top of page

ஸ்ரீஆதிசங்கரரின் அடியொற்றி எழும் நினைவலைகள் புத்தொளி பெற்றன!புண்ணிய பூமியாம் பாரதத்தில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்களால் நிறுவப்பட்ட பீடங்களில் இரண்டு பீடங்களின் சங்கரராச்சாரியார்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பை மேற்கொண்டனர், எனும் செய்தியினை டிசம்பர் 3ம் நாள் தேதியிட்ட தினமணி நாளிதழில் படித்ததும் என்னுள் எழுந்த நினைவுகள் புத்தொளி பெற்றன.சாக்ஷாத் ஸ்ரீபரமசிவனே பகவத்பாதர்களாக கேரள மாநிலம் காலடியில் அவதரித்து, சின்னஞ் சிறுவயதிலேயே சகல சாத்திரங்கள், வேதங்கள், தத்துவங்கள் என்று அனைத்தையும் கசடறக் கற்று, தெளிந்து, தொடர்ந்து துறவறமும் பூண்டு, பாரத நாடு முழுவதும் மும்முறை பாதயாத்திரை மேற்கொண்டு, எழுபதுக்கும் மேற்பட்ட துர்மதங்களை வாதில் வென்று, சனாதன தர்மத்துக்கும் இந்து சமயத்திற்கும் புத்துணர்வு அளித்து, ஆறு வகையான இறை வழிபாடுகளை ஏற்படுத்தி, அனைவரும் சமம், அனைவரும் ஒன்று என்ற அத்வைதக் கோட்பாட்டினை நிறுவினார்கள். அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையிலும் அத்வைத கொள்கைகளை பின்பற்றி தொடரும் வகையிலும், இந்து சமயத்தை நிலை நாட்டிய மகான், ஸ்ரீசங்கர பகவத்பாதராவார். இறுதியில் காஞ்சீபுரம் வந்து, காமாட்சி அம்மன் முன்பு ஸ்ரீசக்ரம் நிறுவி, தமக்கென்று, காமகோடி பீடத்தை நிறுவி, அதன் முதல் பீடாதிபதியாக தானே அமர்ந்து, கைலாயத்திலிருந்து பெற்றுவந்த யோக லிங்கத்திற்கு பூசனை செய்து கொண்டு, காமாட்சி அன்னையோடு ஐக்கியமான வரலாற்றை ஸ்ரீசங்கர விஜயம் முதலான நூல்கள் எடுத்தியம்புகின்றன.

அந்த வகையில் ஆதிசங்கர பகவத்பாதர்களால் நிறுவப்பட்ட இரண்டு முக்கியமான பீடங்களுள் ஒன்றான குஜராத் மாநிலம் துவாரகா பீடத்திற்கும் மற்றொன்றான காஞ்சி காமகோடி பீடத்திற்கும் நீண்ட நெடிய தொடர்புகள் உள்ளன, குறிப்பாக துவாரகா பீடத்தின் பீடாதிபதியான பூஜ்யஸ்ரீ ஸ்வரூபானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

காஞ்சி மஹாஸ்வாமிகள் என்றும், பரமாச்சாரியார் என்றும் நடமாடும் தெய்வம் என்றும் அன்றும் இன்றும் என்றும் எல்லோராலும் போற்றி வணங்கப் படுகின்ற காஞ்சி காமகோடி பீடத்தின் 68ஆவது பீடாதிபதியான ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் நூற்றாண்டு விழா கனகாபிஷேக நிகழ்ச்சியில், பூஜ்ய ஸ்ரீ ஸ்வரூபானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

ஸ்ரீ காஞ்சி மடத்தின் 69ஆவது பீடாதிபதி பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும், பூஜ்ய ஸ்ரீ ஸ்வரூபானந்த சரஸ்வதி அவர்களும் பல முறை நேரில் சந்தித்து இந்து தர்மங்களைக் குறித்து கலந்துரையாடி இருக்கின்றனர். இருவரும் தர்மநெறியில் அன்பர்களை ஈடுபடுத்துவதில் ஒருமித்த கருத்துடன் செயல் பட்டனர். பூஜ்யஸ்ரீ ஸ்வரூபானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் அழைப்பினை ஏற்று, பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ந்தேதி, ஸ்ரீ ஸ்வரூபானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் பிறந்த ஊரான, சதீஷ்கர் மாநிலம், ஶியோனி மாவட்டம் திகோரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட "குரு ரத்னேஸ்வர மஹாதேவ்" கோவில் கும்பாபிஷேக விழாவில் முக்கிய பிரமுகராகக் கலந்து கொண்டு, அக்கோவிலில் மிகப்பெரிய ஸ்படிக லிங்கத்திற்கு ப்ராணப் பிரதிஷ்டை முதலியவற்றை தம் திருக் கரங்களால் செய்து வைத்தார்கள். இதிலிருந்து, பாரம்பரியம்மிக்க மடாதிபதிகளான இவ்விரு மகான்களின் நட்பின் ஆழத்தை நாம் உணரலாம்.

தற்சமயம், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நிலை குன்றி பின் நன்கு நலம் பெற்று வருகின்ற, ஸ்ரீ துவாரகா பீடாதிபதி பூஜ்யஸ்ரீ ஸ்வரூபானந்த அவர்களை காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபதி பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தும் தர்ம நெறிகள் பற்றி கலந்துரையாடியதுமான நிகழ்ச்சி, சரித்திர நிகழ்வாக அனைத்து பக்தர்களாலும் கருதப் படுவதில் வியப்பொன்றும் இல்லை. இரு ஸ்வாமிகளும் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர்களின் அடியொற்றி, அவர்கள் காட்டிய பாதையில் பயணிப்பதை ஒருமித்த கருத்துடைய இரண்டு முக்கிய பீடாதிபதிகள் மீண்டும் நிலைநாட்டியுள்ளனர். இந்த சந்திப்பு மனித நேயத்தையும், வழிவழியாக கடைபிடிக்கப்படும் நமது கலாச்சார, பாரம்பரியம் மிக்க நம்பிக்கைகளுக்கும் இந்து சமயத்திற்கும் புத்தொளிர்வு அளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது என்பது ஆணித்தரமான உண்மை.

வடக்கே உள்ள காசியில் இருந்து தெற்கே உள்ள காஞ்சிக்கும், இராமேஸ்வரத்திற்கும் நம் தேசத்தில், அன்பர்கள் யாத்திரை மேற்கொள்வர். அதே போல தென்னிந்தியர்களும் வடக்கே உள்ள காசிக்கும் கயிலாயத்திற்கும் யாத்திரை மேற்கொள்வர் இது ஒரு புனிதப் பயணம் மட்டும் அல்லாமல் நாட்டு மக்களிடையே ,உறவுப் பாலமாக, உணர்வுப் பாலமாக, தொன்றுதொட்டு இருந்துவரும், பல்வகை கலாசாரங்களுக்கு மத்தியில் பரந்த இத்தேசத்தின் ஒருமைப்பாட்டை பிரதிபலிப்பதாக இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள ஏழு மோட்ச புரிகளில் துவாரகாவும் காஞ்சியும் அடங்கியுள்ளன. அவற்றுள் தென்னிந்தியாவில் இருப்பது காஞ்சி என்னும் ஒரே மோட்ச புரி தான் என்ற கூடுதல் சிறப்பும் கொண்டது, காஞ்சீபுரம். இந்த இரண்டு முக்தித் தலங்களின் இணையற்ற இரண்டு பீடங்களின் அதிபதிகளும் தங்களின் மூல குருவாகிய ஆதிசங்கரரின் பாதங்கள் காட்டிய பாதையில் பயணிக்கின்ற பாங்கும், ஒருமைப்பாட்டு உணர்வும் அனைவராலும் பாராட்ட தக்கதாகும்.

இதன் மூலம் நமது தேச ஒற்றுமை ஓங்கும், நமது கலாச்சார உறவுகள் வலுப்பெறும், நமது உணர்வுகள் அன்பினால், மனித நேயத்தால் இணைந்து நிலைபெறும் என்ற நம்பிக்கையை இந்நிகழ்வு வழங்கியுள்ளது. பாரதத்தாயின் பெருமைமிகு பீடாதிபதிகளான இருவரது உள்ளங்களும் கூறும் ஒரே கூற்று "அன்புதான்". அந்த அன்பைத்தான் பெங்களூரில் காமகோடி பீடாதிபதியும் துவாரகா பீடாதிபதியும் 01.12.2021 நடந்த சந்திப்பின் போதும் பரிமாறிக்கொண்டனர். இதை உணர்ந்து நாமும் நம் பாரம்பரியத்தை பேணிக்காத்து அன்பு நெறியில் நடத்திட உறுதி பூணுவோம்.

Contact no. +91 94446 66526486 views0 comments
bottom of page