள்ளலாம். எழுத்துகளில் எழுதி முடியக்கூடிய காட்சியல்ல அது.
108-வைணவத் தலங்களில் மிக நீண்ட சயனக் கோலம் திருவட்டாறுதான். அத்துடன் இவ்வளவு பெரிய கடுசர்க்கரை யோகத்தில் உருவான கடவுள் உருவம் இந்தியாவில் எங்கும் இல்லை. பதினாறாயிரத்து எட்டு சாளக்கிரமங்களைக் கொண்டு, அதன் மேல் கடுசர்க்கரை என்ற சாந்தால் மூடிச் செய்திருக்கிறார்கள். அதுவே கடுசர்க்கரை யோகம் என்று அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி 18 அடி நீளமுள்ள கடுசர்க்கரை யோகம். கடுசர்க்கரை யோகங்களுக்கு அபிசேகம் கிடையாது.
நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேசம் நடக்கிறது. பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம் என்றே அழைப்பார்கள். பல இடங்களில் சிதிலமடைந்த மூலவரை தற்போது சீரமைத்து வருகிறார்கள். இன்று கடுசர்க்கரை யோகத்தை சீரமமைக்கத் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. கேரளத்திலுள்ள பிரம்மமங்கலத்திலிருந்து கைலாஷ் என்ற சிற்பியை அழைத்து வந்து கடுசர்க்கரை தயாரித்து சிலையின் மீது பூசி சரி செய்து வருகிறார்கள்.
கடுசர்க்கரை செய்வதற்கு 60-க்கும் மேற்பட்ட பொருட்கள் தேவை. மூன்று அல்லது ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இருந்துதான் மண்ணெடுக்க வேண்டும். பிறகு அந்த மண்ணை ஒன்பது வகை கசாயங்களில் 10 நாட்கள் தனித்தனியாக ஊறவைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
திரிபலம், பலாப்பழத்தின் பசை, வில்வம் பழத்தின் பசை, குந்திரிக்கம், சந்தனம், திப்பிலி போன்றவற்றை சேர்க்கிறார்கள்.
"யானையின் துதிக்கையில் ஒட்டியிருக்கும் மண், மாட்டின் கொம்பில் இருக்கும் மண், கலப்பையின் முனையில் இருக்கும் மண் ஆகியவையும் சேர்க்கப்படுகிறது. எல்லாவற்றையும் கங்கை நீரில் அரைத்துதான் செய்ய வேண்டும்," என்று விளக்கினார் மணலிக்கரை மடத்தின் தந்திரியான சுப்பிரமணியரு.
மாத்தூர் மடத்தில்தான் அரைப்பு நடக்கிறது. ஏனெனில் அங்கு ஒரு அறையில் இருந்தத மரப்பெட்டியில் கடுசர்க்கரை
செய்வதற்கான மூலப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பலாப்பழத்தின் பசை 40 கிலோ தேவைப்பட்டது. பாலக்காட்டில் பலாப்பழ சிப்ஸ் தயாரிப்பவரிடம் இருந்து வாங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
சிலையின் மேல் வெடிப்பு இருப்பதை அறிய, கடலில் கிடைக்கும் சங்கைப் பொடி செய்து, அதனுடன் சிவப்பு நிறக்கல்லையும் பொடித்து தூவி கண்டுபிடிக்கிறார்கள்.
லேபனம் குறைந்தபட்சம் ஒன்பது அடுக்குகளாகப் பூசப்படுகிறது.
"ஒரு மனிதனின் உடலமைப்பு எப்படி அமைந்துள்ளதோ அதுபோலத்தான் கடுசர்க்கரை யோகம் அமைக்கப்பட்டுள்ளது. கருங்காலி மரங்களைப் பயன்படுத்தி விலா எலும்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். புதிய தேங்காய் நார்களைப் பயன்படுத்தி நரம்புகளை வடிவமைத்திருக்கிறார்கள்," என்றார் மற்றொரு தந்திரியான சஜித் சங்கரநாராயணரு.
லேபணத்தைப் பூச சாதாரணக் கரண்டியைப் பயன்படுத்த முடியாது. பலாமரத்தின் இலைகளைப் பயன்படுத்தியே பூசுகிறார்கள். மரத்தில் செய்யப்பட்ட சில கருவிகளும் உபயோகப்படுத்தப்படுகின்றன.
பேராசிரியர் ஆ.கா.பெருமாள் திருவட்டாறு கோயில் புத்தகத்தில் கடுசர்க்கரை யோகம் குறித்து எழுதியிருக்கிறார்.
மிகப் பெரிய பிரயத்தனம் தேவைப்படும் வேலை. கல்லால் அதைச் செய்து முடித்திருக்க முடியும். பெருங்காரியத்தை செய்ய வேண்டும் என்ற நோக்கம் அங்கே வெளிப்பட்டிருக்கிறது.
கடல்-நிறக் கடவுள் எந்தை
அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ
என் செய்கேன் உலகத்தீரே? என்று தொண்டரப்பொடி ஆழ்வார் திருவரங்கராஜனைக் கண்டு உருகுவது போல் உருக வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட கடுசர்க்கரை யோகம்.
இருள்தரு மாஞாலத்துள் இனிப்பிறவியான் வேண்டேன்
மருளொழி மடநெஞ்சே வட்டாற்றான் அடி வணங்கே என்று நம்மாழ்வாார் ஆதிகேசவனைப் பாடுகிறார்.




Comments